உலகிலே மிகத் திறமையான ஆயுதப் போராட்டத்தை நடத்தி என்னத்தைக் கண்டோம். இறுதியில் படை முகாம்களும், விதவைகளும், காணாமல்போனோரும், அங்கவீனர்களுமே மிச்சம் என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளதுடன், யுத்தத்தில் மேலதிக இறப்புக்கள் என்பது தவறுதலாக இடம்பெறும் இறப்புக்கள் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் 32ஆம் ஆண்டு நினைவு தினமான நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், போராட்ட காலத்தில் பல உயிர்களை இழந்தோம். போரில் மேலதிக இறப்புக்கள் என்பது தவறுதலாக இடம்பெறும் இறப்புக்கள் மட்டுமே.
போராட்ட வரலாற்றில் கவனிக்க வேண்டியது, இப்போரினால் எதைப் பெற்றோம் என்பது மட்டுமே.
இந்த உலகத்தில் மிகத் திறமையான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தும் அதன் இறுதிப் பெறுபேறு என்ன?
படைமுகாம்கள், காணாமல்போனோர், விதவைக் குடும்பங்கள், அங்கவீனர்களே மிச்சம். இந்நிலையில் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்ட மாகாணசபையும் பதவிப் பங்கீட்டினால் உடைந்துபோயுள்ளது.
இவையெல்லாவற்றுக்கும் காரண எமது தலைவர்களின் சாணக்கியமற்ற தன்மையும், இராஜதந்திரமாகச் செயற்படாமையுமேயாகும் எனத் தெரிவித்தார்.




















































