மக்களவை தேர்தலுக்கு இடையே பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு, ‘இந்திய மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் பங்கு’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் நோக்கம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த ஆய்வறிக்கையின் (working paper)தலைப்பு. ‘ஷேர் ஆஃப் ரிலிஜியஸ் மைனாரிட்டீஸ் : எ க்ராஸ் கண்ட்ரி அனாலிஸிஸ்(1950-2015).’
இந்தியாவில் பெரும்பான்மை (இந்துக்கள்) மற்றும் சிறுபான்மையினர் (முஸ்லிம்கள்) மக்கள் தொகையின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியைப் பற்றிப் பேசுவதற்காக இதில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுருக்கள் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் நிபுணர்கள் இந்தக் கட்டுரையை விமர்சிக்கின்றனர்.
”1950 மற்றும் 2015 க்கு இடையில் இந்துக்களின் மக்கள் தொகை 7.82 சதவிகிதம் குறைந்துள்ளது. 1950 இல், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் பங்கு 84.68 சதவிகிதமாக இருந்தது. 2015 இல் இந்த பங்கு 78.06 சதவிகிதமாக இருந்தது. 1950 இல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 9.84 சதவிகிதமாக இருந்த முஸ்லிம்களின் சதவிகிதம் 2015 இல் 14.09 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 1950ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் மக்கள் தொகையில் இது 43.15 சதவிகித அதிகரிப்பாகும்,” என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
உண்மையில், இது மக்கள் தொகை அதிகரிப்பின் சதவிகிதம் அல்ல. ஆனால் பங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சதவிகிதமாகும். ஆனால் பல சேனல்கள் இதை தவறான முறையில் காட்டின. இதை பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.
கடந்த முப்பதாண்டுகளில் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு காட்டுகிறது என்று பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பூனம் முட்ரேஜா குறிப்பிட்டார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான புருஷோத்தம் எம் குல்கர்னி, மக்கள் தொகை தொடர்பான விஷயங்களில் நிபுணர். இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதற்கு அவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
“நாம் பொதுவாக சதவிகிதத்தின் சதவிகிதத்தை கணக்கிடுவதில்லை,” என்று பேராசிரியர் குல்கர்னி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
“ஒரு சமூகத்தின் எண்ணிக்கை சிறியதாக இருந்தால், சதவிகித அடிப்படையில் பார்த்தால் மாற்றம் மிகப் பெரியதாகத் தோன்றும். ஒரு சமூகம் எண்ணிக்கையில் பெரிது என்றால் எந்த மாற்றமும் சதவிகித அடிப்படையில் சிறியதாகத் தோன்றும். இது அடிப்படை எண் கணிதம்,” என்று பெங்களுருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸில் ஜேஆர்டி டாடா சேரின் வருகைப் பேராசிரியரான நரேந்திர பாணி பிபிசியிடம் கூறினார்.
ஆய்வறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?
“ஒரு சமூகம் சிறுபான்மையினருக்குச் சாதகமான சூழலை வழங்குகிறது என்றால் அங்கே மூன்று தசாப்தங்களில் அவர்களின் எண்ணிக்கை வளர்ச்சியில் அதிக ஸ்திரத்தன்மைக்கான சாத்தியகூறு உள்ளது” என்பதே இந்த ஆய்வறிக்கையின் அடிப்படைக் கருத்து.
”அதேபோல் ஒரு சமூகம் சாதகமற்ற சூழலை உருவாக்கினால் அல்லது சிறுபான்மையினருக்கான ‘பொருட்கள் மற்றும் சேவைகளை’ பறித்தால், மொத்த மக்கள் தொகையில் அவர்களின் பங்கு குறையும்.”
சுருக்கமாகச் கூறினால் சிறுபான்மையினர் சமூகத்தில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
இந்த ஆய்வறிக்கையை டாக்டர் ஷமிகா ரவி, ஆபிரகாம் ஜோஸ் மற்றும் அபூர்வ குமார் மிஷ்ரா ஆகியோர் எழுதியுள்ளனர்.
உலகின் 167 நாடுகளில் உள்ள மக்கள் தொகை நிலைமையை இந்த கட்டுரை ஆய்வு செய்துள்ளது.
1950 மற்றும் 2015 க்கு இடையில் பெரும்பான்மை (மதத்தின் அடிப்படையில்) மக்கள் தொகை சுமார் 22 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் மக்கள் தொகையில் 1950 இல் 2.25 சதவிகிதமாக இருந்த கிறிஸ்தவர்களின் சதவிகிதம், 2015 இல் 2.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில் கிறிஸ்தவர்களின் மொத்த மக்கள் தொகையில் இது 5.38 சதவிகித அதிகரிப்பாகும்.
1950 இல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சீக்கியர்களின் எண்ணிக்கை 1.24 சதவிகிதம் என்றும் அந்த தாளில் எழுதப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் சீக்கியர்களின் பங்களிப்பு 1.85 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது சீக்கியர்களின் மக்கள் தொகையில் 6.58 சதவிகித அதிகரிப்பாகும்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களின் மக்கள்தொகையின் பங்கும் அதிகரித்துள்ளது.
“ஆனால் சமண மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 1950 இல் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 0.45 சதவிகிதமாக இருந்த சமணர்கள், 2015 இல் 0.36 சதவிகிதமாக குறைந்துள்ளனர். பார்சிகளின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் 85 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 1950 இல் 0.03 சதவிகிதமாக இருந்த பார்சிகள் 2015 இல் 0.004 சதவிகிதமாகக் குறைந்துள்ளனர்.”
தெற்காசியாவில் பெரும்பான்மையினர் மக்கள் தொகையில் மிகப்பெரிய சரிவு (7.82%) இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பிறகு மியான்மர் வருகிறது. கடந்த 65 ஆண்டுகளில் அங்கு பெரும்பான்மை மக்கள் தொகை 10 சதவிகிதம் குறைந்துள்ளது. மியான்மரின் மொத்த மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களின் பங்கு அதிகரித்துள்ளது. ஆனால் சமணம் மற்றும் பார்சிகளின் பங்கு குறைந்துள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.
”இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல், செழிப்பாகவும் உள்ளனர் என்பதை கவனமாக செய்யப்பட்ட 28 ஆய்வுகள் காட்டுகின்றன,’ என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“தெற்காசியாவின் பரந்த சூழலில் இது குறிப்பாக கவனிக்கத்தக்கது. தெற்காசியாவில் பெரும்பான்மை மதப் பிரிவுகளின் பங்கு அதிகரித்துள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மை மக்கள் எண்ணிக்கை ஆபத்தான முறையில் குறைந்துள்ளது,” என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இதன் விளைவு என்ன?
’2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கடந்த முப்பதாண்டுகளில் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது,” என்கிறார் பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பூனம் முட்ரேஜா.
“1981-91 இல், முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் 35.9 சதவிகிதமாக இருந்தது. இது 2001-2011 இல் 24.6 ஆக குறைந்துள்ளது. இந்த சரிவு இந்துக்களை விட அதிகம். அதே காலகட்டத்தில், இந்துக்களின் பிறப்பு விகிதம் (1981-1991) காலகட்டத்தில் 22.7 சதவிகிதமாக இருந்தது. இது 16.8 சதவிகிதமாக (2001-2011) குறைந்துள்ளது. தற்போது 1951 முதல் 2011 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே உள்ளது. இந்த தரவு, இந்த ஆய்வை ஒத்தே இருக்கிறது. இந்த எண்ணிக்கை புதிது அல்ல என்பதை இது குறிக்கிறது,” என்றார் அவர்.
எல்லா மத சமூகங்களிலும் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) குறைந்து வருவதாக பூனம் முட்ரேஜா கூறுகிறார். இதில் 2005-06 முதல் 2019-21 வரை முஸ்லிம்களிடையே மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
“இந்த சரிவு 1 சதவிகிதம். அதே நேரத்தில், இந்து TFR இல் 0.7 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் TFR குறைந்து வருவதை இந்த போக்கு காட்டுகிறது.”
“கருவுறுதல் விகிதம், கல்வி மற்றும் வருமானத்துடன் தொடர்புடையது, மதத்துடன் தொடர்புடையது அல்ல. கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் குறைந்த கருவுறுதல் விகிதம் உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு இதில் அடங்கும். உதாரணமாக கேரளாவின் முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.25 ஆகும். இது பிகாரில் உள்ள இந்து பெண்களின் கருவுறுதல் விகிதமான 2.88 ஐ விட குறைவாகும்,” என்று பூனம் முட்ரேஜா குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் ஊடகங்களில் விளக்கப்படும் விதம் குறித்து முட்ரேஜாவும் கவலையடைந்துள்ளார்.
“முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சியைப் பற்றிய கவலையை உருவாக்குவதற்காக ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் தவறாக சித்தரிக்கப்படுகின்றன. இத்தகைய விளக்கங்கள் திசை திருப்பும் நோக்கம் கொண்டவை மட்டுமல்ல, அவை தவறானவை மற்றும் ஆதாரமற்றவை,” என்றார் அவர்.
65 வருட காலகட்டத்தில் உலகளவில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மதக் குழுக்களின் பங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வு எந்த சமூகத்திற்கும் எதிராக பயம் அல்லது பாகுபாட்டைத் தூண்டுவதற்கு பயன்படுத்தப்படக் கூடாது என்று முட்ரேஜா தெரிவித்தார்.
“முஸ்லிம் மக்கள் தொகையின் அதிகரிப்பை முன்னிலைப்படுத்த ஊடகங்கள் செய்யும் ’தேர்ந்தெடுக்கப்பட்ட’ தரவு சித்தரிப்பானது, பரந்த மக்கள் தொகை போக்குகளை புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது.” என்றார் அவர்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
”மக்கள் தொகை குறையவில்லை. ஆனால் அதன் பங்கு குறைந்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. பார்சிகள் மற்றும் யூதர்கள் தவிர அனைத்து மதத்தினரின் மொத்த மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. சில மதங்களின் வளர்ச்சி விகிதம் மற்ற சிலவற்றை விட அதிகமாக இருப்பதைக் கண்டறிவது அசாதாரணமானது அல்ல,” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் புருஷோத்தம் எம் குல்கர்னி குறிப்பிட்டார்.
”அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை பெருகி வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் மற்றும் பிகாரின் பங்கு அதிகரித்து, கேரளா மற்றும் தமிழகத்தின் பங்கு குறைந்துள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தின் மக்கள் தொகை குறைந்துள்ளது என்பது இதற்கு பொருள் அல்ல. உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரைக் காட்டிலும் அங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் அவற்றின் பங்கு குறைந்துள்ளது,” என்றார் அவர்.
“நாடு முழுவதும் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. ஆனால் பூஜ்ஜியத்தை அடைய நேரம் எடுக்கும். இது மக்கள் தொகை வேகம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது, இந்தியா ஏற்கனவே சரியான பதிலீடு நிலையில்(replacement) உள்ளது. இதன் பொருள் இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் உண்மையான வளர்ச்சி விகிதம் 45 முதல் 50 ஆண்டுகளுக்கு நேர்மறையாக இருக்கும். அதன் பிறகு மக்கள் தொகை குறையத் தொடங்கும்.”
முஸ்லிம்களைப் பற்றிப் பேசிய பேராசிரியர் குல்கர்னி, “தற்போது அவர்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதால், பூஜ்ஜியத்தை அடைய அதிக காலம் எடுக்கும். இந்துக்களைப் பொருத்தவரை இது 84.6 லிருந்து 78.6 ஆக குறைந்துள்ளது. இது ஆறு சதவிகித சரிவு. நாம் சாதாரணமாக ’சதவிகித்தின் சதவிகிதத்தை’ கணக்கிடுவதில்லை,” என்று குறிப்பிட்டார்.
“இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 9.84 சதவிகிதத்தில் இருந்து 14 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது சுமார் 4 சதவிகித அதிகரிப்பு. இது (ஆய்வறிக்கையில்) ஒன்பது சதவிகிதத்தின் நான்கு சதவிகிதம் அதாவது 43 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையில் பார்த்தால் நாட்டில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் தான் நடத்தப்பட்டது.” என்று அவர் கூறுகிறார்.
“2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதத்தில் சரிவு தெளிவாகத் தெரிந்தது. இது இயற்கையான செயல். ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிலையை அடைந்தவுடன் மக்கள் தொகை விகிதம் குறையத் தொடங்குகிறது. தேர்தலுக்கு மத்தியில் இதுபோன்ற ஆய்வை நீங்கள் பொதுவெளியில் வெளியிடுவது, உங்கள் ஏமாற்றத்தின் அடையாளம்,” என்று பேராசிரியர் பாணி கூறுகிறார்.
நிபுணர்களின் விமர்சனத்தைத் தொடர்ந்து பிபிசி, இந்த ஆய்வறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான டாக்டர் ஷமிகா ரவியை தொடர்புகொண்டு பதிலைப் பெற முயன்றது. ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
அவருடைய தரப்பிலிருந்து ஏதேனும் பதில் வந்தால் அது இந்த அறிக்கையில் பின்னர் இணைக்கப்படும்.
இம்ரான் குரேஷி
பதவி,பெங்களூருவில் இருந்து, பிபிசி இந்திக்காக