அண்மையில் தாயகத்தில் இருந்து வெளியாகிய திரு. மதிசுதா அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தமிழீழ விடுதலைப் போராட்டடத்தின் உண்மைத்தன்மைக்குப் புறம்பானது என மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக நிறுவனமான நிதர்சனம் நிறுவனம் இத் திரைப்படம் தொடர்பாக தனது கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழ் மக்கள் முகம்கொடுத்து வாழ்ந்த கதைக் களத்தை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டது வெந்து தணிந்தது காடு. இத் திரைப்படம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களின் அர்பணிப்புக்களை கொச்சைப்படுத்தும் பல்வேறு காட்சியமைப்புக்களும், உரையாடல்களும் தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் பிரித்துக்காட்டும் நோக்கிலும், சீறீலங்கா அரசின் இனவழிப்பு யுத்தத்தை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதை சுட்டிக்காட்டி இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. அத்துடன் வரலாற்றுக்குப் புறம்பான கதைக்களத்தைக் கொண்ட இத் திரைப்படத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் இவ் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படம் திரைப்பட விழாக்களுக்கும், விருதினைப் பெறும் போட்டிகளுக்கு தனியோரு பிரதியும், இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்காக பிறிதொரு பிரதியும், தமிழ் மக்களிகன் பார்வைக்காக திரையரங்குகளில் எட்டு தடவைகளுக்குமேல் மாற்றங்கள் செய்யப்பட்டு பிறிதொரு பிரதியும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை போன்று பல்வேறு காரணங்களை முன்வைத்து நிதர்சனம் நிறுவனத்தினால் இத்திரைப்படம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்;டத்திற்கும் வரலாற்றுக்கும் எதிரானது என இத் திரைப்படத்தை புறக்கணித்துள்ளது.
கடந்த 2009 மே 18 ஆயுத மௌனிப்பிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஊடக நிறுவனமாக நிதர்சனம் நிறுவனம் இயங்கி வந்தமையும், இந் நிறுவனத்தால் போராட்டக் களத்தை மையமாக வைத்துப் பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது என்பதுவும் 2009க்கு பின்னரும் நிதர்சனம் நிறுவனம் தொடர்ந்தும் இயங்கிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.