மெல்பேர்ன் – கொழும்புக்கு இடையில் புதிய நேரடி விமான சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது..
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது அவுஸ்திரேலியர்கள், இலங்கை மற்றும் மாலைதீவுகளை இணைத்து சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள முடியும்.
சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரின் பாரம்பரிய மையங்களை தவிர்த்து, தினசரி இந்த சேவையானது கொழும்புக்கு 10 மணித்தியாலங்கள், 50 நிமிட நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியும். அதற்காக A330-200 என்ற விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் உள்ள குடும்பங்களுக்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அவுஸ்திரேலியாவுக்கு நேரடி சேவைகளை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய விமான சேவையானது மாலை 4.55 மணியளவில் மெல்போர்னில் பயணத்தை ஆரம்பித்து, இரவு 10.15 மணிக்கு கொழும்பை வந்தடையவுள்ளது.
மீண்டும் இரவு 11.50 மணியளவில் கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்து அதிகாலை 3.25 மணியளவில் மெல்போர்னை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




















































