அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவின் உருவாக்கம் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த விடயம் யாதெனக் கருதுகின்றீர்?
நிலவன் :- உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது. அப்படித்தான் ஈழதேசத்தில் தேசிய இனமாகிய தமிழர்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப் பட்டபோது தமிழீழத்தின் தேசியத் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் என்ற தலைவன் உருவானார்.
உலகத்திற்கு அறம் போதித்த இலக்கியங்கள் என தமிழுக்கும், தமிழர்களுக்கும் நீண்ட பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்று நாயகனாக மேதகு வே. பிரபாகரன் என்ற பெயர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழின வரலாற்றின் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக இருக்கும்.
உலகிலே எவ்வளவோ போராட்ட இயக்கங்கள் உருவாகி இருந்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் போல், எந்த ஒரு போராட்ட இயக்கமும் இருந்ததில்லை என்பதற்குப் பல நூறு ஆதரங்களை முன் வைக்க முடியும். தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது.
மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக முறைப்படுத்தி முப்படையைக் கட்டி அமைத்து அதனுள் தடை நீக்கி என தனிப்படை அமைத்து அந்த படைகளுக்குத் தளபதிகளை நியமித்து, அதற்கேற்றாற் போல் சீருடைகளைக் கொடுத்து ஒரு மரபுவழி தமிழீழ இராணுவத்தையே உருவாக்கி நீதி, நிர்வாகம் என ஒரு நடமுறை அரசை அமைத்து முன் மாதிரியாக கையூட்டல் இல்லாத நாடக சாத்தியமாக்கிக் காட்டினார். இன விடுதலை குறித்தான வேட்கையே நூற்றாண்டு காலம், உலக வல்லாதிக்க அரசுகளை எதிர்த்து துணிச்சலோடு போராட வைத்து. பல வெற்றிகளையும் பெற வைத்தது என்றே சொல்லமுடியும். .
தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தங்களின் மீதான இன ஒடுக்கு முறைக்கு எதிராக எழுச்சி கொண்டார்கள். இன ஒடுக்கு முறைக்குரிய தீர்வைப் பற்றிய தமிழர்களின் பேரம் பேசும் (Negotiation) பிரதிநிதித்துவத்தை இலங்கை பாராளுமன்ற அமைப்பானது ஜனநாயக வழியிலான கோரிக்கையை மறுதலித்த இடத்திலே தான் ஆயுதப் போராட்டத்திற்கான தேவை உத்வேகம் கொண்டது.
இலங்கைப் பாராளுமன்ற அமைப்பு முறையால் மறுதலிக்கப்பட்ட தமிழ் மக்களினுடைய விடுதலைக் கோரிக்கையை, சர்வதேச மத்தியத்துவத்தின் கீழ் சிங்கள அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தை வெளிக்கு இட்டுச் சென்றது மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் தமிழர் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுகளை வாதிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றார்கள் என்றால் மிகையில்லை.
தமிழீழத்தின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் போராட்டத்தையும் போராடும் மக்களையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்தார்கள் . உலக நாடுகளின் இராணுவ பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு தேசிய இன மக்களைத் தமிழர்களை இன அழிப்பு செய்துகொண்டுவர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி மூன்று சகாப்த காலங்களுக்கு மேலாக போராடி தமக்கான, எமக்கான சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தோம்.
அமுதன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பினூடாகத் தன்னை மக்கள் மனதில் மதிப்பிற்குரிய,போற்றுதற்குரிய ஏகதலைவனாக ஏற்றுக் கொள்ளும் வகையில் மேதகுவின் செயலாற்றல் எவ்வாறு இருந்தது?
நிலவன் :- எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை. ஒரு பொதுவான பாரம்பரியமும், பண்பாடும், ஒரு தனித்துவமான மொழியும், தாயக நிலமும் உடையவர்கள் என்பதால், ஈழத் தமிழர்கள் அல்லது தமிழீழ மக்கள் ஒரு தேசிய இன அமைப்பைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது கெரில்லாத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி சிங்கள ஆயுதப் படைகள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்த அதேவேளை தமிழரின் புரட்சிப் போர் உக்கிரமும் விரிவாக்கமும் கண்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகளின் கெரில்லாப் போராட்டம் உக்கிரமடைந்து சிங்கள ஆயுத படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி வந்த அதேவேளை, எமது மக்களின் உறுதியான அரசியற் போராட்டங்களிலிருந்து வரலாற்று ரீதியான படிநிலை வளர்ச்சி பெற்று வடிவம் எடுத்தது.
1990 பின்னர் காலத்தில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி அலகுகளும் படைப் பிரிவுகளுக்கு தனித்துவச் சீருடையுடன் ஒரு தேசிய தமிழ் இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள். ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தையும் தனது இதயங்களில் சுமந்து அவர்களின் எதிர்காலத்திற்காக, அவர்கள் அறிவில் சிறந்து, அறிவியல் ரீதியாக வளர வேண்டும் என்பதற்காக அல்லும் பகலுமாக அயராது உழைத்தவர்கள்.. இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள். அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள்.
“தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.” என்ற தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரனின் அவர்களின் நேர்மையையும் வீரத்தையும், அரசியலையும் ஒட்டுமொத்தமாக அவர் மக்களை நேசித்த விதத்தையும், தீர்கதரிசன சிந்தனையும் அதற்கான செயல் வடிவம் கொடுத்த போராளிகள், மற்றும் மாவீர்களின் தியாகங்கள் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பற்றுதலையும் மனவுறுதியையும் அவரை மிக ஆழமாக நேசித்து அறிந்து கொண்ட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்பது திண்ணம்.
எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் நாம் போராடியே ஆக வேண்டும் என்று… புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல்த் திட்டத்தை வரைந்து இதனூடாக அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். தமிழீழ சுதந்திர விடுதலைப் போராட்டம் உலக வல்லாதிக்க அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், எந்த விதமான விட்டுக்கொடுப்புக்களுமின்றி வரித்துக்கொண்ட இலட்சியம் மாறாது, உறுதியோடு வழிநடாத்தி இறுதிவரை அடி பணியாது தமிழீழ விடுதலைக்காகத் தமிழீழ மண்ணிலே, மாவீரர்கள் வழியில் தன்னுயிரையும் அர்ப்பணித்தார் தமிழீழ தேசியத்தலைவர்.
அமுதன் :- தேசியக் கொள்கை நிலைப்பாட்டிலும் அதன் செயற்ப்பாட்டிலும் தலைவர் அவர்களின் செயற்பாடு மற்றும் அவரின் சிந்தனை நீரோட்டமானது எவ்வாறு காணப் பட்டது?
நிலவன் :- உலக வல்லரசுகளின் பெருந்துணையுடன் தமிழீழ மக்களை இனஅழிப்புச் செய்தவாறு சிங்களம் செய்த ஆக்கிரமிப்பை உறுதியுடன் எதிர்த்துப் போராடி, உலகில் போராடும் மக்கள் பெறவேண்டிய சரணடையாத உறுதியைத் தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார். தமிழீழத் தேசத்தை அமைக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு செயல்களையும் நேர்த்தியோடு முன்னெடுத்த தலைவர் அவர்கள், அதற்கு எதிராக வந்த தடைகளையும், சூழ்ச்சிகளையும், கூடக் கையாள்வதில் தீர்க்கதரிசனமான அரசியல் அணுகு முறையைக் கையாண்டார். உலக வல்லரசுகளின் இராணுவப் படி முறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத் திருப்பி தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, தன் வாழ்வு முழுக்க மக்களுக்கானதொன்று என்பதனை அவர் மிகச் சரியாக அறம் வழி உணர்ந்திருந்தார் எனின் மிகையாகாது.
மக்களின் உரிமைகளை அடகு வைக்காது உறுதியோடு போராடும் துணிவு கொண்ட எங்கள் தேசியத் தலைவர் அவர்கள் போராட்டங்களால் நிகழும் உயிரிழப்புகள் குறித்து அவர் கூறும்போது, “ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்!” என்றார். “ஆயுதப் போராட்டம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, காலம் எங்களிடம் கையளித்திருப்பது. நாங்கள் போர் வெறியர்களோ ஆயுத விரும்பிகளோ அல்ல. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
சமாதான வழியில், தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு முயற்சிகளை எடுக்குமானால், நாம் அதற்கு ஒத்துழைப்பு வழற்குவோம். தமிழரின் தேசியப் போராட்டத்தினது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தைக் கருத்திற் கொண்டு, உருப்படியான சுயாட்சித் தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்படுமானால், நாம் அதனைப் பரிசீலனைசெய்யத் தயாராக இருக்கிறோம். நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. எனத் தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளில் வெளிப்படையாவே தெரிவித்திருக்கின்றார்.
நாம் விடுதலைக்காகப் போராடும் நாம் சலுகைகளுக்காகக் கைநீட்டி நிற்கும் ஒரு சாதாரண கூட்டமல்ல வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எத்தனையோ ஆண்டுகளாக, எத்தனையோ அழிவுகளைச் சந்தித்து, எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்து, எத்தனையோ தியாகங்களைப் புரிந்து, எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு, எமது இலட்சியப் பாதையில் முன்னகர்த்தி வருகிறோம். நாங்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மண்ணில் எங்களின் சுதந்திரத்தை மட்டும்தான். நாம் இனத்துவேசிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. சிங்களப் பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை.” என்ற கொள்கை கொண்ட மகத்தான மாமனிதன் எங்கள் தேசியத் தலைவர்.
அமுதன் :- மாவீர்கள் பற்றிய தேசியத் தலைவரின் நிலைப்பாடு ம் அதன்பால் அவரால் செயற்படுத்தப் பட்ட நிகழ்ச்சி நிரலின் மிக முக்கியமான செயற் பாடாக எதைக் கருதுகிறீர்கள் … ?
நிலவன் :- தமிழரின் தேசியப் போராட்டம் நீண்ட, சிக்கலான வரலாற்றுச் சூழ்நிலைகளால் உருவாக்கம் பெற்றுப் பெருவளர்ச்சி கண்டிருக்கின்றது. இன்று அதன் பரிமானம் வேறு! வடிவம் வேறு!நீண்ட காலமாக இரத்தம் சிந்திப் போராடிய எமது இயக்கம், இன்று தமிழ்ப் பகுதிகளில் தன்னாட்சிக் கட்டமைப்புகளை நிறுவும் அளவிற்குப் போராட்டத்தை உயர்ந்த படிநிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இன்று நாம் மிகவும் பலமான, உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். இந்த வலுவான அத்திவாரத்தை இட்டுத் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது .
1989 கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் மணலாற்றுக் காட்டுப் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதலாவது விடுதலைப் புலிகளின் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் அவர்களின் வீரச்சாவு நாளான “கார்த்திகை 27″ஐ மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உரையாற்றும்போது…..
எமது போராட்டத்தின் ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பிக்கின்றோம் என ஆரம்பித்தார்.
இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத் தான் கருதினார் தலைவர். வீரச்சாவடைந்த எல்லாப் போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக இணைத்து மாவீரர் எழுச்சி நாளையும் பிரகடனப்படுத்தியிருந்தார் . இல்லாவிட்டால் காலப் போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்று தலைவர் தன் முதலாவது மாவீரர் நாள் உரையிலே மிகத் தெளிவாக் கூறியுள்ளார்.
ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. “எமது வீரசுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கெளரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
மாவீரர்களைப் போற்றிப் புகழ்வதாகவும், விடுதலைப் போராட்ட நிலைமைகளை மக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறுவதாகவும் அந்த உரைகள் அமைந்திருக்கும். நேற்றைய உண்மையையும், இன்றைய யதார்த்தத்தையும், நாளைய விடிவையும், ஒருங்கிணைத்து எமது தேசியத் தலைவர் கூறியது எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன. இவ்வாறு மாவீர்களின் தியாக அர்ப்பணிப்பு சுதந்திர வேட்கை தொடர்பாக தேசியத் தலைவர் அவர்களின் பல நூறு சிந்தனைத் துளிகளைப் பார்க்கலாம் அவை தலைவர் அவர்களின் தீர்க தரிசன வரிகள் ஆகும்.
அமுதன் :- தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு செய்தி மறுக்கப் பட்டுள்ளது அவை பற்றி கூறமுடியுமா?
நிலவன் :- 2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு யுத்தம் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனம் கொண்ட தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பலரும் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் மரணமடையவில்லை அவர் திரும்பி வந்து போராடுவார் என்ற கருத்துகளையே கூறி வந்தனர். எமக்கென்று ஒரு திட்டம் இல்லா விட்டால் நாம் அடுத்தவர்களின் திட்டப்படியே செயல்பட வேண்டிவரும் என்பதன் எடுத்துக்காட்டே இவை.
2009ஆம் ஆண்டுமே 21ஆம் தேதி பேசிய பழ. நெடுமாறன், கூறினார் 2009 மே 22ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த செல்வராசா பத்மநாபன் kp அவர்களைத் தொடந்து மே 24, 2009 அன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மீளவும் ஜூன் 11, 2009: அதே ஆண்டு ஜூன் மாதத்திலும் உயிருடன்தான் உள்ளார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். அப்போது பலரது முகத்திரை கிழியும்” என்று கூறினார்.
ஜனவரி 20, 2010: தேசியத்தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை இறந்தபோது, அதில் பங்கேற்க ஈழதேசம் வந்திருந்து திரும்பிய வி.சி.க திருமாவளவன். அப்போது பேசிய போது , “எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றி மறக்காமல் கேட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறினர்.
2014 ஜனவரி 16: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியி்ல நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரன் மீண்டும் வந்து தமிழீழத்தை மீட்பார் என்று தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன், அவர்கள் கூறுகையில் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக்கட்டப் போரில் கொல்லப் படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார் என்று தெரிவித்தார். 2018 டிசம்பர்: ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வை.கோ. அவர்கள் மீளவும்தேசியத் தலைவர் உயிருடன் இருப்பதாக நான் உணர்வுப் பூர்வமாக நம்புகிறேன். இதில் விவாதிக்க எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவரின் வீரம் செறிந்த உயிர்ப் பணிப்பை தமிழர் வரலாற்றிலிருந்து அழித்து விடும் நோக்கோடு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா- இந்திய- சர்வதேச புலனாய்வுச் சதிகள் கைக் கூலிகளாக 2009கு பின்னர் பலர் செயற்பட ஆரம்பித்தார்கள் என்பது கசப்பான உண்மையினை இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் அறவழி தவறாது இலட்சியப் பற்றுடன் மாவீரர் சிந்திய குருதியால் உறுதி பெற்றது. அவர்களின் உன்னதமான உயிர்த்தியாகங்கள் . எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறை வேறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரத்தை அடைந்து விடவில்லை. தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்கக்கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்குமாயின் தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் மேலும் சிதைந்து சின்னா பின்னமாகி விடும்.
அமுதன் :- இக்காலகட்டத்தில் மேதகு பற்றிய குழப்பமிகு கருத்துக்கள் திட்டமிட்டுவிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர் சம்பந்தமான தெளிவானகருத்தியலைக் கூறுங்கள்?
நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும்,தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்! அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்தினை மீட்டிட ஒரு விடுதலைப் போரொளியாக, வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, வாழ்ந்தவர். உலகத் தமிழ் இனத்தின் விடுதலையின் குறியீட்டின் அரசியல் வழிகாட்டியாக, வரலாற்றில் வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் முள்ளி வாய்க்காலின் நந்திக்கடலோரப் பகுதியில் 17 இரவு தொடக்கம் 18 அதிகாலை வரை நடைபெற்ற இறுதிப் போர்க்களத்தில் அடிபணியாது தீரமுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழினத்தின் ஒப்பற்ற மாபொரும் தலைவன் மாவீரன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு 15 ஆண்டுகளாக வீரவணக்க எழுச்சி நிகழ்வு செலுத்தாமல் இருக்கிறோம் . இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது” என்று வெளிப்படையாக அறிவித்து விட்டால் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருந்திருக்காது ஆனால் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய விடயம். தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை தமிழினம் இழந்து விட்ட உண்மை.
முள்ளிவாய்க்காலோடும், நந்திக்கடலோடும் தலைவரின் வரலாற்றை புதைத்துவிட்டோமென இறுமாப்புக்கொண்டு, சர்வதேச நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தொடர் தடையினை நீடித்து, பிரதான சமூக வலைத் தளங்களில் தேசியத் தலைவரின் உருவப் படங்களை திட்டமிட்டு நீக்கி தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை சிங்களத்துக்குத் துணைபோய் அடையாள அழிப்பு செய்துவரும் அதே உலகநாடுகளின் முற்றத்தில் தேசியத் தலைவரை உயிர்ப்பிக்கப் போராடுகிறது.
பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டு தேசவிடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பதும் யதார்த்த நிலையில்… ஆனால் அவரது வீரச்சாவு ஒன்றும் அவமானகரமானது இல்லை… அவர் புறமுதுகிட்டு ஓடவில்லை… இறுதிவரை களத்தில்தானே நின்று போராடினார்..! மாவீரர் வழியில் தன்னை ஆகுதியாக்கி, தன் குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாக தியாகம் செய்த தேசத்தலைவனின் வரலாறுகள்… விடுதலைப் போராட்டத்தின் எச்சங்களாக உயிர் வாழும் எமது காலத்திலேயே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டு கடந்து போகப் போகின்றோமா..?
விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப் பட்ட பின்னர் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அரசியல்ரீதியாகவும் அமைதிவழியிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வீச்சுப் பெற்றுள்ளது. தாயகத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு எங்கள் தலைவரின் வாழ்வும் ஒரு வழிகாட்டி. இன விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப் போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. போராட்டத்தை அவர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து அவரது பேச்சும் கொள்கையும் மாறவே இல்லையே. கடைசி ஒரு போராளி இருக்கும்வரை போராடுவேன் என்றார். சொன்னதைச் செய்தும் காட்டினார். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது காத்திடும் தமிழீழத் தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழரின் தேசிய எழுச்சிக்கும் கௌரவத்திற்கும் தலைவர் அவர்கள் ஆதாரமாக விளங்குகின்றார்.
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.
அமுதன் :- போரின் மௌனிப்பிற்கு பிற்பட்ட காலத்தில் நிலவும் தலைவர் சார்ந்த, தேசிய விடயம் சார்ந்த சூத்திர தாரிகளின்குழப்ப நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் உங்கள் கருத்து எவ்வாறு அமைகிறது? எப்படி இந்நிலையைச் சீர் செய்யலாம்?
நிலவன் :- தமிழீழத் தேசிய தலைவரின் சிந்தனையின் செயல் வடிவமாகப் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப் பட்ட தமிழீழ கோட்பாட்டை நிலை நிறுத்தி செயற்பட்டுவரும் அமைப்புக்களை , சமூக நிறுவனங்களை குறிப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை எந்த அன்னியச் சக்திகளாலும் அழித்து விடவோ, ஒழித்து விடவோ, முடியாது. தேசியம் சார்ந்து மக்கள் மையப்படுத்தப்பட்ட இவ்வாறான அமைப்பை, அல்லது குழுக்களில் இடம்பெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் எதிர்காலத் திட்டங்கள் என்பனவற்றை மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
துரோகங்களையும், ஊழல்களையும், மூடி மறைக்க முற்படுபவர்கள் கூட்டுக் களவாணிகளே! தேசியப் பணியாற்றிவந்த சிலர் தேச விரும்பிகளாக தங்களை அடையாளம் காட்டி புலம் பெயர் நாடுகளில் தமிழர் ஒருங்கிணையும் கட்டமைப்புக்களில் இடம்பெற்ற செயற் பாடுகள் அனைத்தையும் மூடி மறைக்கும் விதத்தில் செயற்படுதல் மக்கள் மத்தியில் உண்மைகளை எடுத்துரைக்க முடியாத நிலை காணப்படுகிறது. எத்தனை நாளைக்குத் தான் மறைப்பது. அமைப்புக்களுக்கிடையில் நடைபெறும் குழப்பங்களை மக்களுக்குச் சொல்வதன் ஊடாக அது மக்களை மேலும் குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும் …..
மக்களின் உண்மையான அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டாளர்களையும் தங்கள் வலைக்குள் வீழ்த்துவதற்காகவே போடும் சதித் திட்டங்களை மக்கள் விழிப்புடன் கையாள வேண்டும் . தேசியத் தலைவரையும் அவர் குடும்பத்தையும் களங்கப்படுத்தி அதனுள் கருப் பொருளை உருவாக்கி தலைவர் உயிருடன் இருக்கின்றார் என உண்மைக்குப் புறம்பாகவும், நீதியற்று நடப்பவர்களை அடையாளப் படுத்த வேண்டும். இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் முரண்பாடுகளை நமக்குச் சாதகமாக்கி அதனுடாகத் தமிழீழத்தின் சாத்தியத்தினைப் பற்றி சிந்திக்காது இருப்பதை.. கவனம் எடுத்தல் அவசியம்.
பணத்தை மக்களிடமிருந்து வசூலிக்க முடியும். மக்கள் எந்தக் கேள்விகளும் கேட்கமாட்டர்கள் என துரோகக் கும்பலின் எண்ணமும் சிந்தனையும் பண மூட்டையை எப்படி உருவாக்கி காவிச் செல்வது என்பதாகவே இருந்து வருகிறது. மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் மக்கள் மத்தியில் இருந்து இருட்டடிப்பு செய்து குழப்பகரமான செயற்பாடுகளும், துரோகத்தனமான நடவடிக்கைகளும், மக்களை பெரிதும் விசனத்திற்கு உள்ளாக்கி மீண்டும் ஒரு தேசியப் பின்னடைவை சந்திக்க வேண்டி இருக்கும்.
ஒருவர் அல்லது குழுவாகச் சிலர் துரோகிக்காக மிகக் கேவலமான செயற் பாடுகளைச் செய்து வருகின்றார்கள். இதனை மூடி மறைப்பவர்களிற்கு பின்னாலும் இருப்பது பணம் அரங்கேற்றத் துடிக்கும் துரோகங்களை இனம் கண்டு கொள்ளுங்கள். அத்தனை துரோகங்களையும் துணிவோடு எதிர்கொள்ளுங்கள். இனத் துரோகச் செயலில் ஈடுபடுபவர்கள் எடுத்துக் கொள்ளும் பெரும் ஆயுதம் தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர் நினைவேந்தல் பிரசன்னம். அது தேசியத் தலைவர் எனக்கூறிக் தொழில்நுட்ப பின்னணிகளைக் கொண்டு போலியாக வடிவமைக்கப்பட்டு திரையிடப் படவிருக்கும் போலியானதொரு உருவத்தின் உரையே!.
தயவுசெய்து போராளிகள் மேல் அவதூறு பரப்புவதை விடுத்து மக்கள் மௌனம் கலைத்து விழித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் போராளிகளாய் நாங்கள் தாங்கி நிற்கின்ற வலிகள் ஏராளம். அவை அனைத்தையும் தாண்டி, மிகத் துணிவுடனும், தெளிவுடனும் தற்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் துரோகங்களிற்கு எதிராகவும் பலதரப்பட்ட மக்களது வினாக்களுக்கு உரிய பதில்களை வழங்க வேண்டிய நிலையில் இருக்கி்ன்றோம். திரிவுபடுத்தப்பட்ட போலிக் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றிப் பண மோசடியில் ஈடுபடுவோர்க்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதும், போலிப் பண வசூலிப்பிற்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்என பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
தமிழ் தேசியம் சார்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் உண்மையான செயற்பாட்டாளர்களும், உணர்வாளர்களும் இளம் தலைமுறையினரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பது…ஒரு சிறந்த திட்டம் எனப் பெருமிதம் கொள்ள வேண்டும். தமிழீழக் கோட்பாட்டுடன் இயங்கும் அமைப்புக்கள் இளையோர் கையில் ஒப்படைக்கப் பட்டால் இந்தப் பொறுப்புகளானது அவர்களுக்குச் சற்று சுமையாக இருந்தாலும் கூட அவர்களது தன்னம்பிக்கையும், செயல் திறனும் என்றும் சிறப்பாகவே இருக்கும் என நம்புகின்றேன்.
தேசியத்தலைவரின் வீராச்சாவு தொடர்பில்் மக்களுக்கு உண்மை நிலை தெரியாத வரைக்கும்தான் இவர்களால் தங்களது இருப்பைத்தக்க வைக்க முடியும். விரைவில் 2009ஆம் ஆண்டு மே ஆயுதப் போராட்டம் தானாகவே மௌனம் காணும் வரை களம் கண்ட போராளிகளாய் ஈழத்திலும் தமிழகத்திலும் புலம்பெயந்து பரந்து வாழும் போராளிகள் ஒன்றிணைந்து விடுதலைப் புலிகளின் மரபுக்கமைய சமர்கள சம்பவ ஆய்வு அறிக்கையின் ஊடாக உண்மை வெளிவரும் போது இவர்கள் நிலை என்னவாகும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
தேசியப் பணியை சுமக்கும் போராளிகளும், மக்களும், தேசியத் தலைவரின் பெயருக்கும் அவரது தியாகத்திற்கும்…. துரோகம் விளைவிக்க நினைத்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீரச்சாவடைந்த தேசியத்தலைவரை திரைக்கு கொண்டு வந்து எப்படி? போலி நாடகங்கள் நிகழ்த்தப் போகிறார்கள் அரசியல் மற்றும் புலனாய்வு கண்ணோட்டத்துடன் தெட்டத் தெளிவாக தொழில்நுட்பப் பின்னணியுடன் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையாக இருக்கும் நிதி மோசடிகள், ஊழல்கள், துரோகங்கள் என்பனவற்றை எவ்வாறு மூடி மறைக்காமல் வெளியில் கொண்டு வருவது பற்றியும் செயலாற்ற வேண்டும் . உலக வல்லாதிக்க சக்திகளோடு சேர்ந்து இனத்தின் வரலாற்றை இழிவு படுத்த நினைக்கும் துரோகக் கும்பல்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவனுக்கு கௌரவத்துடனும் மரியாதையுடனும் உரிய வீர வணக்கத்தினைச் செலுத்தி உறுதியேற்க முன்வர வேண்டும்.
தமிழீழ தேசிய இராணுவத்தை உருவாக்கி, வீரத்தையும், அறத்தையும் கொண்ட ஒரு மண்ணுரிமைப் போரை உலகமே வியக்கும் வண்ணம் தமிழீழ மண்ணில் நிகழ்த்திக் காட்டி வீரம் என்பதற்கு புதிய அகராதி படைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் மாவீரர்கள். உயர்ந்ததொரு இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். என்பதைக் கருத்தில் கொண்டு நாம் அடுத்தகட்டப் போராட்டத்தினை முன்நகர்த்துவது குறித்து உறுதியெடுத்துக் கொள்வதே – தலைவர் அவர்களின் இலட்சியக்கனவினை முன்னோக்கி நகர்த்த உதவும்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும், தளபதிகளுக்கும், வீரவணக்கத்தைச் செலுத்த வேண்டும். உணர்வுடன் மக்கள் மாற்றங்களை நோக்கிச் செல்லாவிட்டால் இந்தச் சதிகார கும்பல் ஒரு இனத்தின் வரலாற்றையே குழி தோண்டிப் புதைத்து விடும். இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. என்னும் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடாய் அவரின் சிந்தனைகளைப் பின்பற்றிச் செயற் படுவது தான் தலைவருக்கு கொடுக்கும் அதிஉச்ச கௌரவம் ஆகும்.
அமுதன் :- தேசிய நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமான தீர்க்கமான அறை கூவலாக அமையும் தங்கள் கருத்துக்களின் பதிவு யாதாகவிருக்கும்?
நிலவன் :- தமிழீழவிடுதலைப் போராட்ட மரபுகளைத் தாண்டிய தமிழீழக் கோட்பாட்டு அழிக்கவல்ல நுணுக்கமான இப் புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடைய பூகோள வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதமும் இணைந்து மக்களிடத்தில் தலைவர் இருக்கின்றார் வருவார் என்றும், அவர் மறைந்து வாழ்கின்றார் என்றும், விடுதலைப்போராட்டத்தின் இயங்குவிசையையும், தளத்தையும், செல் நெறியையும் மடைமாற்றம் செய்வதற்காகப் பல செயல்த் திட்டங்களை சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சில நடவடிக்கை களையும் களமிறக்கி உள்ளார்கள்.
மக்கள் முன்னால் குற்றவாளிகளாகத் போராளிகள் தலை குனிந்து நிற்கின்றோம். காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப் பரப்புரைகளும் அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. இது தார்மீகக் கடமை சாந்த விடயம். தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாகக் கூறி, தற்போதைய எமது நடவடிக்கைகள் அனைத்துக்கும் தலைவர் அவர்களைப் பொறுப்பாக்குவது கூறுவதும் தார்மீகத்திற்கு எதிரானது.
எமது விடுதலைப் பயணங்கள் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்னும் பேராளுமையின் சிந்தனையின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும்.எமது மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலை இலக்கினை எங்கள் மனங்களில் ஏந்தி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, தொடர்ந்தும் தாயகக் கோட்பாட்டிற்குப் பெரும் பலம் சேர்ப்போமாக இருந்தால், நிச்சயமாக எங்கள் எல்லோரினதும் ‘தாயகக் கனவு’ நனவாகும்.
அமுதன் :- தேசியக் கொள்கை ரீதியில் தற்போது மக்கள் மத்தியில் நிலவும் கருத்தும் சூழல் சார்ந்த செயற்பாடும் எவ்வாறு உள்ளது…. இவ் வேளையில் இதுபற்றியவிழிப்பூட்டும் தங்கள் கருத்தாக அமைவது யாதென விளங்க முடியுமா?
நிலவன் :- தமிழீழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த பாதகச் செயல் முள்ளி வாய்க்கால் இனப்படு கொலையுடன் முற்றுப் பெறவில்லை. அது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.இது இந்திய “றோ” நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் ஆகும். இச் செயல்திட்டத்தை நடை முறைப் படுத்துவதை இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான “றோ” நிறுவனத்தின் உறுப்பினர்களாக புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வருகின்றார்கள். இதில் பலரின் ஒருங்கிணைப்பில், போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பு ஒன்றை இந்தியா உருவாக்க முயற்சித்து வருகிறது. இதன் ஊடாக நிதி திரட்டும் மோசடியிலும் ஈடுபட்டடுள்ளார்கள். இந்திய சிங்கள அரசுகள் கட்டவிழ்த்து விடும் பொய்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்ட போராளிகள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மை தாமே தீவிர செயற்பாடுகள் என்று காட்டிக்கொண்டு உலக உளவு நிறுவனங்களுடன் சேர்ந்து செயற்பட்டு வரும் இனத் துரோகிகளை வைத்தே இந்தியா இதைக் கையாளுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் கிளை கட்டமைப்பில் இருந்து பணமோசாடிகளாலும், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகவும் விலக்கப்பட்ட, அல்லது தாமாக விலகிய சிலரைப் பயன்படுத்தி போலியான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றை இந்திய வெளியகப் புலனாய்வு நிறுவனமான “றோ” உருவாக்கி உள்ளது.
இனத் துரோகிகளின் பயிற்சி மற்றும் ஆலோசனையும் அண்ணன் வரப் போகின்றார் என கூறி, புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கின்றார்கள். இவை அனைத்துமே திட்டமிடப்பட்ட இந்தியாவின் “றோ” உளவுப்பிரிவின் திட்டமாக நான் பார்க்கின்றேன்.
இந்திய புலனாய்வுச் சமூகத்தை மேற்கோள் காட்டுவதற்கு காரணங்கள் பல உண்டு. தமிழ் இன அழிப்பு யுத்தத்தின் உளவியல் போரை பின்னிருந்து நடத்துவது இந்தியா. இந்திய உளவுத்துறையினர் அன்றும் இன்றும் தாய்நிலத்திலும். புலத்திலும், தமிழகத்திலும் உள்ளார்கள். ஈழத்திற்கான விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின்” துப்பாக்கிகள், முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகிகளே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன்.
மக்கள் மத்தியில் தேசவிரோதிகளினால் சில குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்திப் புலனாய்வு ரீதியாகத் தங்கள் செயற்பாடுகளை மக்கள் மீது திணிக்கின்றார்கள். தேசியத் தலைவர் மற்றும் துவாரகாவின் பெயரில் மக்களை ஏமாற்றிய போலிகள் யார் என கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப்போலிக்கு பின்னால் செயற்படுபவர்கள் யாரென்பதும் கண்டறியப்பட்டது. அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் கண்டிப்பாக ஏற்க முடியாது. இப்படி செயற்படுபவர்கள் தமிழினத் துரோகிகள் எனக் கருதப்படுவார்கள். எனவே மக்களும் தற்போது விழிப்படைந்துள்ளனர். எமது தேசியத் தலைவரையும் அவரது குடும்பத்தையும் களங்கப்படுத்தும் சதிகளை முறியடிப்பார்கள் என பெருமை கொள்கின்றேன்.
எமது விடுதலைப் போராட்டமானது ஆரம்பகாலம் முதல் பல்வேறு துரோகங்களை, சதிகார நடவடிக்கைகளைச் சந்தித்தே வந்துள்ளது. இந்த காலகட்டங்களில் எல்லாம் எமது மக்கள், உணர்வாளர்கள், ஊடகங்கள் என பல்வேறு தரப்புக்களும் எமக்கு உறுதுணையாய் இருந்துள்ளனர். அந்தவகையில் தற்போது முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கைகள் போராட்ட குணத்தை முழுமையாகச் சிதைத்து, நம்பிக்கையைச் சிதைத்து, அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக ஈழத் தமிழ் மக்களை ஆக்கியிருக்கிறது.
எமது தேசத்தின் வரலாற்றில் மாவீரர்கள் சங்கமமாகி நிற்கிறார்கள் தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. நாம் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக் காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்து முற்றுப் பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அமுதன் :- விடுதலைப் புலிகள் பற்றி சிங்களத் தலைவர்கள்மத்தியிலும் உலகத்தை தலைவர்கள் மத்தியிலும் எவ்வாறான எண்ணப்பாடுகள் நிலவின?
நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்பதை சிங்கள தேசம் ஏற்கத் துவங்கி விட்டார்கள் என்றால் மிகையில்லை . எண்பதுகளில் தமிழீழத்தினதும், சிங்கள தேசத்தினதும் அரசியல் தலைவிதியை ஆட்டிப்படைத்துத் தொண்ணூறுடன் முடிவடைந்த ஒரு முக்கிய தசாப்தத்தின் வரலாற்று நாயகனாக விளங்குகின்றார் “பிரபாகரன்” இப்படியாகத் தமிழ் இனத் தலைவர் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்குப் புகழாரஞ் சூட்டுகிறார் பிரபல எழுத்தாளரும், ‘லங்கா கார்டியன்’ சஞ்சிகையின் ஆசிரியருமான “மேர்வின் டீ சில்வா”.
புயலின் மையமாக நின்று, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த வீரன் என்ற காரணத்திற்காக ஒரு தசாப்தத்தின் மாமனிதன் எனப் “மேதகு வே. பிரபாகரன்” போற்றப்பட்டார் . இது எனது தனிப்பட்ட மானசீக மதிப்பீடு அல்ல. இலங்கைத் தீவை அதிர வைத்த பூகம்பமான நிகழ்வுகளின் அடிப் படையில் பார்க்கும் போது, இது தவிர்க்க முடியாத “வரலாற்றின் தீர்ப்பு’’ என்கிறார் மேர்வின்.
முன்னர் ஒரு முறையும் “ புலிகள் தலைவர் மேதகு வே. பிரபாகரன் சிறந்த தலைவர், இறுதிவரை தன்னுடைய மக்களுக்காக நின்று போராடியவர், தனிப்பட்ட ரீதியில் தம்மை பழிவாங்கவில்லை” என்றும் பொன்சேகா கூறினார்.
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் கடந்த 23.11.2022 அன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அவர்கள், உலகில் ஒழுகத்தில் தலைசிறந்த இயக்கமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கியுள்ளனர் எனக் கூறியிருப்பது எதிரிகளாலும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் வியந்து போற்றும் நிலையில் உள்ளமைக்கு தக்க சான்றாக அமைந்துள்ளது.
சிங்களப் பேரினவாத கடும்போக்குடைய பொதுபலசேனா அமைப்பின் தலைவர் “ஞானசார தேரர்” கூட “விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த தலைவர் என்றும், மக்களுக்காக கடுமையாக போராடியவர் என்றும், முல்லைத்தீவில் பிறந்திருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுடன் இணைந்து போராடியிருப்பேன்” என்றும் கூறினார்.
2011ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய, நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயளாலர் ரிச்சர்ட் ஆர்மி ரேஜூம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சிறந்த போரியல் வல்லுனர், இராணுவ மேதை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின், போரியல் ஆளுமை என்பது, எவராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்ல என்று குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த காலத்தில் இலங்கை தீவின் அரசியல்வாதிகள் பலரும் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் குறித்தும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் குறித்தும் பல புகழாரங்களைச் சூட்டியுள்ளனர். இனவழிப்புப் போரில் ஈடுபட்ட அரசபடை இராணுவத் தரப்பின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான “மேஜர் கமால் குணரத்தின” போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் மற்றும் தலைவர் பிரபாகரன் அவர்கள் களத்தில் ஒழுக்கத்திற்குப் புறம்பான எந்த விடயங்களும் காணப்படவில்லை என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “பிரபாகரன் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்க நெறிகளைப் பின் பற்றியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளைக் கண்ணியத்துடன் நடத்தினார். அவர் அனைத்து போராளிகளையும் ஈழத் திருநாட்டின் பிள்ளைகளாகவும் தனது பிள்ளைகளாகவுமே எண்ணினார். எந்த ஒளிப்படத்திலும் பிரபாகரன் மதுபானக் கோப்பையுடன் நாம் கண்டதில்லை.” அவர் ஒழுக்கமான தலைவராக இருந்தார். அவர் உலகத் தலைவர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தடம் பதித்திருந்தார். பலரும் கற்கவேண்டிய பண்புகள் அவரிடம் உண்டு. பிரபாகரனின் தலைமைத்துவம் இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத் திறமையான தாகவே இருந்தது. அவரிடம் நிறையப் பொறுமை இருந்தது. இதுதான் என முடிவெடுத்தால் அவசரப்படமாட்டார். சரியான தருணம் வரை தனது பயணங்களுக்காகக் காத்திருக்கவே செய்வார்”.
முன்னாள் ஐனாதிபதி மகிந்தவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ஐனாதிபதியும், ஆகிய கோத்தபாய கருத்து தெரிவிக்கையில் “தமிழ் மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருக்கிறார்” என்கிறார். முன்னால் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகோ குறிப்பிடுகையில் “மகிந்தவைப்போல் பிரபாகரன் கொடூரமானவர் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.”
மேலும் முன்னாள் இந்திய இராணுவத்தின் உயரதிகாரியான கேணல் ஹரிகரன் பிரபா கரனின் போர்த் திறமைகளைச் சில வருடங்களுக்கு முதல் புகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இராணுவத் தளபதியான “பீல்ட் மாசல் சரத்பொன்சேகா”, “தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சிறந்த தலைவர் என்றும் தனது சொந்த மக்களுக்காகக் குடும்பத்தை யுத்த களத்தில் பலியிட்டு இறுதிவரைப் போராடியவர் என்றும் சிங்களத் தலைவர்கள் பிரபாகரனிடம் இருந்து இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியமையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் தலைவர் பிரபாவினதும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பான போராட்டத்திற்கு எதிரிகள் வழங்கிய புகழ்ச்சியாகும்.
2019 மே மாதம் விடுதலை புலிகளால் ஒரு வெளிநாட்டவர் கூட கொல்லப்படவில்லை என வடக்கு ஆளுநர் கூறுகையில்….
“இலங்கையில் போர் நடந்தது. இந்தப் போரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப் படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட வெளிநாட்டவர்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் அவர்கள் மிக தெளிவாகவும் மிக நிதானமாகவும் நடந்து கொண்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஒழுக்கத்திலும் நேர்மையிலும் சிறந்த கட்டுக்கோப்பு மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிறந்து விளங்கியமையின் காரணமாகவே தமிழீழ தேசம் அன்று குற்றமற்ற தேசமாக மிளிர்ந்தது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தின் போது தமிழீழ தேசத்திற்கு வருகை தந்த சர்வதேச நீதிப் பிரமுகர்கள் தமிழீழ நீதிமன்றுக்கு விஜயம் செய்த வேளையில் தமிழீழத்தின் ஒழுக்கம் கண்டு வியந்தனர்.
தமிழீழ நீதிமன்றங்களிலும் தமிழீழக் காவல்துறை அலுவலகங்களிலும் குற்றங்களின் கோவைகள் குறைவாக இருந்தமை கண்டு வியந்து தமிழீழத்தில் நிலவிய சட்டம் மற்றும் ஒழுக்கின் சீர்மையை பாராட்டினர். முப்பது ஆண்டுகளாக தமிழீழ இலட்சியம் மற்றும் கனவுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை பற்றிக் கொண்டமையின் விளைவாகவே உலகில் தலை சிறந்த தேசத்தை விடுதலைப் புலிகள் சாத்தியமாக்கினர்.விடுதலைப் புலிகளின் தலைவரான மேதகு வே. பிரபாகரன் இலங்கையின் மூவின அரசியல் தலைவர்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் தனித்துவமானவராகவே காணப்படுகின்றார்.
அமுதன் :- சிங்கள மக்களைப் புலிகள் கொன்றார்களா ? அவர்கள் விடயத்தில் புலிகளின் செயற்பாடு எவ்வாறு இருந்தது?
நிலவன் :- ஈழத்தமிழர்கள் கடந்த 75 வருடங்களாகத் தங்களது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகின்ற ஒவ்வொரு சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது.
சிங்கள இராணுவம் விடுதலைப் புலிகள் மேல்தொடுத்த போரின் போது இலட்சக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட போதும், விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத்தை மட்டுமே குறி வைத்துக் கடைசிவரைப் போரிட்டார்கள். தங்கள் உயிரே போனாலும் கடைசிவரை அப்பாவி சிங்கள குடிமக்களை அவர்கள் கொல்லவும் இல்லை, படுகொலை செய்ய முயற்சித்ததும் இல்லை.
விடுதலைப் புலிகள் இயக்கமானது….. ஒருபோதுமே அப்பாவி மக்களை இலக்கு வைத்து எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை தாக்கி அழித்த சமயத்தில்கூட ஒரு சிங்களப் பொதுமகனும், வெளிநாட்டவரும் சிறு காயத்திற்குக் கூட உள்ளாகவில்லை. அதுதான் விடுதலைப் புலிகள் இயக்கம்.
சிங்கள இராணுவம் தமிழீழ மண்ணில் புலிகளை தாக்குகிறோம் என்று சொல்லி நடத்தியவை எல்லாமே இன அழிப்புத்தான். உண்மையில் அதை சிங்கள அரசு தெரிந்தே செய்தது. புலிகளை அழித்தாலும் மக்களை அழித்தாலும் சிங்கள அரசுக்கு ஒன்றுதான். புலிகளும் மக்களும் வேறுவேறல்ல, தமிழ் இனத்தையே அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கு.
போரில் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதை அரசைப் போல புலிகள் நிபந்தனையாகக் கொள்ளவில்லை. 30 வருடங்களுக்கு மேல் இலங்கையில் தமிழின அழிப்பு போர் நடந்தது. இந்தபோரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட வெளிநாட்டவர்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் அவர்கள் மிக தெளிவாக இருந்தார்கள்.
21-04-2019 நடந்துள்ள தாக்குதலில் 37 வெளிநாட்டவர்கள் இறந்துள்ளனர். புலிகள் வெளிநாட்டவா்களை வெறுக்கவில்லை. இவர்கள் வெளி நாட்டவர்களை வெறுக்கிறார்கள் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்ததையும் நினைவு படுத்துகின்றேன்
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல… அவர்கள் விடுதலைப் போராளிகள் என 21-04-2019 பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.
புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது”CNN – அமெரிக்கா”….
இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம். BFM – பிரான்ஸ்….
விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை- சிறீலங்கா அரசு.
21-04-2019 தாக்குதலின் பின் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப் போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை!
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலில் அறிவித்த சர்வதேச நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே இன விடுதலைக்காகப் போராடிக் கொண்டி _ருக்கும் தேசிய இனமாகிய தமிழ் மக்களுக்கான விடுதலையையும் நீதியையும் ஏற்படுத்துகின்ற பயணத்திற்கு உதவும்.
அமுதன் :- தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் விடயத்தில் அன்றும் இன்றும் இலங்கை அரசு கொண்டுள்ள நிலைப் பாடு என்னவாக இருக்கும்?
நிலவன் :- 1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் இவர்களது இந்த தமிழரசுக்கட்சியே 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இவர்களது இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தைப் பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது 75ஆண்டு காலமான நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. அரச ஒடுக்குமுறையும், அதற்கு எதிரான எழுச்சிப் போராட்டமுமாக இந்த வரலாறு விரிகின்றது. தாயகத்திற்கான, தேசியத்திற்கான, சுயநிர்ணய உரிமைக்கான, தமிழர் போராட்டத்தின் வடிவத்தையே, தீவிரவாதிகள் போன்ற சொல்லாடல்களால் உலக வல்லரசுகள் விமர்சித்து வந்திருக்கின்றன. உண்மையில் போராட்ட வடிவத்தை மட்டும் இவர்கள் எதிர்க்க வில்லை. போராட்டத்தையே இவர்கள் எதிர்த்தார்கள். அகிம்சை வழியிலானதாக இருந்தாலும் ஆயுத வழியிலானதாக இருந்தாலும் இவர்கள் எதிர்த்தார்கள்.
அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சித் தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப் பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.
பௌத்த சிங்கள ஆதிக்கவாதிகள்தான் தமிழர்கள் மேல் வன்முறையைத் தொடங்கி வைத்தனர். பிறகு இவ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இறுதியில் வேறு வழியின்றி இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட வரலாறும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கத் திருப்பி தாக்கதலில் ஈடுபட நேரிட்டது.
புலிகளுக்கு அரசியல் ரீதியாக ஒரு நோக்கம் இருந்தது, அவர்களின் கட்டுபாட்டில் நிலம் இருந்தது, தமிழ் மக்களின் உரிமைக்காக போராட்டத்தில் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற மூலாதாரக் கோட்பாட்டின் அடிபப்டையில் தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும், அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்ந்த விடுதலைப் புலிகளின் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காகத் தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள். தமிழ் மக்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தமிழர்கள் கொடுத்த ஆணைக்கே விடுதலைப்புலிகள் வடிவம் கொடுத்தார்கள். – ஒரு அரசை நிறுவினார்கள்.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனா
விலிருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் வகுப்பட்டிருந்தமை வெளிச்சத்துக்கு வருகிறது.
நீண்டு தொடர்ந்த இனவழிப்புச் செயற்பாடுகளை இந்த நடைமுறை அரசு ஓரளவு தடுத்து நிறுத்தியது. இராணுவ சாதனைகள் ஊடாக தமிழர் விடுதலை போராட்டம் சிங்கள அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி அதனுடன் அரசியல் ஒப்பந்தம் செய்ய ஆயத்தமானது. இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஆதரித்தது. ஆனால் ஐக்கிய-அமெரிக்க பிரித்தானிய, இந்தியா அரசுகள் ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்த்தன.
2002ம் ஆண்டு சமாதான பேச்சு வார்த்தைகள் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அதன் இராணுவ வெற்றிகளைக் கொண்டு சனநாயக அரசியல் வெளியை உருவாக்கிக் கொடுத்தது. உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது வல்லாதிக்க நாடுகள்தான். ஆனால் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அந்த இயக்கங்கள் எந்த அரசுக்கு எதிராகப் போரிடுகின்றதோ, அந்த அரசைக் காப்பாற்றுவதே அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் வேலை. எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மறுத்த ரணில் அரசாங்கம் எமது விடுதலை இயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி ஓரம்கட்டுகின்ற வேலையையும் இரகசியமாக மேற்கொண்டது.
2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய இரா. சம்பந்தன், விடுதலைப் புலிகளை அழித்துப் போரை முடிவுக் கொண்டு வந்த பின்னர் நிரந்த அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமெரிக்க இந்தியத் தூதுவர்கள் 2009 ஜனவரி மாதம் தன்னைச் சந்தித்து கேட்டிருந்தாக விபரித்தார். ஈழப்போரின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து 4ம் கட்ட ஈழ யுத்தத்தை பிரகடனப்படுத்தி இனவழிப்பை உள்ளடக்கிய பேரழிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்துவிட்டது.
இந்தியா ,அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கர வாதிகள் என்று குற்றம் சாட்டுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக் கருத்தை வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது. இலங்கைத் தேசத்தின் பௌத்த சிங்கள அரச பயங்கரவாதத்தினை விடவா தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களைச் செய்திருக்கின்றார்கள். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன் வைக்கப் போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது . ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன.
அமுதன் :- தற்பேதைய காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு தேசிய நிலைப் பாட்டிலுள்ள சகலருக்கும் மக்களுக்குமாக நீங்கள் கூறும் தெளிவான கருத்தும் வேண்டுதலும் என்னவாக இருக்கும்?
நிலவன் :- உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் பெயரை களங்கப்படுத்திப், பயன்படுத்தி இனவிரோத மோசடி செயலில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயலாகும். உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் இலங்கைபௌத்த சிங்கள பேரினவாதம் நடத்திய தமிழின அழிப்புப் போரின் இனப்படு கொலை களுக்கும் மனித அவலங்களுக்கும் எதிரான இனப்படு கொலைக்காக ஒலிக்கும் குரல்களைப் பலவீனப் படுத்துகிற வகையில் யுத்தம் பற்றிய கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் குறித்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வை உருவாக்கி இனவிரோத மோசடிகளை தடுத்து நிறுத்த வேண்டும். நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதை வரலாற்றுப் பார்வையோடு செயற்படுத்த வேண்டும்.
விடுதலைப்புலிகள் இயக்கம் 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி அவரால் தொடங்கப் படுகிறது. பின்னர் அது படிப்படியான வளர்சியை மேற்கண்டு பல போரியல் வெற்றிகளைக் குவித்து, பலதேச கட்டுமானங்களை நிறுவி தமிழ் மக்களின் ஏகோபித்த நப்பிக்கையைபெற்ற ஒரு நிழல் அரசாக மாறி சரியாக 33 ஆண்டுகள் 12 நாட்கள் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த நிழல் அரசு 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியோடு முள்ளிவாய்க்கால் முடிவிலும் நந்திக்கடலின் கரையோரமாகவும் எங்கள் தேசியத்தலைவர் தன்னைத் தமிழீழ மண்ணின் விடுதலைக்கு விதையாக்கி இற்றைக்கு பதினைந்து ஆண்டுகள் கடந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் சிறுகச் சிறுக அழித்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக மிகவும் கேவலமான விசமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அசாத்திய மானவற்றை தன் தீர்க்கமான முடிவுகளாலும், மதிநுட்பத்தாலும் சாத்தியமாக்கிக் காட்டியவர். ஆனால் அவர் தீர்க்கதரிசிபோல சிலவற்றை முன்கூட்டியே கணித்தும் உள்ளார்! அதற்கு பல எடுத்துகாட்டுகளும் உள்ளன.
இனியும் காலத்தைக் கடக்காது உலகமெங்கும் பரந்துவாழும் எம்தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் 2009 ஆம் ஆண்டு வரை களம் கண்ட போராளிகள் ஒன்றிணைந்து எமது விடுதலை இயக்கத்தின் மரபிற்கு அமைவாக எங்கள் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தமிழீழ மண்ணையும் தேசியத் தலைவரையும் நேசித்த தமிழ்மக்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் எமது விடுதலைப் போராட்டத்தின் நீட்சியாக தமிழ்த்தேசிய எழுச்சியுடன் அவரது உரித்துடையோர்கள், தேசிய செயற் பாட்டாளர்கள், தமிழ்தேசிய அமைப்புக்கள், தமிழீழ மண்ணையும் எம்தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்த பொதுமக்கள், மற்றும் தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமையின் கீழ் போராடிய போராளிகள் அனைவரையும் இணைத்து நடாத்த வேண்டும். இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய எண்ணிலடங்கா மக்களினதும் போராளிகளினதும் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் பங்களிப்புகளும் கொண்டு போராட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க தேசியப் புனிதப் பணியில் அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த புனித வரலாற்றுக் கடமையை முன்னெடுக்க வேண்டி உள்ளது.
“தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
நன்றி – நிலவன்.