20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அம்பாறையின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
”கிழக்கு நமது” அமைப்பினால் இந்த கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அக்கரைப்பற்று – பட்டினப்பள்ளி முன்பாக ஆரம்பித்த பேரணி, கல்முனை பிரதான வீதியின் ஊடாக சென்று மீண்டும் பட்டினப்பள்ளியை வந்தடைந்தது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு இணைவிற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, அட்டாளைச்சேனை ஜூம்மா பள்ளிவாசலுக்கு முன்பாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.நசீர் மற்றும் அவரது குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.




















































