சர்வதேச காணாமல்போனோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாள் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வடமாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். அன்றைய தினத்தில் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டத்தில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
போர் கால பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்களில் நூற்றுக்கு ஒருவர் அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர். இறுதி போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தும் , இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் குடும்பமாக இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்த கோரி உறவினர்கள் வடக்கில் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து 30ஆம் திகதி காலை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம்.
பின்னர் அன்றைய தினம் மதியம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை நோக்கி பேரணியாக சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளோம். அதேவேளை வவுனியாவிலும் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம்.
அன்றைய தினம் போராட்டம் பாரிய மக்கள் பங்களிப்பு கொண்ட போராட்டமாக மாற வேண்டும். அதற்காக கட்சி பேதங்களை கடந்து அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
அதேவேளை தாய் தமிழக உறவுகளும் அன்றைய தினம் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.




















































