நமது ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலைக் குறிக்கும். ஒவ்வொரு செயலும் ஓர் இலக்கைக் குறிக்கும். ஒவ்வொரு இலக்கும் ஒரு வெற்றியைக் குறிக்கும்.
இலக்கில்லா வாழ்க்கை என்பது அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். நாம் எப்போதும் இலக்கை நிர்ணயிக்கும் போதும் நடைமுறைக்குச் சாத்தியமான, அடையக் கூடிய இலக்கை நிர்ணயித்தல் வேண்டும்.
இலக்குகளை நிர்ணயிப்பது என்பது ஒரு கலை. ஒவ்வொரு தனி மனிதரும், நிறுவனமும், அமைப்பும், நாடும் இதனைக் கற்றுக் கொள்வது மிகமிக அவசியமானதாகும்.
வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தைத் தொடுபவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒரே வித்தியாசம்தான். வெற்றியைத் தனதாக்கியவர்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கின்றனர். மற்றவர்கள் இலக்கில்லாமல் அலைகின்றனர்.
இந்த உலகில் மனிதர்கள் அவர்களது வாழ்க்கையில் முன்னேறுவதற்கென்று நிறைய இலக்குகள் உள்ளன. இலக்குகளை முழுமைப்படுத்த நிறைய கனவுகள் உண்டு.
இலக்குகளுடன் பயணிக்கும் போது தான் வாழ்க்கை இனிமையானதாகவும், சுவாரசியமானதாகவும் இருக்கும். இலக்கு இல்லாமல் பயணிக்கும் போது வாழ்வில் வெறுமை வந்துவிடும்.
இலக்கு என்றால் என்ன
இலக்கு என்பது ஒரு நோக்கம் கொண்ட முடிவின் பிரதிபலிப்பாகும். இலக்கு என்பது முயற்சியுடனும் வரையறையுடனும் எதிர்காலத்தில் அடைந்து கொள்ளக் கூடிய ஒரு உறுதியான விடயமாகும்.
அதாவது ஒரு இலக்கு என்பது நீண்ட கால இடைவெளியில், பொதுவாக மூன்று முதல் ஐந்து வருடங்களில் அடைந்து கொள்ள வேண்டிய முடிவுகள் ஆகும்.
இலக்கின் வகைகள்
இலக்கினை மூன்றாக வகைப்படுத்தலாம். அதாவது
- குறுகிய கால இலக்கு – 6 மாதம் – 1 வருடம்
- மத்திய கால இலக்கு – 1 வருடம் – 3 வருடம்
- நீண்ட கால இலக்கு – 3 வருடம் – 5 வருடம்
இலக்கின் முக்கியத்துவம்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியமானதாகும். இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல் தத்தளிப்பான்.
மனிதன் நிர்ணயிக்கும் இலக்கு தான் பிற்காலத்தில் அவன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும். இலக்குகளே நம் எதிர்கால வாழ்வைச் சிறப்பாக்குகின்றன.
இலக்குகள் நம்முடைய எதிர்கால நலன்களுக்கு நாம் செய்யும் வாக்குறுதிகள் போன்று இருக்கின்றன.
குறுகிய கால இலக்குகளை பூர்த்தி செய்வதன் மூலம்தான் நீண்டகால இலக்கினை அடைய முடியும். வாழ்வின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலக்குகளை நிர்ணயித்தே செயற்பட வேண்டும். அப்போது தான் கனவுகளை நனவாக்க முடியும்.
இலக்குகளை அடைவதற்கான வழிகள்
இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எப்பொழுதும் இலக்குகள் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
உங்கள் சக்திக்குத் தகுந்தாற் போலவும், பொருளாதார வசதிக்கு ஏற்றதாகவும் இலக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிர்ணயித்த இலக்கை ஒரு நேர்கோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுத வேண்டும். அதனை அடிக்கடி படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் திட்டமிடல் என்பது மிகவும் அவசியமானதாகும். இலக்குகளைத் திட்டமிடும் போது இலக்குகளை அடைய வகுக்கும் திட்டங்கள் சிறிதாக இருக்கும் படியும், எளிதில் செயற்படுத்தக் கூடிய வகையிலும் வகுத்துக் கொள்ள வேண்டும்.
இலக்குகளை அடையும் முயற்சியில் நாள்தோறும் பல சவால்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும். அப்போது சோர்ந்து விடக் கூடாது. விடா முயற்சியுடன் பயணிக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்வதற்கான மனத் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.