ஈழத்தில் 1980 களில் யாழ்.பல்கலைக்கழக கலாச்சார குழுவினால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலை அரங்காக சமூக மாற்றத்திற்கான அரங்கப் பணியில் முத்திரை பதித்துக் கொண்ட மண் சுமந்த மேனியர் ஆற்றுகையாளர்கள் பங்கு கொள்ளும் அரங்கக் க லந்துரையாடல் இம்மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 12 மணி வரை யாழ்ப்பாணம் பழம் வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சி கூடத்தில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.யாழ்.பல்கலைக்கழக கலாச்சாரக் குழுவின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும் புலம்பெயர் ஆற்றுகைக் குழுவான “நம் கலை” ஆற்றுகை குழுவைச் சேர்ந்தவரும் அமெரிக்க வடகரோலினா பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் மண் சுமந்த மேனியர் ஆற்றுகையாளருமான செல்வராஜா மோகனராஜா மற்றும் அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஞானசேகரன் மகிஷன் ஆகியோர் இவ்அரங்கச் சந்திப்பில் சிறப்பு அதிதிகளாகப் பங்கு கொள்ளவுள்ளனர். மகிஷன் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு அங்கு ஒருவார காலம் தங்கியிருந்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சட்ட சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் நேரடியாக சந்தித்து மாணவ தலைமைத்துவம், சமூகநல செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு போன்ற பல முக்கிய விடயங்களைப்பற்றி கலந்துரையாடியுள்ள முதலாவது ஈழத் தமிழ் மாணவன் ஆவார்.
சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டு, தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியையும் வளர்த்துக் கொண்டுள்ள மகிஷன் தற்பொழுது உலகப்புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.எனவே ஈழத் தமிழ் தேசிய அரங்கு தொடர்பாக ஆர்வமுள்ள கலைஞர்கள், அரங்கத்துறை மாணவர்கள், படைப்பாளிகள் அனைவரையும் குறித்த
இச்சந்திப்பில் கலந்து கொள்ளும்படி பண்பாட்டு மலர்ச்சி கூடத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.




















































