கம்பீரமாகவும் , தனக்கென்ற ஒரு மிடுக்குடனும், காற்றலையில் கலந்துவரும் குரலுக்குரிய அந்தப்பெண் யார் என்ற கேள்வி என் நெஞ்சத்தில் எழுந்த போது தாயகக் குரலின் கலைப்பிரிவுக்கலையகத்தில் நான் அவளை முதலில் சந்தித்தேன். மிகவும் அன்போடு என்னை வரவேற்று சிரித்த முகத்தோடு கதைபேசிய அந்த காந்தக்குரலோவியத்தை நினைவிருக்கிறதா உங்களுக்கு எல்லோராலும் அன்பாக சுபா என அழைக்கப்பட்ட இசைவிழி செம்பியன்.
ஆண்டுகள் பல கடந்தும் நினைக்கின்ற கணங்களில் உள்ளம் துடிக்கிறது அவள் நினைவுகளால். பிறப்பிற்கினிய பேறுபெற்றவளாய். தன் பொறுப்புகளில் விழிப்புடன் செயற்பட்ட துடிப்பு மிக்க அறிவிப்பாளர். எடுத்த பணியை சிறப்புடன் ஆற்ற இசைவிழி செம்பியன் எழுதிய கதைகளும் . இயற்றிய நாடகங்களும் ,வானலையில் கலந்து பலர் உள்ளங்களில் உறைந்து கொண்ட நாட்களும் உண்டு
வானொலி அறிவிப்பாளராக மட்டுமல்ல , ஒளிவீச்சுக்கள் பலதிலும் தன் அழகிய முகம் காட்டி இஅனைவரையும் தனது அறிவிப்பின் ஆற்றலுக்குள் தக்க வைத்து தனித்துவமாய் தமிழர் தேவைகளை எடுத்துரைத்த தேவதை அவள். கலைப்பணியில் சுபா என்ற அந்த குரலோவியம் ஆற்றிய பணிகள் ஏராளம். நாடகத்துறையில் தனக்கு வழங்கப்படும் பாத்திரங்களை நன்கு உணர்ந்து ஒரே தடவையில் ஒலிப்பதிவை முடித்துவிடும் ஆற்றல் மிக்கவள். உலகமே உற்றுக்கேட்க்கும் செய்திகளை தத்துருவமாய் தன் குரலில் இசைவிழி செம்பியன் வழங்கிய நாட்களை மறந்திட முடியுமோ… தன் வாழ்வில் பலவருடங்களை அறிவிப்பு துறைக்கு அர்ப்பணித்து தன் உயிர்பிரியும் வரை அயராது உழைத்த அந்தப்பெண்னை உலகம் மறந்திடல் முறையோ?
பலவருடம் பாடுகள் பலசுமந்தும் தனது குடும்பவாழ்வோடு .தான்பெற்றபிள்ளைகளின் எதிர்கால கனவோடு … தமிழர் விடுதலைக்கனவையும் தன் உள்ளத்தில் சுமந்து வாழ்ந்த இசைவிழி செம்பியன் இவ்வுலகைவிட்டு பிரித்த அந்த நாட்களை நினைக்கின்ற போது நெஞ்சம் கணக்கிறது.
2007 11. 27 அன்று காலைப்பொழுது விடிக்கிறது தமிழர்களுக்கு வீரநினைவுகளோடு .. அதிகாலை 5.00 மணிக்கு காற்றலையில் ஒலிக்கிறது தாயகக்குரல்; கம்பீரமாய் காற்றில் கலந்து வருகிறது இசைவிழி செம்பியனின் வணக்கம் என்ற வார்த்தைகள்…. மங்களமாய் தொடக்கிய அவள் வார்த்தைகளோடும் பல நிகழ்;ச்சிகளோடும். அந்த நாள் நகர்கிறது. பச்சை சேலை உடுத்தி கம்பீரமாய் அன்று அவள் தோற்றம் அளித்த போதிலும் சுபாவின் முகத்தில் ஒரு பதட்டம்………… பாலுக்கழுதபடி பாலகன் வீட்டில் கிடந்த போதும் தன் பணியே முதலென அன்று அவள் செயற்பட்டாள். காலை 10.00 மணியளவில் அவளையும் அவளுடன் இறந்தோரையும் கொன்றுவிட முன்னோடி பரீட்சை நடைபெற்றது. பரீட்சையில் தோற்றுப்போன அந்த வானத்துப்பறவைகள் அங்கிருந்து நகர்த்தன. அக்கணம் வீதியால் வந்த ஜஸ்கீறீம் வழங்குனரிடம் பல ஜஸ்பழங்களை வேண்டி தன்னுடன் கூடிவாழும் அன்புத்தோழிகளுக்கும் உடனிருத்தோர்க்கும் கொடுத்து குடித்துமகிழ்ந்தாள். ஒரு கூட்டுக்குடும்பமாய் தான் வாழ்ந்த உறவுகளோடு அவள் கூடிமகிழ்ந்த இறுதிக்கணம் அது.
மதிய வேளையானதும் தன் வீட்டுக்கு சென்று பிள்ளைக்கு பாலுட்டிவிட்டு தன் பணிக்காய் வீட்டில் இருந்து மீண்டும் புறப்பட்டாள் சுபா ………….. ; நகர்கிறது நேரம் ………………… பி.பகல் 2.00 மணிக்கு அவள் விருப்போடு நடித்த நாடகம் காற்றில் கலக்கிறது. அதை ரசித்துக்கேட்டபடி தான் பணிசெய்ய அழைக்கப்பட்ட இடத்திற்கு தன் தோழிகளோடு செல்லுகிறாள். இயக்குனரால் யார் யாhர் என்ன செய்ய வேண்டும் என்ற பணிப்புரை விடுக்கப்படுகிறது அதற்கு இணக்க மீண்டும் அலுவலகம் விரைகின்றாள். அலுவலக வாசலை அவள் நெருக்கி தன் சக பணியாளருடன் ஒரிரு வார்த்தைகளை கதைத்துவிட்டு தன் பிஞ்சுக்குழந்தைக்கு பாலூட்ட நினைத்துகொண்ட தாய்பறவையாய் தான் செல்ல வேண்டிய மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்த்துகொள்கின்றாள். சுபா…………… அந்த நொடிப்பொழுது எந்த முழக்கமும் இன்றி வானில் இருந்து விழுந்தது இடி ……………….நொருக்கியது அவ்விடம் கனவுகள் பல சுமந்து வாழ்ந்த இசைவிழிசெம்பியன்.. விழித்தபடி வானோக்கி கிடந்தாள்………. அவள் பயணிக்க நினைத்த அந்த மோட்டார் சைக்கிளில் தன்உயிர் பிரித்தவளாய். ………………. உயிரற்ற உடலாய் அவள் கிடந்த அந்த இறுதிக்கணத்திலும் அவள் குரலில் ஒலிப்பதிவு செய்த அன்றைய நாள் நிகழ்ச்சிகள் காற்றலையில் கம்பீரமாய் ஒலித்துக்கொண்டிருந்தது. காலையில் ஒலித்த குரல் மாலையில் மறைந்த அந்தக்கணக்களை மறந்திட முடியுமோ? அழியாத நினைவுகளாய் அவள் பதிவுகள் என்றும் , எங்கும் , எப்போதும் நிலைத்திருக்கும்.
நன்றி..
பிரதியாக்கம். தமிழினி.




















































