உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் பேசவேண்டியதில்லை. அரசியல் வாதிகள் அனைவரும் பேசி விட்டனர். விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தோம். என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம் என ஈபிஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுமாறு கோரியும், மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடிப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அங்குவருகை தந்த மைத்திரிபால சிறிசேன போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இது பற்றி சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி எங்களை சந்தித்தார். அவருடன் பேசினோம் கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதத்தில் மூன்று அரசியல் கைதிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் உடல் நிலை மிக மோசமடைந்து செல்கின்றது.
கடந்த காலத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் , அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதனை மாற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்தே அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஜனாதிபதி அது தொடர்பில் தலையீட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரினோம். அவர்களின் உடல் நிலை தொடர்பிலும் அவரிடம் தெரிவித்தோம்.
அது தொடர்பில் கலந்துரையாடுவோம் என எமக்கு ஜனாதிபதி பதிலளித்தார். எம்மை பொறுத்த வரை இது கலந்துரையாடலுக்கான நேரமில்லை. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களின் உடல்நிலை மிக மோசமடைந்து வருவதனால் , அவர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
ஜனாதிபதிக்கு அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் பல தடவைகள் பலர் அறிவித்து விட்டார்கள். ஆகவே நாமும் கலந்துரையாட வேண்டிய தேவையில்லை.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.




















































