ஐயா பழ.நெடுமாறன் அவர்களுக்கு…
திராவிடத்திற்கு சேதாரம் வரும் போதெல்லாம், நீங்கள் உயிர்பெற்று வந்து விடுகின்றீர்கள்–என்பதில் ஆச்சரியம் அல்ல மகிழ்ச்சி.
சீமானுக்கு எதிரான உங்களின் அறிக்கையை பார்த்தேன். உங்களுக்குள் ஒரு சுபவீ ஒளிந்திருக்கின்றார் என வியப்படையவில்லை.உங்களுக்கும் பொறாமை இருக்கும்தானே.
தன்னால் முடியாத ஒன்றை இந்த சீமான் கட்டமைத்து இன்று இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் தலைவராக உயர்ந்து நிற்கின்றானே என்கிற பொச்சரிப்பு இருக்கும்தானே. இருக்காதா பின்ன..
‘பெரியார்–பிரபாகரன் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக’ என்கிறீர்கள்.
நாளைக்கே சீமான் நிறுத்தி விடுவார், கவலை வேண்டாம். நிம்மதியாக இருங்கள், என்று சொல்ல போவதில்லை.
காரணம்,
2009 நாடாளுமன்ற தேர்தலின் போது, பாஜக வெற்றி பெற்றுவிடும். அடுத்த நாளே போர் நிறுத்தம் வந்துவிடும் என்று களத்திற்கு தகவல் கொடுத்தது நீங்கள்.
இனப்படுகொலையில் காங்கிரஸ் கட்சி நேரடியாக பங்கேற்கிறது என்றது நீங்கள். திமுக அதற்கு துணை போகிறது என்றது நீங்கள், கருணாநிதி தமிழின துரோகம் செய்தார் என்றது நீங்கள்.
இன்று பாஜக உள்ளே வந்துவிடும், திராவிடம்+காங்கிரஸ் கூட்டணிதான் அதை தடுக்கும் சக்தி என்ற கூட்டத்திற்கு மாறி நிற்கின்றீர்கள். கருணாநிதி கும்பல் உங்களுக்கு புனிதமாகி இருக்கின்றது.
சீமான் அன்றும் இன்றும் ஒரே பேச்சோடு நிற்கின்றார். இனத்தை அழிக்க துணைபோன காங்கிரஸ் கட்சியும், இனத்துரோகம் செய்து கைகொடுத்து நின்ற கருணாநிதியும் துரோகிகள்தான்–ஒழித்தே தீருவோம் என்கிறார்.
இதற்கு திராவிடம் பெரியார் முகத்தை முன்வைத்து அரசியல் செய்கின்றது. எல்லா துரோகத்தை அந்த முகத்தை வைத்து கேடயமாக பாதுகாத்துக் கொள்கிறது. பதுங்கு குழியாக பாவிக்கின்றது.
சீமான்+தமிழ்த் தேசியக் களம், வேறு வழியின்றி அந்த பொய் முகத்தை உடைத்தெரிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அந்த பதுங்கு குழியை அழிக்காமல் முன்னேற முடியாது என்பதில் உறுதியாக நிற்கின்றார்கள். ஆக சந்தர்ப்பத்திற்கு ஏற்ற பிழைப்புவாத அரசியல் அல்ல. 2009–ல் எடுத்த முடிவுப்படி நகர்கிறார்கள். ஆக பேச்சு மாறவில்லை…
சரி, உங்கள் அறிக்கைக்கு வருவோம்.
”பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடியவர்.அவரது கொள்கையை நிறைவேற்றும் வகையில், விடுதலைப் பு..லி..க..ள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை, பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு” என்கிறீர்கள்.
மேதகு சிந்தனையில், சாதனையில் ஈவெராவை கொண்டு போய் நுழைக்கின்றீர்கள்.மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். அங்கு உண்மையான, உணர்ச்சி பிழம்பாக ஒரு தலைவனால் கட்டியமைக்கப் பட்ட விடுதலைப் போராட்டத்திற்கு, தயவு செய்து ஈவெரா ஸ்டிக்கரை ஒட்டாதீர்கள்.
“ஈவெரா கொள்கையை நிறைவேற்றும் வகையில் பி ர பா க ர ன் அவர்கள் செய்தார்” என்றால்,..
பெரியார் மடம் வீரமணி அவர்கள் அப்படியான பெண்கள் படையை இங்கு கட்டியமைத்திருக்க வேண்டும்தானே? ஏன் செய்யவில்லை. மற்ற பெரியாரிய கட்டமைப்புகள் அப்படி ஏன் செய்யவில்லை? சரி, நீங்கள் ஆதரிக்கத் தொடங்கி இருக்கும் திமுக–வாவது அப்படியாக பெண்கள் படையணியை கட்டிமைத்திருக்லாமே? ஏன் செய்யவில்லை. அங்கே ஈழ மண்ணில் மேதகு தலைவரால் முடிந்தது என்றால், இங்கு இவர்களால் ஏன் முடியாமல் போனது.
காரணம், அங்கு நடந்தது உணர்வுக்கானது. இங்கு நடப்பது அரசியல் வியாபரத்திற்கானது. இப்போது நீங்கள் வியாபார கும்பலுக்கு ஆதரவாக நிற்கின்றீர்கள். நீங்கள்தான் இப்போது மேதகுவை கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்.
அடுத்து, மேதகு தலைவர் அவர்கள் அங்கே சாதியை ஒழித்தார், விதவை திருமணங்களை தொடர்ந்து நடத்தி சாத்தியமாக்கினார். அதுவும் பெரியாரிய கொள்கைப்படி..என்கிறீர்கள்.
சரி, அந்த வெற்றியை
ஈவெராவையும் மேதகுவையும் ஒரு சேர மடியயில் வைத்துக் கொண்டிருக்கும் உங்களால் ஏன் இங்கே சாத்தியமாக்க முடியவில்லை. ஈவெராவின் வாரிசுகள்தானே ஆட்சியில் நீடித்து வருகிருகிறார்கள். அவர்களால் ஏன் சாத்தியமாக்க முடியவில்லை. உடல் முழுக்க பெரியார் ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் சுபவீ அவர்களின் குடும்பத்திற்குள்ளாகவே சாதியை ஒழிக்க முடியாமல் கல்யாண பத்திரிகையில் சாதி பெருமையை போட்டுக் கொண்டது எப்படி?
சீமான் கேட்பதைப்போல்,
எத்தனை ஈவெரா பக்தர்கள் வீட்டில் டாக்டர் அம்பேத்கர் படம் இருக்கின்றது. சாதி ஒழிப்பு, பெண்ணிய விடுதலை, விதவைத் திருமணம் என்று சகல விடுதலையைப் பற்றியும் பேசிய அயோத்தி தாசர் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோர் படங்கள் பழ.நெடுமாறன் அவர்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்களா?. எத்தனை ஈவெரா பற்றாளர்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள்?
தமிழ் நாட்டில் இத்தனை சாதி சங்கங்கள் வளர்ந்திருக்கின்றதே எப்படி? சாதிக்கொரு மேட்ரிமோனி முளைத்திருக்கின்றதே எப்படி? ஈழத்தில் சாத்தியமான பெரியார் கொள்கை உங்கள் ஈவெரா மண்ணில் சாத்தியமாகவில்லையே ஏன் ஐயா?
ஏனென்றால்,
அங்கே உண்மையான விடுதலைக்காக போராடினார்கள்.
ஈவெராவோ,ஈவெராவின் வாரிசுகளோ வியாபாரத்திற்காக போராடினார்கள்.
மேதகு தலைவர்கள் அங்கே, நிதிப் பற்றாக்குறை என்று மதுக்கடைகளை திறந்து வைத்து மூன்று தலைமுறை இளைஞர்களை சீரழிக்க வில்லை. மேதகு தலைவர் அவர்கள் அங்கே, தன் அரசியல் ஆதாயத்திற்காக சாதிச் சண்டைகளை மூட்டி, அரசியல் ஆதாயம் நடத்தியதில்லை.
பிறகு எப்படி மேதகு தலைவரையும்–ஈவெராவையும் ஒன்றாக வைத்து சீமானை சாடுகிறீர்கள் ஐயா?
உங்களுக்கு சீமான் மீது கடுப்பு, வெறுப்பு, கசப்பு இத்யாதிகள் எல்லாம் இருக்கலாம். இருக்க வேண்டும்.
சீமான் உங்களைப் போல் தமிழ்த் தேசிய உணர்வை, எழுச்சியை ஒரு குண்டு சட்டிக்குள் வைத்துக் கொண்டு, அதிக பட்சமாக ஒரு 500 பேர்களுக்குள்ளாகவே நகர்த்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். சீமான் அதை மீறுகிறார். லட்சக்கணக்கில் இளைஞர்களை வைத்துக் கொண்டு, பட்டி தொட்டி எங்கும் மேதகு தலைவர் படத்தை–பிரச்சனையை கொண்டு போய் சேர்த்திருக்கின்றார்–என்பதில் உங்களுக்கு கசப்பு வெறுப்பு என்ற நியாயமான கோபம் வரவேண்டும்தான்.
தமிழ்த் தேசிய இன உணர்வு அரசியல் என்றால் பத்து பேருக்குள்ளாகவே உருட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றதை உடைத்து, மக்களிடம் எடுத்து பேசி, 36 லட்சம் வாக்குகளை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது கட்சியாக இருப்பது என்றால் தப்புதானே பழ.நெடுமாறன் ஐயா. விடாதீர்கள், சீமானை எப்படியாவது திராவிடர்களோடு சேர்ந்து வீழ்த்திவிட்டு மறு வேலையை பாருங்கள். அப்போதுதானே உங்களுக்கு நிம்மதி இருக்கும், வயது போன காலத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பதும் சரியில்லைதானே…
கடைசியாக ஒன்று ஐயா,
‘ஈவெரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தனது கோட்பாடுகளை செயல்படுத்தி வரும் பேரன் பி ர பா க ர னை சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார்’ என்கிறீர்களே அது எப்படிங்க ஐயா…
அந்த ஈவெராவின் பேரன்கள்தானே இங்கு இன அழிப்புக்கு எதிராக எழுந்த போராட்டங்களை தடுத்தாடிக் கொண்டு, போராடியவர்களை சிறைபடுத்திக் கொண்டிருந்தார்கள். மாணவ–மாணவிகளை இரவோடு இரவாக விடுதிகளை காலி செய்து கொண்டு ஓடுங்கள் என விரட்டி அடித்தார்கள். இனத்திற்காக தீக்குளித்து தியாகம் செய்தவர்களை காதலுக்காக இறந்தார், கடனுக்காக இறந்தார் என்றார்கள். இன்ஸ்டன்ட் உண்ணாவிரத நாடகம் நடத்தி திசை திருப்பினார்கள். எதைச் சொல்லி எதை விடுவது…
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஊழல் பணத்திற்காக வேண்டி
இன அழிப்பில் விட்டுக் கொடுத்து–காட்டிக்கொடுத்து விடுதலைப் போரை முடித்து வைத்தார்களே…அந்த பிள்ளைகளின் தலைவன் தான் அங்கே ஈழம் ஓடிச் சென்று தலைவரை பாராட்டியிருப்பாரா ஐயா? எப்படிங்க ஐயா..
திராவிட மயக்கத்தில் நீங்கள் மறந்துவிட்ட கதை ஒன்று.
ஈழத்து தந்தை செல்வா, அமைதி வழியில்–அரசியல் வழியில் தனி நாடு கேட்டு போராடியவர். இங்கு வந்து ஈவெராவை ஆதரவு கேட்டார். ’நானே அடிமையாக இருக்கிறேன். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்’ என்று தவிர்த்து விட்டார். அமைதி வழியில் நின்றவர்களுக்கே ஆதரவு தராத ஈவெரா, ஆயுத வழியில் போராடிய மேதகு தலைவரை சந்தித்து பாராட்டுவார் என்பது நம்பும் படியாக இருக்குமா ஐயா?
காலம் முழுக்க தாய் மொழி தமிழைப் பழித்த ஈவரா,ஈழத்திற்கு சென்று தெலுங்கு–கன்னட மொழியிலா பாராட்டி இருப்பார்.
அதிகம் வேண்டாம்,
,இங்குள்ள ஈவெராவின் வாரிசுகளான கீ.வீரமணி அவர்கள், பு..லி..க..ள் மீதான தடையை நீக்கு என்று போராட களம் இறங்குவாரா? பெரியாரின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் திராவிடிய ஸ்டாக் ஆட்சி, ‘விடுதலை கேட்டு போராடிய இயக்கம் தான் இல்லையே, தடையை நீக்குங்கள்’என்று ஒன்றிய அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்களா. இவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தடையை நீக்கு என்று டெல்லியில் முழங்குவார்களா?
இதில் ஏதாவது ஒன்றை சாத்தியப்படுத்தி விட்டு, பிறகு நீங்கள் சீமானை எச்சரிக்கை செய்யுங்கள் ஐயா.
உங்களால் முடியாததை இன்று வேறு ஒருவர் செய்கின்றாரே என்று பெருமைபடுங்கள். கைகொடுங்கள். எதிரிகளோடு சேர்ந்து வீழ்த்த முனையாதீர்கள். காலம் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றது. மன்னிக்காது.
குறிப்பு:உங்கள் எச்சரிக்கைக்கு எல்லாம் அவர் நிறுத்துகின்ற ஆளா ஐயா…
பா.ஏகலைவன்
பத்திரிகையாளர்.
26.01.25