இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி செம்மணியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் ஜூன் 23திகதி அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் 25திகதி வரை வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக முன்னெடுக்கப்பட்டு வருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை மீறல்களை கையாள்வதில் இலங்கையின் அரசு மேல் நம்பிக்கையுடனான அணுகுமுறைகள் கடந்த காலங்களில் இருக்கவில்லை . ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கர் டேர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டார். இந் நிலையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்டும் தமிழ் மக்களை சந்தித்தும், வடக்கு கிழக்கு இன அழிப்பு இடங்கள் உட்பட நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி மேற்கொள்ளப் பட்டது.
இலங்கையில் மனிதப் புதைகுழி கண்டறியப் படுவது என்பது செம்மணி மனித புதைகுழி தனிப்பட்ட ஒரு சம்பவம் இல்லை. இலங்கையில் ஐம்பத்தாறுக்கும் (56) அதிகமான இடங்களில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், 22 இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பல தசாப்தகால வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பதை அரசபயங்கரவாதம்,பதில்கள் இன்றி பொறுப்புக் கூறல் இன்றி தமிழ் குடும்பங்கள் மேல் நிகழ்த்தப்பட்டுவரும் ஒருவகை இனவழிப்பாகும் . இது பௌத்த சிங்கள பேரினவாத அரசுகள் தமிழர்கள் மேல் நிகழ்த்தி வருகின்ற துயரம் மிகுந்த சித்திரவதைப் பாரம்பரியமாகும்.
கடந்த 25 வருடங்களாக செம்மணி தமிழ் சமூகத்தின் கூட்டு மனப்பான்மையைக் கடுமையாக பாதித்துவந்துள்ளது. சிறுவர்கள் உட்பட முதியவர்கள் வரை பலரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தினை மீண்டும் உலுக்கியுள்ளது மாத்தளை, மன்னார் ,கொக்குதொடுவாய், திருக்கேதீஸ்வரம் என அங்காங்கே தொடரும் மனித புதைகுழிகள் முழுமையாக தோண்டப்படாதமை மற்றும் தெளிவற்ற விசாரணைகளும், தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் மாறிவரும் ஆட்சியாளர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கைகளை மோசமாகக் காட்டியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக் கூறலை உறுதி செய்யும் உள்ளகப் பொறி முறைகளை நடைமுறைப் படுத்துவது பௌத்த பேரினவாத மேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது. மனிதப்புதை குழிகள் நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் , படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள்,இரகசியமாக உடல்கள் புதைக்கப்படுதல் ஆகியவற்றுடன் நீண்டகாலமாக தொடர்புபட்ட பகுதியாகும்.
வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் செல்லாக் காசாக மாறியிருக்கின்றது. மன்னார் ‘சதொச’ மனிதப்புதைகுழி சுகாதார சீர்கேடுகள் ஏற்படக்கூடும் என்பதாலும், மனித எச்சங்கள், சான்றுப் பொருட்கள் பல எடுக்கப்பட்டிருப்பதனால் அங்கு அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளத் தேவை இல்லை என்பதாலும் அகழப்பட்ட மன்னார் ‘சதொச’ மனிதப்புதைகுழியை மூடுமாறு கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி மன்னார் மாவட்ட நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து சட்டத்தரணி ரட்ணவேல் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு 2025ஆம் ஆண்டு யூன் மாதம் 02 திகதி வவுனியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனு மீதான விசாரணைகளை அடுத்து, வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அம்மனிதப் புதைகுழியை மூடுவதற்கு இடைக் காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘காணாமல் போன மக்களுக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு வவுனியா நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இராணுவம் இன்றும் அதனை வழங்கவில்லை. குறித்த அறிக்கைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு காணாமல் போனோர் அலுவலகம் பல கடிதங்களை அனுப்புயிருக்கும் நிலையிலும் இராணுவம் அதனை கருத்தில் கொள்ளவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுள் உட்பட 2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் ஒப்படைத்த உறவுகளை தேடி ஒவ்வொரு தினங்களிலும் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு தேவையென பார்த்துக் கொண்டிருக்கிறன்ற நேரத்தில் நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அந்த நீதித்துறையையே ஆட்டம் காணச் செய்யும் அளவிற்கு அரசியல் ரீதியாக அரசாங்க தரப்புக்கள் நீதிபதிக்கு் உயிர் அச்சுறுத்தல் விடுத்து துன்புறுத்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாடு விட்டு நாடு சென்றுள்ளமையும் குறிபிடத்தக்கது.
ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் மூவாயிரம் நாட்களுக்கு மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர் . தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை. நீதியை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த சமீபத்தைய கண்டுபிடிப்புக்கு நீதி வழங்கும் நடவடிக்கை அசமந்தப் படுத்தப்பட்டால் உண்மைக்கான மற்றுமொரு வாய்ப்பு தவறவிடப்படுதலாக அமையும்.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யப்பட வேண்டும். மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக சர்வதேசத்தின் நிபுணத்துவத்தோடு மேலதிக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சர்வதேச தடயவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் சர்வதேச ஊடகங்கங்களும் அகழ்வு ஆய்வில் இணைத்துக் கொள்ளப் பட வேண்டும். அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட்ட வேண்டும். உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுவதற்கு சர்வதேசப் பொறுப்புக் கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்ய வேண்டும்.