ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புகளைப் பெற்று விசாரணைகளை நடத்தத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல்களில் சுமார் 270 பேர் வரை உயிரிழந்திருந்ததுடன், 400க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் நீதிக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் ராஜபக்ஸ குடும்பத்திற்கும், பிள்ளையான் என அழைக்கப்படும் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திர காந்தனுக்கும் தொடர்புள்ளதாக ‘சேனல் 4’ தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது.
ஆட்சி பீடம் ஏறுவதற்காக ராஜபக்ஸ குடும்பத்தினர் நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில், இந்தத் தாக்குதலை நடத்திய விதமாக சேனல் 4 ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான பேச்சு மீண்டும் பேசுபொருளாக மாறியிருந்தது.
என்ன சொல்கிறார் நீதி அமைச்சர்?
இதன்படி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் அதை ஏற்றுக்கொண்டிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்தத் தயார் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, ஊடக சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
”சேனல் 4 ஊடக நிறுவனமானது, பிரசாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முயலும் ஊடக நிறுவனம். எனினும், அதைச் சாதாரணமாக நினைப்பது நியாயமற்றது. அந்தத் தகவல்கள் குறித்து நாம் ஆராய்வோம்.
அந்தத் தகவலை வழங்கிய மௌலானா தொடர்பிலான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.
ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்று குடியுரிமையைக் கோரி நிற்கும் ஒருவர் இவ்வாறான தகவல்களை வெளியிடுகின்றமையும், குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளப் போதுமானது.
எனினும், இந்த விஷயம் தொடர்பில் நாம் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவோம்.
யாரேனும், இன்று சேனல் 4 தொடர்பிலோ வேறு எந்தவொரு விடயம் தொடர்பிலோ தகவல்களை வழங்குவார்களாயினும், உள்நாட்டு ரீதியில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் ஒத்துழைப்புகளைப் பெற்றேனும் விசாரணைகளை நடத்தத் தயார்,” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
சர்வதேச விசாரணை வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு விசாரணை தோல்வியடைந்துள்ள தருணத்தில், சர்வதேச விசாரணைகளில் மாத்திரமே உண்மையைக் கண்டறிய முடியும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
இந்த விஷயத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசாங்கத்திற்கு, இதற்குத் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த விஷயத்தை மூடி மறைக்காது, உள்நாட்டு மற்றும் சர்வதேசங்களை இணைத்ததாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் இந்த அரசாங்கத்திற்குத் தொடர்புள்ளதா என கண்டறியப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
”ஈஸ்டர் தாக்குதலை முன்னிலைப்படுத்தி, இந்த நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இனவாத, மதவாத தாக்குதல்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
இதைக் காண்பித்தே ஜனாதிபதி, பிரதமர் பதவிகளைப் பெற்றுக்கொண்டீர்கள். மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிய உங்களால் முடியாது போயுள்ளது.
இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதலில் உண்மையைக் கண்டறிய இன்று சர்வதேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிய இந்த அரசாங்த்திற்கு முதுகெலும்பு இல்லை,” என்று சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகள் அரசாங்கத்திற்குள் இருக்கின்றார்களா? இந்தச் சம்பவம் தொடர்பான நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈஸ்டர் தாக்குதலை பிரசாரம் செய்து, அந்த ரத்தத்தின் மீது உருவான ஆட்சியாளர்களுக்கு, உண்மையை வெளிப்படுத்த இயலுமை கிடையாது.
அதனால், உள்நாட்டு விசாரணை வெற்றியளிக்காத இந்தத் தருணத்தில், சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே இந்த பிரச்னையைத் தீர்க்க முடியும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார்.
”எது பொய் எது உண்மை என்பதைக் கண்டறிய வேண்டும்; இந்தக் குரூரமான தாக்குதலில் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் யார் என்பதை இனங்கண்டு, அவர்களுக்கு அதிகபட்ச தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இருக்கின்ற எங்களைக் கொண்டு வந்து பழி சுமத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த விசாரணைகளில் அசாத் அவர்கள் தான் சஹரான் குழுவுடன் முதலாவது கூட்டத்தை நடத்தியதாக ஒத்துக்கொண்டதன் அடிப்படையில், சர்வதேச விசாரணை வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் சொன்னார்.
சர்வதேசத்திடம் சொல்லி அவரையும் விசாரித்து இதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்,” என ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார்.
யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை?
இலங்கையில் 30 ஆண்டுக்காலமாக இடம்பெற்ற உள்நாட்டு போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த இறுதிக்கட்ட போரின்போது, பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன், இறுதிக்கட்ட போரில், முள்ளிவாய்க்கால், ஓமந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகள் இன்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைத் தேடி, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் தொடர் போராட்டங்களை போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடத்தி வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெண்களின் உள்ளாடைகள், துப்பாக்கித் தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோகங்கள், மனித எலும்புக்கூடுகள் என போர் இடம்பெற்ற பகுதியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மனித புதைக்குழி அகழப்பட்டு வருகின்றது.
இந்த மனித புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளவர்கள், போர் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளாக இருக்கலாம் என அச்சம் வெளியிடுகின்றனர்.
இலங்கையில் இதுவரை 20க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அதுதொடர்பிலான உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நிறைவடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையை இழந்த தமிழர்கள், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள்.
‘உள்நாட்டு போரிலும் சர்வதேச விசாரணை வேண்டும்’
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான சர்வதேச விசாரணையை வரவேற்கும் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அதேபோன்று உள்நாட்டுப் போர் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் சர்வதேச தலையீடு செய்யத் தவறும் பட்சத்தில், தமிழர்களை எலும்புக் கூடுகளாகவே பார்க்கவேண்டிய நிலைமை ஏற்படும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.
”ஈஸ்டர் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான சாட்சியங்கள் சேனல் 4 ஊடகத்தால் அறியப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதை நாங்கள் மறுக்கவில்லை.
ஆனால், அதற்கு முதல் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அல்லது தமிழினம் அழிக்கப்பட்ட நடவடிக்கை வடக்கு, கிழக்கில் நடைபெற்றுள்ளது. இது உலகத்திலுள்ள அனைவருக்கும் தெரியும்.
தமிழர்களுக்கு தற்போது கொடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் போரினாலேயே அந்த அழிவுகள் ஏற்பட்டன,” என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
மேலும் இப்போது நிலப் பறிப்பு, மத திணிப்பு, கலாசார அழிப்புகள் என்று மிக மோசமான நிலைமை காணப்படுகின்றது. இன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்கூட, தமிழர்களுக்கு சாதகமாக வருமா என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொடூரமான அரசாங்கத்தின் கீழ் எமது தமிழினம் சிக்குப்பட்டுள்ளது. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கின்றோம் எனவும் துரைராசா ரவிகரன் கூறினார்.
அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதேபோன்று, லட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்ட விஷயத்தில் தீர்வையும் உடனடியாக எல்லோரும் பார்க்க வேண்டும். முக்கியமாக எங்களுடைய விஷயத்திலும் சர்வதேச தலையீடு வேண்டும்.
இல்லையென்றால், இவர்கள் எங்களை அழித்து, இப்படியாக எலும்புக் கூடுகளாகவே பார்க்க வேண்டும் என்ற நிலைமைதான் ஏற்படும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
“அனைத்து தலைவர்களின் கைகளிலும் ரத்தம் உள்ளது”
நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களின் கைகளிலும் ரத்தம் காணப்படுவதாலேயே, சர்வதேச விசாரணைகளுக்கு தயக்கம் காட்டப்படுவதாக காணாமலாக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
”71, 83, 89 மற்றும் போர் உள்ளிட்ட அனைத்து சிவில் வன்முறைகள் தொடர்பிலான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அலுவலகமொன்று அமைக்கப்படவேண்டும். நட்ட ஈடு செலுத்தப்பட வேண்டும்.
ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறலுக்கான ஐபிரிட் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். மீண்டும் இடம்பெறவுள்ள வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு 2015ஆம் ஆண்டு ஐநாவிடம் இலங்கை இணங்கியது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்வான மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தார். எனினும், அவர்களுக்குப் பதிவான முறைப்பாட்டின் உண்மைத்தன்மை இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை,” என்று பிரிட்டோ பெர்ணான்டோ குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், “ராணுவத்தை காட்டிக் கொடுக்க முடியாமையாலேயே பொறுப்புக்கூறல் முறையை நடைமுறைப்படுத்த முடியாது என மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் எதுவும் நடக்காததாலேயே வடக்கிலுள்ள பெற்றோர் உள்நாட்டுப் பொறிமுறை வேண்டாம் எனக் கூறினார்கள்.
அதனாலேயே சர்வதேச விசாரணைகளை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்கள். எனினும், அரசாங்கம் அதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதிலளிக்கவில்லை.
சேனல் 4 ஆவணப்படத்திற்குப் பின்னர் சர்வதேச விசாரணைக்குத் தயார் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்,” எனவும் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், “நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சிகளும் சர்வதேச விசாரணையைக் கோருகின்றன. எனினும், நாடாளுமன்ற தேர்வுக்குழு ஒன்றை அமைத்து, இந்த விசாரணைகளை அந்த இடத்திலேயே முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயல்கின்ற விதமே எமக்குத் தெரிகின்றது.
இலங்கையில் இடம்பெறும் வன்முறைகளை நிறுத்த பொறுப்புக்கூறல் அவசியமாகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட விஷயம் தொடர்பில் சர்வதேச விசாரணை குறித்து யாரும் பேச மறுப்பதற்கான காரணம், நாட்டை ஆட்சி செய்த அனைவரும் தொடர்புபடுகின்றார்கள்.
அனைவரது கைகளிலும் ரத்தம் காணப்படுகின்றது. அதனால், சர்வதேசத்திற்கு காண்பிக்க உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை தயார்ப்படுத்துகிறார்கள். ஆனால், எதுவும் நடக்காது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நம்பிக்கையைக் கொடுக்கும் வகையிலான சர்வதேச நிபுணர்களின் பங்குப்பற்றுதலுடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என்று காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
போர் தொடர்பில் சர்வதேச விசாரணை – அரசாங்கம் பிபிசி தமிழுக்கு வழங்கிய பதில்
இந்த விஷயம் தொடர்பில் தாம் ஜெனீவா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை நடத்த இணங்குவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ கூறிய நிலையில், போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பில் பிபிசி தமிழ் வினவியபோது, நீதி அமைச்சர் இதைக் குறிப்பிட்டார்.
”இந்த நாட்டில் போர் இடம்பெறவில்லை என்றால், எந்தவொரு மக்களும் உயிரிழந்திருக்க மாட்டார்கள். ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டார்கள்.
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், அவர்கள் சர்வதேச விசாரணைகளைக் கோரியிருக்க மாட்டார்கள். பிரபாகரன் உயிரிழந்தமையாலேயே சர்வதேச விசாரணைகளைக் கோருகின்றார்கள்.
நாம் கூறவேண்டிய விஷயங்களை சர்வதேசத்திடம் கூறி, பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். மனித உரிமை பேரவையிடமும் நாம் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். நாங்கள் சர்வதேசத்துடன் இணைந்து செயல்படுகின்றோம்.
சர்வதேசத்துடன் இணைந்து செயல்படுமாறே கூறுகின்றார்கள். அதனால், நாம் ஜெனீவா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். சர்வதேச விசாரணையையே கோருகின்றார்கள். ஜெனீவாவும் சர்வதேசம்,” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பிபிசி தமிழுக்குப் பதிலளித்தார்.