காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் ஆகியோரையும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களது பெயர்கள் இதுவரை காலமும் பதிவு செய்யப்படாது இருந்திருந்தால், அவர்கள் கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட முகவரி தொடர்பான விவரங்களை வழங்கிப் பதிவு செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
2017ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது. மே மாதம் 15 ஆம் திகதி வீடு வீடாகப் பிசி படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. நேற்றுத் தொடக்கம் அதனை மீளப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளாக உள்ளவர்களையும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும். இவர்களது விவரங்கள் கடந்த ஆண்டுகளில் அவர்களது குடும்பத்தவர்களால் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த ஆண்டும் அதேபோன்று பதிவு செய்ய முடியும்.
இதுவரை காலமும் பதிவு செய்யப்படாமல் இந்த ஆண்டு முதல் முறையாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்தால், காணாமல் ஆக்கப்படுவதற்கு முன்னர் கடைசியாக வாக்காளர் பெயர்ப் பட்டியலில் எந்த முகவரியில் பதிவு செய்யப்பட்டிருந்தாரோ, அந்த முகவரி மற்றும் அவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை வழங்கிப் பதிவு செய்ய முடியும்.
அதேபோன்று தண்டனை விதிக்கப்படாத அரசியல் கைதிகளும் தமது பெயர்களை வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்ய முடியும் என்று தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரி குறிப்பிட்டார்.




















































