தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் – 18.08.1985
1985.08.18 அன்று தமிழ்நாடு திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை ஆரம்பமானது.
எனினும், பெண்களை அரசியல்மயப்படுத்தலும், போராட்டத்தில் பெண்கள் உள்வாங்கப்படலும் இதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டன
தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்புக் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் தெரிவிக்கையில்…
“எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுத லைப் போராட்டத்தை ஒரு தேசியப் போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப் படுத்தியது. பெண்களை அரசியல் மயப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழச் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறோம்.
தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது. காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து, எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என் பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்” என்றார்