முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இலக்கங்கள் அடங்கிய சாட்சியங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெண் போராளிகளின் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இலக்கங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இன்றைய மூன்றாம் நாள் அகழ்வு நடவடிக்கைகளின்போது இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புக்கூடுகளுடன் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மேலாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், துப்பாக்கித் தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களையும் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளுக்குக் கீழே மேலும் பல மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்தும் வகையில், இன்றைய தினம் இரண்டு எலும்புக்கூடுகளை அகழ்வாளர்கள் தோண்டி எடுத்துள்ளதுடன், அவை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் குழு வருகை
குறித்த இடத்திற்கு யாழ்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழுவொன்று, பேராசிரியருடன் வருகை தந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் உள்ளாடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் இலக்கங்கள் இன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
”இன்றைய தினம் எடுக்கப்பட்ட இரண்டு எலும்பு எச்சங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுடையது என நம்பப்படுகின்றன. அதேநேரம், முதலாவது மனித எச்சத்திலிருந்து துப்பாக்கி ரவையொன்றும் (தோட்டா), ஆடைகளுக்கான இலக்கங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதலாவது இலக்கமாக நீளமான பச்சை நிற கால் சட்டையில் 3204 என்ற இலக்கமும், அதேநேரம் முழு நீள மேல்சட்டையும், 3174 இலக்கமுடைய பெண்கள் அணியும் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, இரண்டாவது மனித எச்சமும் எடுக்கப்பட்டுள்ளது. நீளமான பச்சை நிற கால்சட்டையும், முழு நீள மேல்சட்டையும் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணியும் உள்ளாடையில் 1564 என்று இலக்கமிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் எடுக்கப்பட்டுள்ளன.
இவை இரண்டுக்கும் இடையில் துப்பாக்கி ரவைகள் (தோட்டா) எடுக்கப்பட்டுள்ளன,” என காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ஆடைகளிலுள்ள இலக்கங்கள் கைகளால் கறுப்பு நிற ஊசியில் தைக்கப்பட்டடிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனித புதைகுழியில் துப்பாக்கி தோட்டாக்கள்?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்த இடமாக முல்லைத்தீவு காணப்படுகின்றது.
இலங்கையில் முப்பது ஆண்டுக் காலங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி நிறைவுக்கு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், மே 18ஆம் தேதி ஆயிரக்கணக்கான தமது உறவுகளை இலங்கை ராணுவம் கொலை செய்ததாக யுத்தத்தின் நேரடி பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள குடும்பங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றது.
இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பலர் நந்திக்கடல் பகுதியில் வைத்தே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதே இடத்தில் வைத்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.
முப்பது ஆண்டுகளாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதி
இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த நந்திக்கடல் பகுதியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலேயே கொக்குத்தொடுவாய் பகுதி அமைந்துள்ளது.
கொக்குத்தொடுவாய் பகுதியானது 1984ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
இந்த மனித புதைகுழியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானது எனக் கருதப்படும் சீருடைகள் காணப்பட்டமையால், இது விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சுமார் 27 ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடமொன்றில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள காரணத்தால், காணாமல் ஆக்கப்பட்டவர்களை ராணுவத்தினர் கொலை செய்து புதைத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச மக்களால் வெளியிடப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் இலங்கை ராணுவத்திடம் மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் வினவியது.
”எம்மால் அப்படிக் கூற முடியாது. ஏனெனில், அதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் கிடையாது.
யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போதும் கிடைக்கின்றன,” என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
மேலும், “சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னரே இது எந்த காலப் பகுதிக்குச் சொந்தமான எச்சங்கள் என்பதைக் கூற முடியும்.
அட்ோடு இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்,” எனவும் அவர் கூறியுள்ளார்.
- ரஞ்சன் அருண் பிரசாத் ,பிபிசி தமிழுக்காக