மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கு,
நாள்:23-05-2026
ஈழத் தமிழர்களின் 75 ஆண்டுகால விடுதலைப் போராட்டமும், அவர்கள் சிதறிய குருதியிலும் இழந்த உயிர்களிலும் உருவான முள்ளிவாய்க்கால் பேரவலமும் உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஆறாத வடுக்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பல தலைமுறைகளின் தியாகத்தாலும், உலகெங்கும் சிதறி வாழும் தமிழர்களின் ஒற்றுமையாலும் மட்டுமே நம் இனம் தன் அடையாளத்தையும் உரிமையையும் காக்கப் போராடி வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், தங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் தாயக மக்கள் தங்களைப் போன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். ஆனால், மக்களின் அந்த நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும் வகையில் உங்களுடைய செயல்பாடுகளும் அண்மைக்காலப் போக்குகளும் அமைந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
சாதாரண மருத்துவர்கள் மற்றும் பொதுத்துறை மீது எவ்வித முறையான ஆதாரமும் இன்றி போலிப் புகார்களைக் கூறி, பொதுவெளியில் பரப்புரை செய்து, உங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளும் நீங்கள், நாடாளுமன்றத்தில் மக்களுக்காக கொடுக்கப்பட்ட பொன்னான நேரத்தை அவர்களின் உண்மையான பிரச்சினைகளைப் பேசுவதற்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்த, இனப்படுகொலைக்குக் காரணமான அரசுக்கும், அதற்குத் துணை நின்ற முந்தைய கொள்கைகளுக்கும் ஆதரவாகவும், அவர்களை ஏற்றுக்கொண்டும் பேசுவதிலேயே உங்களது பெரும்பாலான நேரத்தைச் செலவழித்து வருகிறீர்கள்.
தாயகத்தில் தீர்க்கப்பட வேண்டிய எண்ணற்ற மக்கள் பிரச்சினைகள், நில ஆக்கிரமிப்புகள், வறுமை மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்கள் இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழ்நாட்டுக்குத் தேவையின்றிச் சென்று அங்கிருக்கும் அரசியலில் தலையிடுவதும், பிளவுகளை ஏற்படுத்த முயல்வதும் சனநாயக மரபுகளுக்கு எதிரானது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சனநாயக வழிநின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களை நோக்கி, “ஆயுதம் இருந்தால் சுட்டிருப்பேன்” என வன்முறையைத் தூண்டும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் பாணியிலும் நீங்கள் பேசியிருப்பது சனநாயக நெறிமுறைகளை முற்றிலுமாக மீறிய செயலாகும்.
ஒரு மக்கள் பிரதிநிதியாக சட்டம், ஒழுங்கு மற்றும் சனநாயக மரபுகளைக் காக்க வேண்டிய உங்களுக்குப் பின்வரும் விவகாரங்கள் குறித்தான கேள்விகளையும் தார்மீக விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டியுள்ளது:
நிதி விவகாரங்கள் மற்றும் முரண்பாடான கூற்றுகள்: பல இடங்களிலும் சூழல்களிலும் பல்வேறு கருத்துகளையும் புகார்களையும் கூறிவிட்டு, பின்னர் அதற்கு முரணாகத் தனது பேச்சுகளை மாற்றிக் கொள்வது உங்களது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, பல்வேறு பொதுக் காரியங்களுக்காகவும், செயல்பாடுகளுக்காகவும் நிதி சேகரிப்பு செய்துவிட்டு, பின்னர் அந்த நிதிகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பொறுப்பற்ற முறையிலும், நிதிகளை வாங்கவில்லை அல்லது கொடுக்கவில்லை என்பது போன்ற முரண்பாடான விளக்கங்களை அளிப்பதும் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் நம்பகத்தன்மைச் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது உங்களது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
நாடாளுமன்ற மாண்புகளை மீறிய தனிநபர் விமர்சனங்கள்: நாடாளுமன்ற வளாகத்திற்குள் சக தமிழ் மக்கள் பிரதிநிதிகளான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுடன் நடந்த உரையாடல்களை, நாடாளுமன்ற மாண்புகளுக்கு முரணான வகையில் பொதுவெளியில் தவறான விமர்சனப் பொருளாக மாற்றியதும், அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து உரிய பதிலடிகள் கொடுக்கப்பட்டதும் நாம் அறிந்ததே. மக்கள் எதிர்நோக்கும் தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க வேண்டிய உயரிய சபையை, சக பிரதிநிதிகளுக்கு எதிரான தனிநபர் மோதல்களுக்கான களமாகப் பயன்படுத்தியது உங்களது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.
அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்: கடந்த ஜனவரியில் அனுராதபுரத்தில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடமையைத் தடுத்ததாகக் கைது நடவடிக்கை வரை சென்றது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பொறுப்புணர்வுக்கு அழகல்ல.
ஆவேச அரசியலும் அச்சுறுத்தல்களும்: யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் காணித் தகராறின் போது பெண்களுடன் கடுமையான வாய்த்தகராறில் ஈடுபட்டு, கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட வீடியோக்கள் உங்களின் சனநாயகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
மருத்துவமனை மற்றும் பொதுத்துறை மீதான அவதூறுகள்: யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதியின்றி நுழைந்து, ஊழியர்களை மிரட்டியதாக எழுந்த புகார்களும், சக மருத்துவ அதிகாரிகள் மீது போலிப் புகார்களைக் கூறி நீதிமன்ற அவதூறு வழக்குகளைச் சந்தித்து வருவதும் நீங்கள் மக்கள் நலனை விட விளம்பர அரசியலையே முதன்மைப்படுத்துகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.
நாடாளுமன்ற மரபுகளை மீறுதல்: நாடாளுமன்றத்தில் தங்களின் உரைகள் அவதூறாகவும், தரக்குறைவாகவும் இருந்ததன் காரணமாக, நேரடி ஒளிபரப்பில் தடை விதிக்கப்பட்டதும், நாடாளுமன்றக் குறிப்பேட்டிலிருந்து (Hansard) கருத்துகள் நீக்கப்பட்டதும் ஒட்டுமொத்தத் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கே இழுக்கைத் தேடித்தந்துள்ளது.
தகுதி நீக்க வழக்கு: நீங்கள் இன்னும் அரசு மருத்துவச் சேவையுடன் தொடர்புடையவரா மற்றும் எம்பியாக இருக்க தகுதி உடையவரா என்ற சட்ட ரீதியான மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு வரும் வேளையில், தமிழ்நாட்டு அரசியல் குறித்துப் பகல்கனவு காண்பது அப்பட்டமான அரசியல் அறியாமையாகும்.
விழிப்புணர்வும் அரசியல் தெளிவும் உள்ள தமிழ்நாட்டு மக்களையும், தாயக மக்களையும் திசைதிருப்பிவிட முடியும் என்று நீங்கள் எண்ணக் கூடாது. எனவே, நீங்கள் உடனடியாக உங்களது பொறுப்பற்ற பேச்சுகளையும், திசைதிருப்பும் அரசியலையும், நிதி சார்ந்த முரண்பாடுகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய சனநாயக விரோத வார்த்தைகளைத் திரும்பப் பெற்று, அண்ணன் சீமான் அவர்களிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இனியாவது வெற்று விளம்பர அரசியலையும், தனிநபர் மோதல்களையும் கைவிட்டு, உங்களுக்கு வாக்களித்த தாயக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் ஆரோக்கியமான வாழ்வாதாரத்திற்காகவும் நாடாளுமன்றத்தில் காத்திரமான பணிகளைச் செய்ய முன்வர வேண்டும் என இந்தத் திறந்த மடலின் வாயிலாக வன்மையாக வலியுறுத்துகிறேன்.
இவ்வண்ணம்,
நிலவன்,
ஊடகவியலாளர்.












































