கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களைஎழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை. தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்ச்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவன் சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவன். எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொண்டிருந்தாலும் தேச விடுதலைக்காய் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்படத் தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளி அறிவுச்சோலை நிலவன்.
அமுதன்:- தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமானது எவ்வாறுதோற்றம் பெற்றது? அதன் அடிப்படைக் கோட்பாடு என்னவாக இருந்தது?.
நிலவன் :- தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது? விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்? போராட்ட வரலாறு என்ன? எதற்காகப் போராடினார்கள்? தெரிந்து கொள்ள வேண்டும். தமிழினத்தை தலை நிமிர்த்தி தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாகவும் உலகிற்கு அடையாளப் படுத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். புரட்சிகர ஆயுதப் போராகவும், எழுச்சிமிகு வெகுசனப் போராட்டமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய விடுதலைப் போரை முன்னெடுத்தார்கள். தமிழீழ பூமியில் உக்கிரமாகப் பௌத்த சிங்கள அரசின் கொடுமைகளுக்கும், கொலை வெறிக்கும், தமிழ் இன அழிப்புக்கும், ஆளாக்கப்பட்ட தமிழினத்தைக் காக்க வேண்டியும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ மரபுவலி இராணுவமாக வளர்ச்சி பெற்று ஒரு நடைமுறை அரசினை அமைத்து ஆட்சி செய்து வந்தார்கள்.
தமிழினம் உருத்தோன்றிய காலம்முதல் வாழ்ந்துவந்த எமது பூர்வீக மண்ணினதும் எமது மக்களினதும் விடுதலைக்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினார்கள் தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்து மாவீர்களா விதையாகிப் போனார்கள். உறுதியும், அடங்காத தாய்மண் பற்றும், தன்னலமற்ற விடுதலைக்கு உலக அரங்கில் எமது இனத்தைத் தலைநிமிர வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற வாக்கியம் தமிழீழ விடுதலைப் புலிகளின்தேசிய எழுச்சிக் கோசத்தின் இலட்சியம் ஆகும்.
தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும், அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்ந்தார்கள். தேச விடுதலை என்பது, ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட விடுதலை. அதை எந்தச் சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத- யாருக்கும் கீழ்ப்படியாத ஒட்டுமொத்த சுதந்திரம். அதனை அடைவதற்கான போராட்டத்தை விடுதலைப் புலிகள் மட்டுமே இறுதி வரை முன்னெடுத்தனர். தமிழ் இனத்தின் விடிவிற்காகவும், தமிழீழ தாயகத்தின் பூரண சுதந்திரத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட, தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டத்தை நடத்தினார்கள்.
தமிழீழ அரசின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது நாற்பது ஆண்டு காலமான, நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. “தமிழீழம்” எனும் தமிழர் தாயக பூமி முழுமையான விடுதலையைக் காண்கின்ற வேளையில் அங்கே ஆதரவற்றர்கள், இயலாமையில் வாழ்பவர்கள், ஏழைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், கையேந்தி நிற்பவர்கள், என்று யாருமே இருக்கக்கூடாது. போரினால் ஏற்படும் நிரந்தரமான தாக்கங்களுள் மக்கள் நசுங்கிப் போக இடமளிக்கக்கூடாது. மாறாக எல்லா வகையிலும்தலை சிறந்த நாடாக, இந்த உலகிற்கே முன்மாதிரியான ஒரு நாடாகத் தமிழீழம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மிகமிக உறுதியாக இருந்தார்,
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபகரன் அவர்களுன் தலைமையில் நடைபெற்ற தேச விடுதலைக்கான இன விடுதலைப் போராட்டம் ஒரு புனிதமானது, அது அறம் வீரம், தியாகம், விடுதலை உணர்வு ஆகிய உயரிய இலட்சியப் பண்புகளைக் கொண்ட இலட்சியமாக திகழ்வது. தமிழீழ மக்களின் தேசிய அபிலாசையாக வரலாற்றுரீதியாக எழுந்த தனியரசுக் கோரிக்கைக்கு ஒரு செயற்பாட்டு வடிவம் கொடுத்து, அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் இலட்சிய உறுதியுடனே போராளிகளாய் நாம் போராடியிருந்தோம்.
அமுதன் :- தமிழ் மக்களின் போற்றுதற்குரிய “மேதகு வே. பிரபாகரன்” அவர்களால் “தமிழீழ விடுதலைப் புலிகள் ” என்ற கட்டமைப்பு உருவாக்கம் எவ்வாறு இருந்தது?
நிலவன் :- 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (Liberation Tigers of Tamil Eelam) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார். அன்றுதொட்டு வளர்ந்து விருட்சமாகி தரை கடல் வான் என விரிந்து பல்வேறு இராணுவ துறை சார் மக்கள் சார் கட்டமைப்புகளாக விரிந்து, தமிழர்களுக்கான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய சமநேரத்தில், தனிநாடு என்ற கட்டமைப்புக்கான அனைத்து கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
தமிழர்களின் போரிடும் ஆற்றலை உலகறியச் செய்து, உலகை வியக்க வைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் இயக்கத்தின் போராட்ட சாதனையால் தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டம் அன்று உலகப் பிரசித்தி பெற்ற விடுதலைப் போராகச் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது.
மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டது . எல்லாவித ஒடுக்கு முறையும் சுரண்டலும் ஒழிக்கப் பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாகத் திகழ்ந்தது. தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது பண்பாடு ,கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும் என்பதை நடை முறையில் நிகழ்த்திக் காட்டினார்.
விடுதலைப் புலிகள் முப்படைகளுடன் கரும்புலிகள் என்ற சிறப்பு இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு
நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கில் தமிழீழக் காவல்துறை, நீதித்துறை குற்றப் புலனாய்வு பிரிவு என பல பிரிவுகளும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்காக இயங்கியது. பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத் திட்டங்களையும் உருவாக்கினார் எங்கள் தாயுள்ளம் படைத்த தலைவர் அவர்கள்.
தமிழீழம் என்ற எம் தாய் நாட்டிற்கு வந்திருந்த ஐ.நா.அதிகாரிகள் விடுதலைப் புலிகள் அமைப்புக்களின் வளர்ச்சி கண்டு வியந்தார்கள். போரின் அனர்த்தங்களுக்கு மத்தியில் சிறிவர்கள் , முதியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாலிகளுக்கு இப்படியும் ஒரு அரும்பணியா? என்று அவர்கள் வியப்புடன் வினவியுள்ளனர்.
அமுதன் :- “காந்தரூபன் அறிவுச் சோலை” இல்லத்தின் உருவாக்க வரலாறு பற்றிக் குறிப்பிடுக?
நிலவன் :- காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லம் பற்றி அதன் உருவாக்கம் பற்றியும், அதற்கு காரணமானவர் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்!.
சிறுவயதில் இருந்து தாய்தந்தையை, இழந்திருந்த கடற்கரும்புலி மேஜர்.காந்தரூபன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவரினால் வளர்க்கப் பட்டவர்களில் ஒருவன். தமிழீழக் கனவு மற்றும் கொள்கைகள் பிடித்துப் போகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதை விடுத்து ஆரம்பத்தில் தலைவர் அவர்களினால் படிப்பதற்கு ஊக்கப்படுத்திட காந்த ரூபனோ தான் இந்த நாட்டிற்காக போராடுவதையே உயர்ந்ததாக நினைப்பதாக தலைவரிடம் கூறினான்.
1987 இன் ஆரம்பத்தில். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படை முகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தார். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில் எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டு விடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சக நண்பர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப் பட்டார்.இருந்தபோதும், குப்பி (சயனைட் ) விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென மருத்துவ ஆலோசனை வழங்கப் பட்டிருந்தது.
காந்தரூபனிற்கு இப்போது நிறை உணவு தேவைப்பட்டது. சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கு பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர் வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப்பசு ஒன்றைக் காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிற்பார்.
தலைவர் அவர்களுடன் மணலாற்றுக் காட்டில் நின்ற 1988, 1989ம் ஆண்டு காலப் பகுதியில்…. அப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றார். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தார். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். ‘”அண்ணை…. என்னைக் கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ’” என்றார்.
தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கமைவாக அவரது பாதுகாப்புப் பிரிவிலிருந்து “கடற்புறா” அணிக்குக் காந்தரூபன் அவர்களை அனுப்பினார். காலங்கள் கடக்க காந்தரூபன் கரும்புலியாக தான் போக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதனை தலைவர் அவர்களிடம் கூறினார் காந்தரூபன். கரும்புலிகள் அணியில் இணைவதை ஆரம்பத்தில் தலைவர் அடியோடு அதனை மறுத்து விட்டார். சில ஆண்டுகளில் காந்தரூபன் தனது திறமையினால் கடற்புலிகள் அணியோடு இணைந்து அதில் தனது தனித்துவமான திறமைகளை வெளிக் காட்டியதுடன் கடற் புலிகளின் சிறப்புத் தளபதியான கேணல்.சூசை அவர்களிடம் தனது கரும்புலி ஆசையைக் கூறி நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அனுமதி கிடைத்தது.
ஏற்கனவே, பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று சகபோரளிகளுக்குச் சொல்லிக்கொண்டும் அதற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுக் கொண்டு மிருந்தவன்தான் காந்தரூபன் மற்றும் கொலின்ஸும். மணலாற்றுக் காட்டில் தலைவர் அவர்களின் பாதுகாப்பணியில் இருந்து செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் தலைவர் அவர்களிடம் நேரடியாக கேட்டுத் தன்னைக் கரும்புலிகளணியில் இணைத்துக்கொண்டிருந்தான்.இவர்களுடன் வடமராட்சி அணியிலிருந்து ஏற்கனவே கரும் புலிகளிணியில் தன்னை இணைத்திருந்த வினோத்தும் “எடித்தாரா”வைத் தாக்கியழிப்பதற்கான கடும்பயிற்சிகளை மேற்கொண்டனர்.
1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவத்திற் கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத் தொடங்கி யிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்த காலம்.
தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் காந்தரூபன் தலைவரிடம் சொன்னார்.”தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள்… அப்பா அம்மா இல்லாம சொந்தக்காரரின் ஆதரவில்லாமல் அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாமல் படிக்க வசதி இல்லாமல் எவ்வளவோ ஏக்கங்களோடையும் துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை நான் அனுபவித்ததில் கண்டனான் அண்ணை….நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேண்டும்” என்றார்.
“அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …”. தலைவரின் இதயத்தை இந்த வார்த்தைகள் தொட்டன. இந்த தமிழீழ மண்ணில் இனி யாரும் அநாதைகளாக இருக்க கூடாது. அவர்களுக்கு தாங்கள் தாயாகவும், தந்தையாகவும் இருக்க வேண்டும்” இதுவே என இறுதி ஆசை என கூறினார். அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர்.
அமுதன் :- காந்தரூபன் அறிவுச் சோலை இல்லத்தின் உருவாக்கமும் அதன் எதிர்கால நோக்கமும் என்ன என்பதைத் தலைவரின் தெளிவுபடுத்தலிலிருந்து பதிவு செய்க?
நிலவன் :- 1993 நவம்பர் 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள் .எமது போராளிகள் அனைவருமே இவர்களின் சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணை பிரியாத அங்கமாக இணைந்துள்ளனர்.
தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டு வளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச்சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேருன்றி வளரும்.
இத்தகைய நற்பண்புகளுடன் இவர்கள் கல்வியறிவுபெற்று இந்தத் தேசத்தின் நிர்மானிகளாகவும் உருப்பெற்று எமது மக்களுக்குப் பெரும் பணியாற்றுவார்கள். நாங்கள் ஒரு புறம் மண்மீட்புப் போரை நடத்துகின்றோம். மறுபுறம் குழந்தைகளுக்கான வேலைத்திட்டங்கள் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றோம்.
ஆனால் இத்தகைய சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்கவேண்டும்” என்று கூறினார்.பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பித் தலைவரிடம் கேட்டு கரும்புலியாய்ச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ” யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப்புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப்போல , தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்கவேண்டும் ” என்றுகேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறை வேற்றும் முகமாக “காந்த ரூபன் அறிவுச்சோலை” எனப்பெயரிடப்பட்டது. என அவர் பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அமுதன் :- தலைவரின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப் பட்ட இல்லங்கள்,கல்விக் கூடங்கள் பற்றிய விளக்கங்களையும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தருக?
நிலவன் :- தமிழ் இன மீட்புக்கான இன விடுதலைப் போரை நடாத்திக் கொண்டு மறுபுறம் தமிழீழத்தின் எதிர்காலத்தைச் சிறப்பான முறையிற் கட்டியெழுப்பும் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார் தலைவர் அவர்கள். அந்த வகையில் தமிழீழத்தில் உருவான சேவை வழங்கும் கல்விக் கூடங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் தோற்றம் கண்டது. அவற்றில் “செஞ்சோலை” “காந்தரூபன் அறிவுச்சோலை,” அன்புச் சோலை, வெற்றிமனை, லெப். கேணல் நவம் “அறிவுக்கூடம்” போன்றவை ஆகும்.
யுத்தத்தினாலும் சந்தர்ப்ப சூழ் நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து தவிக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. ஆதரவற்ற முதியோர்களுக்காக அன்புச்சோலையும், போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வெற்றிமனையும், யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக லெப். கேணல் நவம் அறிவுக்கூடமும் உருவாக்கப்பட்டன.
1991ம் ஆண்டு யூலை மாதம் 10ம் திகதி 15 மாணவிகளுடன் செஞ்சோலை மகளிர் பாடசாலை ஆரம்பமானது. யாழ் கல்வளை சண்டிலிப்பாயில் ஓர் சிறப்பான இல்லம் நிர்மாணிக்கப்பட்டு 1991ம் ஆண்டு ஐப்பசி மாதம் 22ம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 23 மாணவர்களுடன் ஆரம்பமான செஞ்சோலை காலப்போக்கில் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட இல்லமாக விளங்கியது.
போர்ச்சூழலால் செஞ்சோலை இடம்பெயர வேண்டிய நிர்ப்ந்தங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. சண்டிலிப்பாயிலிருந்து நகர்ந்து மானிப்பாய், கோப்பாய், போன்ற இடங்களில் தற்காலிகமாக சிறிது காலம் இயங்கி வந்தது. பின்பு 1993,1994,1995ம் ஆண்டு காலப்பகுதியில் அரியாலையிலும் மட்டுவிலிலும்
செஞ்சோலை தன் செயற்பாடுகளை நிரந்தரமாக்கிக் கொண்டு செயற்பட்டு வந்தது . அதுவும் நீடிக்கவில்லை. இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக 1995ம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் செஞ்சோலை கிளிநொச்சியிலுள்ள திருவையாறு என்னுமிடத்திற்கு இடம் பெயர்ந்தது. தொடர்ந்து கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாவியில் வடகாடு, முல்லைத்தீவு, வள்ளிபுனம், இரணைப்பாலை மீண்டும் வள்ளிபுனம் கிளிநொச்சி என ஓடி ஓடி ஓய்து போகாமல் பிள்ளைகளின் கல்வி மற்றும் வினைத்திறன் செயற்பாடுகள் அங்கும் தொடர்ந்தன.
தலைவரின் நேரடிக் கண்காணிப்பில், பாதுகாப்பில் வளர்க்கப்பட்டனர் குழந்தைகள் செஞ்சோலைப் பிள்ளைகள். பல்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள் அங்கு கைக் -குழந்தைகள் முதல் 18 வயது வரையான பெண் பிள்ளைகள் தங்கள் எதிர்காலம் நோக்கி கல்வி வழங்கப் படுகிறது. இங்கு முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்பாடசாலை போன்ற கல்வி முறைக்கேற்ப கல்வியறிவூட்டப்பட்டது. கல்வியின் நோக்கம் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதல்ல வாழ்க்கைக்குத் தேவையான பூரண ஆளுமை உள்ளவர்களை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது.
கலைகள், விளையாட்டுக்கள் , கைவினைத்திறன்கள் வெளிக்களச் செயற்பாடுகள் போன்றவற்றுடன் நல்லொழுக்கம், நல்மனப்பாங்கு, நற்பண்புகள், ஆளுமைத்திறன், துணிச்சல் முற்போக்குச் சிந்தனை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவான சிறப்பான பாடத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன.
அமுதன் :- தலைவர் மேதகு அவர்களின் சீரிய சிந்தனை நோக்கில் பாதுகாப்பு, அரவணைப்பு முறைமைகளோடு நிர்வகிக்கப்பட்ட இல்லங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பற்றிக் குறிப்பிடுக?
நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகளினால் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து மற்றும் பிரிந்து தவிக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. செஞ்சோலை’ ‘”காந்தரூபன் அறிவுச்சோலை’” அமைப்புக்களில் எமது எதிர்கால வாரிசுகள் கட்டுக்கோப்பான முறையில் வளர்கப்பட்ட அதே வேளை முல்லைத் தீவில் செந்தளிர் சிறுவர் இல்லம், 2000 ஆம் ஆண்டு ஆராம்பிக் கப்பட்டது. கைக் குழந்தை முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காகக் குருகுலம் ஒன்றும், தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தால் நடத்தப் பட்டது. காந்தி நிலையம் என்ற பெயரில் சிறுவர் பராமரிப்பு இல்லம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் நடாத்தப் பட்டது.
மேலும், தாய் மண்ணிற்கான தமது பிள்ளைகளை ஈந்து தனித்து நிற்கும் பெற்றோரை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது நேரடிக் கண்காணிப்பில் ஆதரவற்ற முதியோர்களுக்காக, ‘”அன்பு முதியோர் பேணலகம்’” போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக “வெற்றிமனையும்”, யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக “லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்” இவர்களுக்கு பொதுக் கல்வி, கணினிப் பயிற்சி, தொழிற் கல்வி அளிக்கப்பட்டு புனர்வாழ்வும் அளிக்கப்பட்ட்டது. அதோடு மனநோயாளி களுக்காக “மயூரி இல்லம்” “சந்தோசம் உளவள மையம்” என பல அமைப்புக்களையும், பல உள்கட்டு மானங்களையும் உருவாக்கினார்கள்.
கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் ஐந்து இல்லங்கள் உட்பட, தமிழர்கள் வாழும் எட்டு மாவட்டங்களில் கிட்டத்தட்ட நாற்பத் தைந்து சிறுவர் இல்லங்கள் இயங்கின. போரினால் இழப்புகளை ச் சந்திக்காத குடும்பங்களே இல்லை என்ற நிலையில், குடும்பத்தை இழந்த குழந்தைகளின் நிலை மிகவும் வேதனைக் குரியதாகும். உளவியல் சிக்கல்கள் உட்படப் பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்பட்டு, திசை மாறிப் போகும் நிலை அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளின் நிலை இன்னும் அதிக சிக்கலானது. இந்நிலையை மாற்றி, போரினால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற ஆண் பெண் குழந்தைகளைப் பராமரிக்கவும், அவர்களது எதிர்காலத்திற்கு நல்வழி காட்டவும் உருவாக்கப்பட்ட சிறிவர் இல்லங்களாக அன்று இயங்கின. போரின் அனர்த்தங்களினால் சொந்தங்களை இழந்த சின்னஞ் சிறுசுகளை ஒன்றிணைத்து ஒழுங்கான கல்வி புகட்டும் மாபெரும் கைங்கரியம் ஒன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் 2009கு முன்னர் வரை செவ்வனே நடந்து கொண்டிருந்தது.
அமுதன் :- ஒரு மக்கள் மயமாக்கப்பட்ட விடுதலை இயக்கமான “தமிழீழ விடுதலைப் புலிகள்”பற்றிய மாறுபட்ட கருத்தைக் கொண்ட சர்வதேசத்திற்கும் அதனைச் சார்ந்தவர்களுக்கும் அந்த அமைப்பு பற்றிய தீர்க்கமான நிதர்சனம் யாதாக இருக்கும்?
நிலவன் :- விடுதலைப் புலிகளை “பயங்கரவாதிகள்/தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே! உங்கள் சுயமூளையுடன் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் விடுதலைக்கு போராடும் ஈழத் தமிழர்களாய் வளர்ந்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை! தமிழர்கள் பயங்கரவாதிகள் / தீவிரவாதிகள் என்றும், ஆயுத விரும்பிகள் என்றும் இலங்கையின் பௌத்த சிங்கள பேரினவாத அரசினால் செய்யப்படும் பிரச்சாரங்கள் உண்மைக்கு மாறானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வேறு பல நாடுகளில் நிலை கொண்டிருந்த சர்வதேச பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்று வகைப் படுத்தப்பட்ட அமைப்புக்களுடன் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஒப்பிட்டமை எமது விடுதலைப்போரிற்கு ஒரு இருண்ட காலமே ஆகும். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை 2009ஆம்ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற சிங்களத்தின் எதிர்பார்ப்பு பகற் கனவாகியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல, ஏற்கனவே இத்தாலியின் நாப் போலி மாநகர நீதிமன்றம், டென்மார்க் உயர்நீதிமன்றம், ஐரோப்பிய நீதிமன்றம், விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல என்று தீர்ப்பளித்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றமும் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று கூறி நீதிமன்றமானது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 16 ஜூன் 2018இல் வழங்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என நெதர்லாந்தின் த ஹேக் மாவட்ட நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப் போராளிகள் என இலங்கை அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக 21ஏப்ரல்2019ஆம் ஆண்டின் ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.
புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
CNN – அமெரிக்கா.- இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.
BFM – பிரான்ஸ்.-விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்க வில்லை.
சிறீலங்கா அரசு- அதே வேளை கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கும் பின் விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப் போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை .
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராகக் காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டு ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய விடுதலைப் போராளிகள் விடுதலைப் போராட்டத்தை உலகம் பார்த்து அதிசயிக்க வைத்தவர்கள். தமிழினத்தின் வீரத்தையும், தமிழீழ சுதந்திர தாகத்தையும் உலகறியச் செய்தார்கள்.
மனிதநேயமிக்க மனவலிமை படைத்த மகத்தான தலைவனை கொண்ட தமிழீழத்தில் ‘செஞ்சோலை’, ‘காந்தரூபன் அறிவுச்சோலை’ சிறார்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் பல அர்த்தங்கள் உண்டு. “செஞ்சோலை” ‘”காந்தரூபன் அறிவுச்சோலை’” சிறார்கள் எந்தளவு எதிர்பார்ப்புடன் வளர்க்கப்பட்டார்கள் என்பதை தமிழீழத் தேசியத் தலைவரின் இந்த உரைகள் விளங்குகின்றன.
“எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ள வேண்டும். ஆற்றல் மிக்கவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக ஒரு புதிய, புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மானிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப் படுத்தியிருந்தார்.
“இந்தக் குழந்தைகள் யாருமற்றவர்களல்ல, தமிழன்னையின் புதல்வர்கள். வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப்போராட்டச் சூழலில் இந்த இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விரூட்சங்களாக மாறி, ஒரு காலம் தமிழீழத் தேசத்தின் சிந்தனைச் சோலையாக சிறப்புற வேண்டு மென்பதே எனது ஆவல்.” இது தலைவர் அவர்களின் உள்ளக் கிடக்கைப் பேரவா என்று கூடச் சொல்லலாம் இவைகளே நினைவுக்கு வருகின்றன.
ஒரு வீரஞ்செறிந்த விடுதலை வரலாற்றின் அற்புதமான அர்ப்பணிப்புகளாக எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக தமிழர் இராணுவமாக வாழ்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெரும் விருட்சத்தை வெட்டி வீழ்த்த நினைத்து தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்கள ஆக்கிரமிப் பாளர்கள் சிதைத்தி ருந்தாலும் தமிழர்களின் இன விடுதலைக்கான சுதந்திர வேட்கையினைச் சிதைத்து விட முடியவில்லை.
தமிழர் தாயகப்பூமியில், தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு உருவாகு வதனைத்தவிர ஈழத்தமிழர் தேசத்தின் தேசிய இனச்சிக்கலுக்கு வேறு எந்தத்தீர்வும் அமையப்போவதில்லை. அடக்குமுறைகளையும் தடைகளையும் தாண்டி, தன்னெழுச்சியால் மேலிடும் உணர்வுகளோடு, தமிழீழத் தாய்மண்ணில் பேரெழுச்சிகொண்ட போராளிகளாய் எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை பின்னடைவுகள் வந்தாலும் நாம் எமது இலட்சியத்தில் உறுதி பூண்டு தமிழீழம் விடுதலையடையும்வரைத் தொடர்ந்தும் போராடுவோம்.
-தொடரும்