புகழ் வணக்கத்துடன் நடைபெற்ற ‘விடுதலைச் சிற்பி’ நூல் மற்றும் ‘ஜவான் – திடம் குன்றா தீக்குரல்’ இசைப்பேழை வெளியீட்டு விழா.
தமிழ்த் தேசிய வரலாற்றின் நினைவுகளையும், தியாகங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘விடுதலைச் சிற்பி’ நூல் வெளியீடும், ‘ஜவான் – திடம் குன்றா தீக்குரல்’ இசைப்பேழை வெளியீடும் இணைந்த புகழ் வணக்க நிகழ்வும் உணர்வுபூர்வமாகவும், வரலாற்று நினைவுகளை மீட்டெடுத்தும், கலை–இலக்கிய–வரலாற்று சங்கமமாகவும் நடைபெற்றது.
நிகழ்வு ஆரம்பத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தமிழர் தேசியத்தின் இறைமையும், விடுதலை இலட்சியமும், தியாக வரலாறும் நினைவுகூரப்பட்டன. புலிகளின் குரல் பொறுப்பாளராகப் பணியாற்றிய தமிழன்பன் அவர்களின் சகோதரரும், தமிழீழ மருத்துவப் பிரிவில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவருமான திரு. வண்ணன் அவர்கள் தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியான திரு. பிள்ளையார் மாஸ்டர் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்விலும், மலர் மாலை அணிவிக்கும் நிகழ்விலும், விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்கள், போராளிகள், பொதுமக்கள் மற்றும் விடுதலைக்காக உழைத்த அர்ப்பணிப்பாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
போராளி திருமதி கவிதா அவர்கள் பொதுப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்ததுடன், திருமதி நந்தினி தமிழன்பன் மற்றும் அருண் நிலா ஆகியோர் மாவீரர் தமிழன்பன் மற்றும் மாவீரர் எழில்நிலா (கவின்மதி) ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அக வணக்கத்தில், தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், போரின்போது படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் இணைந்து மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வின் வரவேற்புரையை புலிகளின் குரல் குடும்பத்தின் உறுப்பினரான பெல்ஜியத்தைச் சேர்ந்த திருமதி இந்துஜா ஜனத் அவர்கள் வழங்கினார். தனது உரையில், தமிழர் வரலாற்றைப் பாதுகாக்கும் பணியில் இலக்கியமும் கலைப் படைப்புகளும் வகிக்கும் பங்களிப்பை வலியுறுத்தியதுடன், நினைவுகளைப் பாதுகாப்பது எதிர்காலத்தை உருவாக்கும் பணியாகும் என்றும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில், செல்வி கனியிசை சிவனேஸ்வரன் அவர்கள் மாவீரர்களின் நினைவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உணர்வுபூர்வமான நாட்டிய அஞ்சலியை வழங்கினார். பின்னர் செல்வி ஸ்ரீரங்கன் ஹரிணி அவர்கள் தமிழர் பண்பாடு, தொன்மை மற்றும் பெருமையை வெளிப்படுத்தும் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார்.
நிகழ்விற்கு தலைமை தாங்கிய மூத்த படைப்பாளியும் புலிகளின் குரல் குடும்ப உறுப்பினருமான சுவிசைச் சேர்ந்த திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள், வரலாற்றை எழுத்தில் நிலைநிறுத்துவதன் அவசியத்தை விளக்கி தலைமை உரையாற்றினார்.
மாவீரர் தமிழன்பன் அவர்களின் சகோதரியும் எழுத்தாளருமான கனடாவைச் சேர்ந்த திருமதி மதியழகன் விஜயராணி அவர்கள் உடன்பிறப்பின் சார்பில் உரையாற்றியபோது, குடும்ப நினைவுகளையும், போராட்ட வரலாற்றின் மறக்கமுடியாத அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் திரு. கிருபா அவர்கள் மாவீரர் பாடலையும், திரு. முகுந்தன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவர் பாடலையும் உணர்வுபூர்வமாக வழங்கினர். இசை நிகழ்வுகள் முழு அரங்கையும் ஆழ்ந்த உணர்வில் ஆழ்த்தின.
லண்டனைச் சேர்ந்த அறிவிப்பாளர் திருமதி ரூபி குமார் அவர்கள் நிகழ்வின் சிறப்பையும், படைப்புகளின் சமூகப் பெறுமதியையும் பற்றி உரையாற்றினார்.
தமிழ்ச்சோலை மகாவித்தியாலய ஆசிரியரும், மாவீரர் எழில்நிலாவின் வகுப்பு ஆசிரியருமான திருமதி பாலராஜனி அவர்கள் வழங்கிய கவிதை அஞ்சலி பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, புலிகளின் குரல் பொறுப்பாளர் தமிழன்பன் அவர்களின் சகோதரரும், தமிழீழ மருத்துவப் பிரிவின் களமருத்துவருமான மருத்துவர் திரு. வண்ணன் அவர்கள் வெளியீட்டுரையாற்றினார். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நினைவுகளையும், வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘விடுதலைச் சிற்பி’ நூல் வெளியீட்டு நிகழ்வில், லண்டனைச் சேர்ந்த திருமதி அனோஜா முத்துசாமி அவர்கள் நூலை வெளியிட்டு வைத்தார். முதல் பிரதியை மூத்த போராளி திரு. பிள்ளையார் மாஸ்டர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற ‘ஜவான் – திடம் குன்றா தீக்குரல்’ இசைப்பேழை வெளியீட்டில், திரு. கண்ணதாசன் அவர்கள் இசைப்பேழையை வெளியிட்டு வைத்தார். அதனை தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் வீரத்தேவன் அவர்களின் மனைவியும் போராளியுமான திருமதி நிருபா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூலின் சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் பொறுப்பாளர் நல்லை கண்ணதாசன் அவர்கள் ஆழமான சிறப்புரையாற்றினார்.
தமது உரையில், திரு. ஜவான் / தமிழன்பன் அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பை பல்வேறு பரிமாணங்களில் எடுத்துரைத்தார். குறிப்பாக, கலை, இலக்கியம், பண்பாடு, ஊடகம், படப்பிடிப்பு ஆகியவற்றை விடுதலைப் போராட்டத்தின் வலிமையான ஆயுதங்களாக மாற்றியமைப்பதில் ஜவான் அவர்களின் அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
பல இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நாடகக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களின் திறமைகளை இனங்கண்டு, அவர்களை ஊக்குவித்து, தமிழ்த் தேசியக் கலை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை ஜவான் அவர்களுக்கே உரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தனிநபர் புகழை நாடாது, கலைத் திறமைகளை இனத்தின் சொத்தாக வளர்த்தெடுத்த பண்பே அவரின் உயர்ந்த அடையாளமாக விளங்கியது என்றும் குறிப்பிட்டார்.
ஒரு போராளியாக மட்டுமன்றி, ஒரு கலைப் போராளியாகவும், பண்பாட்டு வழிகாட்டியாகவும், அறச்சார்ந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்ட விடுதலைப் போராட்டத்தின் அமைதியான சிப்பியாக ஜவான் அவர்கள் வாழ்ந்தார் என்பதை நல்லை கண்ணதாசன் அவர்கள் தனது சிறப்புரையில் ஆழமான வரலாற்றுப் பார்வையுடன் விளக்கினார். ஜவான் அவர்களின் வாழ்க்கை என்பது தனிமனித வரலாறு அல்ல; தமிழர் தேசியக் கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு வரலாற்றின் பிரிக்க முடியாத ஓர் அத்தியாயம் என்பதை வலியுறுத்தி, அனைவரின் பாராட்டையும் பெற்ற சிறப்புரையை நிறைவு செய்தார்.
‘விடுதலைச் சிற்பி’ நூல் குறித்த பார்வையை எழுத்தாளர் திரு. பாலகணேசன் அவர்கள் வழங்கினார். இந்த நூல் வெறும் வாழ்க்கை வரலாறு அல்ல; ஒரு காலத்தின் அரசியல், சமூக மற்றும் வரலாற்றுச் சாட்சியமாக விளங்குகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
நூல் உருவாக்கப் பயணத்தை நினைவுகூர்ந்த அருண் நிலா அவர்கள், தந்தையின் நினைவுகளைப் பாதுகாக்கும் முயற்சி எவ்வாறு ஒரு வரலாற்றுப் பதிவாக மாறியது என்பதை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, நூலின் எழுத்து மற்றும் தொகுப்புப் பணிக்கு உதவிய போராளி திரு. நிஜத்தடன் நிலவன் அவர்கள், படைப்பின் உருவாக்கப் பின்னணி, ஆவணச் சேகரிப்பு, வரலாற்றுப் பதிவுகளின் அவசியம் மற்றும் தனது ஊடகப் பயண அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்வின் இறுதிப் பகுதியில், நூல் மற்றும் இசைப்பேழை உருவாக்கத்திற்கு பங்களித்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், போராளிகள் மற்றும் சமூகப் பங்களிப்பாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் கௌரவங்களும் வழங்கப்பட்டன.
நன்றியுரையை செல்வி குழலிசை அவர்கள் வழங்கி, நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைத்து அமைப்பினருக்கும், கலைஞர்களுக்கும், உரையாற்றியவர்களுக்கும், தொண்டர்களுக்கும், உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தந்த தமிழர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இறுதியாக தமிழீழ தேசியக்கொடி மரியாதையுடன் இறக்கப்பட்டு, நிகழ்வு நிறைவுற்றது.
இந்த நிகழ்வு வெறும் நூல் வெளியீடாகவோ, இசைப்பேழை வெளியீடாகவோ அமையாமல், தமிழர் தேசிய வரலாறு, விடுதலைப் போராட்ட நினைவுகள், மாவீரர் தியாகங்கள், கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்றுப் பதிவுகளை ஒருங்கிணைத்த புகழ் வணக்க நிகழ்வாக அமைந்தது. உலகத் தமிழர்கள் மத்தியில் வரலாற்று நினைவுகளைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு ஆவணங்களாகக் கொண்டு செல்லவும் இந்நிகழ்வு முக்கிய பங்களிப்பை வழங்கியதாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.













































