மண்ணின் விடுதலை வேண்டி நின்றார் – தமிழ்
மக்களின் உரிமையைக் காக்க வந்தார்
அன்னியர் ஆதிக்கப் பிடிவிலக்க – தங்கள்
ஆயுளை ஈகம் செய்யத் துணிந்தார்
பயங்கர வாதம் அவர்க்கில்லை – அது
பகையுரை சாற்றிய பழிச்சொல்லே.
அடக்குமுறை தாண்டவ மாடியபோது – இனம்
அழிவின் விளிம்பினில் நின்றபோது
தடுக்க எழுந்ததொரு தற்காப்பு – அது
தனிமனிதக் கோபத்தின் போரல்லவே
மண்ணைக் காத்திட வந்தபடை – என்றும்
மக்களின் நெஞ்சினில் வாழும்படை.
அரசின் பார்வைகள் வேறிருக்க – இங்கு
அழுதவர் கண்ணீரைத் துடைக்கவந்தார்
உரிமை இழந்தொரு சமூகத்தின் – பெரும்
உயிர்ப்பாய் எழுந்தது புலிக்கொடியே
பயங்கர வாதமென் றரைவதெல்லாம் – உண்மை
வரலாற்றை மறைக்கின்ற மாயையன்றோ.
பள்ளியும் மருத்துவ மனைகளும் – மக்கள்
பண்பாட்டுப் பெட்டகக் காப்பகமும்
உள்ளூர் நிர்வாகத் தரம்வளர்த்து – ஒரு
உன்னத வாழ்வியலைத் தந்தாரே
அழிவை மட்டுமே செய்தவர் என்றுரைத்தால் – அது
அறிவார்ந்த நெஞ்சினில் ஏற்குமோ?
தாய்மண் மீட்கின்ற வேட்கையினால் – தங்கள்
தாழ்வுக் குலையினை நீக்கவந்தார்
சேய்களைப் போலொரு சமூகத்தை – நெஞ்சில்
சேர்த்தணைத்துக் காத்த வீரரவர்
பயங்கர வாதத்தின் நிழலவற்றுள் – இல்லை
பாரினில் தூயதொரு தியாகமது.
ஒடுக்கப்பட்டோரின் குரலாகி – அன்று
ஓங்கி ஒலித்தது புலிகளின்சேனை
அடுத்தவர் நாட்டைப் பிடிக்கவில்லை – தங்கள்
அகவிருள் போக்கிடப் போரிட்டார்
அரசியல் முத்திரைக் குத்தலினால் – இந்த
அரும்பெரும் தியாகங்கள் அழியாது.
இராணுவப் பலத்துடன் மோதியவர் – தங்கள்
இனத்தின் பெருமையைக் காத்தாரே
பராக்கிரமச் செயல்கள் புரிந்தாலும் – என்றும்
பயங்கர வாதிகள் அவரில்லை
சுயநிர்ணய உரிமைப் போராட்டமது – தமிழ்
சொந்தங்கள் போற்றிய காவியமது.
வார்த்தைகள் பூசி மறைத்தாலும் – அங்கு
வாழ்ந்தவர் நெஞ்சினில் உண்மைஉண்டு
தீவிர வாதமென் றோதியவர் – அங்கு
தீர்த்த கொடுமைகள் ஏகமுண்டு
பாதிக்கப் பட்டவர் பக்கமிருந்தே – நாம்
பார்தனில் உண்மையை ஓதிடுவோம்.
கண்ணியம் மிக்கதொரு ராணுவமாய் – அறக்
கட்டுப் பாட்டுடன் இயங்கியவர்
மண்ணின் விடிவொன்றே குறிக்கோளாய் – உயிர்
மரணத்தை வென்றுமே நின்றவர்
அவதூறுச் சொற்கள் துடைத்தெறிந்து – அவர்
அர்ப்பண வாழ்வை மதிப்போம் நாம்.
காலங்கள் ஓடி மறைந்தாலும் – அந்த
காவிய நாயகர் நினைவிருக்கும்
கோலங்கள் மாறும் உலகினிலே – உண்மை
கோணாமல் என்றும் நிலைத்திருக்கும்
பயங்கர வாதமென் றரைந்தசொல்லை – இந்த
வரலாறு ஒருநாள் மறுதலிக்கும்.
#நிலவன்- #Nilavan
ஊடகவியலாளர் (Journalist )&
உளவளத்துணையாளர் (Counsellor)












































