இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் சுகபோகம் நுகர்ந்து காலம் கழிப்பதுதான் நியதி என்று மக்கள் வழிப்படுத்தப்படுவர். இந்த அடிப்படையிலேயே சாதாரண மக்கள் தம் வாழ்வை ஆரம்பிப்பர். பெற்றோரும் தாம் பெற்ற பிள்ளைகளை அந்த வழியிலேயே பயிற்றுவிப்பர். இந்த அடிப்படையில் கல்விகற்று, தொழில்தேடி பணம்சேர்த்து இன்பமாய் வாழவே ஒவ்வொருவரும் வேட்கை கொள்வர். அதுவே புவியில் பிறப்பெடுத்ததன் பயனும் என்று நம்புவர். உண்மையில் இது சாதாரண வாழ்க்கை வாழ்பவர்க்கு மட்டுமே பொருந்தும். பிறந்து வளர்ந்து குடும்பத்துடன் உழன்று சாவினை அடைவது இவர்களின் வாழ்க்கையாக அமையும்.
எங்கள் வாழ்வு எனது குடும்பம் என்று தம்மை அதனுள் அடக்கி தனக்கும் தன் சந்ததிக்கும் பெருள் தேடி தானும் அனுபவிக்காமல் மற்றோர்க்கும் பயன்படாமல் அதேவேளை தான் நிறைவாக வாழ்ந்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் இவ்வுலகை விட்டு போய்விடுவர். இதுவே பூரணமான வாழ்வு என்றும், நான் நிரந்தரமாக வாழ்வேன் என்றும், திடத்துடன் வாழும் எங்களை சாவு ஒருநாள் வந்து கூட்டிச்செல்லும் என்பது வாழ்வியல் உண்மை. அதற்கு வயது வேறுபாடுமில்லை வர்க்க வேறுபாடும் இல்லை. இறந்தபின் எங்களை நினைக்கவும் ஆளின்றி போவதும் உண்டு. ஒப்புக்காக இறந்தோரை நினைப்போரும் உண்டு. உண்மையாக சந்ததியை நினைந்து வேண்டுவோரும் உண்டு. இத்தகைய சாதாரண வாழ்வு எங்களுக்கானது.
இந்த நிலையில் இருந்து வேறுபட்டு தன்னை சுற்றி இருப்பவர்கள் சிந்திக்கும் கூட்டமும் உலகில் தோன்றாமல் இல்லை. இக்கூட்டமும் இருவகைப்படும் சூழ இருப்போரை சுரண்டி வாழும் கூட்டம் ஒன்று. மற்றது மற்றவர்களை நிம்மதியாக வாழ வழிகாட்டுவது அல்லது நிம்மதியாக வாழவைப்பது. இவர்களுக்கு தங்கள் குடும்பம் பெரிதாக தெரியாது. தனக்காக அல்லது தன் குடும்பத்திற்காக உழைப்பதில், பொருள் தேடுவதில் விருப்பம் கொள்ளமாட்டார்கள். மக்கள் நல வாழ்வையே மனதில் கொள்வர். மக்களுக்காக உழைப்பதே தங்கள் கடமை என்று நினைப்பர். உண்மையில் இவர்கள் மக்கள் நேசர், ஆனால் இந்த உலகில் ஆள்வோரும் அதனுடன் சேர்வோரும் அவர்களுக்கு கொடுக்கும் முகவரி தவறாக அமைகிறது. அதைத்தான் சமூகமும் நம்புகிறது. அவர்களை எதிர்க்கிறது. எங்களில் பெரும்பாலானோர் அவர்களை புரிந்துகொள்வதுமில்லை. புரிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை. எங்களை நேசித்து, அதனால் அல்லும் பகலும் எங்களுக்காக வாழ்ந்து, தான் நேசிக்கும் மக்களுக்காக உலகியல் இன்பங்களை துறந்து,
வீரத்துடன் எழுந்து, மக்களுக்கு விடிவு வேண்டும் என்ற ஒன்றையே மனதினில் உறுதியாக வரித்து, தங்கள் உயிரும், இந்த உலகியல் வாழ்வும் பெரிதல்ல எம்மக்கள் வாழ்வே உயர்வு என்று மனவலிமையுடன் போராடி உயிரீந்த பெரியோர்கள் எங்கள் மாவீரர்கள். இவை வெறும் வார்த்தைகள் அல்ல நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய முக்கியமான செய்தி. ஏன் எமக்கு தெரியாதா என்ற கேள்விவேண்டாம். நானும் உங்களில் ஒருவன். எங்கள் இனம் எப்படியானது? அந்த இனம் ஏன் போராடியது? அதன் வீரம் என்ன? எத்தகைய மேன்மையுடன் போராடியது? இந்தப்போராட்டம் எப்படி சிதைக்கப்பட்டது? ஏன் சிதைக்கப்பட்டது? என்பது எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லப்படவேண்டும். இது வெறும் வரலாறு அல்ல. எங்கள் கண்முன்னே நடந்த நிகழ்வு. உலகியல் சொல்லிக்கொடுக்கும் நாம் எம்மின மேன்மையை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க விரும்புவதில்லை. எம்மிடம் இருக்கும் சிறப்புகளிலும் மேலைநாட்டு செய்திகளையே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்புகிறோம். மேலை நாட்டு அங்கீகாரம் தான் அவசியமானது என நினைக்கிறோம். உண்மை அதுவல்ல நாம் அவ்வாறான மனநிலைக்கு பயிற்றப்பட்டு விடுகிறோம் என்பதே உண்மை. சிந்தித்து பார்த்தால் நாங்கள் வாழ்விற்கு ஏங்கிய ஒவ்வொரு நிமிடமும் மாவீரர்கள் எங்களை காப்பதற்காக தங்களை அர்ப்பணித்தார்கள். நாங்கள் உயிர்வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துகொண்டு இருந்தார்கள். எங்களுக்கு எங்கள் உயிர் பெரிதாக தெரிந்ததால் அவர்கள் சாவு நோவை தரவில்லை. அந்த மேலோரின் ஈகமும் விளங்கவில்லை. மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் கண்ணீரும் எமக்குப்புரியவில்லை. அவர்களின் வேதனைகளை நாம் சிந்திக்கவும் இல்லை.
போராட்டத்தின் வெற்றியிலும் பார்க்க எங்கள் உயிர்வாழ்வே எமக்கு வெற்றியாக தெரிந்தது. காரணம் நாங்கள் சாதாரண வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள். உண்மையில் ஈழத்தமிழனின் துன்பங்கள் அனைத்தும் பூரணமாய் வெளிச்சத்துக்கு வந்த பின்பும் இந்த உலகம் எங்கள் இனத்திற்கு பாதுகாப்பை தரவில்லை. உரிமை பெற்று வாழ உதவவில்லை. ஈழத்தமிழன் மேன்மையை விரும்பவில்லை. எனவே எங்களை நாங்களே காக்கவேண்டும். நாங்கள் வாழ நாங்களே போராட வேண்டும் எங்கள் மேன்மையை நாங்களே உறுதி செய்யவேண்டும். இந்த உண்மையை முன்பே தெளிவாக புரிந்துகொண்டவர்கள்தான் தமிழ் ஈழத்துக்காக போராடினார்கள். அந்தவழியில் தமிழ் ஈழத்தின் விடிவுக்காக போராடி உயிர் கொடுத்த கொடையாளிகளே எங்கள் மாவீரர்கள். இவர்கள் சாதாரண போராளிகள் அல்லர். அடைந்தால் வெற்றி இலக்கு இல்லையேல் உயிர்த்தியாகம் என்று எப்போதும் கழுத்தில் நஞ்சுக்குப்பியை அணிந்தே இருப்பர்.
மக்கள் மீது நேசமும் மண் மீது பாசமும் கொண்டு இலக்கினை நோக்கி பயணித்தவர்கள். இலக்கு என்பதை எது என்று அறியாதவர்களும், அதன் மீது உண்மை நேசம் கொள்ளாதவர்களும், இலக்கினை கொஞ்சம் மாற்றலாமே, வேண்டுகைகளை கொஞ்சம் குறைக்கலாமே, உலகிற்கு ஏற்ப ஒழுகலாமே என்று அறிவுரை கூறியபடியே இருப்பர். இலக்கு என்பதை புரியாதோர் அவர்கள். இலக்கு என்பது தெளிவாக நிர்ணயிக்கப்படுவதும், ஏற்றிட்ட இலக்கின்பால் சரியாக பயணிப்பதும், அதையே அடைந்திட தொடர்ந்து முயலுதலும், சரியான இலக்கினை அடைந்திடலும் ஆகும். உண்மையான போராளிகள் இலக்கினை நோக்கிடும் பயணத்தின் வழியே வரும் தடைகளை முறியடித்து, வெற்றியை நோக்கி முன்னேறுவரே தவிர, அதிலிருந்து விலகமாட்டார்கள், மாறமாட்டார்கள். இதனால் தான் தமிழ்ஈழம் எங்கள் எங்கள் மூச்சு அதுவன்றி ஒரு போதும் வேறில்லை பேச்சு என்று போராடினார்கள். அதனால்தான் அவர்கள் மாவீரர் ஆனார்கள். காவல் தெய்வங்கள் என போற்றப்படுகிறார்கள்.
நவம்பர் மாதம் அவர்களின் நினைவு மாதம் அல்லது அவர்களை பூசிக்கும் மாதம் மட்டுமல்ல அந்த ஆன்மாக்களின் வலிமையை மீட்கும் மாதம். வீரர்கள் என்போர் வாழும்போதே போற்றப்படவேண்டியவர்கள். காரணம் புகைந்துகொண்டு இருப்பதைவிட விரைந்து எரிவதே மேல் என்ற கொள்கையுடன் வாழ்பவர்கள் அவர்கள். இப்போது மாவீரர்கள் எம்முடன் இல்லை. ஆனாலும் அந்த ஆன்மாக்களை வேண்டின் அவர்களின் ஆசி எங்கள் வெற்றிக்கு எப்போதும் துணை நிற்கும். இந்த உண்மை தெரிந்தே மாவீரர்களை போற்றுவதை முனைப்புடன் தடுக்கிறார்கள். இன்னுமொன்று எங்கள் வீரர்களை நாங்கள் போற்றாவிடில் மீண்டும் எங்கள் மத்தியில் வீரர்கள் தோன்றமாட்டார்கள். இது எமக்கு பெரும் சாபக்கேடாய் அமையும். ஆனால் ஒன்று நாம் அந்த ஆன்மாக்களை நினைவுகொள்ளவிடினும் அந்த ஆன்மாக்கள் எங்களை நேசிக்கும். எங்கள் விடிவுக்கு ஆசி வழங்கும். காரணம் மாவீரர்கள் எங்களை நேசித்தவர்கள். எங்களுக்காக உயிர்நீத்தவர்கள். எங்கள் மேன்மையான வாழ்வை விரும்பியவர்கள். அமைதியாக ஒருநிமிடம் யோசித்தால் இந்த உண்மை தெளிவாகப்புரியும். நாங்கள் யாருக்காக எல்லாம் உழைத்தோமோ அவர்கள் எல்லாம் எம்மை நேசிப்பதில்லை என்பது தெளிவாக தெரியும். தங்கள் பயனுக்கு எங்கள் உழைப்பு என்பதே உலக சித்தாந்தம். ஆனால் மாவீரர்கள் தமிழ் மக்கள் விடிவுக்கு எங்கள் உழைப்பு என்று வாழ்ந்தவர்கள். இன்று நாம் அந்த ஆன்மாக்களை நினைக்காவிடின், பூசிக்காவிடின், போற்றாவிடின் அவர்களின் ஆசியால் கிடைக்கப்போகும் விடிவின்போது எம் மனசாட்சி எம்மை குறுகி நிற்க வைத்துவிடும் என்பது திண்ணம். தனிப்பட்ட விருப்புவெறுப்புகளிற்கு அப்பால் எங்கள் முகம் தெரியாமலே எமக்காக உயிரீந்த மாவீரர் தெய்வங்களை பூசிப்போம்.
இன்றைய தமிழ் மக்களின் அவலநிலையை நினைத்து மாவீரர்களின் மேன்மையை நேசிப்போம். அவர்களின் பெருமைகளையும் மற்றோரிடம் பகிருவோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்களுக்கு உழைத்த மாவீரர்களை தந்த பெற்றோர்களை பெருமையுடன் நோக்குவோம். மாவீரர்களை பெற்ற பெற்றோர்கள் மனம்நோகாது நிமிந்து நிற்க வழி சமைப்போம். மாவீரர் மாதத்தில் அவர்களையும் பெருமை கொள்ளவைப்போம் என உறுதி பூணுவோம், உதவுவோம். தமிழ் ஈழத்தின் உயர்ந்த பெற்றோர்கள் தந்த மாவீரர்களால் தமிழ் மக்கள் பெருமை பெறுவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நாம் தலைகுனிந்து நிற்கவேண்டியதில்லை. மாவீரர்கள் தியாகத்தால் என்றும் தலை நிமிர்ந்து நிற்போம். விடிவு பெற்றே தீருவோம்.
பரமபுத்திரன்
மூலம் – எழுச்சி