பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மார்க் பியோமாண்ட் என்பவர் சைக்கிள் மூலம் பல நாடுகளுக்குச் சென்று சாதனை படைத்து வந்தார். இந்நிலையில் 79 நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.
மார்க் கடந்த ஜுலை மாதம் 2-ம் தேதி பாரீஸில் தொடங்கி, தனது 79 நாள் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று முடித்தார். அவர் தினமும் 16 மணி நேரம் சைக்கிளில் பயணம் செய்வார். இதற்காக காலை 3:30 மணியளவில் விழிப்பதாக மார்க் தெரிவித்தார். 76 நாட்கள் இவர் சைக்கிள் பயணம் செய்தார். மீதி 3 நாட்கள் விமானத்தில் பயணம் செய்தார். மார்க் சரியாக 78 நாட்கள் 14 மணி நேரம் 14 நிமிடங்களில் உலகத்தை சுற்றி வந்துள்ளார்.

மார்க் கடந்த 2008-ம் ஆண்டு இதே போன்று உலகத்தை 195 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்தார். ஆனால் இந்த சாதனையை நியூசிலாந்தைச் சேர்ந்த அண்ட்ரூ நிக்கல்சன் 123 நாட்களில் வலம் வந்து முறியடித்தார். நிக்கல்சனின் சாதனையை முறியடித்து மார்க் மீண்டும் உலக சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக சாதனை படைத்த மார்க் பியோமாண்டிற்கு உலக கின்னஸ் சாதனையாளர்கள் அமைப்பிலிருந்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.





















































