தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..? இந்தப் பதற்றம் பலரை பீடித்துள்ளது என்பதை நாம் அறிகிறோம்.
ஏன் இந்தப் பதற்றம்.
தேசியத் தலைவர் தனது வீரச்சாவின் மூலம் தமிழீழக் கொள்கையினை ஒவ்வொரு மானமுள்ள தமிழர் நெஞ்சங்களிலும் ஆணியடித்தாற் போல் பதித்துவிட்டார். தமது அரசியற் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக்கொள்வோர் தேசியத்தலைவரின் வீரமாண்பை மறைத்துவிடவே முயற்சிப்பார்கள்.
தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுவிட்டால் தலைவர் இறுதிவரை அடிபணியாது கட்டிக்காத்த தமிழீழக் கொள்கை ஈழத்தமிழினத்தின் அசைக்கமுடியாத அரசியற் கொள்கையாக நிலைபெற்றுவிடும். தலைவரது உயிர்த்தியாகத்தை முன்னிறுத்தியே அரசியல் பேரம்பேசல்கள் நடத்தியாகவேண்டும் எனும் கட்டாயத்திற்குள் தமிழர் அரசியற் தலைமைகள் தள்ளப்படுவர்.
எம்மினத்திற்கான அரசியல்தீர்வு விடயத்தில் 13வது திருத்தச் சட்டம் போன்ற அரைகுறையான தீர்வுகளுக்குள்ளோ அல்லது 13பிளஸ் மற்றும் ஒற்றையாட்சி முறைமைகளுக்குள்ளோ தமிழ்மக்களை தள்ளிவிடலாமென நினைக்கும் சிங்கள-இந்திய மற்றும் தென்னாசிய பிராந்தியத்தில் தமது வல்லாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் சக்திகளுக்கும்,அதற்குத் துணைபோகும் தமிழர் தரப்புகளுக்கும் தமிழீழக் கொள்கையினை சாகடித்துவிட்டு நகரமுடியாத நிலை உருவாக்கப்பட்டுவிடும்.
தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தொடர்பாக முன்வைக்கப்படும் உண்மைக்குப் புறம்பான விமர்சனங்கள் உருவாகவும் அதனை உருவாக்குவதற்குமான அடிப்படைக் காரணங்கள் இவையே.
இதனாலேயே இந்தப் பதற்றம் பலரை பீடித்துள்ளது.
தமிழர் நிலத்தை,தமிழர் வளத்தை தமது தேவைக்குப் பயன்படுத்த முனையும் தென்னாசியப் பிராந்தியப் போட்டியாளர்களுக்கும், தற்போதைய தமிழர் அரசியற் தலைமைகளுக்கும் தேசியத்தலைவர் போட்ட கடிவாளம் இது.அதன் வெளிப்பாடே இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம்.
அதேவேளை தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வுக்குச் சென்று சுடரேற்றினால் அவர்மீது உறுதியெடுத்து தமிழீழக் கொள்கைவழி பயணிக்கவேண்டும். தமிழீழக் கொள்கைவழி பயணித்தால், பிழைப்புவாத அரசியலை முன்னெடுக்க முடியாது.மே18க்குப் பின்னர் தாம் கட்டியெழுப்பிய சோரம்போன அரசியல் அத்திவாரங்கள் தகர்க்கப்பட்டுவிடும் எனவே இந்த நிகழ்வை எப்பாடுபட்டேனும் தடுத்துவிடவும் அதன் கனதியை வலுவிழக்கச் செய்யவும் இந்த சக்திகள் முயற்சிப்பர்.
தலைவரின் தத்துவார்த்தம்,சித்தாந்தம் என்றும் அதன்வழி தாம் நடப்போம் என்றும் கூறிக்கொண்டு தலைவரின் வீரச்சாவை மீண்டும் மீண்டும் புதைத்துவிட பலர் களமிறக்கப்பட்டுள்ள பின்னணியும் இதுவேதான்.
தலைவர் தனது வீரச்சாவின்மூலம் தமிழ் மக்களுக்கும் தமிழின விடுதலைக்காக போராடப்போகும் அடுத்த தலைமுறைக்கும்,தமிழீழத்தை வெல்லும்வரை அதன் விடுதலைக்காக அடிபணியாது தொடர்ந்து போராடு எனும் செய்தியையே கொடுத்துள்ளார்.
தனது வீரச்சாவை 16 ஆண்டுகாலமாக புதைத்து வைத்திருக்கும் மர்மத்தை உடைத்துக்கொண்டு மீண்டும் உயிர்பெறப் போகிறார் எங்கள் தேசியத்தலைவர் எமது இனத்திற்கு வழிகாட்டியாக…
- புலவர்.