தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லையெனத் தெரிவித்து இன்றிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தநிலையில் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று அரசியல் கைதிகளும் ஒரு மாத காலத்திற்கு மேலாக உணவுத்தவிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்களை மைத்திரிபால சிறிசேன சந்தித்ததுடன், அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.
ஆனால் அவர் இதுவரை கைதிகள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத நிலையிலேயே குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.






















































