ட்ரக் வண்டியுடன் பேரூந்தொன்று மோதியதில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் பரேலி எனும் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
தலைநகர் டெல்லியிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோண்டா மாவட்டத்திற்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பேரூந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்தினைத் தொடர்ந்து பேரூந்தின் எரிபொருள் தாங்கி வெடித்ததால் பேரூந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் உடல் கருகி பலர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மேலதிக விசாரணைகளை உத்தர பிரதேச பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




















































