செப்டம்பர் மாத இறுதிக்குள் பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கவில்லை என்றால், தான் உட்பட தமது அணியினர் அரசாங்கத்தில் இருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதை தடுக்க முடியாது என பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்குமாறு இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு அமைய ஜனாதிபதி கோரிக்கையை நிறைவேற்றுவார் என தான் எதிர்பார்த்திருப்பதாகவும் அருந்திக குறிப்பிட்டுள்ளார்.
கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகாது போனால், தாம் உட்பட தமது அணியினருக்கு தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க முடியாது எனவும் ஜனாதிபதி தமது கோரிக்கைக்கு இணங்கினால், தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலக எடுத்துள்ள தீர்மானம் குறித்து ஜனாதிபதியிடம் விளக்க தமது அணியினர் நேரம் ஒன்றை கேட்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதுவரை திகதியை வழங்கவில்லை எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




















































