தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத்தமிழ் மக்களுக்கு என்றுமே இருக்கும் என அ.தி.மு.கவின் துணைச் செயலரும், ஆர்.கே நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆ.கே நகர் தேர்தலுக்கு முன்னதாக கன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தினகரன் கலந்துக் கொண்டிருந்தார். இதே நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் அழைக்கப்பட்டு இருந்தார். எனினும் அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காணரணமாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே தினகரன் ஈழத்தமிழரின் நலன் குறித்து கரிசனை வெளியிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கையின் தற்போதைய நிலவரங்கள், அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் தினகரன் ஆழமான கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டதாகவும், அதன்போது, தமிழ் மக்களின் எதிர்கால அபிலாஷைகளுக்காக இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் தினகரன் குறிப்பிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.






















































