இன்று, ஆனி 26, 2024, சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தைக் குறிக்கிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான சித்திரவதைகளில் இருந்து தப்பியவர்களை கௌரவித்து ஆதரிக்கிறது. சித்திரவதையை ஒழிப்பதற்காக நடந்து வரும் போராட்டத்தை இந்த கருப்பொருள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த கொடூரமான செயலுக்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் வலிமை மற்றும் பின்னடைவை அங்கீகரிக்கிறோம். புனர்வாழ்வு திட்டங்களை ஆதரிப்பதன் மூலமும், நீதிக்காக வாதிடுவதன் மூலமும், சித்திரவதைகள் இல்லாத எதிர்காலத்தை நோக்கி நாம் உழைக்க முடியும்.
பேரமைதியைக் கிழித்து…
பெருஓலமிட்ட குரல்கள்
ஓரிரவுக்குள் மீள்வராமல்
சமாதியாக்கப் பட்டன.
ஊளையிடும் காற்றுக் கூட அன்று உறைந்து போனது…
உடல் வலிக்க தீமூட்டிய ஊனமுற்ற இரவுகளே…
தின்று துப்பிய நெடிய நொடிகளை…
அந்தக் கறுப்பு இரவுகள் மறைத்துக் கொண்டன…
எங்களின் வெள்ளைக் கனவுகள் காலைக்குள்
முடிந்து போயின…
நான் வெள்ளைப் புறாவென்றா வேக வைத்தீர்கள்…
நான் கொள்ளை ஆசையோடு இருந்தவளென்றா கொன்று போட்டீர்கள்.
செல்லக் கதைபேசிய
என்னைக் வெறியில்
மென்று துப்பினீர்கள்.
துணிவிலகா என் ஆடைதனை துகிலுரித்தீர்கள்…
நான் பார்த்து வரைந்த என் பருவத்தை சிதைத்து சிதைத்து தின்று தீர்த்தீர்கள்…
என் பால் நான் வெறுப்புக் கொள்ள _ என் உடன் பிறப்பை உருக்குலைத்தீர்கள்…
உருவம் தெரியாது என்னையும் சிதைத்தீர்கள்…
குடும்பப் படுகொலையும் ஆனது…
வழிநெடுக குற்றுயிரும் துடித்தது…
புதைக்கப்பட்டோம்…
உயிரோடும் உடலமாயும்.
ஆனாலும் உக்கிப் போக வில்லை…
மக்கிப் போகவும் இல்லை…
மறுபடியும் மறுபடியும் எழும்புக் கூடுகளாய்…
மறைக்கப் பட்டாலும் மறுக்கப் பட்டாலும் மீள் எழுவோம்…
கலா பார(தீ)