இன்றிருப்பது போன்ற பரபரப்பான வாகனப்போக்குவரத்து, ஜனநெருக்கடி 1960களில் இல்லை. பிழைப்பு தேடிப் பலரும் மெட்ராஸிற்கு வருவது போலவே தெக்கனும் வந்து சேர்ந்தான். அப்போது அவனுக்கு வயது இருபத்தியெட்டு.
மதராஸில் அவனுக்குத் தெரிந்த மனிதர்கள் ஒருவர் கூடக் கிடையாது. அதைப்பற்றி நினைக்கும் போது தெக்கன் மனதிற்குள் சிரித்துக் கொள்வான். அப்போது அவனது மனதில் இப்படித் தோன்றும்
“திருடனுக்கு எதற்குத் தெரிந்த மனிதர்கள்“
ஆம். தெக்கன் திருடுவதற்காகத் தான் மதராஸிற்கு வந்து சேர்ந்தான். அதற்கு முன்பு வரை பழனி, திருப்பரங்குன்றம், சமயபுரம் போன்ற கோவில் கூட்டத்தில் திருடியிருக்கிறான். சில நேரம் சிறுமிகள் காதில் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள். சிலநேரம் கைப்பைகள், உண்டியல்கள். மணிபர்ஸ், கைக்கடிகாரம் ஆனால் வீடு புகுந்து ஒரு போதும் திருடியதில்லை. அதற்கான தேவையும் அவனுக்கு இல்லை.
ஒரு நாளைக்கு ஒரு திருட்டு என்பதே அவனது முடிவு. அப்படித் திருட முடியாத நாட்களில் தன்னைத் தண்டித்துக் கொள்ளப் பட்டினி கிடப்பான். திருட்டுப்பொருளை விற்றுக் கிடைத்த பணத்தில் தெருநாய்களுக்குச் சாப்பாடு வாங்கிப் போடுவான். அதனால் தானோ என்னவோ நாய்கள்அவனைக் கண்டு ஒரு போதும் குலைப்பதில்லை.
பசி தான் அவனை முதன்முறையாகத் திருடத் தூண்டியது. பனிரெண்டு வயதிருக்கும். அவனது பாட்டி வீட்டைப் பூட்டிக் கொண்டு சாயப்பட்டறைக்கு வேலைக்குப் போயிருந்தாள். பசி தாங்கமுடியவில்லை. வீடு பூட்டிக்கிடந்தது. பள்ளிக்கூடம் போகாமல் வெளியே சுற்றித் திரிந்தவனுக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போலிருந்தது. ஆனால் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. பேசாமல் ஆடு மாடுகளைப் போலச் செடிகொடிகளைத் தின்றுவிடலாமா எனக்கூட யோசித்தான்.
அப்போது தான் திலகர் மைதானத்தை ஒட்டிய டீக்கடை நினைவிற்கு வந்தது. அந்தக் கடையில் ஒரு கிழவர் தானிருப்பார். அவருக்குத் தெரியாமல் தட்டில் உள்ள வடையைத் திருடுவது எளிதானது. அப்படி நினைத்துக் கொண்டு தான் போனான். அவன் போன நேரம் கடையில் யாருமேயில்லை. கடைக்காரக் கிழவன் அவனைக் கண்டதும் ஐந்து நிமிசம் கடையைப் பாத்துக்கோ. ஒண்ணுக்கு இருந்துட்டு வர்றேன்என்று சொல்லிவிட்டு வெளியே போனார். இது தான் அதிர்ஷ்டம் என்பது.
தெக்கன் மனதிற்குள் சிரித்தபடியே தலையாட்டினான். கிழவர் தலைமறைந்தவுடன் பசி தீரத் தட்டில் இருந்த வடைகளைச் சாப்பிட்டான். பிறகு மீதமுள்ள வடையோடு தட்டைத் தூக்கிக் கொண்டு கடையை அப்படியே விட்டுவிட்டு நடந்து போனான். வழியில் தென்பட்ட சிறுவர்களுக்கு ஒசியில் வடை கொடுத்தான்.
மீதமிருந்த வடைகளில் ஒன்றை ஆட்டுக் குட்டி ஒன்றுக்குக் கொடுத்தான். நாலைந்து உளுந்த வடைகளை ஒரு கயிற்றில் கட்டி மாலையாகப் போட்டுக் கொண்டான். அப்படியும் வடைகள் மீதமிருந்தன. சைக்கிள் பெல்லில், தபால்பெட்டியில், மூடிக்கிடந்த கடைவாசல்களில் என வடையைச் சொருகிவைத்தான். காலியான தட்டைக் கொண்டு போய்க் கிணற்றில் வீசி எறிந்தான். அன்றைக்கு மிகச் சந்தோஷமாக உணர்ந்தான்.
அதன் சில நாட்களுக்கு டீக்கடைப் பக்கம் போகவேயில்லை. பின்பு ஒருமுறை அந்தக் கடைப் பக்கம் போன போது கிழவருக்கு அவனை ஆள் அடையாளம் தெரியவில்லை. அன்றிலிருந்து தான் திருட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் முளைவிட்டது
சில்லறை திருட்டில் ஈடுபடத் துவங்கினான். யாருக்கும் தெரியாமல் எந்த மனிதனும் திருட முடியாது. திருடுகிற தருணத்தில் தெரியாமல் இருக்ககூடும். ஆனால் திருட்டை மறைக்கமுடியாது. திருட்டின் மணத்தை அறிந்து கொள்ளக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருட்டின் மணம் தெரிந்துவிடும். அப்படித் தான் எபினேசர் அவனுடன் இணைந்தான். அவன் ஒரு போதும் எதையும் திருடியதில்லை. ஆனால் அவனுக்கு எல்லாத் திருடர்களையும் தெரியும். திருடிய பொருட்களை வாங்கிக் கொண்டு போய் விற்பது மட்டுமே அவனது வேலை. எபினேசர் அவனைச் சந்தித்த முதல்நாளிலே சொன்னான்
“உன் கைல திருட்டுரேகை[1] ஒடுது“
“இல்லை“ என மறுத்தான் தெக்கான்
கையை நீட்டு சொல்றேன். என அவனாகக் கையை விரித்து ஒரு ரேகையைக் காட்டினான். இந்த ரேகை எனக்கு ஒடலை பாரு. திருட்டுப் பயலுகளுக்கு மட்டும் தான் இந்த ரேகையிருக்கும். அது தான் அடையாளம்
“உனக்கு எப்படித் தெரியும்“ எனக்கேட்டான் தெக்கான்
“நான் நிறையத் திருடர்களைப் பாத்துருக்கேன். நீயும் ஒரு திருடன்“
தெக்கன் ஒத்துக் கொண்டான். எபினேசர் சொன்னான்
“திருடுறவன் ஒரு ஊர்ல ரொம்ப நாள் இருக்ககூடாது. ஊரை மாற்றிகிட்டே இருக்கணும்“
“நானும் அதை உணர்ந்திருக்கேன்“. என்றான் தெக்கன்
“அப்போ நீயும் நானும் மதுரைக்குப் போவம். நீ திருடு. அதை நான் வித்து காசாக்கித் தர்றேன் “
அப்படித் தான் அவர்கள் இருவரும் இணைந்து மதுரைக்குப் போனார்கள்.
தெக்கன் இரவில் திருடுவதில்லை. இரவு திருடுவதற்கானதில்லை என்று ஏனோ நினைத்துக் கொண்டிருந்தான். பகலில், அதுவும் கூட்டத்தில் திருடுவதே அவனுக்கு விருப்பம். ஆனால் எபினேசர் அவனை இரவில் திருடினால் நிறைய அள்ளிவிடலாம் என ஆசைகாட்டினான். இதற்காகத் திருப்பரங்குன்றம் மலையின் பின்பக்கம் கட்டப்பட்ட வீடு ஒன்றை அடையாளம் காட்டினான் எபினேசர்.
அந்த வீடு தனித்திருந்தது. அந்த வீட்டில் குடியிருந்தவர்களை அவர்கள் பல நாட்களாகக் கண்காணித்தார்கள். வணிகர்களின் குடும்பது. வீட்டில் ஆறு பேர் இருந்தார்கள். அவர்களில் இரண்டு ஆண்கள். அதில் ஒருவர் வயதானவர். மற்றவர் அவரது மகனோ, மருமகனோ போன்றவர். மாசத்தில் பௌர்ணமி அன்று அந்த இரண்டு பேரும் ஏதோ கோவிலுக்குக் கிளம்பிப் போய்விடுகிறார்கள். அன்று பெண்கள் மட்டுமே வீட்டிலிருக்கிறார்கள். அது தான் திருட வேண்டிய நாள்.
முழுநிலா வெளிச்சத்தில் திருடப்போவது தெக்கனுக்கு சந்தோஷம் தருவதாக இருந்தது. ஆனாலும் அவனை அச்சப்படுத்தியது அந்த வீட்டிலிருந்த இரண்டு. ராஜபாளையம் நாய்கள். தொலைவில் ஆளைக் கண்டாலே மோப்பம் பிடித்துப் பாய்ந்துவிடக்கூடியவை. அதை எப்படிச் சமாளிப்பது என்று மட்டும் யோசனையாக இருந்தது. மாமிசத்துண்டுகளை ஒரு துணியில் சுற்றி வைத்திருந்தான். தேவைப்பட்டால் அதை வீசி எறிந்து நாய்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
வீடு பௌர்ணமி வெளிச்சத்தில் தாமரை மலர் பூத்து நிற்பது போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. வீட்டோர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மரஞ்செடி கொடிகள் வெண்ணிற ஒளியில் பனி இறங்கி நிற்பது போல உறைந்திருந்தன.
ஆனால் அந்த வீட்டின் பின்புறசுவரில் ஏறி உள்ளே குதிக்கும் போது நாய்கள் வருகிறதா எனக் கண்களால் துழாவினான். நாயின் இருப்பிற்கான அறிகுறியேயில்லை. நாய்களும் உறங்கிவிட்டன. அவன் தைரியமாக உள்ளே குதித்தான். சில அடிகள் முன்னே வைத்தபோது உறங்குவது போலக் கிடந்த இரண்டுநாய்களும் ஆவேசத்துடன் பாய்ந்து அவன் முன் வந்தன. ஒரே ஆச்சரியம் அந்த நாய்கள் அவனைக்கண்டு குலைக்கவில்லை. மாறாக அவனை வெறித்துப் பார்த்தபடியே நின்றன. அவன் நாய்களுக்கு இறைச்சியை வீசி எறியவேண்டும் என்பதை மறந்து அதை நோக்கித் தன் கைகளை நீட்டினான்.
தந்தையை நோக்கித் தாவும் பிள்ளையைப் போல அந்த நாய்கள் அவன் கைகளை நோக்கி வந்தன. அதன் தலையைத் தடவிவிட்டான். ஒரு நாய் அவன் கையை நக்கியது. அந்த நாயின் கண்களில் ஏதேவொரு பரிதவிப்பு. ஏக்கம் இருப்பதைக் கண்டான். அந்த நாயின் தலையைத் தடவிட்டபோது திடீரென அவனுக்கு அந்த நாயின் சரித்திரம் கண்முன்னே தோன்றியது போலிருந்தது. ஆம் அவன் அந்த நாய்குட்டி பிறந்தது முதல் இந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தது முதல் அத்தனையும் ஒரு தொடுதலில் அறிந்து கொண்டான். அது விநோதமாக இருந்தது. பாவம் இந்த நாய், நிறைய அடித்து உதைத்திருக்கிறார்கள். புட்டத்தில் சூடு வைத்திருக்கிறார்கள். நாயின் கடந்தகாலம் அவனால் உணரப்பட்டதும் பரிவோடு அந்த நாயிடம் சொன்னான்
“உன் வலியெல்லாம் போய்விடும்“
நாய் அதைப் புரிந்து கொண்டது போலத் தலையாட்டியது. அருகிலிருந்த இன்னொரு நாயையும் கையால் தொட்டான். மறுநிமிசம் அதன் சரிதமும் அவனால் உணரப்பட்டது. அவன் அந்த நாயிற்கும் தனது ஆசிகளை அளித்தான். இரண்டு நாய்களும் அவனே தங்களது எஜமானன் என்பது போல மௌனமாக அவன் முன்னே மண்டியிட்டன. அவன் காதுகளை நீவிவிட்டு உடலை உருவிட்டு அவற்றைச் சாந்தப்படுத்தினான். பிறகு நாய்களிடம் சொன்னான்
“உங்களுக்கும் திருடர்களுக்கும் ஒரு பகையும் கிடையாது. மனிதர்கள் தான் அந்தப் பகையை உருவாக்குகிறார்கள்“
நாய்கள் கல்லாக உறைந்துவிட்டதைப் போலச் சலனமற்றிருந்தன. அதன்பிறகு அவன் அந்த வீட்டில் எளிதாகத் திருடிக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.
இதைப்பற்றி எதையும் கூறவில்லை.ஆனால் தன்னால் எப்படி நாய்களின் கடந்தகாலத்தை உணரமுடிகிறது என அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆனாலும் என்ன. அது ஒருவகையில் நல்லது தானே. திருடனுக்குக் கிடைத்த அதிர்ஷடம் என்று தானே கூற வேண்டும்
அதன்பிறகு அவன் திருடச்சென்ற எந்த வீட்டிலும் ஒரு நாய் கூட அவனைக்கண்டு குலைக்கவில்லை. அவன் நாய்களின் துயரக்கதைகளை அறிந்தான். தன்னைப் போலவே நாய்களும் பசிக்குப் பயந்தே மனிதர்களோடு வாழ்கின்றன. நாய்களுக்குத் திருடத்தெரியவில்லை. அவை வெளிப்படையாகச் சாப்பிட நினைத்த பொருளைத் தூக்கிக் கொண்டு ஒடுகின்றன. அடிவாங்குகின்றன. தந்திரமில்லாத விலங்கு என்பதால் தான் மனிதனிடம் அடிமைபட்டு கிடக்கிறது. சோறு போடுகிறவர்களை எஜமான் என்று காலை வருடுகிறது. அவன் தன் முன் மண்டியிடும் ஒவ்வொரு நாயிடம் நீ யாருக்கும் அடிமையில்லை. நீ ஒரு நாய் என உணர்த்தினான். நாய்களுக்குள் உள்ள நிற வேற்றுமை, நோய், காது கேளாமை. கண்பறிபோனது. கால் ஒச்சமானது என யாவற்றையும் அவன் அறிந்து கொண்டு அதற்காக வருந்தினான்.
அவனது தொடுதலின் வழியே அவன் நாய்களின் தீராத வலியைச் சொஸ்தப்படுத்தினான். உண்மையில் அவன் நாய்களின் மீட்பரைப் போலவே செயல்பட்டான்.
திடீரெனத் திருட்டை விடவும் திருடப்போகிற இடத்தில் நாய்களுக்கு உதவி செய்ய முடிகிறது என்பது அவனைப் பரவசப்படுத்தியது. இதற்காகவே வேறு வேறு ஊர்களுக்குத் திருடச் சென்றான்
ஒரு நாயின் கதை என்பது வலியால் துயராலுமே எழுதப்படுகிறது. குட்டியாகப் பிறந்த நாள் முதல் நாய் தன் குரலை உயர்த்துவதன் வழியாகவே வாழ முற்படுகிறது. குரலற்ற நாய்களைக் கொன்றுவிடுவார்கள். நாய் என்பதே அதன் குரைப்பு தான். நாய்களில் சோம்பேறிகள். மூர்க்கமானவர்கள். காதலர்கள். அவசரக்காரர்கள். பயந்தோளிகள் எனப் பலரகங்கள் இருந்தன. பெண் நாய்கள் ஆண் நாய்களை மதிப்பதேயில்லை. குட்டி நாய்களுக்கு உலகம் திகைப்பூட்டுகிறது. பசித்த வேளையில் எங்கே சாப்பாடு கிடைக்கும் என நாய் அலைந்து திரிந்து வெறி கொள்கிறது. தெருநாய்களுக்கு வீட்டுநாய்களைப் பிடிப்பதில்லை. நாய்கள் முதுமையடையும் போது களைப்பும் அசதியும் வேகமாகின்றன. நாய்களின் மரணம் வலியால் மட்டுமே ஏற்படுகிறது.
அவன் திருடச் சென்ற இடங்களின் வழியே நாய்களைப் புரிந்து கொள்ளத்துவங்கினான். ஒரு நாள் போதையில் எபினேசர் இதைப்பற்றி அவனிடம் கேட்டான்
“உன்னைப் பார்த்து ஏன் நாய்கள் குலைப்பதில்லை“
“அது தான் எனக்கே விநோதமாக இருக்கிறது“
“இல்லை, உன் கையில் ஒரு மணம் இருக்கிறது. அது நாய்களால் மட்டுமே உணர முடிந்த மணம்“
“என்ன மணமது“
“அதை எப்படிச் சொல்வது எனத்தெரியவில்லை. சமையற்காரனின் கைகளுக்கு ஒரு ருசியிருக்கிறதில்லையா. மருத்துவரின் கைகளுக்கு ஒரு உயிரைக் காக்கும் சக்தியிருக்கிறதில்லையா. அது போல இது ஒருவகையான சக்தி. அது மணமாக வெளிப்படுகிறது. அந்த மணத்தை அறிந்து தான் நாய்கள் உன்னை நோக்கி வருகின்றன. மண்டியிடுகின்றன
நான் ஒரு திருடன். என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டியது அதன் வேலை“
“நாய்களுக்கு நீ ஒரு கடவுள். அதனால் தான் கடவுளிடம் மண்டியிடுவது போல உன் முன்னால் மண்டியிடுகின்றன.“
“நான் கடவுளில்லை. ஆனால் என் கைகள் நாய்களின் மீது படும் போது அதன் கடந்தகாலத்தை என்னால் உணர முடிகிறது“
“சிலரது கைகள் விசேசமானவை. நீ அதில் ஒருவன். உன்னால் மனிதர்களுக்குப் பிரயோசனமில்லை. ஆனால் நாய்களை உன்னால் சாந்தப்படுத்தமுடியும். “
“அது தான் குழப்பமாகயிருக்கிறது.“
“அற்புதங்களை ஆராயக்கூடாது. தெக்கா இனி நீ ஒருபோதும் திருடச் சென்று மாட்டிக் கொள்ள மாட்டாய். எங்கே வேண்டுமானாலும் போய்த் திருடு. “
“நாய்கள் இல்லாத வீட்டில் திருடப்போனால்“ எனக்கேட்டான் தெக்கான்
“ஒருவேளை மனிதர்களில் நாய்தன்மை கொண்டவர்கள் உன் முன்னால் மண்டியிடவும் கூடும். எனக்குத் தோன்றுகிறது நீ வெறும் திருடனில்லை“
தெக்கன் அதைக்கேட்டு சிரித்தான்
“நானே ஒரு தெருநாய் தான் அதனால் தான் மற்றநாய்களுக்கு என்னைப் பிடிக்கிறதோ என்னவோ“
எபினேசர் சொன்னான்
“தெக்கா. அற்புதங்கள் யாரால் நிகழ்த்தபட வேண்டும் என யார் முடிவு செய்ய முடியும். கர்த்தர் கூட ஒரு தச்சனின் மகன் தான். “
தெக்கனும் தன்னைப் பற்றி எபி சொல்வதைகேட்கும் போது குழப்பமாக இருந்தது. ஆனாலும் நாய்களைச் சொஸ்தப்படுத்துவதற்கு தன்னால் முடிவது நல்லது தானே என நினைத்துக் கொண்டான்
••
தெக்கன் மதராஸிற்கு வந்த பிறகு நகரமே திருடுவதற்கான இடம் என்பதைப் புரிந்து கொண்டான். ஒரே சிக்கல். இந்நகரில் திருடர்களின் எண்ணிக்கை அதிகம். அநேகமாக வீதிக்கு நூறு திருடர்கள் இருந்தார்கள். சிலர் வணிகத்தின் மூலம் திருடினார்கள். சிலர் அரசு அதிகாரிகளாக இருந்து திருடினார்கள். சிலர் காவல்துறை அதிகாரிகளாக இருந்தும். அதிகாரப்பூர்வமாகத் திருடினார்கள். சில்லறை திருட்டுகளும் ஏராளமாக நடைபெற்றன. மனிதர்களை விடவும் இங்கே வளர்க்கபடும் நாய்கள் மிக மோசமான நிலையில் இருந்தன.
காற்றில்லாத அறைகளில் அடைக்கப்பட்டன. கனமான இரும்பு சங்கிலி கொண்டு கட்டப்பட்டன. போதுமான உணவு எந்த நாயிற்கும் கிடைப்பதில்லை. இன்னொரு பக்கம் சொகுசான நாய்குட்டிகள் காரில் பவனி வந்தன. பிஸ்கட் மட்டுமே சாப்பிடன. சிறப்பு மருத்துவர்கள் அவற்றைக் கவனித்துக் கொண்டார்கள். மதராஸின் தெருநாய்கள் கோஷ்டியாகச் சுற்றின. எதைத் திங்க வேண்டும் என இல்லாமல் கிழிந்த துணிகளைக் கூடக் குதிறிப்போட்டன.
தெக்கன் மதராஸில் எளிதாகத் திருடினான். அப்படித் திருடப்போன வீட்டில் பட்டுப்போன மாமரம் ஒன்றைக் கண்டான். அதன் கிளைகளை ஒன்றைக் கையில் பிடித்தபோது அந்த மரத்தின் கடந்தகாலத்தை அவன் உணர்ந்தான். அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் அதை ஆசை ஆசையாக வளர்த்தார்கள். அந்த மரநிழலில் ஊஞ்சல் கட்டி ஆடினார்கள். மரத்தடியிலே சாப்பிட்டார்கள்.
சிறுவர்களின் விளையாட்டுதனமும் கூச்சலும் கேட்டு மரம் வளர்ந்தன. ஒவ்வொரு பருவத்தின் போது அது காய்த்துக் குலுங்கியது. மாம்பழங்களைத் தின்ன அணில்களும் கிளிகளும் எங்கிருந்தோ வந்து சேர்ந்தன. ஆனால் ஒரு நாள் அந்த வீடு காலியானது. நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவர்கள் தோற்றுப்போனார்கள். ஆகவே வீட்டைக் காலி செய்யும்படியாக உத்தரவு பிறப்பிக்கபட்டது.
வயதான ஒரு ஆளும் அவரது மனைவியும் அந்த வீட்டைக் கைப்பற்றினார்கள். ஆறுமாத காலம் அந்த வீடு பூட்டப்பட்டே கிடந்தது. பின்பு ஒரு அரசு ஊழியருக்கு அது வாடகைக்கு விடப்பட்டது. அவர்கள் அந்த மாமரத்தைக் கண்டுகொள்ளவேயில்லை. வீட்டின் பின்கதவைத் திறந்து வெளியே வரவே மாட்டார்கள். மரம் மெல்லத் தன் பொலிவை இழந்து பட்டுப்போகத் துவங்கியது. காய்ப்பை நிறுத்தியது. அணில்களும் கிளிகளும் வருவதை நிறுத்திக் கொண்டன.
தெக்கன் அந்த மரத்தின் கிளைகளை வருடிவிட்டுச் சொன்னான்
“நினைவுகள் தொந்தரவு தரக்கூடியவை. உன் நினைவுகளை அழித்துவிடு. உன் சந்தோஷம் பூப்பதும் காய்ப்பதும் கனிவதும் தான். உன்னை நேசித்தவர்களின் பிரிவிற்காக வருந்தாதே“.
மரத்தின் இலைகள் புரிந்து கொண்டது போல அசைந்தன.
அந்த மரம் அதன்பிறகு முன்பு போலப் பசுமையான இலைகள் பரப்பிக் காய்க்கவும் கனிகள் தரவும் துவங்கியது.
கைவிடப்பட்ட கொய்யாமரங்கள். தென்னைமரங்கள். பூச்செடிகள், சாலையோர வேம்புகள் யாவும் தெக்கனின் கைபட்டு துளிர்க்கத் துவங்கின.
திரும்பவும் எபினேசர் சொன்னான்
“தெக்கா உன் கைகள் அற்புதனமானவை. அவற்றைக் கொண்டு தாவரங்களை ரட்சிக்க முடிகிறது“
தெக்கன் அதைக் கேட்டு மறுத்தபடியே சொன்னான்
“நான் ஒரு திருடன். ஒரு முள்செடி. அதனால் தானோ என்னவோ என் கைபட்டதும் மற்ற தாவரங்களின் வாழ்க்கையை உணர முடிகிறது“
இரண்டு அதிசயங்கள் நடந்த போதும் தெக்கன் திருட்டை நிறுத்தவில்லை. மதராஸின் வேறுவேறு பகுதிகளில் திருடிக் கொண்டுதானிருந்தான். திருடிக்கிடைத்த நகைகள் வெள்ளிப் பொருட்களை விற்று எபிசேனர் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு மழைகாலத்தில் தெக்கன் திருடுவதற்காக ஏழுகிணற்றுபகுதிக்கு போயிருந்தான். நல்லமழை பெய்து வெறித்திருந்தது. ஒரு குடும்பம் சாலையில் தண்ணீர் தேங்கிக் கிடந்தால் எங்கே உறங்குவது என இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். அடைத்துச் சாத்தப்பட்டகடை ஒன்றின் படிக்கட்டில் அவர்கள் துணியை விரித்துப் படுத்துக் கொண்டார்கள். ஒரு சிறுமி மட்டும் ஈரத்தில் படுக்கமுடியாது என அழுது கொண்டிருந்தாள்.
ஆத்திரத்தில் அவளது அம்மா முதுகில் ஒங்கி அடித்துப் படுத்தாபடு இல்லை தூங்காம கிட என்று திட்டினாள்.
அந்தச் சிறுமி சாலையைக் கடந்து மூடிக்கிடந்த வங்கி ஒன்றின் படிகளில் வந்து உட்கார்ந்துகொண்டாள். தெக்கன் அவளைளே பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு அவள் அச்சம் கொள்ளவில்லை
அவளது அருகில் உட்கார்ந்தபடியே பசிக்குதா எனக்கேட்டான்
அந்தச் சிறுமி அவனை முறைத்துப் பார்த்தபடியே சொன்னாள்
“தூக்கம் வருது“
“அப்போ தூங்கு“
“படுக்க இடமில்லை“
“என் மடியில தலை வச்சி தூங்குறயா“ எனக்கேட்டான்
அவள் தலையாட்டினாள். சொந்த மகளை மடியில் படுக்க வைத்துக் கொள்வது போல அவன் சாய்த்தி வைத்துக் கொண்டாள். அவளும் வாகாகப் படுத்துக் கொண்டு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். அவளது கைகளைப் பற்றிய போது அவனுக்குத் திடீரென அந்தச் சிறுமியின் எதிர்காலம் முழுவதும் கண்ணில் தெரியத் துவங்கியது. அந்தச் சிறுமி யாரோ இரண்டு காவலர்களால் இழுத்துச் செல்லப்படுகிறாள். பழைய கார்ஷெட் போன்ற ஒன்றில் அவர்கள் அந்தச் சிறுமியைப் புணருகிறார்கள். ரத்தம்தொடையில் வழிகிறது. அவள் கதறுகிறாள். அவளை அடித்துப் பல்லை உடைக்கிறார்கள். அவள் மயங்கிவிழுகிறாள். அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டு போய்க் குப்பையில் போடுகிறார்கள்.
பின்பு யாரோ அவளைப் பிச்சை எடுப்பதற்காக இழுத்துப் போகிறார்கள். ரயிலில் பிச்சை எடுக்கிறாள். யாரையோ திருமணம் செய்து கொள்கிறாள். நாலைந்து பிள்ளைகள் பெறுகிறாள். அந்தப் பிள்ளைகள் வளர்வதற்கு முன்பாகவே செத்து மடிகிறார்கள். அவளுக்கு யானைக் கால் நோய் வந்துவிடுகிறது. புருஷன் அவனை விட்டு ஒடிவிடுகிறான். தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கிறாள். நாய்கள் அவளைத் துரத்துகின்றன. அழுது புலம்புகிறாள்.
தலைமயிர்கள் நரைத்துப் போகின்றன. கழுத்து எலும்பு புடைக்க அவள் ஒரு மரத்தடியில் காலை நகர்த்தமுடியாமல் கிடக்கிறாள். அவள் முன்னே கிழிந்த துணி விரிக்கபட்டிருக்கிறது. அதில் சில்லறை காசுகள் கிடக்கின்றன. கைகளை நீட்டிக் காசை எடுக்க முயற்சிக்கிறாள். முடியவில்லை. தலைசுற்றுகிறது. சாய்ந்து விழுகிறாள். அப்படியே உயிர் போய்விடுகிறது. செத்த பிணத்தைத் தூக்கிப் போட யாருமில்லை. துப்புரவு பணியாளர்கள் அந்த உடலைக் குப்பை வண்டியில் கொண்டு போகிறார்கள். காகங்கள் சப்தமிடுகின்றன.
திடீரெனக் கனவு கலைந்தது போலத் திடுக்கிட்டு விழித்தான் தெக்கன். அந்தச் சிறுமி அவன் மடியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். இது தான் இவளது வாழ்க்கையா. இப்படியான வாழ்க்கையைத் தன்னால் தடுக்கமுடியாதா என ஆதங்கமாக வந்தது. ஏன் இதைத் தெரிந்து கொண்டோம். இது தான் அவளது எதிர்காலம் எனச் சொன்னால் அவள் நம்பப் போகிறாளா என்ன. ஏன் அவள் எதிர்காலத்தைத் தெரிந்து கொண்டோம். அவன் அந்தச் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு ஒடிவிட நினைத்தான். ஆனால் அவள் கைகளை இறுகப்பற்றியிருந்த காரணத்தால் எழுந்து கொள்ள இயலவில்லை. விடிகாலை வரை அங்கேயே இருந்தான்
இந்தச் சிறுமிக்குத் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது அவனை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்தது. அந்தச் சிறுமி தற்செயலாகப் புரண்ட போது அவளைத் தரையில் படுக்க வைத்துவிட்டு எழுந்து எபினேசரை பார்க்கச் சென்றான
அன்றைக்கும் எபினேசர் சொன்னான்
“நீ வெறும் திருடனில்லை. “
ஆத்திரத்துடன் தெக்கன் சொன்னான்
“இல்லை. வெறும் திருடனாக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன். கடந்த காலமோ, எதிர்காலமோ எதுவும் எனக்குத் தெரியவேண்டாம். நாய்கள் என்னைப் பார்த்துக் குரைக்கட்டும். மரங்கள் பட்டுப் போகட்டும். சிறுமிகளின் வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் போகட்டும். நான் வாழ வேண்டும்“
தெக்கனின் அந்தக் குரலைக் கேட்க எபிக்கு பயமாக இருந்தது. அதே நேரம் பரிதாபமாகவும் இருந்தது
“கர்த்தர் ஏன் சிலுவையை ஏற்றுக் கொண்டார் என்று இப்போது புரிகிறது“. என்றான் எபினேசர்
தெக்கன் அதன் சிலநாட்களுக்கு நோயுற்றுகிடந்தான். எபினேசரின் வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகவேயில்லை. வேறு ஊருக்குப் போய்விடலாம் என அவர்கள் முடிவு செய்தார்கள். அதன் படி இருவரும் ஹைதராபாத்திற்கு ரயில் ஏறினார்கள். ரயிலிலும் ஒரு சிறுமியின் கையைத் தொட்டு அவளது எதிர்காலத்தை உணர்ந்தான் தெக்கான். அதுவும் ஒரு துயரக்கதையே
தெக்கன் அந்த ரயில் பயணத்தில் எதையும் சாப்பிடவில்லை. ஹைதராபாத் ரயில் நிலையத்திலிருந்த தேநீர் கடையில் இருவரும் டீக்குடித்தார்கள். பட்டர் பிஸ்கட்டைக் கடித்தபடியே சூடான டீயை ஆற்றியபடி தெக்கன் சொன்னான்
“என் கையைத் துண்டித்துவிடப்போகிறேன். இதை வைத்துக் கொண்டு என்னால் வாழ முடியாது. “
“உனது கையைக் கொண்டு என்னைத் தொடு , எதிர்காலத்தை அறிய முடிகிறதா என பார்க்கலாம் “என்றான் எபினேசர்
“இல்லை. முடியாது“
“அடுத்தவர்களுக்காகப் பரிதாபபடுகிறவனால் திருடமுடியாது தெக்கா “என்றான் எபினேசர்
“திருட்டிற்காகத் தண்டனை பெற்றுச் சிறைக்குப் போக விரும்புகிறேன். அதுவும் ஆயுள்தண்டனை கிடைத்துவிட்டால் நன்றாக இருக்கும்“
“உளறாதே. நீ ஜெயிலுக்குப் போய்விட்டால் நான் என்ன செய்யவது“
“திருடனை விடவும் ஆபத்தானவன் அவனுக்கு வழிகாட்டுபவன். திருடனுக்கும் நிழல் உண்டு. அது அவனை வழிநடத்துபவனின் நிழல். “
“தெக்கா அப்படி என்னைப் பார்க்காதே“
“உன்னைக் கொன்றுவிட்டுச் சிறைக்குப் போகப்போகிறேன். அதைத் தவிர வேறு வழியில்லை. என் அற்புதங்களை முடிவுக்குக் கொண்டுவர வேறு வழியில்லை“
எபிசேனர் பயத்தில் முகம் வெளிறியபடியே தன் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பாக்கெட் கத்தியை எடுத்துத் தெக்கனை குத்த முயன்றான்
தனது பலமான கைகளால் அந்தக் கத்திபிடித்த கையைத் தடுத்து முறுக்கிய தெக்கன் அதைப் பிடுங்கி அவன் அடிவயிற்றில் ஏற்றினான். எபினேசர் அலறினான். ரத்தம் வயிற்றிலிருந்து கொட்டியது. டீக்குடித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியோடினார்கள்.
ஜனசந்தடிமிக்க அந்த ரயில் நிலையத்தின் டீக்கடை வாசலில் எபினேசரை குத்திபோட்டுவிட்டு மெதுவாகத் தனது டீயைக் குடித்தான் தெக்கன்.
தொலைவில் போலீஸ் வருவது தெரிந்தது. அவர்களிடம் என்ன கதையைச் சொல்வது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாய் அவன் முன்னே தலைதூக்கியபடியே நின்று கொண்டிருந்தது. அதன் தலையைத் தடவிவிட்டபடியே சொன்னான்
“நீ ஒரு தெருநாய். நானும் தான். நமக்குப் போக்கிடம் கிடையாது. பசி துரத்தும் வரை ஒடிக்கொண்டேதானிருக்க வேண்டும். நிச்சயம் உனக்கு உணவு கிடைக்கும். வேதனைகள் உன்னை விட்டுப் போய்விடும்“
குழந்தைக்கு உபதேசம் செய்வதை போல அதை நாயிடம் சொல்லிக் கொண்டிருந்தான்
அருகில் வந்த போலீஸ்காரனின் லத்தி அதன்பிறகே அவன் மீது விழத்துவங்கியது. மூன்று காவலர்கள் அவனை அடித்து இழுத்துக் கொண்டு போவதை பார்த்தபடியே அந்த நாய் கிழே கிடந்த பட்டர் பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
•••
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதை தொகுப்பிலிருந்து
2018. புத்தாண்டு தினம்