“சொர்ணம்” எனச்சொல்லும் போதே நெஞ்சில்
சுயமரியாதைக் கர்வமும் வீரமும் பிறக்கும்!
படைத்துறைக்கு உரிய அறமும் ஆளுமையும்
பாராளும் வண்ணம் இவன்முன்னே சிறக்கும்!
இரண்டாம் ஈழப்போர் தொட்டு இறுதிவரை
எதிரியின் படைகளைச் சிதறடித்த வீரன்!
பெரும்பாலான வலிந்த எதிர்ச்சமர்களில்
பெருவெற்றி கண்ட பெரும்புகழ்ச் சேரன்!
விடுதலைப் பயணத்தில் சூழ்ந்த துரோகத்தைக்
களைந்தெறிந்த பெரும்பணியில் இவன்பங்கு உண்டு!
வடுகளின் பாதையில் வழுவாமல் நின்றே
வரலாறு படைத்தான் பகைக்கோட்டை விண்டு!
தமிழர் தாயகத்தின் மாவட்டங்கள் தோறும்
தடம் பதிக்காத இடமேதும் இல்லை!
தரைப்படை கடற்படை வான்படையென முப்படையும்
தாங்கி வழிநடத்திய ஆளுமையின் எல்லை!
அழகிய புன்முறுவல் முகத்தினில் மின்ன
அடங்காத புரட்சியுணர்வு நெஞ்சினில் பொங்கும்!
புறநானூற்று வீரத்தைப் புதிதாய்ப் பிறப்பித்த
புலிமகன் காலடியில் பகைவீரம் தங்கும்!
“எங்கள் திமிரின் அடையாளம்” என்றுமே
எழில்மிகு தளபதி சொர்ணம் அவன்தான்!
கங்குல் இருளைக் கிழித்தெறிந்து வந்த
காவிய நாயகன் மாவீரன் இவன்தான்!
பதினேழாம் ஆண்டு நினைவு நாளில் உந்தன்
பாதம் பணிந்து சிரம் தாழ்த்துகின்றோம்!
விதியினை வென்ற உன்னதத் தியாகத்தை
வீர வணக்கமாய் நெஞ்சில் ஏந்துகின்றோம்!
முள்ளிவாய்க்கால் என்னும் இறுதிச் சமரினில்
முத்தமிழ்த் தாய்க்காய் மகளையும் தந்தான்!
அள்ளித் தெளித்த குருதியின் வழியிலே
அழியாத புகழுடன் மண்ணினில் கலந்தான்!
வீரவேங்கை மாவீரர் மான்மதி தேவி
விழுந்தாள் அன்ரனிதாஸ் எழில்மதி அங்கே!
ஈரமண் காக்க உயிரைத் துறந்தே
இணைந்தாள் தன்புகழ் வரலாற்றின் எங்கே!
மேமாதம் பதினெட்டில் மாவீரரான
மெல்லிய மலர்களின் தியாகங்கள் வாழ்க!
பூமி உள்ளவரை தளபதியின் நாமம்
புரட்சித் தமிழரின் நெஞ்சினில் சூழ்க!
#நிலவன்
ஊடகவியலாளர் &
உளவளத்துணையாளர் (Counsellor)
திமிரின் அடையாளம்: பிரிகேடியர் சொர்ணம்






















































