அமுதன் :- இனப்படுகொலை என்றால் என்ன? சட்டரீதியாக இனப்படுகொலை எனும் கருத்துருவாக்கம் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
நிலவன் :- மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது. `ஜெனோசைட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இனப்படுகொலை என்ற சொல் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது என்றால் போலந்து நாட்டைச் சேர்ந்த யூத வழக்கறிஞர், நாஸி தாக்குதலிலிருந்து தப்பி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தபோது லத்தீன் – கிரேக்க – பிரெஞ்ச் மூலங்களிலிருந்து உருவாக்கினார்.
ஜெனோசைட்டில் வரும் முதல் பாதி சொல்லான `ஜெனொஸ்’ என்பது கிரேக்கச் சொல் ஆகும், அது `இனம்’ அல்லது பழங்குடி என்ற பொருள் தருகிறது. `சைட்’ எனப்படும் இலத்தின் சொல் `கொல்வதற்கு’ என்ற பொருள் தருகிறது. இந்த இரண்டும் சேர்ந்தே `ஜெனொசைட்’ என்ற வார்த்தை உருவாகி உள்ளது. பொதுவாக இனப்படுகொலை என்பது முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான முறையில் இனவரையறை, நிற பேதமை, மதம் மற்றும் தேசியம் என்ற ஏதாவதொரு வகையில் ஒரு இனத்தை பாகுபடுத்தி, அந்த இனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பது ஆகும்.
யூத இனப்படுகொலையின் போது தனது சகோதரன் தவிர குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த ரஃபேல், இனப்படுகொலை சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக இனங்காணப்பட வேண்டும் எனப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார். இதனை அடுத்து 1948 டிசம்பரில் இனப்படுகொலை குறித்த ஐ.நா தீர்மானத்தில் இது உள்வாங்கப்பட்டு பின்னர். ஐக்கிய நாட்டு அமைப்பின் இந்தச் சட்டம் 1951 ஆம் ஆண்டு ஜனவரியில் அமுலுக்கு வந்தபின், அதன் அப்போதைய 80 உறுப்பு நாடுகளும் அந்த சட்டத்தின் சரத்துக்களைத் தங்கள் நாட்டு சொந்தச் சட்டத்தில் இணைத்தன. இந்த செயலானது, குற்றவாளிகளைப் பரந்த அளவில் அடையாளம் காண்பதற்கு உதவி புரிந்தது.
ஒரு இனக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது; குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான தீங்கினை ஏற்படுத்துவது; இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது. அந்த இனக் குழுவில் புதிதாகப் பிறப்புக்களைத் தடுக்கும் நோக்கில் செயற்படுவது, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவுடன் சேர்ப்பது, ஒரு தேசிய இனத்தை அல்லது சமயக் குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இனப்படுகொலை என ஐ.நா தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
அமுதன் :- கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்றால் என்ன? இலங்கை தீவில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வாறு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நடத்தப்பட்டது?
நிலவன் :- கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) என்பது ஒரு முறைமை(system). எங்கு இந்த முறைமை இருக்கிறதோ அங்கு அதற்கான ஒரு தர்க்கம்(logic) இருக்கும். எங்கு தர்க்கம் இருக்கிறதோ அதற்கு ஒரு தர்க்க ரீதியான செயல்முறை (logical process) இருக்கும். அந்தச் செயல்முறை தர்க்க ரீதியான வளர்ச்சியை (logical development) கொண்டிருக்கும். இத்தகைய நீண்ட வரலாற்றைக் கொண்ட இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் இலங்கை தீவில் கி.பி 6ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழில் இனப்படுகொலை என்ற வார்த்தைக்கான சட்டப்பூர்வ அர்த்தத்தை 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பால் இயற்றப்பட்ட இனப்படுகொலை தடுப்புச் சட்டத்தின் மூலம் நாம் அறியப் பெறுகிறோம். ‘இலங்கையில் தமிழினத்தை வேரோடு அழிக்கும் இனப்படுகொலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புத்த மதத்தின் ஆசீர்வாதத்தோடு துவங்கியது. சிங்கள மன்னன் துட்டகெமுனு 10,000 தமிழர்களை அநியாயமாகப் படுகொலை செய்தது பற்றித் துயருற்றபோது, புத்த மதத்தைச் சாராததால் மொத்தமாக நீ அரை மனிதனையே கொன்றாய் எனத் தலைமைப் பிக்கு மன்னனுக்கு ஆறுதல் கூறினாரென மகாவம்சம் குறித்துள்ளமை இதற்குச் சான்றாகும்.
1950களிலிருந்து இன்றுவரை தமிழினப் படுகொலை தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. சிங்கள ஆட்சியாளர்களின் முன்னெடுப்பில் அவர்களின் படைத்தரப்புகள் இதனை மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் இதனைத் தமிழர் மீதான தாக்குதல்கள் என்றே பலரும் பார்த்தனர். சிங்கள அரசு இன்றுவரை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. நேரடிப் படுகொலைகள், மொழி அழிப்பு, கலாச்சார அழிப்பு, நிலப் பறிப்பு, சிங்களக் குடியேற்றம், வாழ்வாதார அழிப்பு, மதத் திணிப்பு என பல்வேறு வடிவங்களில் இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. 76ஆண்டுகளுக்கும் மேலான இன அழிப்பு நடவடிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு 2006- முதல் 2009 வரையில் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டின் மே 15,16 17,18,19 ஆகிய நாட்கள் மிகக் கொடூரமானவை, மறக்க முடியாதவை.
உலக வல்லரசாக சர்வதேச ஆதரவு சக்திகளாலும் அயலக இந்திய உறவு சக்திகளையும் ஒன்றிணைத்து ஐக்கிய நாடுகள் சபை அதன் அமைதிப் படை, மனித உரிமை ஆணையகம் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்க இந்நூற்றாண்டில் உலகின் முதலாவது இன அழிப்புடனான இனப் படுகொலை இலங்கை முள்ளிவாய்க்காலில் அறங்கேற்றி இருந்தது. விடுதலைப் புலிகளின் தமிழீழ ஆட்சிப் பரப்பில் செயல்பட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) 1956 முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற நேரடிப் படுகொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தின் அடிப்படையில் தமிழீழ இனப்படுகொலைகளின் நேரடிப் படுகொலை நிகழ்வுகள் அங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ஆவணப்படுத்தப்படாத, கணக்கில் வராத படுகொலைகளும், இடப்பெயர்வுகளும் ஏராளம் இருக்கின்றன.
அமுதன் :- இலங்கை தீவில் சிங்களம் அல்லாத பிற மக்கள் அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் மீது ஏவப்பட்ட இன கலவரங்களைப் பற்றி சற்று விரிவாகக் கூறுங்கள்?
நிலவன் :- இலங்கை இக்கலவரங்களுக்குப் பழகிப்போன நாடுதான். இங்கு தமிழருக்கு எதிராகக் கடந்த காலங்களில் நடந்த வன்செயல்கள், அதனைத் தொடர்ந்த கலவரங்கள் பெரும்பாலும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்ட, பலரும் அறிந்த விடயங்கள். 1883இல் பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் நடந்த கொட்டாஞ்சேனை கலவரத்தைக் குறிப்பிடுவோம். அதுபோல இலங்கையில் முதலாவது இனக்கலவரமாக 1915-இல்தான் இலங்கையில் அண்மைய சரித்திரம் அறிந்த முதலாவது இனக்கலவரம் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்தது. இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையில் நிகழ்ந்த முதலாவது கலவரம் எது என்பது இன்றும் பலருக்கு நினைவிருக்காது. 1939இல் நாவலப்பிட்டியாவில் நிகழ்ந்த இனக்கலவரமே முதலாவது தமிழர்-சிங்கள கலவரமாகக் கொள்ளப்படுகிறது,
தமிழ் மக்களின் உரிமைக்கான சாத்வீக ரீதியான போராட்டங்கள் இடம்பெற்ற காலங்களில் இதனை அரசியல் ரீதியான தாக்குதல்களாகப் பார்க்க முடிந்தது. தெற்கில் வசித்த தமிழர்களைத் துரத்தியடிக்கும் அல்லது அழித்தொழிக்கும் வன்மம் இதன் தொடர்ச்சியானது. அந்தக் காலங்களில் இதனைப் பொதுப்படையாக இனக்கலவரம் என்றே அழைப்பர். 1958 இக்கலவரத்துக்குப் பின்பு இலங்கையில் இடம்பெற்ற மிகப் பாரதூரமான இனக்கலவரம் 1977 இனக்கலவரமாகும். ஸ்ரீமாவோவின் கொடுமையான ஆட்சியிலிருந்து மாற்றம் கிடைக்காதா? என்று நினைத்தவர்களுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கொடூரமான மாற்றத்தைத் தந்தது. 1977 ஓகஸ்ட் 15-16 ஆம் திகதிகளிலிருந்து இரண்டு வார காலங்களுக்கு நீண்ட இந்தக் கலவரத்தில் இலங்கையின் பலபாகங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் உயிரிழப்புக்கள் உள்ளிட்ட பாரதூரமாகப் பாதிப்புக்களைச் சந்தித்தனர்.
இலங்கையின் இனப் பொறுப்புணர்ச்சி வன்முறை வடிவம் பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் எத்தனையோ நிகழ்ந்தாலும் 1956, 1958, 1977, 1981, 1983 காலங்களில் நிகழ்ந்தவை கறை படிந்த இனவாத அத்தியாயங்களாகப் பதிவு பெற்றது இலங்கை வரலாறு. இரு தரப்பு ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதே கலவரம். அடிப்பது சிங்களவராகவும், அடி வாங்குவது தமிழராகவும் இருப்பதை இனக்கலவரம் என்று சொல்ல முடியாதென்பதை உணர்ந்து கொள்ள ஆண்டுகள் பல எடுத்தது.
அமுதன் :- தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்து 15 ஆண்டுகளுக்கு மேல் கடந்து உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?
நிலவன் :- 2009ல் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பு நடந்தேறி 15 வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்று வரை சர்வதேசம் மௌனம் சாதித்து வருகின்றது. இன அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசின் நடவடிக்கைகள் மிகக் கடுமையான இன அழிப்புக் குற்றமாகும். இன அழிப்பு (Genocide), மனித உரிமை மீறல்கள் (Human Rights Violations) என்ற கொடும் குற்றங்களை வரைமுறையற்ற அளவில் ‐ ஈழத் தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தொழிக்கும் திட்டத்தோடு, உலகநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன்படுத்தி, வக்கிரமான வழிமுறைகளில் ‐ சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்தியுள்ளது என்பதை உலக சமுதாயத்திற்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.
கிட்லரின் ஜெர்மனியூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரசுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் யூத மற்றும் சிலாவிய இன மக்கள் ஏறத்தாழ 120 இலட்சம் பேர் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். அதைப் போல இலங்கையில் ராசபக்ஸவின் அரசு தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியது. 2007 ஆம் ஆண்டுமுதல் 2009 மே மாதகாலம்வரையில் தமிழ் மக்கள் இரண்டு இலட்சம் பேரை இதுவரை படுகொலை செய்துள்ளது. மே 16 முதல் 18 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் 50,000 மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு, வன்னி மண்ணே பிணக்காடாக்கப்பட்டது.
70 000 இற்கும் மேற்பட்டவர்கள் 2009ல் கொல்லப்பட்டார்கள் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஐ.நா.வின் 2012ன் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதேவேளை 1,46679 நபர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மறைந்த முன்னாள் மன்னார் பேராயர் ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் உறுதி செய்யப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பு வலையமென அறிவிக்கப்பட்ட இடங்களான மருத்துவ மனைகளிலும், பாடசாலைகளிலும் வைத்தே இலங்கை அரசபடைகளால் போர் விமானங்களினாலும் எறிகணைகளினாலும் சர்வதேசம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயண்படுத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதற்கான ஐ.நா சபை செயற்குழு நிறுவியுள்ளது. ஈழத் தமிழ் மக்களுக்கு உணவும், நீரும், மருந்தும் கிடைக்கவிடாமல் தடை செய்து, அவர்களைப் பட்டினி போட்டும், மருத்துவ உதவியில்லாமலும் கொன்றொழித்தார்கள். வதை முகாம்களில் அடைபட்டுள்ள இளைஞர்கள் சிங்களப் படையினரால் நாள்தோறும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் முகாமுக்குத் திரும்புவதே இல்லை. வதைமுகாமுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு இன்றி சிங்கள இராணுவத்தால் பாலியல் தொந்தரவுகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமைக்கப்பட்ட நூரம்பர்க் ‐ டோக்கியோ சர்வதேச நீதிமன்றங்கள் இனப்படுகொலை தண்டிக்கத்தக்க மிகப்பெரிய குற்றம் என கூறியுள்ளன. இனப்படுகொலை என்ற பெருங்குற்றத்துக்குள் அடங்கக்கூடிய செயல்பாடுகள் அனைத்தையும் சிங்களப் பேரினவாத அரசு செய்து முடித்துள்ளது. தமிழின அழிப்பை ஆராய்வதில் ஐ.நா தோல்வி அடைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
அமுதன் :- தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச சமூகம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?
நிலவன் :- 2009ஆம் ஆண்டு. போர் நடந்த முள்ளிவாய்க்கால்மண்ணை சிந்தித்துப் பாருங்கள். பல்லாயிரக்கணக்கான போராளிகள், பொது மக்கள் உயிர்த்தியாகம் செய்த அம்மண்ணின் இறுதி நாட்களைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள். இன்று தமிழினத்தின் தேசிய அடையாளமாக இருக்கின்ற ஈழ மண்ணில் நிகழ்ந்த தமிழ் இன அழிப்பைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் மிகவும் கொடூரமான தமிழ் இன அழிப்பின் படுகொலைகள்! இதன் உச்சக்கட்டமே 2006ஆம் ஆண்டு 2009 மே மாதம் வரை 146,679 பேர் வரையில் தமிழர்களை இனப்படுகொலை செய்து மாபெரும் இன அழிப்பைப் பௌத்த சிங்கள பேரினவாத அரசும் அதனோடு இணைந்து இந்தியா மற்றும் வல்லரசு நாடுகளும் நிகழ்த்தினார்கள். போராளிகள் , பெண்கள் , ஊனமுற்றோர், தாய், தந்தை இழந்தோர் , ஆதரவற்றோர் என்று எம்மக்களின் சோகங்களின் அடையாளங்கள் ஏராளம். எம் மக்களில் பலர் இன்னமும் உடலினுள் குண்டுகளின் சிதறல்களுடன் தான் நடமாடுகின்றனர். எங்கள் பெண்கள் படும் துன்பங்கள் ஏராளம். கணவனை இழந்த பெண்களின் குடும்ப நிலையோ மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அடுத்த வேளை உணவிற்காக அழுகின்ற குடும்பங்கள் எண்ணிலடங்கா. இனத்தின் எதிர்கால இருப்பிற்காகத் தேசியத்தைப் பலப்படுத்த முன்வந்தவர்கள், இன்று தமது வாழ்வியல் இருப்பை கேள்விக்குறியுடன் முன் நகர்த்துகின்ற நிலையில் உள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினை எம் மண்ணின் இன்னோர் சோகமாகும். உறவுகளைப் பௌத்த சிங்கள பேரினவாத அரசபடைகளின் கைகளில் ஒப்படைத்தவர்கள் , கதறிய குரல்கள் இன்னமும் என் காதில் கேட்டுக்கொண்டிருக்கின்றது. ஏராளமான மக்கள் இன்னும் தம் சொந்த நிலங்களுக்கு மீளத் திரும்ப இயலாத நிலை ஆங்காங்கே நிலவுகின்றது.
அமுதன் :- இனப்படுகொலை போருக்கு பிந்தைய சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது?
நிலவன் :- வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல், உள, சமூக, பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் இதுவரை சரி செய்யப்பட முடியாததாகவே காணப்படுகின்றது. நேரடியாக யுத்தமும் யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட சூழ்நிலையும் ஈழத்துப் பெண்கள், மற்றும் சிறுவர்கள் மத்தியில் பாரிய அளவிலான உடல் உளநல பாதிப்புக்கு வித்திட்டது என்பது உண்மையாகும்.
யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு கிழக்குப் பகுதியில் அதிகளவான பெண்கள் கணவனை இழந்தவர்களாக ஆக்கப் பட்டிருகின்றார்கள். அனேக பெண்கள் குடும்பத்தில் ஆண்தலைமைத்துவம் அற்ற நிலையில் குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பலர் குடும்பச் சுமை காரணமாக பல பின்தங்கிய கிராமங்களிலும் வாழ்கின்றார்கள்.
பெரும்பாலான பெண்கள் நேரடியா காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்திடம் ஒப்படைத்த தங்கள் பிள்ளைகளை,கணவனை,சகோதரனை தேடித் தேடி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து மனநல ரீதியில் பாதிக்கப்பட்டு தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதை அறிய முடியாத அனாதைகள் ஆக்கப்பட்டு நடை பிணங்களாக நாளாந்தம் பல துன்பங்களைச் சுமந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
அமுதன் :- இவ்வாறாக பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்ன?
நிலவன் :- வடக்கு- கிழக்குப் பகுதிகளில், 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள். (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லவினால் சமர்ப்பிக்கப்பட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள் குடும்பத்துடன் இல்லை. (இந்த ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், கடத்தப்பட்டு இருக்கலாம் , சிறைக்கைதியாக இருக்கலாம் அல்லது இறுதி யுத்தத்தில் அல்லது அதற்கு முன் கொல்லப்பட்டவர்களாகவும் இருக்கலாம் ).
வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டச் செயலக அரச அதிபர்களின் புள்ளி விபரங்களின் பிரகாரம் வடக்கில் வாழும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 405 குடும்பங்களில் 52 ஆயிரத்து 142 குடும்பங்கள் கணவனை இழந்த நிலையில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் என மாவட்டச் செயலகங்களின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வாழும் குடும்பங்களில் 52142 குடும்பங்கள் கணவனை இழந்து வாழும் நிலையில் இவர்களில் 10 ஆயிரத்து 303 குடும்பங்களுக்கு மேல் கடந்த காலத்தில் யுத்தத்தின் போது கணவர்கள் உயிரிழந்தமையினால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் பயனாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், விசேடமாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இதுதவிர வட மாகாணத்தில் மட்டும் 80% குடும்பங்களில் ஆண்கள் இல்லை என 2013க்கான சனத்தொகை மதிப்பீடு சொல்கிறது . இந்த 80%-இல் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள், ஒன்று துணைவனை இழந்தவராக இருக்கலாம், திருமணம் செய்து கொள்ளாத முன்னாள் போராளியாக அல்லது சாதாரணப் பெண்ணாக (Civilian Women) இருக்கலாம்.
அப்பெண்கள் விவாகரத்து பெற்றவர்களாக அல்லது மேற்குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்டவரின், அல்லது கடத்தப்பட்டவரின், அல்லது கொலை செய்யப்பட்டவரின், அல்லது சிறையில் உள்ளவரின் தாயாக, துணைவியாக, தங்கையாக, அல்லது மகளாக இருக்கலாம்.
இந்த எண்ணிக்கையானது மிகவும் துயரம் தரும் வாழ்வியலை எடுத்தியம்புகிறது. குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி பிரதேச செயலர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் 163 கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர். இந்தப் பிரதேச செயலர் பிரிவில் மொத்தமாக 1800 கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இதே போன்று ஒவ்வொரு கிராமங்களும் பிரதேச செயலக பிரிவுகளிலும் கணவனை இழந்து 40 வயதுக்கும் குறைந்த பெண்கள் 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத் தலைவியாக வாழ்க்கை நடாத்துகின்றார்கள்.
குடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு வருவாயைத் தேட வேண்டிய முழுப்பொறுப்பும் பெண்களிடம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது வடமாகாண மகளிர் விவகார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின்படி கடந்தாண்டு வடக்கில் மட்டும் 7000 இற்கும் அதிகமான கணவனை இழந்த அதிகமான பெண்கள் வாழ்வாதார சிரமங்களுக்கு மத்தியில் குடும்பம் நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் சாதாரணமான ( civilian woman) போரில் பாதிக்கப்பட்ட பெண் முகம் கொடுக்கும் சவால்களைவிடப் பன்மடங்கு அதிகமானது. காணாமல் ஆக்கப்பட்டோர் நீதியை நிலைநாட்டுதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், வாழ்வாதார பிரச்சினைகள், சமூக கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்தியில் இன்றும் கூட யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள் பல முரண்பாடுகளை எதிர்கொண்டுதான் வருகின்றனர்.
பெண்களின் மீதே தாக்கத்தைச் செலுத்துகிறது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண்களின் குடும்பத்தில் பெண்களே தமது குடும்பத்தைத் தலைமை தாங்குகின்றார்கள். இந்த சூழ்நிலையில் வறுமை பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன அழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண்கள், உடல் அவயங்களை இழந்த பெண்கள் உள்ள குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் வறுமை கோரத்தாண்டவம் ஆடுகின்றது.
வேலையின்மை பிரச்சினையும் வறுமைக்கு முக்கிய காரணம். வேலைவாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரம் தாழ்வு நிலையில் இருக்கிறது. இவ்வேலையின்மை காரணத்தால் வறுமையினைப் போக்குவதற்காகப் பெண்கள் “வீட்டுவேலைத் தொழிலாளர்களாக” வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றார்கள். உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள். இவர்கள் வீட்டுவேலை தொழிலுக்குச் செல்வதால் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது.
சமூகநீதியில் பல்வேறு இன்னல்கள், குடும்பங்கள் இடையே பிணக்குகள், பிள்ளைகள் ஆதரவற்றுப்போதல் எனப் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் வன்கொடுமை, சம்பளம் முறையாகக் கொடுக்காமை, அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம், அடிமையாக நடத்துதல் என்று இவர்கள் உடல், உள, பாலியல் ரீதியான பிரச்சினைகளை அனுபவிக்கின்றார்கள். பெண்கள் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முக்கிய காரணம் வறுமை. இது தாக்கம் செலுத்தாவிடில் பெண்கள் இவ்வாறான வன்முறைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்காது.
அமுதன் :- இந்த மிகப்பெரிய இன அழிப்பு போரில் ஈழ நிலத்தின் சிறுவர் சிறுமியர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்?
நிலவன் :- இலங்கையின் வடக்கில் உள்ள 3 இலட்சம் சிறுவர்களில் 17 வயதுக்குட்பட்ட அனாதைகள் 11,000 பேர் பதிவாகியுள்ளார்கள். வடக்கு கிழக்கில் 25,000 மேட்பட்டவர்கள் அநாதைகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள் . 2012ஆம் ஆண்டு வரையில் கணக்கெடுக்கப்பட்டதன்படி 4,679 சிறுவர்கள் தந்தையையும் 1,053 சிறுவர்கள் தாயையும் இழந்திருக்கிறார்கள் என்று யாழ் மாவட்ட அரச அதிபர் இப்பொழுது குறிப்பிட்டுள்ளார்.
இது போருக்குப் பின்னர் ஏற்பட்ட துயரம். தந்தையை இழந்த நிலையில் நெடுந்தீவில் 101 சிறுவர்களும் வேலணையில் 226 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 179 சிறுவர்களும் காரைநகரில் 123 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 381 சிறுவர்களும் நல்லூரில் 301 சிறுவர்களும் சண்டிலிப்பாயில் 530 சிறுவர்களும் சங்கானையில் 346 சிறுவர்களும் உடுவிலில் 503 சிறுவர்களும் தெல்லிப்பழையில் 364 சிறுவர்களும் கோப்பாயில் 186 சிறுவர்களும் சாவகச்சேரியில் 551 சிறுவர்களும் கரவெட்டியில் 354 சிறுவர்களும் பருத்தித்துறையில் 461 சிறுவர்களும் மருதங்கேணியில் 73 சிறுவர்களும் உள்ளனர்.
தாயை இழந்த நிலையில் நெடுந்தீவில் 27 சிறுவர்களும் வேலணையில் 56 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 20 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 56 சிறுவர்களும் காரைநகரில் 38 சிறுவர்களும் நல்லூரில் 50 சிறுவர்களும் சண்டிலிப்பாயில் 145 சிறுவர்களும் சங்கானையில் 73 சிறுவர்களும் உடுவிலில் 13 சிறுவர்களும் தெல்லிப்பழையில் 67 சிறுவர்களும் கோப்பாயில் 121 சிறுவர்களும் கரவெட்டியில் 120 சிறுவர்களும் சாவகச்சேரியில் 109 சிறுவர்களும் கரவெட்டியில் 120 சிறுவர்களும் பருத்தித்துறையில் 113 சிறுவர்களும் மருதங்கேணியில் 45 சிறுவர்களும் உள்ளனர்.
இதில் குறிப்பாக , மட்கிளிநொச்சி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு கணிப்பின் படி 4284 சிறுவா்கள் தங்களுடைய தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவர்களாக காணப்படுகின்றனா் என மாவட்ட செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 3044 சிறுவர்கள் தந்தையையும், 764 சிறுவர்கள் தாயையும், 476 சிறுவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனர். அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 1569 சிறுவர்களும்,தாயை 411 சிறுவர்களும், இருவரையும் 316 சிறுவர்கள் இழந்துள்ளனர்.
மேலும் கண்டாவளையில் 670 சிறுவர்கள் தந்தையையும், 138 சிறுவர்கள் தாயையும்,40 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 285 சிறுவர்களும், தாயை 71 சிறுவர்களும், இருவரையும் 38 சிறுவர்களும் இழந்துள்ளனர். பூநகரி பிரதேச செயலக பிரிவில் 520 சிறுவர்கள் தந்தையையும், 144 சிறுவர்கள் தாயையும், 82 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளனர். என 2014 புள்ளி விபரக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதில் கரைச்சி பிரதேசத்தில் அம்பாள்நகா் கிராம அலுவலர் பிரிவில் சாந்தபுரம் பிரதேசத்தில் 171 சிறுவர்களும் கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் 106 சிறுவர்களும், மலையாளபுரம் கிராமத்தில் 99 சிறுவர்களும், இரத்தினபுரம் கிராமத்தில் 95 சிறுவர்களும்,செல்வாநகா் கிராமத்தில் 75 சிறுவர்களும், பொன்னகர் கிராமத்தில் 52 சிறுவர்களும், மாவடியம்மன் கிராம அலுவலர் பிரிவில் 52 சிறுவர்களும், பாரதிபுரம் கிராமத்தில் 50 சிறுவர்களும் தந்தையை இழந்து அதிகளவில் தந்தையை இழந்த சிறுவர்களை கொண்ட பிரதேசமாகக் காணப்படுகிறது
பூநகரி பிரதேசத்தில் 128 சிறுவர்கள் பள்ளிக்குடா கிராம அலுவலர் பிரிவிலும், 64 சிறுவர்கள் நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலும், 62 சிறுவர்கள் கரியாலைநாகபடுவான் கிராம அலுவலர் பிரிவிலும், 45 சிறுவர்கள் நாச்சிக்குடாவிலுமாக அதிகளவு தந்தையை இழந்த எண்ணிக்கையைக் கொண்ட பிரதேசங்களாகக் காணப்படுகிறது.
கண்டாவளையில் கோரக்கண்கட்டு 58 சிறுவர்கள்,புன்னைநீராவி 52 சிறுவர்கள், ஆனையிறவு கிராம அலுவலர் பிரிவில் 52 சிறுவர்கள், உமையாள்புரம் 50 சிறுவர்கள், முரசுமோட்டை 49 சிறுவர்கள், குமரபுரம் 48 சிறுவர்கள் தந்தையை இழந்து அதிகளவு தந்தையை இழந்த சிறுவர்கள் கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது.
பச்சிலைப்பள்ளியில் அதிகளவு தந்தையை இழந்த சிறுவர்களை கொண்ட பிரதேசமாக முகாவில் கிராம அலுவலர் பிரிவு காணப்படுகிறது. இங்கு 36 சிறுவர்கள் தந்தையை இழந்துள்ளனர்..
இந்த சிறுவர்களில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் நேரடி பாதிப்பின் விளைவால் அதிகளவு சிறுவர்கள் பெற்றோரை இழந்து காணப்படுகின்றனர். அத்தோடு ஏனைய காரணிகளாக நோய், விபத்து உள்ளிட்ட காரணங்களும் காணப்படுகிறது. இது முதற்கட்ட கணக்கெடுப்பில் இவ்விபரங்கள் ஆகும்.
கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தந்தையை இழந்த 1,459 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக, வலயக் கல்வித்திணைக்களத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட 104 பாடசாலைகளில் 32,245 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், கடந்த கால யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் சுமார் 1,459 மாணவர்கள் தந்தையை; இழந்த நிலையில் உள்ளனர்.
இதனை விட 585 மாணவர்கள் தாய் தந்தையர்கள் இல்லாத நிலையில், சிறுவர் இல்லங்களில் தங்கியிருந்து கல்வியைத் தொடர்கின்றனர். இந்தத் தொகையில் அதிகமானோர் யுத்த காலத்தில் தந்தையை மாத்திரம் அல்லது தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்தவர்கள் ஆவர்.
இவற்றை விட 444 மாணவர்கள் விசேட தேவைக்குட்பட்ட(அவயங்களை இழந்து) மாணவர்களாகக் காணப்படுவதுடன், இவர்களுக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள 17 விசேட கல்வி அலகுகளினூடாக கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமுதன் :- இவ்வாறாக ஈழ மண்ணில் சிறுவர் சிறுமியர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் போருக்கு முந்தைய புலிகளின் காலகட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களின் நிலை என்பது எவ்வாறு இருந்தது?
நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் பேரில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள், கல்வி கற்கவும் தமது ஆளுமையை வளர்க்கவும் சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை, குருகுலம் என சிறுவர் இல்லங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுத்தன.
1991ம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கிய ‘செஞ்சோலை’ மகளிர் பாடசாலை 1991ம் ஆண்டு ஐப்பசி மாதம் 22ம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 23 மாணவர்களுடன் ஆரம்பமான செஞ்சோலை வளர்ச்சியடைந்து இருநூறுக்கும் அதிகமானவர்களைக் கொண்டதாகச் செயற்பட்டது.
காந்தரூபன் அறிவுச்சோலை இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த ஆண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக 1993 கார்த்திகை 13ஆம் நாள் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். காந்தரூபன் அறிவுச்சோலை முதலாவது ஆண்டு நிறைவில் கலந்து கொண்ட, தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்ட ஈழ மண்ணின் செடிகள், கல்வி, ஆளுமை, அறநெறி கொண்ட முழு மனிதர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவுச்சோலையை உருவாக்கியதாகக் கூறுகின்றார்.
சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களை நெறிமுறை பிறழாமல் ஈழ மண்ணின் ஆளுமைகளாக, அறநெறி கொண்ட முழு மனிதர்களாக உருவாக்கிய அத்தகைய கட்டமைப்புக்களை உருவாக்கிய விடுதலைப் புலிப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறி, சர்வதேச ஆதரவுடன் அழித்தொழித்த சிங்கள அரசு, இன்று ஈழ மண்ணில் தாம் எத்தகைய பயங்கரவாதிகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர். வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் சிறுவர்கள் குற்றவாளிகளாக அதிகரிக்கும் ஒரு சூழலைத்தான் சிங்கள அரசு உருவாக்கியுள்ளது.
அமுதன் :- தமிழின அழிப்பில் சர்வதேச வல்லாதிக்கங்களின் பங்கும் அதற்குப் பின்புள்ள புவிசார் அரசியல் போட்டி எவ்வாறு இருந்தது?
நிலவன் :- உலக நாடுகளின் துணையோடு பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மாபெரும் இன அழிப்பு. இனவெறிப் பேரினவாத அரசை முன்னிறுத்தி வல்லரசுகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வல்லாதிக்க அரசுகள் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான இன அழிப்புப் போரை நிகழ்த்தின. பிராந்திய புவிசார் அரசியல் நலனே தமிழின அழிப்புப் போரை பின்னிருந்து நடத்தியது.
இன அழிப்பு என்றால், அது மனிதர்களைக் கொன்று குவிப்பது மட்டுமே அல்ல. பல்வேறு வடிவங்களில், இன அழிப்பு நிகழ்கிறது. ஈழ தேசத்தில் இத்தகைய இன அழிப்பு பன்னாட்டு அரசுகளால் தொடங்கப்பட்டு, எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. பல்வேறு வடிவங்களில் திட்டமிட்டு, அவை அரங்கேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வெளிப்பட்ட உச்சக் கட்டம் தான் 2006 முதல் 2009 மே வரையில் நடைபெற்ற இன அழிப்பு.
தமிழருக்கு எதிரான மாபெரும் படுகொலைகளுக்கு பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் துணை போயிருக்கின்றன என்று டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையும் பிரேமன் தீர்ப்பாயத்தின் அறிக்கையும் தீர்ப்பு வழங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்ல இது ஒரு இனவழிப்பு – ஒரு தேசத்தின் அத்திவாரமாக இருந்த தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான உலக நாடுகளின் தடை, வல்லாதிக்க நாடுகள் கூட்டாக இணைந்து புலிகளையும், தமிழீழ நடைமுறை அரசையும் அழிக்க உருவாக்கிய “புரொஜக்ட் பெக்கான்” (Project beacon) திட்டம், அதன் சாராம்சங்கள், அதைப் புலிகள் எதிர்கொண்ட விதம், சர்வதேச நாடுகள் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்குச் செய்த ராணுவ உதவிகள், பொருளாதார உதவிகள், உளவுத் தகவல்கள், அதில் இந்தியாவின் பங்கு, அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த யுத்தத்தின்போது போராளிகள் மட்டுமல்ல ஆண்,பெண்,குழந்தைகள்,இளைஞர்,வயோதிபர் என்ற வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் வகை தொகையின்றி கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டனர். தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுகளை சிங்கள இராணுவம் பயன்படுத்தியது, மருத்துவமனை மீது குண்டு வீசியது, ஊடகவியலாளர்களைக் கொலை செய்தது, (No Fire Zone) பாதுகாப்பு பகுதி என்று பொதுமக்களை அழைத்து எறிகணை தாக்குதல் நடத்தி மொத்தமாக கொன்றழித்தது, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது, கைகளை கட்டி சுட்டுக் கொன்றது
தமிழின அழிப்புப் போரின் மூலம் தமிழ் சிவில் சமூகத்தினருடன் சேர்த்து தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது.
அமுதன் :- தமிழ் மக்களுக்கு எதிரான நடத்தப்பட்ட இனப்படுகொலை போரின் தாக்கம் என்பது இலங்கை பொருளாதாரம் மற்றும் மக்களை எவ்வாறு பாதித்தது?
நிலவன் :- தமிழ் இனத்தை ஒடுக்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கை இராணுவத்திற்கும் காவல்துறை தரப்புக்குமான பாதுகாப்பு செலவீனங்களுக்கு சுமார் 40 வீதமான நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதுவே நிலை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை, மூன்றாம் கட்டஈழப்போர்க் காலத்தில் (1995-2002) 1346 மில்லியன் டொலர்களும், சமாதான காலப்பகுதியில் (2002-2005) 1056 மில்லியன் டொலர்களும், நான்காம் கட்ட ஈழப்போரில் (2006-09) 1499 மில்லியன் டொலர்களும் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்காகத் தனது இராணுவச் செலவினங்களுக்காக இலங்கை செலவிட்டுள்ளமையை அறிய முடிகின்றது.
2009 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலும் போர்க்காலத்தினை விட அதிகமாகவே 1716 மில்லியன் டொலர்களை இலங்கை அரசு இராணுவத்துறைக்கு செலவிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இனவழிப்பு யுத்த காலத்தில் மாத்திரமின்றி தற்போதும் இராணுவத்தரப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. தற்போதைய சூழலில் பாதுகாப்பு தரப்புக்கு 11 வீதமான நிதி ஒதுக்கீட்டை இலங்கை அரசு ஒதுக்கி வருகின்றது. அத்துடன் உலக அளவில் தனது இராணுவத்தினை 99 வீதமான படையினரை இயங்கு நிலையில் வைத்திருக்கும் நாடாகச் சிறிலங்கா மாறியுள்ளதோடு, ஆண்டுக்கு 170 மில்லியன் டொலர்களை இராணுவத்தின் ஓய்வூதியத்துக்குச் செலவிடுகின்றமை மற்றும் போரின் ஓய்வுக்குப் பின்னர், பாதுகாப்பு தரப்பினரின் சம்பளத்தினை 45வீதத்தினால் அதிகரித்துள்ளமை போன்றவையும் கூட பொருளாதார சிக்கலுக்கு அடிப்படையானவை.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இராணுவம், போர், போர்தளபாடங்கள் எனப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டு தமிழ் இனத்தையும் அழித்து தன்னையும் அழிக்கும் செயற்பாட்டில் சிறிலங்கா ஈடுபடுகிறது. மிகப் பெரும் இறுதி இனவழிப்புப் போரால் ஒன்றரை இலட்சம் மக்களை இழந்த பிறகும், மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்ட பிறகும் கூட தமிழர் நிலங்களை பிடுங்குவதை மாத்திரமே ஒற்றை செயலாகவும் கடமையாகவும் சிங்கள தேசம் தொடர்கின்ற நிலையில், எப்படி பொருளாதார மீட்சியும் உயர்ச்சியும் ஏற்படும்.
அமுதன் :- வடக்கு கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது?வரலாற்று ரீதியாக மக்களின் உரிமை போராட்டத்தில் புலிகளின் பங்கு எவ்வாறு இருந்தது?
நிலவன் :- தமிழ் மக்களுக்கு இனப் பிரச்சினை உண்டு. வடக்கு – கிழக்கிலே தமிழர்கள் சுயாதீனமாக செயற்பட முடியாதளவுக்கு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தமிழரின் நெடிய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது ஒரு அற உணர்வு கொண்ட தேசிய இனம் தான் தமிழர் என்று நம்மை நாமே பெருமிதம் கொள்ள நிறையக் காரணங்கள் உண்டு.
தமிழர்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கென்று ஒரு தேசம் அவசியமானது என்பதைத் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் இந்த உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறது. தமிழ் மக்கள் தமக்கான மரபுவழித் தாயகத்தையும் அவர்களுக்கான ஆட்சியையும் அதனைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் இந்த உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. விடுதலைப்புலிகளின் தனி அரசின் இராணுவ மற்றும் அரசியலில் எமது மக்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் 2009 வரை தங்கி இருந்தமையே.
தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கை. ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.
அமுதன் :- 21ம் நூற்றாண்டின் ஆகப்பெரிய இனப்படுகொலையை எதிர்கொண்டு தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியைப் பெற என்ன செய்ய வேண்டும்?
நிலவன் :- சர்வதேச சட்டங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், மனித உரிமைக் கோட்பாடுகள், சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல் ஆகியவற்றைச் சரியான முறையில் கையாண்டு சந்தர்ப்பங்களை உருவாக்கி அல்லது இருக்கும் சந்தர்ப்பங்களை முறையாகக் கையாண்டு மனித உரிமைகள் சபைக்கு சமாந்திரமாக வேறு வழிகளில் செல்வதற்கு நாம் பெரியளவில் ஈடுபடவில்லை .
மனித உரிமைகள் சபைக்கு சமாந்திரமாக எமக்கான நீதியையும் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாஷைகளையும் வென்றெடுக்கும் பல வழிகளைத் திறந்து செயற்படவேண்டிய காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றங்கள், நாடுகள் வாரியாகத் தீர்ப்பாயங்களென நாம் நகரவேண்டியுள்ளதால், இவற்றை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பதற்கு எமது வாழ்விட நாடுகளின் அரசுகள், அரசியற்பிரமுகர்கள், மனிதவுரிமை அமைப்புகள், சட்டவல்லுனர்களென அனைவரையும் நாடி எமது விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்தும் தார்மீகப்பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை மனதில் நிறுத்திச் செயற்பட வேண்டும்.
2009ஆம் ஆண்டு இன அழிப்பில் 1,46,679. பொது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழினத்தின் இனப்படுகொலையின் குறியீடு. இனப்படுகொலையின் அதியுச்ச துயரமாக எமது உறவுகளை இழந்து மனத்துயருடன் வாழும் நாம் எம்மக்களை வேரறுக்க இலங்கை அரசினால் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களின் இருப்பைச் சீரழித்த இனப்படுகொலையின் உச்சக்கட்டமான யுத்தகாலத்தை நினைவு கூரவும், அதன் வலிகளை எமது இளைய சந்ததிக்குக் கடத்தவும் உரித்துடையவர்கள்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அரசியல்ரீதியாகவும் அமைதிவழியிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் இந்தியாவிலும் வீச்சுப்பெற்றிட தமிழர் நாம் என்ற ஒன்றினைவுடன் தமிழ்’ என்ற அடையாளத்தையும் தமிழர் என்ற இனத்தையும் பயன்படுத்திக் கொள்வது என்றெல்லாம் நாம் பல வழிகளிலும் சிந்தித்துச் செயற்படுவதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.
தமிழர்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கென்று ஒரு தேசம் அவசியமானது என்பதைத் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் இந்த உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறது. தமிழ் மக்கள் தமக்கான மரபுவழித் தாயகத்தையும் அவர்களுக்கான ஆட்சியையும் அதனைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் இந்த உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. விடுதலைப்புலிகளின் தனி அரசின் இராணுவ மற்றும் அரசியலில் எமது மக்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் 2009 வரை தங்கி இருந்தமையே.
தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கை. ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.
அமுதன் :- தமிழினத்திற்கு எதிரான சிங்களக் கூட்டாளி இந்திய வல்லாதிக்கத்தின் பங்கு மற்றும் தற்கால தமிழர் விரோத அரசியல் செயல்பாடுகள் பற்றி விளக்குங்கள் ?
நிலவன் :- இந்திய அரசும் தமிழின விரோதக் கொள்கையை தமது வெளியுறவுக் கொள்கையின் அங்கமாகவே ஏற்று வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு கடந்த 2009 மே மாதத்தின்போது சிங்கள இனவெறி அரசு ஈவிரக்கமற்ற இனப் படுகொலையை அரங்கேற்றியது.
தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து விடுதலைப் புலிகள் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும், தமிழ்த் தேசிய செயற்பாட்டில் உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றுக்கும் இருக்கின்றன. நாம் நமது அரசியலைத் தீர்மானிக்கிறோம், தேர்ந்தெடுக்கிறோம், திட்டமிடுகிறோம். இந்தத் திட்டமிடலும் தேர்ந்தெடுப்பும்தான் நமது அரசியல் செயல்பாடு. நமது இருப்பு பற்றியும்
இனத்தின் தேசிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நாங்கள் தேசிய விடுதலைக்காகப் போராடி வருகிறோம். எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும் சுய கெளவரத்துடனும் வாழுகின்ற புனித உரிமையைப் பாதுகாக்கவே நாங்கள் போராடுகிறோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிந்தைய காலத்தில் புலி நீக்க அரசியல் போருக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
2009 ஆம் ஆண்டிற்கு முன் புலிகளை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை இந்திய அரசுகள். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய காலத்தில் விடுதலைப் புலிகள் பற்றி நினைவுகளை ஒடுக்கும், நீக்கும் போர் என்ற பெயரில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் செயற்பாடு அதிகரித்துள்ளது. விடுதலைப் போராட்டம் சார்ந்த தடயங்களை அழிப்பதும் புலிகள் என்ற விம்பம் தமிழர்களின் அடையாளமாய் இருப்பதை துடைத்தழிப்பதுமான முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வடிவங்களில் இடம்பெற்று வருகின்றது.
இலங்கை ஐக்கிய ,நல்லிணக்கம் என்ற பதங்களை எதிரிகள் மட்டுமல்ல அனைத்துலக சமூகமும் மிகத்தீவிரமாக உச்சரிக்கத் தொடங்கி இருக்கின்றார்கள். புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்தவரையிலே வன்முறையாளர்களே.
ஒரு இனத்திற்கும் ஒப்பற்ற விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் செயற்பட்டு புலி நீக்க . அரசியலை முன்னெடுப்பது அநீதிக்குத் துணைபோவதாகும் .
உலகமேலாதிக்க ஒருமைப்படுத்தலின் பின்விளைவு என்பதும் விளிம்பு நிலை அரசியல் சொல்லாடலுமாக மட்டுமே மிஞ்சி நிற்கிறது. தமிழனது உள்ளத்து அரசியல் அவா தமிழீழம் , மேதகு வே. பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது. புலி நீக்க’ அரசியலை தமிழ்ப் பரப்புக்குள் கடத்தும்போது ஏற்படும் அதிர்வு மீண்டும் மீண்டும் பேசப்படுகிற ஒரு விடயமாக இருந்து வருகின்றது.
அமுதன் :- புலி நீக்க அரசியலை சிங்களமும் அதன் கூட்டாளிகளும் எவ்வாறு செயல்படுத்த முனைகின்றனர்?
நிலவன் :- 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிந்தைய காலத்தில் புலி நீக்க அரசியல் போருக்கு ஈழத் தமிழ்ச் சமூகம் முகம் கொடுத்து வருகிறது. “புலி நீக்கம்” என்பது சிங்களத்தினது மட்டுமல்ல இந்திய மற்றும் மேற்குலக நிகழ்ச்சி நிரல் என்பது மக்களுக்குத் தெளிவாகவே தெரியும். இதனை முன்னின்று நகர்த்துவதும் நம்மவர்களே. தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆளுமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும், தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. விடுதலைப் புலிகளின் சின்னம், எழுச்சி கோசம், தேசியக்கொடி, தேசியத் தலைவர், மாவீரர்கள், என விடுதலைப் புலிகளை அடையாளப்படுத்தும் எல்லாவித அடையாள மறுப்பு, எதிர்ப்பு, மாற்று அடையாள நீக்கம் செய்தல், புலிக்கொடி பிடிக்கக் கூடாது, புலிகளின் அரசியலை முன்னிறுத்தக்கூடாது’ என்பது தொடக்கம் ‘புலிகளை நினைவு கொள்ளக்கூடாது’ என்பதுவரை வகுப்புக்கள் எடுக்கப்படுகிறது.
அரசியல் மற்றும் சொல்லாடல்களும் ‘பயங்கரவாதம்’ என்ற முனைப்படுத்தப்பட்டு அழித்தொழிப்பிற்கு உரியவையாக அடையாளப்படுத்தப்பட்டு புலி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்களுடைய அரசியலையே தென்னிலங்கையின் முற்போக்குச் சக்திகளும்-வடகிழக்கு மாகாணத்தின் இளைய தலைமுறையும்-இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாவும்-இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் கொண்டுள்ள சர்வதேச சக்திகளும் ‘புலி நீக்கம் ‘ என்பதினூடாக தமிழத்தேச கருத்தியலை திட்டமிட்ட அழித்திடும் செயற்பாட்டின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்களின் இருப்பு திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகிறது.
புலிகள் என்ற குறியீட்டுப் பதத்தைத் தமிழ் பரப்பில் நாம் தொடர்ந்து நிறுத்துவது ஆயுதப்போராட்டத்தை முன்னகர்த்த அல்ல. அடுத்த தலைமுறையினரிடம் விடுதலைக்குப் புலிகளின் ஆளுமை, அர்ப்பணிப்பு, போராட்டத்தின் மீதான தீர்க்கம் சார்ந்தது. புலிகளின் ஆளுமையை இன்றைய உலக அரசியல் ஒழுங்கினை உள்வாங்கிப் பிரதிபலிப்பதன் மூலம் இராஜதந்திர அரசியல் வெற்றிகளைப் பெற்றுத்தருவதற்கான முனைப்புக்களை விட்டுக் கொடுக்காது நகர்வதாக இருக்கிறம்.
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற எமது அரசியலின் பின்னணியில் அதன் அடிப்படையான இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மக்கள்சார், மாற்று அரசியல் சொல்லாடல்கள் மற்றும் செயல்முறைகள் மாற்றம் செய்வதன் ஊடாக மக்கள் முன் நிறுத்திய இனவிடுதலையினை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை இனம்-மொழி என்ற கட்டமைப்பு மூலம் பிணைக்கப்பட்ட, இருப்பை மெல்ல மெல்ல ஓரங்கட்டி அதன் இருப்பை அழிப்பதே நோக்காக் கொண்டு செயற்படுகின்றார்கள்.
புலி நீக்க, தமிழ்த்தேசிய நீக்க அரசியல் எனத் தமிழ் மக்களின் இருப்பை மிகமோசமாக பலவீனப்படுத்தி தமிழ் மக்களைப் பல கூறுகளாகப் பிளவு பட வைப்பதன் ஊடாக தமிழ்மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு சர்வதேச நாடுகளின் சதித்திட்டம். தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் கூறிய ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற விடுதலை வாசகத்தை உரக்கக் கூவி இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூட நாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
அமுதன் :- வரலாற்று அழிப்பு எனும் கலாச்சார போர் தமிழின மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளதா?
நிலவன்:- தமிழீழ மண்ணில் தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்த எம் மண்ணின் தேசிய அட யாளங்கள் ஒன்றுமில்லாத வகையில் அழிக்கப்பட்டு வருகின்றது.
எமது நாட்டில் தமிழ் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆக்குரோசமான இலட்சிய வேட்கையுடன் எம் தேசிய இனத்தின் விடுதலைக்காக எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரில் வீரச்சாவடைந்த எங்கள் மாவீரர்களின் நினைவிடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கிலிருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலுமிருந்து வித்துடல்கள் இராணுவத்தினால் கிளறி எறியப்பட்டன. அதன் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்,பல துயிலுமில்லங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடங்களை இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக அழித்ததுள்ளது . ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் மறுக்கப்பட்டு வருகின்றது. எதற்காக அழிக்கப்படுகின்றன ? எம்மிடமிருந்தும் எம் நினைவுகளிலிருந்தும் அவர்களைப் பிரிப்பதற்கா? அது ஒரு போதும் நடைபெறாது. அவர்களின் மூச்சுக்காற்று இன்னமும் எம்முடன் கலந்தே இருக்கின்றது. அக்காற்றைத் தான் எம் மக்கள் சுவாசிக்கிறார்கள்.
நேர்தியன அரசியல் தலைமை, நிர்வாகம், சமூகம் கட்டமைப்பு நெறி முறை கொண்ட பண்பாட்டு வாழ்வு என அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வும் ஆக்க பூர்வமான செயற்பாடுகளுமே எமக்கு அவசியம் ஆகின்றது. தமிழ் இன அழிப்பு யுத்தம் என்பது சத்தத்துடன் மாத்திரம் சாட்சிகள் இல்லை என்ற நிலையிலும் நிகழ்வதல்ல, பல இன அழிப்பின் வடுக்களை சுமந்தவர்கள் இன்றும் வாழும் சாட்சிகள் 2009 ஆண்டிற்குப் பின்னர் தமிழ்கள் கத்தியின்றி, இரத்தமின்றியும் இன அழிப்பு செய்யப்படுவார்கள் என்பதற்கு ஈழம்தான் எடுத்துக்காட்டு.
போதைப் பொருளுக்கு எதிராகப் பேசிக் கொண்டு, மனித விரோத செயல்களை கட்டவிழ்த்து விடுவதும் , மரண தண்டனை பற்றிப் பேசிக் கொண்டு, வடக்கு கிழக்கில் இன அழிப்பு யுத்தம் செய்வதுவரும் சிங்கள அரசு. இனவிடுதலைப் புலிப் போராளிகளின் ஈகத்தால் பெருமை பெற்ற எம் மண்ணின் வரலாற்றை மாற்றத் துடிக்கின்ற முன்னெடுப்புக்களும் வரலாற்று ரீதியான, இன ரீதியான அழிப்புக்கான நுண் செயற்பாடுகளே மலிந்து கிடக்கிறது. எங்களின் வலிகளை ஆற்ற, எங்களின் தேசிய இன விடுதலையை வென்றெடுக்க எம்முடமுள்ள வேற்றுமைகளைக்களைந்து நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கவேண்டும்.
அமுதன் :- இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்ட அரசியலில் நம் மக்கள் செய்ய வேண்டியவை என்ன?
நிலவன் :- தமிழ் மக்கள் தமக்கான ஒரு தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கும், தமிழர்களுக்கான தலைமையை உருவாக்குவதற்கும் ஏற்ற ஒரு அரசியல் சூழல் உருவாக்க வேண்டும். உரிமைக்காகப் போராடியமைக்காக இவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரவேண்டிய வரலாற்றுக்கடமை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டும். “முள்ளிவாய்க்காலில் 15வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பின் வலிகள் ஒருபுறம், நீதி கிடைக்காத ஏமாற்றம் ஒருபுறம், எமக்கான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொண்டு எமது பொருளாதாரம், கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை செழுமைபெறச் செய்வதற்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி மிக முக்கியமானது.
எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் அரசியல், இராஜதந்திர போராட்ட உத்திகளையும் வழி பாதைகளையும் மீள் பரிசீலனை செய்யும் கால கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம். 1987ஆம் ஆண்டிலே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூடக் கருத முடியாது என்று, அன்றே தமிழ் இனத் தலமையினால் நிராகரிக்கப்பட்டிருந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை, ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாகத் திணிக்க முடியாது தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தையும், ஒற்றையாட்சியையும் நிராகரித்து, தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிகப்பட்ட அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தியே சனநாயக வழிமுறையிலான தேர்தல்கள் மூலம் ஆணை வழங்கி வந்துள்ளனர்.
தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை மையப்படுத்திய தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரித்துடையவர்கள் என்பதால் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.
தமிழ் மக்கள்மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை நடாத்தப்படல் வேண்டும். பொறுப்புக் கூறல் தொடர்பிலான எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் முற்றாக நிகராரிக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ளது. ஐ. நா இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ளது, ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி, இனப்படுகொலைக் குற்றவாளிகளை மட்டுமல்ல சிங்கள – பௌத்த அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பாரப்படுத்தல் வேண்டும்.
நீதிக்கான எமது போராட்டத்தை புதிய உத்திகள் மற்றும் புதிய வழிகளில் நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து குறிப்பாக எமது இளையோர் சமுதாயத்தை உள்ளீர்த்து தமிழர், தமிழீழம் என்ற எல்லைக்கோடுகளை இளைய தலைமுறையினர் ஒன்றினைந்து “தமிழீழம்” என்ற கொள்கையை முன்னிறுத்தி ஓர் தேசமாக எண்ணி சிந்தித்துச் செயற்பட வேண்டும். துறைசார் திறன் கொண்ட ஆளுமைகள் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்தியாக இருக்கின்ற எமது இளம் தலைமுறையினரை நாம் முன்நிறுத்திச் செயற்பட வேண்டும்.
ஓர் தலைமுறை மாற்றமும், எமது நீநிகோரும் போராட்ட வடிவத்தின் மாற்றமும் காலத்தின் தேவை என்பதைக் களத்திலும், புலத்திலும் உள்ள தமிழ் தேசியத் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களே எம் இனத்தின் எதிர்காலம் என்பதையும் புரிந்துகொண்டு இளையோர்களிற்கு வழிவிட்டு வரலாற்று கடத்தலுடன் “எமது போராட்ட வடிவமாக இளந் தலைமுறையினரிடம் குறிக்கோள் மாறாத அற எழுச்சியினை உருவாக்க வேண்டும்”.
அமுதன் :- தமிழீழமக்களின் இனப்படுகொலை நீதிக்கான போராட்டங்களில் மக்கள் தீர்ப்பாயங்கள்’ எவ்வாறு இருக்கிறது?
நிலவன் :- இலங்கையில் நிகழ்ந்த இனப் படுகொலையைப் பற்றிய விவாதத்தைச் சர்வதேச மட்டத்தில் எழுப்பிய நிகழ்வாக ‘மக்கள் தீர்ப்பாயங்கள்’ அமைந்தன. தமிழினப் படுகொலை நிகழ்ந்ததென்பதை ஆதாரப்படுத்தி உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உலகெங்கும் ஏகாதிபத்திய அரசுகளால், வல்லாதிக்க அரசுகளால் நிகழும் இனப் படுகொலைக் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் குறித்த மக்கள் சார் பிரதிநிதிகளால், அறிஞர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் போன்ற பலரை நீதிபதிகளாகக் கொண்டு விசாரிக்கப்பட்டு அக்குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.
2010இல் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் துவக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயமே முதன் முதலாக இலங்கையில் நிகழ்ந்த படுகொலைகளை உலகிற்கு ஆதாரப் பூர்வமாக வெளிச்சமிட்டுக் காட்டியது. இந்த தீர்ப்பாயம் பல்வேறு முடிவுகளை முன் வைத்தது. அதில் குறிப்பாக இலங்கையில் நிகழ்ந்ததை ‘இனப் படுகொலை’ என விசாரித்து அறிவிக்க வேண்டுமென முடிவினை வெளிப்படுத்தியது.
வடமாகாண சபை 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஏகமானதாக நிறைவேற்றியது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவிருக்கும் திரு. சி.வி.விக்னேஸ்வரன், அப்போது மாகாண சபையின் தலைவர் என்ற வகையில் தாமே இத்தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியிருந்தார்.
அத்துடன் இதனை ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்குச் சமர்ப்பித்து, இதன் கண்டறிவுகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் மேல் நடவடிக்கைகளுக்காக பாரப்படுத்துமாறும் கோரியிருந்தார். இலங்கையின் அரசியல் சட்ட நியாயாதிக்கத்துக்குட்பட்ட வடமாகாண சபை நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை முன்வைத்து இலங்கை அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் விக்னேஸ்வரன் மீது எடுக்கவில்லையென்பதைக் கவனிக்கலாம்.
புலம்பெயர்ந்துள்ள தமிழர்களில் கூடுதலானவர்கள் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழ்கின்றனர். ஒன்ராறியோ மாகாண சட்டசபை 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது தமிழினப் படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமொன்றைச் சட்டமாக்கியது. விஜே தணிகாசலம் என்ற உறுப்பினர் முன்மொழிந்த இந்தத் தீர்மானமானது, ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ம் திகதியை முதன்மைப்படுத்தி வரும் அடுத்த ஏழு நாட்கள் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரமெனக் கொள்ளப்படுமென்பதை அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் பேராதரவுடன் சட்டமாக்கியுள்ளது.
தமிழ் மக்கள் இரண்டு தீர்ப்பாயங்களை வைத்திருந்தார்கள். ஒன்று ரோமின் டப்ளின் தீர்ப்பாயம். இரண்டாவது யேர்மனியின் பிரேமன் தீர்ப்பாயம். இவை சட்ட அங்கீகாரம் பெற்ற தீர்ப்பாயங்கள் எவ்வாறு செயல்படுமோ அவ்வாறான பொறிமுறைகளைக் கையாண்டு தான் அந்த தீர்ப்பாயங்கள் நடாத்தப்படுகின்றன. சர்வதேச நீதிபதிகள் தான் அந்த வழக்குகளை விசாரித்தார்கள். அங்கு நிறையச் சாட்சிகளைப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கொண்டு சேர்த்தார்கள். அந்த இரண்டு தீர்ப்பாயங்களிலும் இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்கிற விடயம் நீதிபதிகளால் சொல்லப்பட்டது.
2009 போரின் பின்னர் புலம்பெயர் நாடுகளுக்கு வெளியேறிச் சென்ற போராளிகளும்,மக்களும் அங்குள்ள இனவுணர்வாளர்களை அணிதிரட்டி தமிழீழ விடுதலை நெருப்பை அணையவிடாது தொடர்ந்து விடுதலைச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். புவிசார் அரசியலின் அடிப்படையில் பலதுருவ அதிகார மையங்களாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. இப் புவிசார் அரசியலில், சக்திமிக்க சர்வதேசப் பிராந்திய அரசுகளின் நலன்களைக் கொண்ட பரிமானங்கள் தமிழீழ விடுதலைப் பயணத்தில் தற்பொழுது சவால்கள் மிகுந்த இக் காலப்பகுதி உருவெடுத்துள்ளது.
எமது இனத்தின் விடுதலை வரலாற்றையும் , தியாகங்களையும், , பண்பாட்டையும், அடையாளங்களையும் பாதுகாத்து, தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து, வகுக்கப்பட்ட “தமிழீழம்” தனிநாடுத் தீர்வுத்திட்டம் நோக்கிய மக்களின் தொடர்ச்சியான நிலைப்பாட்டைக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் உயிரோடு உள்ளாரா?
நிலவன் :- நீங்கள் கேட்பதற்கு நீண்ட விரிவான பதில் தரவேண்டி இருக்கும். இந்த விடயம் தொடர்பாக மீண்டும் ஒருசந்தர்ப்பத்தில் முழுமையாக உரையாடுவோம். இருப்பினும் ஒரு விடயத்தை இங்கு சொல்கின்றேன். 2009 முள்ளிவாய்க்கால் ஆயுத அமைதியின் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முனைப்பை அதன் தொடர்ச்சியை முற்றாகவே அழித்தொழிக்கும் திட்டமும் எதிரியால் மிகக் கவனமாகவே கையாளப்பட்டு வருகிறது. எதிரியானவன் தமிழ் மக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை, பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றங்கள், நாடுகள் வாரியாகத் தீர்ப்பாயங்களென முன்னெடுப்புக்களைச் செய்யவிடாது செயற்படுகின்றான்.
மக்களை ஏமாற்றிய போலி நபர்களை வைத்து போலிச் செய்திகளைப் பரப்பி தேசியத் தலைவரையும் அவரது குடும்பத்தையும் களங்கப்படுத்தும் சதிகளைச் செய்துவருவது மட்டுமல்லாமல் பொய் கூறிக்கொண்டு, அந்தப் பொய்யின் அத்திவாரத்தில் நின்று இனவிரோத சக்திகளை வைத்து இப்போராட்டங்களில் குழப்பத்தை உண்டுபண்ணி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மக்களுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தி மக்களுக்குள் இருக்கும் விடுதலைப் பற்றுறுதியைச் சிதைத்துவிடுவதற்குச் சிங்களம் தனது அடிவருடிகளை ஏவி .பண வேட்டையினையும் ஆரம்பித்துள்ளான்.
முள்ளிவாய்க்காலின் நந்திக்கடலோரப் பகுதியில் 2009ஆம் ஆண்டு மே 17 இரவு தொடக்கம் 18 அதிகாலைவரை நடைபெற்ற இறுதிப் போர்க்களத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது உயிரோடு தான் உள்ளாரா? என்ற சர்ச்சை இன்னும் தொடர்கிறது. எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும்,தமிழீழத் தேசியத் தலைவரும்,தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது. மாறாக, உண்மையினை மறுப்பதும் மறைப்பதும் போராட்டச் செயற்பாடுகளின் சிதைவுக்கே நாளடைவில் வழிக்கோளும். தமிழ் மக்களின் ஒற்றுமையினைக் குலைத்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினை அழித்துவிடும்.
இன்று பெரும் உளவியல்போரையும் எமது இனத்திற்கு எதிரான சதித்திட்டங்களையும் நடத்தி வருகிறது சிங்களப் பேரினவாதம். சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு இதனைத் தடுப்பதற்குத் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றத் தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீரர்களின் கனவுக்குக் கொடுக்கும் மரியாதையாக அமையும். உரியவர்களை உரிய முறையில் உண்மை பேசவைப்பது உலகத் தமிழ் மக்களின் கடமையாகவும் இருக்கும்.
அமுதன் :- உங்கள் மேல் வரும் விமர்சனங்களை எப்படி பார்க்கின்றீர்கள் ?
நிலவன் :- நான் அதிகளவு தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவது என்னுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்குக் கவனிக்கப்படுகிறது என்று நான் நம்புகின்றேன். விமர்சனங்கள் என்னுடைய குறைகளைத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நான் அவற்றைக் கவனத்தில் எடுத்துத் திருத்திக் கொள்ள வேண்டிய கடமை பொறுப்பு எனக்கு உள்ளது . மாறாக இந்த விமர்சனங்கள் என்னைக் கொச்சைப்படுத்துவதாகவும் என்மீது மீது சேறடிப்பதாகவும், அவதூறு பரப்புவதாகவும் இருந்து வருவதனால் அதையிட்டு நான் ஒருநாளும் கவலைகொள்ளவில்லை ஏனென்றால் இவை எனக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றியாகும்.
விமர்சனங்களைச் சமாளிக்க எண்ணுவதை விட. இந்த விமர்சனம் யாரால் ? ஏன்? எதற்கு ? என்று அதற்கான தீர்வை தேடிக் கலங்கி நிற்பதை விட விமர்சனத்திற்கு சிந்திப்பதே விவேகமான செயல் ஆகும். மற்றவர்களைப் பற்றி எப்போதுமே கேவலமாக பேசுகிறவர்கள் மட்டமாக விமர்சனம் செய்கிறவர்கள் இவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. இதுபோன்ற சாக்கடைகளை மற்றவர் மேல் பூச நினைப்பவர்கள் தன் மீதும்அதைத் தெளித்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
இலங்கை இராணுவத்துடன் இணைந்து தேசவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இந்த இராணுவப் புலனாய்வின் நேரடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய போராளிகள் மற்றும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தபடி விடுதலைச் செயற்பாடுகளிலிருந்து முடக்கப்பட்டுள்ளனர்.மனவுளைச்சலுக்கு உள்ளாக்கி அவர்களை தேசியக்கடமையிலிருந்து ஒதுங்கியிருக்கச் செய்தலே இந்த புல்லுருவிகளுக்கு அரசபுலனாய்வு கொடுத்துள்ள பணியாகும்.
எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து இனத் தூரோகச் செயல்கள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போய்விடும் என்ற அச்சம் தமது செயற்பாடு தோற்றுப் போய்விடும் என்று பயம் தான் என்மீது கீழ்த்தரமான வதந்திகளைப் பயன்படுத்தி சேறடிப்பதில் அதிகம் தமிழ் இன தேசவிரும்பிகளாக தங்களை அடையாளப்படும் அவர்கள் இலங்கை இந்திய உளவுத்துறையின் செயற்பாட்டாளர்கள் என்பதை காலம் எனக்கு அடையாளம் காட்டியது,
“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”