சுவடுகள் என்ற ஆவணக் கையேட்டை ஆக்கி எமக்களித்த ஈழத்தமிழ்ப் படைப்பாளி நிஜத்தடன் நிலவன் அவர்களுக்கும் விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் பெரியோருக்கும் அவையோருக்கும் என் பணிவான வணக்கம்.
சுவடு என்றால் கால் தடம், பாதை, அல்லது அடையாளம் என்று பொருள் கொள்ளப்படும். எனது பார்வையில் சுவடுகள் ஆவணக் கையேடு தடம் பதித்தல் என்ற வரையறைக்குள் அடங்குவதாக எண்ணுகிறேன். தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். ஊர்ந்த புழுவுக்கும் சுவடு உண்டு. வாழ்ந்த வாழ்க்கைக்குச் சுவடு உண்டா? என்றார் கண்ணதாசன். தமிழீழ மக்கள் வந்த சுவடு தெரியாமல் போய்விடக்கூடாது என்ற ஏக்கம் எழுத்தாளர் நிலவனிடம் முளைவிட்டதால் பிறந்தே சுவடுகள் பாகம் ஒன்றும் இரண்டும் என்பது என் கருதுகோள். இது ஒரு வலி சுமந்த வடுக்களின் தொகுப்பு.
ஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன் 26 12 2007 இல் வீர காவியமானவர். இவர் போன்ற காவிய நாயகர்களையும் உள்ளடக்கி எல்லா வீரகாவியங்களையும் ஒருங்கே தொகுத்தவர் சுவடுகள் கட்டுரைத் தொகுப்பை எமக்களித்த கலைஞரும், சமூகப் பணியாளரரும், ஊடகவியலாளரும், எழுத்தாளரும், எமது ஒப்பற்ற தலைவரினால் ஆடல் செல்வன் எனப் பரிசளிக்கப்பட்டவருள் ஒருவருமான நிஜத்தடன் நிலவன்.
குருவி தலையில் பனங்காயை வைத்தால் எப்படியிருக்கும்? அந்தக் குருவியின் நிலையில்தான் நானிருக்கிறேன். நூலைப் பற்றிச் சொல்வதென்பது எளிதான காரியமல்ல. அதற்காக கந்தெரியாதவர்கள் யானை பார்த்த கதையாகவும் இருக்கக் கூடாது. எனினும் கட்டுரைத் தொகுப்புகளில் உள் நுழைந்து பார்த்ததில் நான் தெரிந்து கொண்டவற்றைச் சொல்லில் அடக்க முயல்கிறேன். 2022ம் ஆண்டில் பேரண் சிவன் ஆலயத்தில் ஈழுப்படுகொலையின் சுவடுகள் 2009 பாகம் ஒன்றின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இன்று பாகம் இரண்டும் சேர்த்து ரொறொன்ரோவில் வெளியிடப்படுகிறது. எனக்கோ ஆச்சரியம். பாகம் ஒன்றில் 504 பக்கங்கள் என்றால் 2023 இல் வெளியிடப்பட்ட பாகம் இரண்டில் 1128 பக்கங்கள். இத்தனையையும் குறுகிய கால இடைவெளியில் விளங்கிப் படிப்பது அசாத்தியம் என்பது உங்களுக்குக்கே தெரியும். எனவே சில பக்கங்களைத் தெரிந்தெடுத்து அவற்றை உங்களோடு பகிர விளைகிறேன். மகாபாரதத்தில் திருதராட்டிரனின் ஆலோசகர் சஞ்சயன் மகாபாரத யுத்தத்தின் நேரடி நிகழ்வுகளை விபரித்தாராம். நானும் சுவடுகள் 2009 கட்டுரைத் தொகுப்புகளில் இருந்து யுத்தக் காட்சிகளை என் அகக் கண்களால் பார்த்தேன் 80 களில் புலம்பெயர்ந்ததால் யுத்தம் நடந்த காலத்தில் நடைபெற்ற எம்மினச் சுத்திகரிப்பைத் தணிக்கப்பட்ட செய்திகள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். இனி விடயத்துக்கு வருவோம்.
சுவடுகள் பாகம் 1 இன் 40ம் பக்கத்தின் தலைப்பு தமிழ் இனப்படுகொலை. இது 77ம் பக்கம் வரை வியாபித்துள்ளது. இதில் ஆசிரியர் எவற்றை ஆவணப்படுத்துகிறார் எனப் பார்ப்போம். இன அழிப்பு என்பது ஒரு இனம் சார்ந்த, குலம்சார்ந்த, மதன்சார்ந்த குழுவை ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழிப்பதற்கான உள் நோக்கத்தோடு நிகழ்த்தப்படும் குற்றம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் இன அழிப்புத் தொடர்பான பொது இணக்க ஒப்பந்தமாகும். ஆனால் 1948ம் ஆண்டு பிரித்தானிய அரசு இலங்கைத் தீவுக்கு ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொடுத்து விட்டுச் சென்றமை தமிழர் மீதான வன்முறைகளுக்குக் காரணமாயமைந்தது. 1949 இல் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர் நாடில்லாப் பிரஜைகளாக்கப்பட்டனர். தொடர்ந்து 195இல் சிங்களம் மட்டும் மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டு சட்டமன்றில் அரச தொடர்பாடலில் தமிழ் மொழியை உபயோகிக்கும் மொழியுரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லோரும் அறிந்ததே. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கரும்புத் தொழிற்சாலையில் வேலைசெய்து வந்த நூற்றைம்பது தமிழ்த் தொழிலாளர்கள் அரைகுறை உயிருடன் படுகொலை செய்யப்பட்டதை முதன்முதலில் பெருஞ்தொகையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களென Emergency 58 என்ற நூல் தகவல் வெளியிட்டுள்ளது.
இது போன்ற மனித உரிமைகளுக்கான வடக்கு கிழக்கு செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் 1956இல் நடைபெற்ற இங்கினியாகலை இனப்படுகொலையில் இருந்து தமிழாராய்ச்சி மாநாடு, குமுதினி, தண்டுவான, கொக்கட்டிச்சோலை, கிழக்குப் பல்கலைக்கழகம், மாத்தளன், கைதடி, மடுத்தேவாலயம் ஈறாக நடந்த இராணுவம் நடத்திய தமிழர் படுகொலைகள் 2008ம் ஆண்டுவரையும் பதியப்பட்டுள்ளன. சம்பவ நிகழ்விடம், நிகழ்த்தப்பட்ட நாள் என்ற தலையங்கங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட விபரங்களைப் பார்த்தால் வியப்புத்தான் ஏற்படும். 2008ம் ஆண்டின் முடிவில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதால் NESOHR அதாவது வடக்கு கிழக்குச் செயலயம் தனது செயற்பாடுகளை நிறுத்தியது. அதனால் 2009 இல் நடந்த சம்பவங்களை ஆவணப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் நேரடிச் சாட்சியங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஒன்று திரட்டப்பட்டுக் கட்டுரைத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நேரடியாகப் பாதிக்கப்பட்டோரின் வாய்மொழி வாக்குமூலங்கள், இன அழிப்பின் புகைப்படச் சாட்சியங்களை உள்ளடக்கிய கட்டுரைகள், பற்பல தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள், சரணடைந்தவர்கள், சிறைபிடிக்கப்பட்டவர்கள் இத்தகைய எத்தனையோ ஆதாரங்களைத் தேடித் தேடிச் சேகரித்த ஆசிரியரை எப்படி மெச்சாதிருப்பது? இது பகீரதப் பிரயத்தனம் என்றே சொல்ல வேண்டும். புகைப்படச் சாட்சியங்களில் என்ன திகதியில் எந்த இடத்தில் எந்தப் புகைப்படக் கருவியால் எடுக்கப்பட்டது போன்ற விபரங்கள் தெள்ளத் தெளிவாகக் காணப்படுகின்றன. இவ்வளவும் இருந்தும் போர்க்குற்றாவாளிகளுக்குத் தண்டனை கிடைக்காமல் இருப்பது வருந்தத் தக்கது. எனினும் அடிமேல் அடி வைத்தால் அம்மியும் தகரும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து போரில் பாதிக்கப்பட்ட வாழும் சாட்சிகளை இனங்கண்டு அவர்களிடமிருந்து தரவுகளைப் பெற்று வருங்காலச் சந்ததியினரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்கல்ம் பிரெஞ்சு இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கணினியில் உருவேற்றினால் எங்களுக்கோர் விடிவுவரும் என்ற நம்பிக்கையில் வாய்ப்புக்கு நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
- திருமதி. சாந்தி அரவிந்தன்