மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப் பிரிவு, இணையவழிச் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பிப்பொன்றினை 05.03.2025 புதன்கிழமை மேற்கொண்டிருந்தது.
மேற்குறிப்பிடப்பட்ட சந்திப்பு தாயக நேரம் 21.00 மணிக்கு, மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப்பிரிவு இணைப்பாளர் திரு. அறிவுமணி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம் நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அகவத்தின் செயலாளர் திரு.புரட்சி அவர்கள் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்றைய நாள் ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுகின்ற திரு. புரட்சி அவர்களின் உரை அடங்கிய காணொளி இணையவழியில் காண்பிக்கப்பட்டது.
அடுத்து கேள்வி – பதிலுக்கான நேரம் வழங்கப்பட்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்களையும் தெளிவுபடுத்தல்களையும் அகவத்தின் முதன்மை செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.இளங்குட்டுவன் அவர்கள் வழங்கினார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், இவ்வாண்டு எட்டாம் மாத முற்பகுதியில் ஒருங்கிணைந்து ஐரோப்பாவில் ஒரு நாட்டிலும் சம நேரத்தில் தாயகம், தமிழகம் உட்பட ஏனைய நாடுகளிலும் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வு இடம்பெறும் என்றும் அது தொடர்பான அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தேசியத் தலைவர் தொடர்பான பல்வேறு விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தற்போது தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நிகழ்த்துவது தொடர்பாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் ஆர்வமாகவும் அதே நேரம், பொறுப்புணர்வோடும் தங்கள் கேள்விகளை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளிலிருந்து, பல்வேறு நேரவித்தியாசங்கள், பல்வேறு வேலைப்பளுக்களின் மத்தியில் கலந்து கொண்டிருப்போரின் வேண்டுதலிற்கு இணங்க குறுகிய நேர சந்திப்பாகவே இதனை வரையறுத்து ஒழுங்குபடுத்தியுள்ளமையால், ஊடகவியலாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் விரிவான பதில்களை வழங்க முடியாதென்ற விடயம் தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஊடகங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளும் பட்சத்தில், பிரத்தியேகமான தனித்தனி சந்திப்புகள் ஊடாக உங்களது அனைத்து விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க போராளிகள் விரும்புவதாகவும் திரு. அறிவுமணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்பிற்கான மின்னஞ்சல்: [email protected] மற்றும் Whatsapp தொடர்பு எண்: 0041779100778 என்பனவும் தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பின் இறுதியில் தெளிவுபடுத்தலுடன் கூடிய தொகுப்புரையினை, மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் இணைப்பாளர் திரு.சங்கீதன் அவர்கள் வழங்கினார்.
தொகுப்புரையின் போது தேசிய தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வின் ஆரம்ப பணிகள் பற்றியும் எதிர்காலத்தில் அது எவ்வாறு நகர்ந்து செல்லும் என்பது பற்றியும் ஊடகவியாளர்களாக விடயங்களை மக்கள் மத்தியில் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு உறவுகளிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்றும், திட்டமிடப்பட்டிருக்கும் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வினை அதி உச்சமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடத்துவதற்கு உலகமெங்கும் பரந்து வாழும் உறவுகளின் ஒத்துழைப்பினையும் ஊடகவியலாளர்கள் ஊடாக கேட்டுக் கொண்டார்.
தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு ஏற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம் ஊடாகவே இடம்பெறும் அதைவேளை, குறிப்பாக 12.10.2024 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் போராளிகள் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பதிவு செய்யப்பட்ட தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு குறித்த அறிவிப்பு காணொளியும் அறிக்கையும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக நினைவெழுச்சி அகவத்தின் ஊடாக வெளியாகும் என்ற தகவலும் வெளிப்படுத்தப்பட்டது.
மேலும் மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.methaku.com அறிமுகம் செய்யப்பட்டதுடன், இன்றிலிருந்து அது இயங்குநிலைக்கு வருகின்றதென்ற விடயமும் தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் தாயகம், தமிழகம் உட்பட அனைத்துலக ரீதியாக பல ஊடக நிறுவனங்களும் மூத்த மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டதுடன், இடம்பெறவுள்ள தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்விற்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் ஒப்புதல் அளித்தனர்.
குறிப்பாக தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வினை முன்னெடுத்துச் செல்லவிருக்கும் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் சர்வதேச பொறுப்பாளர்கள், நாடுகளின் பொறுப்பாளர்கள் உட்பட நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியாக ஊடக நண்பர்களுக்கான நன்றி கூறலுடன் குறித்த சந்திப்பு தாயக நேரம் 23.15 மணியளவில் நிறைவிற்கு வந்தது.