ஓர் வாசகனாக
விழியோரத்துக் கனவுகளெனும்
நூலை எழுதிய
கனம் தங்கிய
எழுத்தாளர் குடத்தனை உதயன் அவர்கட்கு…
தாங்கள் எழுதிய
விழியோரத்துக் கனவுகள்
புத்கத்தை வாங்கிப்படித்தேன்
பத்தொன்பது வயதான
தங்கள் கன்னிநாவல்
இன்றுபிறந்த பிள்ளைபோல்
கண்சிமிட்ட என்னையறியாது
அழகில் கொள்ளை போய்விட்டேன்…
ஓர் எழுத்தாளனின்
உயரிய வெற்றியென்பது
புத்தகத்தின் பக்கங்களை
ஓர் வாசகன் மடித்துவைக்காமல்
படித்துவிட தூண்டவேண்டும்
ஆம்!
எந்த பக்கங்களிலும்
என் விரல்கள் உங்கள் நூலை
வன்முறைப் படுத்தவில்லை
என்பதை விட அது
வன்முறை செய்ய தூண்டவில்லை…
படித்தேன்,படித்தேன்
பசிமறந்து படித்தேன்…
எப்படி ஐயா மண்வாசத்தை
வரிகளில் தேக்கினீர்!?
எவ்வாறுதான் பெரியவரே
வட்டார வழக்குச் சொற்களுக்கு
உங்கள் படைப்பில் கொட்டகையிட்டீர்!?
கதையில் வரும்
ஒவ்வோர் பாத்திரமாகவும்
நான் வாழ்ந்துவிட்டேன்,
இல்லையில்லை!
வாழவைத்துவிட்டீர்!
பதின்மூன்று வருடங்களுக்கு முன்
நான் ஊரில் தொலைத்த வாழ்வை
பாரிசில் இருந்தபடியே
உங்கள் எழுத்துக்களில்
வாழ்ந்து பார்த்தேன்!
காதல், கல்வி,நட்பு,விடுதலை,அரசியல்
சாதிய ஒடுக்குமுறையென
சகல தளங்களையும் அலசியோடும்
தங்கள் வசனங்களுக்கு
ராஜகீரிடம் வேறேதுமல்ல
ஈழமண்ணின் ஒப்பற்ற அழகும்
மக்களின் இயல்பு மாறாத
வாழ்வும் உங்கள் வரிகளில் வாழ்வதுதான்!
ஈழத்தீவின் பல இளைஞர்
யுவதிகள் இப்படித்தான்
வாழ்தார்கள் என்பதை யாரும்
மறுதலித்துவிட முடியாது…
கதையில் நாயகியின் முடிவில்
கலங்கிப்போனேன்…
நாயகனின் முடிவில் வியந்தேன்…
தங்கள் புத்தகம்
வருகின்ற தலைமுறைக்கு
தனது முன்னோர்களின்
வாழ்க்கைப் பதிவென்பது
எள்ளவும் ஐயமில்லை எனக்கு…
உங்கள் அடுத்த படைப்பை
காணும் ஆவலுடன்
உங்கள் வாசகன் காத்திருக்கிறேன்….
நன்றிகள் …
பெரியகுளம் வாகைக்காட்டான்