ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வரும் தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை, மற்றொரு வழக்கில் மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்று இருந்தவர் பார்க் கியுன் ஹை. அவர் தனது தோழியுடன் சேர்ந்து ஊழல்கள் பல புரிந்து, பதவியை இழந்தார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி, 24 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த நாட்டின் உளவு அமைப்பான தேசிய உளவு அமைப்பிடம் சட்ட விரோதமாக 2.9 மில்லியன் டாலர் (சுமார் ரூ.19 கோடியே 72 லட்சம்) நிதி பெற்று, நாட்டின் கஜானாவுக்கு இழப்பு ஏற்படுத்தினார்; 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் தேர்வில் முறையற்ற விதத்தில் தலையிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் கோர்ட்டில் ஆஜராக முடியாது என மறுத்து விட்டார்.
இந்த நிலையில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அவருக்கு விதிக்கப்பட்ட 24 ஆண்டு சிறைத்தண்டனையின் தொடர்ச்சியாக அவர் மேலும் 8 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தேசிய உளவு அமைப்பின் தலைவராக இருந்த 3 பேர் கோர்ட்டில் ஆஜராகி பார்க் கியுன் ஹையுக்கு எதிராக சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.




















































