தமிழ் இன விடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் குறித்த தமிழ் இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாத ஒன்று ஒட்டு மொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்துக்காகத் தமது பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும் போது தான், விடுதலைக்கான மக்கள் புரட்சியும், அதன் மூலமான இன விடுதலையும் சாத்தியமாகும்.
தமிழர் நாம் ஆண்ட பூமி தமிழுக்கும், தமிழ் மக்களுக்குமான தனித்துவ வரலாற்றைக் கொண்டு வாழ்ந்த இனம். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட “தனிநாடு தமிழீழம்” வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தைத் தமிழர் தேசத்தின் பால் திரும்பிப் பார்க்க வைத்த இன விடுதலைப் போராட்டம். அந்தப் போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசு உலகப் பேராதிக்க நாடுகளின் துணையோடு நசுக்கி எமது நாட்டைச் சுடுகாடாக்கி நிறுத்தியிருக்கின்றது.
உலகத்தில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த தமிழ் இனம் இன்றைக்குச் சொந்த நாட்டில் வாழமுடியாத ஏதிலிகளாக வாழ்கின்றோம். தமிழ் மக்கள் நாட்டை சிங்கள பேரினவாத அரசு ஆக்கிரமித்திட உறவை இழந்து வீட்டை இழந்து, உடமை இழந்து, நடைப்பிணமாக வாழும் இனமாகத் தமிழ்த் தேசிய இனம் 130 நாடுகளில் ஏதிலிகளாகப் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். இன அழிப்பிற்கு உள்ளாகி நாடற்ற இனமாக உலகத்தாரிடம் நீதி கேட்டு நிற்கின்றோம். தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கும் உரிமைக்கும் போராடிய மக்களின் தமிழ் இராணுவம் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, தமிழீழ தனியரசை அமைத்துக் காட்டினார்கள்.
விடுதலைப்பயணத்தில் உறுதியுடன் எழுச்சிகொண்ட. விடுதலைத்தீ தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்கு எடுத்துச்சென்ற வீரம் செறிந்த வாழ்வியலாலும் வளர்த்தெடுத்த தமிழ்த் தேசியம் எனும் பெருவிருட்சம். நாடுகள் எல்லைகள் கடந்தும் தலைமுறைகள் கடந்தும் பெருவளர்ச்சியுற்று நிற்கின்றது. தனித்தமிழீழம் அமைக்கத் தமிழரால் முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துடன் விடுதலைப் புலிகளை ‘தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் சர்வதேச சமூகம் நிகழ்த்தியிருந்த சந்திப்புகளும் பேச்சுகளும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தியிருந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், எங்கிருந்து உருவாகினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு என்ன, ஏன் தமிழ் மக்கள் எதற்காகப் போராடினார்கள் என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி இன விடுதலைக்கு போராடியவர்கள் “ஒரு தீவிரவாத இயக்கம்” என்ற சொல்லுக்குள் சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இன விடுதலையை நசுக்குகின்றார்கள். அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிரான மக்கள் தான், தங்கள் உயிர் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்புடன் , எழுச்சியடைந்து விடுதலைப் போராடினார்கள். அந்த “மக்கள் தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள் தான் அந்த மக்கள்”! என்பதை உலகிற்கு எடுத்துரைத்தார்கள்.
தமிழீழ தனியரசைக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடுவோம் என்பதை உலகுக்குப் பறைசாற்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து . தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலை வாசகத்தை உரக்கக் கூவி, தன் வாழ்வைத் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். “தியாகம் என்றால் திலீபன்– திலீபன் என்றால் தியாகம்” என்ற போராட்ட வரலாறு மகத்தானது. இன விடுதலை உரிமை வேண்டிய இலட்சியத்தின் அணையாத நெருப்பானது. இந்தியாவுக்கு எதிராக அகிம்சை ரீதியில் போராடி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயக மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.
இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமைக்கு எதிராக முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில் எமது தமிழ் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம், பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியைக் கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளும் ஏமாற்றங்களுமே பரிசாகக் கிடைத்தன. நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன். அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான், ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன.
தனியான மொழி கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றை அழிப்பதினூடாக அவர்களின் தனித்துவம் அடையாளத்தை அழித்து நாடு முழுவதையும் சிங்கள தேசமாக மாற்றிட மரபுரிமைகளை அழித்தும் அவற்றை திரிபுபடுத்தியும் பௌத்த மயமாக்கல் என்னும் வேலைத்திட்டம் மும்மரமாக நிகழ்ந்திட, தமிழர் தாயகத்தில் பல அக்கிரமங்களும் அடாவடிகளும் அரங்கேறிட, எதிர்த்து நின்ற தமிழ்த் தலைமைகள் , மக்களும் சமூக ஆர்வலர்களும் சிங்களக் காடையர்களினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். எத்தனை இனக்கலவரங்களில் படுகொலைகள். தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும். எத்தனை பெண்கள் வார்த்தைகளினால் சொல்லமுடியாத பாலியில் வன்முறைகள் எதிர்கொண்டிருப்பார்கள். மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் எமது கைகளிலே ஆயுதங்களை ஏந்த வைத்தார்கள். சிங்களப் பேரினவாதம்தான் தேச விடுதலைக்காகத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணி திரண்டு நிற்பதற்குக் காரணம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் சிங்களப் பேரினவாதம்தான் காரணம். விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்தின் அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காவல் தெய்வங்களாக காத்தார்கள். எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளினால் தீர்க்கப்படும் என்ற உயர்ந்த நம்பிக்கையினையும், தன்நிறைவுப் பொருளாரதாரம். நீதி மற்றும் நிர்வாக அலகுகள் மூலமும் “மக்கள் என்றால் புலிகள் – புலிகள் என்றால் மக்கள்” எனப் போற்றப்பட்டார்கள். தமிழீழ தேசத்தின் உருவாக்கத்திற்கு உறுதுணையான உட்கட்டுமான திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ மாணவர் அமைப்பு, சுதந்திரப்பறவைகள் ரடோ (RADO) போன்ற அமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இந்த அமைப்புக்கள் ஊடாக பிரதேச பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தார். சுதந்திரப்பறவைகள் மூலம் பெருமளவு மகளிர் விடுதலைப் போராட்டத்தினுள் உள்வாங்க்பட்டனர். மாணவர்கள் தமிழீழ மாணவர் அமைப்பின் மூலம் விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை வழங்கத் தலைப்பட்டார்கள்.
அகிம்சைக்கே அடையாளமெனக் கருதப்பட்ட பாரத தேசம், தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தைக் காலடியில் போட்டு மிதித்தது. தியகச் செம்மல் திலீபனால் அன்று ஆரம்பிக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் பல ஆழமான விடயங்களை இன்றைய காலகட்டத்தில் தமிழினத்துக்கு நினைவுறுத்தி நிற்கிறது. வீரமும்,விவேகமும்,வழிநடத்தலும், தியாக ஆன்மங்களின் நீண்ட பயணமது. ஒப்பற்ற வீரனின் கனவுகளைச் சுமந்து நிற்கின்ற ஒவ்வொரு தமிழர்களும் திலீபனை நினைவு கூர்ந்து நிற்பது ஒவ்வொருவரினதும் வரலாற்றுக்கடமையாகும்.
தமிழ் இன விடுதலைக்காக , சிங்கள அரசின் அடக்கு முறைகளில் இருந்து தமிழினத்தைக் காக்கும் நோக்குடனும் இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உணவு முழுவதுமாக ஒறுத்த திலீபனின் உடல் வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலை குலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆத்மா, அவனது உடலைவிட்டுப் பிரிந்து தியாகச் சாவடைந்தார். அன்று இந்தியா மௌனமாய் இருந்து. ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் ‘காந்தியம்’ என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தை வெளிக்காட்டியது. காந்திதேசத்துன் மீது தமிழர்களின் நம்பிக்கையின் பற்றுதல் தளர்ந்த நாள்கள். அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தமிழரை இன அழிப்பு செய்து வருவது தொடர்கதையாகத் தொடர்கின்றது.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இனக்கலவரத்தின் கோரப்பிடியில் சிக்கி தமிழ் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்த காலம் அது. சிங்களத்தின் இனவாதப் படைகளின் அட்டூழிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட போராளிகளில் சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் சிங்களக் கொடும் வெறியர்களால் ஈவிரக்கமின்றிக் கொல்லப் பட்டார்கள் , சிங்களக் காடையர்களால் இலங்கை முழுவதும் பெரிய இனக் கலவரத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி தமிழர்களை ச கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்கள் வகை தொகையின்றி பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்து தாண்டவம் ஆடியது.
ஊரெழுவில் மூன்று சகோதரர்களுடன் பிறந்த அந்த உரிமைத் தாகம் பிறந்த ஒன்பது மாதத்தில் தாய் இழந்து பின்னர் தந்தையையும் இழந்து சகோதரர்களால் வளர்க்கப்பட்டார் . யாழ் இந்துக்கல்லூரியின் விழுதுகளில் ஒருவனாய் 1982 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் திறமைச் சித்தியெய்தி யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்துக்குத் தெரிவானார் . தனது பள்ளிப் பருவத்தில் சிறந்த சதுரங்க வீரனாக விளங்கிய திலீபன் மாவட்டத்தில் சிறந்த சதுரங்க வீரனாக 4 தடவைகள் தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு விளையாட்டுக்குழுவின் தலைவனாகவும் விளங்கினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவனாகக் கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் விடுதலைத் தாகம்கொண்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே பிரபாகரனைத் தலைவராக ஏற்றுத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் திலீபன் என்ற பெயரில் தன்னையும் இணைத்துக் கொண்டார். விடுதைப்புலிகள் இயக்கத்தால் இவருக்கு திலீபன் எனும் பெயர் வழங்கப்பட்டது. இடைக்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற மோதல்களில் பங்கு கொண்டர். 1987 இல் மே மாதம் தாக்குதல் ஒன்றில் வயிற்றில் படுகாயமடைந்து ஒரு சில மாதங்கள் வரையில் சிகிச்சை பெற்று மீண்டும் மிடுக்குடன் செயற்பட ஆரம்பித்தார்.
கருத்தியல் ரீதியாக ஆழமான புரிதல் கொண்ட ஒரு போராளியாக யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். தன் பேச்சுக்களால் மக்களின் மனங்களைக் கவர்ந்த போராளி . “யாழ்.கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ, அன்றுதான் சுதந்திர தமிழீழத்தின் ஆரம்பம்”. இந்த வெற்றி நான் என் உயிருக்கு மேலாக நேசிக்கும் என்மக்களுக்குகிடைக்கட்டும். மக்கள் அனைவரும் முழுமையாகப் போராடத் தயாரானால் நிச்சயமாகத் தமிழீழத்தை அமைக்கமுடியும். நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் மக்கள் புரட்சிக்குத் தயாராகவேண்டும்.என அன்று அவர் பேசிய பேச்சுக்கள் இன்றும் நிலத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் இருக்கின்ற தமிழர்களைத் தமிழ் இன விடுதலையின் ஒன்றினைய தமிழ் தேசிய மக்கள் புரட்சிக்கு வித்திட்டுள்ளது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் ‘‘எமது போராட்ட வடிவம் மாறலாம். ஆனால் எங்கள் குறிக்கோள் என்றுமே மாறாது’’ என்று சூளுரைத்திருந்தார். போராட்டத்தின் மற்றொரு வடிவமாக அகிம்சைப் போராட்டத்தை விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுத்திருந்தனர். யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டுவந்த திலீபன் அவர்கள் இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரக்கால சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முற்றாக கைவிட வேண்டும், என்ற இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தண்ணீரும் அருந்தப்போவதில்லை’ இந்திய அரசிடம் நீதி கேட்டு சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை அறிவித்து ஈடுபட்டர்.
தமிழ் மக்களின் விடிவுக்காக,தன் வாழ்வைத் தியாகம் செய்து, தன் சாவைச் சரித்திரமாக்கிட ஆயுதம் அகிம்சை என்ற அழைக்கப்பட்ட கோட்பாடு 36 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் பௌத்த சிங்களர்களின் இனவெறியைக் கண்டித்து தமிழரின் தாயக தேசம் எங்கும் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இனவாத அரசுக்கு எதிராக அகிம்சைத் தீயை நல்லூரில் வீதியில் திலீபன் பற்ற வைத்தார்.
மேடைகளில் மாணவர்கள், பெண்கள், போராளிகள் என பலரும் கவிதைகளை ஒலிபெருக்கிகளில் வாசித்துக் கொண்டே இருந்தனர். தமிழீழத்தின் பல பாகங்களிலும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் தமிழர் தாயக மண் அலங்கரிக்கப்பட்டு பரவலாக மக்கள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். போராட்டத்தின் 12-ம் நாள் செப்டம்பர் 26, 1987 அன்று காலை 10:48 மணிக்குத் தாயக விடுதலைச் சாவில் தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனாக 265 மணிநேர உணவுதவிர்ப்பு போராட்டத்தினை நடத்தி தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தினார். தமிழீழப் பிரதேசம் முழுவதும் சோகத்திலும், கோபத்திலும் ஆழ்ந்த வரலாறு பதிவானது.
அகிம்சையைப் போதித்த காந்திய தேசம் என்று சொல்லப்பட்ட இந்தியா, தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டத்தின் முன் தோற்றுப் போனது. 12 நாட்கள் நீர் உணவு தவிர்ப்பு என அகிம்சைப் போராட்டத்தில் தன்னை நித்தமும் உருக்கிய வீரச்சாவை வேடிக்கை பார்த்து திலீபனை சாகடித்து. இந்திய இராணுவத்திற்கு எதிராக மக்களை திருப்பினர். இந்தியா விடுதலைப் புலிகள் இந்தியாவை ஈழமண்ணிலிருந்து அடித்து விரட்டி துரத்தும் அளவுக்கு மாற்றம் கண்டது.
புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல, அகிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரப்பிச் சென்ற தியாக தீபம் திலீபன் அவர்கள் அரங்கில் பேசும் போது “எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். இன்று வரை 650 பேர் வரையில் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளார்கள்.
கப்டன் மில்லர் இறுதியாகப்போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டுக்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம் ” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொறியை எடுத்துச்சென்றான். வீரச்சாவடைந்த 650 பேரும் அனேகமாக எனக்குத் தெரிந்தவர்கள் . அதை நான் மறக்க மாட்டேன். நீர் , உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தலைவரின் அனுமதியைக் கேட்டபோது அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளது “திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்” என்று கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனைத் தனது உயிரை சிறிதும் மதிக்காத மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாகத் தமிழீழத்தைத் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து வீரச்சாவடைந்த மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன் எனக் கூறினார். அவரின் பேச்சைக்கேட்டு மக்கள் தமிழீழம் என்ற அந்த உன்னத இலட்சியத்துக்காய் எழுச்சி கொண்டனர் .
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கிய திருப்பத்தைச் சந்தித்தது. தேற்காசியவின் வல்லரசாகத் துடிக்கும் இந்தியா தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக நேரடியாக தலையிட்டது. தமிழீழ மக்களின் பிரச்சனை குறித்து இந்தியாவினதும், அன்றைய இலங்கை பௌத்த சிங்கள இனவாத அரசுகளுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்திய மற்றும் சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு நியாயமான சமாதானத்தீர்வை தரப்போவதில்லை என்பதைத் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு எதுவும் கிட்டாது’ என்பதைத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ஏற்கனவே வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். எத்தனை ஒப்பந்தங்கள் வந்தாளும் சிங்கள இனவாதப்பூதம் அந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் என்பதை விடிதலைப்புலிகள் பல முறை மக்களுக்கு வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இந்திய அமைதிப்படை என நம்பி ஆக்கிரமிப்புப் படையினைக் கண்டு கண்டு மக்கள் அமைதி வழிக்குத் திரும்பி நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக நினைத்து மகிழ்ந்தபொழுது, இனி பௌத்த சிங்கள பேரினவத்தாத்திடமிருந்து இந்திய இராணுவம் எம்மை காக்கும் என எண்ணிக்கொண்டிருந்தார்கள். அகிம்சை எனும் உயரிய ஒழுக்கத்தின்பால் இயங்குவதாக காட்டிக்கொண்டிருந்த இந்தியா, தனது கோரமுகத்தைக் காட்டியது.
இலங்கையில் நடைபெற்ற நடைபெற்றுவரும் தமிழின அழிப்பு மற்றும் தமிழினக் குறைப்பு நடவடிக்கைகள் காலத்திற்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்கொண்டதாக 1987இல் திலீபனின் உயிரில் விளையாடத்தொடங்கி, இந்திய வல்லாதிக்க இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடல் படைகளால். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள், கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்குள் சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணிய இந்திய மற்றும் இலங்கை பௌத்த பேரினவாத அரச திட்டத்தில் அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்தியக் கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வரலாற்று தியாகத்திற்கு முன்னால் இந்திய இனத் துரோக அரசு வெட்கி தலைகுனிந்தது. இது மட்டுமல்ல இப்படி இந்தியாவின் துரோகத்தை பட்டியலிட முடியும். இப் பட்டியலின் வரிசையிலே 2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கள் வரையில் இடம்பெற்ற இன அழிப்பில் 146697 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். 2009 மே மாதம்,15, 16,17,18,19 ஆகிய தேதிகளில் வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேல். முள்ளியவாய்க்கால் வரை இந்திய வல்லாதிக்க அரசு தனது வஞ்சக, கபட அரசியலால் தமிழினத்தையே சிதைத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் போராளிகள் உட்படப் பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டார்கள். இதற்கான சாட்சியங்களும் இருக்கின்றன அவ்வாறு சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பற்றிய தேடுதல்களும் கேள்விகளுமே இந்தியாவின் வாக்குறுதிகளை நம்பியே போராளிகள் சரணடைந்தார்கள் என்ற முக்கிய விடயம் பற்றி யாரும் பேசுவதில்லை. இராணுவத்தினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டோர் விடயத்தில் பொறுப்புள்ள பதிலை இலங்கை இந்திய அரசுகள் கூறவேண்டும். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை தொடர்ந்தும் முயற்சிகளையும் அழுத்தங்களையும் பிரயோகித்துக் கண்டறிய வேண்டும்.
அன்றைய நடப்பில் இருந்த இந்திய ஒன்றிய அரசு காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி செய்தபோது இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு அளித்த உதவிகள் குறித்த ரகசியத்தை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒப்புதல் வாக்குமூலமாகப் பகிரங்கப்படுத்தியுள்ளார். 2010-ம் ஆண்டு ஜூலையில் அதிமுகாவின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈழப் போரில் அப்பாவி மக்கள் படுகொலைக்குக் காரணமான திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியினரை தமிழ் இன அழிப்பின் குற்றவாளிகளாக அறிவித்து விசாரிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
தமிழ் மக்கள் மீதான பேர் என்பது இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து உருவாக்கியது . நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வு ஒன்றை முன் வைப்பதற்குப் பதில் இன விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் கொடூரமான இன அழிப்பு யுத்தத்தினை முன்னெடுத்தன இந்திய, இலங்கை அரசுகள். தவறான வரலாற்றுப் புரிதல்களை, சிந்தனைக் கருடத்துப்படிமங்களை உருவாக்கிக் கொள்ளுவதன் ஊடாக, தமது அதிகார வலைப்பின்னலில் தமிழீழ செயற்பாடுகளை அகப்படுத்திக்கொள்ளும் முன்முயற்சிகளில் முனைப்புடன் அன்று தொட்டு இன்றுவரை ஈடுபட்டு வருகின்றார்கள்.
எமது வரலாற்று ரீதியான மற்றும் ஆத்மார்த்த ரீதியான அபிலாசைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்த ஈழ தேசத்தில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் தனியான தேசிய இனத்தவர்கள். தாயகப் பிரதேசத்திற்கென்று தனியான வரலாறு, மொழிச்சிறப்பு, தனித்துவமான பண்பாட்டு விழுமிய வழக்காறுகள் என்பவற்றுடன் பொருளாதார வளங்களையும் இயல்பாகக் கொண்டிருப்பவர்கள். முன்னாள் ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்ராலின் தனியான தேசிய இனமொன்றுக்கு வகுத்த வரைவிலக்கணப்படி தேவையான பரிமாணங்கள் முழுமையினையும் தன்னகத்தே கொண்ட இனமாகத் தனித்துவமாக வாழ்ந்திருக்கின்றோம்.
தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகளா? ” கொடிய ஆயுதங்களை வைத்து தமிழ் தேசிய இன மக்களைக் கொன்று குவிக்கும் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் செய்யாத இனப்படுகொலைகள் இன அழிப்பை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச தரப்பினர், வடக்கு, கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை விரைந்து எடுத்து, துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களைப் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிப்படுவதுடன், திட்டமிட்ட வகையில் இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
2009 ஆம் ஆண்டின் பின்னர் நடந்துவரும் நில ஆக்கிரமிப்புக்கும் தமிழர் பிரதேசங்களில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் தமிழ் இன குறைப்பும் இன சுத்திகரிப்பும் செய்வதும். புலிநீக்க அரசியலை மேற்கொள்ளும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட நினைவிடங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும், அவற்றை முற்றாக நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள். தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசுடன் தமிழ் மக்கள் இணக்கமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இனி இல்லை என்பது வெளிப்படையாக அன்றும் இன்றும் தெரிகின்ற விடயம்.
இனப் படுகொலைகள்- இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை நடத்த எதிர்பார்க்கின்ற தருணத்தில், இவ்வாறான அடையாளங்களை அழித்து, மக்களின் எண்ணங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறைக்குள் தமிழர்களுக்கான நீதியைத்தேடும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்குள் ஒருபோதும் தமிழர்களுக்கு நீதியைத் தாம் தரப்போவதில்லை என்பதையே இனவாத சிங்கள பேரினவாத அரசைப் போலவே சிங்களவர்களும் அழுத்தமாகச் சொல்வதே இந்த மக்களின் ஐனநாயகப் போராட்டங்களை வன்முறைகளை ஏவிவிட்டு அடக்குவதை குறிகாட்டுகிறது. இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் இனவாத ஆக்கிரமிப்புக்களே.
இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் படைகளை மட்டுமே எதிர்த்துப் சுதந்திர விடுதலை வேண்டிப் போராடினார்கள். தமிழீழ அரசை ஆண்டுவந்த தமிழர் இராணுவம் ( தமிழீழ விடுதலைப் புலிகள் ) உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, இனத்தின் மேல் பற்றுக் கொண்ட இவர்கள் தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா? தாயக விடுதலை நோக்கிப் பயணித்த உயரிய இலட்சியத்திற்காய் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்டவர்கள் மாவீரர்கள். புலிகள் இருந்தவரைத் தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு பாதுகாப்பு நிலை இருந்தது என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. தியாக தீபம் திலீபன் அவர்கள் தன் தியாகத்தின் மூலம் சொல்லிச் சென்ற செய்தியை, அதன் முக்கியத்துவத்தை தன் பரிமாணத்தைச் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது அடுத்த கட்ட நகர்வை மேற் கொள்ள வேண்டியதானது காலத்தின் கட்டாயமாகும்.
மண்டியிடா வீரத்துடன் களமாடி விடுதலைப்போராட்ட நியாயத்தையும் எமது மக்கள்படும் அவலத்தையும் இன அழிப்பின் சாட்சியங்களையும் சர்வதேச சமூகத்திடம் தமிழ் இன அழிப்புக்கான தீர்ப்பாயங்கள் மூலம் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஆதரவைப் பெறும்வகையில், வெளிப்படுத்த வேண்டிய பாரியபொறுப்பை எம் தோல்களில் சுமந்து நிற்கின்றோம். இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புக்கள் சொல்வதைச் செய்யாது. சமரசமற்ற வகையில் எமது இனத்தின் விடுதலைக்காகக் குரல்கொடுக்க வேண்டிய கடமையையும் வரலாற்றையும் இளைய சமுதாயத்தின் கைகளில் ஒப்படைத்திருக்கின்றது.
எதிரியானவன் தமிழ் மக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை, பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றங்கள், நாடுகள் வாரியாகத் தீர்ப்பாயங்களென முன்னெடுப்புக்களை செய்யவிடாது உள்ளார்கள். மக்களை ஏமாற்றிய போலி நபர்களை வைத்து போலிச் செய்திகளைப் பரப்பி தேசியத் தலைவரையும் அவரது குடும்பத்தையும் களங்கப்படுத்தும் சதிகளைச் செய்துவருவது மட்டுமல்லாமல் இனவிரோத சக்திகள் பண வேட்டையினை ஆரம்பித்துள்ளார்கள்.
ஈழத்தில் வாழும் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் ஆடக்குமுறைக்குள் அச்சம் மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளி மக்களின் இயல்பான வாழ்வை முடக்கிப் போராட்டங்களை ஒடுக்கும் அடக்குமுறைத் தனம் மிக்க அரசியல் புத்தியுடன் ஆக்கிரமிப்பு அரசியல் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றார்கள். உலக வல்லாதிக்க கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத அரசுகளின் சதிவலையில் அகப்பட்டவர்களாக இருக்காது தமிழ் இன அழிப்புக்கு நீதி தேடும் போராட்டத்தில் எம்மைப் போன்று அடக்குமுறைக்கு எதிராக போராடும் பிற இன மக்களோடு கைகோர்த்து நாம் பன்னாட்டு அரங்கிலே அநீதிக்கெதிரான மாபெரும் அணியாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னிறுத்த வேண்டும்.
தமிழர், தமிழீழம் என்ற எல்லைக்கோடுகளை புலத்தில் இளைய தலைமுறையினர் ஒன்றினைந்து பன்னாடுகள் தழுவிய ஓர் ஒருங்கிணைவு ஒருமித்த கூட்டு இலக்குகளிற்காக “தமிழீழம்” என்ற கொள்கையை முன்னிறுத்தி ஓர் தேசமாக எண்ணி சிந்தித்துச் செயற்பட வேண்டும். துறைசார் திறன் கொண்ட ஆளுமைகள் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்தியாக இருக்கின்ற எமது இளம் தலைமுறையினரை நாம் முன்நிறுத்திச் செயற்பட வேண்டும். ஓர் தலைமுறை மாற்றமும், எமது நீநிகோரும் போராட்ட வடிவத்தின் மாற்றமும் காலத்தின் தேவை என்பதை களத்திலும், புலத்திலும் உள்ள தமிழ் தேசியத் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களே எம் இனத்தின் எதிர்காலம் என்பதையும் புரிந்துகொண்டு இளையோர்களிற்கு வழிவிட்டு வரலாற்று கடத்தலுடன் “எமது போராட்ட வடிவமாக இளந் தலைமுறையினரிடம் குறிக்கோள் மாறாத அற எழுச்சியினை உருவாக்க வேண்டும்”.
புவிசார் அரசியலின் அடிப்படையில் பல்துருவ அதிகார மையங்களாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. இப் புவிசார் அரசியலில், சக்திமிக்க சர்வதேசப் பிராந்திய அரசுகளின் நலன்களை கொண்ட பரிமாணங்கள் தமிழீழ விடுதலைப் பயணத்தில் தற்பொழுது சவால்கள் மிகுந்த இக் காலப்பகுதி உருவெடுத்துள்ளது. எமது இனத்தின் விடுதலை வரலாற்றையும் , தியாகங்களையும் , பண்பாட்டையும் ,அடையாளங்களையும் பாதுகாத்து, தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து, வகுக்கப்பட்ட “தமிழீழம்” தனிநாடுத் தீர்வுத்திட்டம் நோக்கிய மக்களின் தொடர்ச்சியான நிலைப்பாட்டைக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
ஒரு மாவீரனின் தியாகம் நமக்குச் சொன்ன, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தி என் அன்புத் தமிழ் மக்களே! விழிப்பாக இருங்கள்! விழிப்பாக இருங்கள்!!“ எமது நாட்டில் எமது ராணுவம் நிலைபெறும் வரை, எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை, எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது. அதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் நாம் தமிழீழம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும் “ என்று சொன்ன திலீபன், அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும். தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ் மக்கள் விழித்துக்கொண்டு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”