மாவட்ட அபிவிருத்திக்குழு அரசியல்வாதிகளின் குழுவெனவும் அதில் தாம் கலந்துபோகப்போவதில்லையென பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளதால் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம் கலந்துகொள்ளமுடியாதென அறிவித்துள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிவித்தலில் தெரிவித்திருப்பாவது,
அரசியல்வாதிகளால் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென இலங்கை பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாதிருப்பதுடன், முன்னேற்ற அறிக்கையையும் சமர்ப்பிக்கமுடியாதிருப்பதாக மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம்அறிவித்துள்ளது.
இதன்போது இந்தக் கூட்டம் அரசியல் கூட்டமில்லையெனவும், இது மாவட்ட அபிவிருத்திக்கான கூட்டமெனவும், இதில் கலந்துகொள்ளவேண்டுமென பொறியியலாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்புமாறு இணைத்தலைவர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவர்கள் கலந்துகொள்ளாவிட்டால், அரச தொழிலை உதாசீனம் செய்தவர்கள் எனக் கருதப்படுவர் என இணைத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.




















































