வடக்கு முதல்வரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் தெரிவித்து வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கம் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பில் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலர் அருளானந்தம் மேலும் தெரிவித்ததாவது;
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் முதலமைச்சரின் நடவடிக்கையைக் கண்டித்தும் வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு எதிராக அவரால் எடுக்கப்படும் தன் னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும் பாராம்பரியம் மிக்க வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை எம்மிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை அவமதித்தமையைக் கண்டித்தும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம்.
மக்களால் மக்களுக்காக ஒன்றுபட்டுத் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர், மக்களின் நலன்களைக் கருத்தில் எடுக்காது, தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இம்மியும் தளராது நிறைவேற்றுவேன் என வைராக்கியத்துடன் கூறுவதை நாம் கண்டிக்கின்றோம்.
எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தை நாம் நிறுத்தமாட்டோம். அத்துடன், எமக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சாலைகளின் பேருந்துகளும் வடக்குக்கான சேவைகளை இடைநிறுத்தி எமக்கு ஒத்தழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன. எனேவே போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் -என்றார்.




















































