இலங்கைத் தீவின் தமிழர் வாழும் பகுதிகளில் வெளிப்பட்ட மனிதப் புதைகுழிகள், சிங்கள பௌத்த பேரினவாத அரக்கர்களுக்கு எதிரான பூதாகார ஆதாரங்களாக எழுந்து நிற்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகளை ஆவணப்படுத்தாமல் தவிர்ப்பதென்பது நடைமுறை அரசியல் எதார்த்தம். அந்த வகையில் இந்த மனிதப் புதைகுழிகளின் ஆய்வுகளையும் அதில் சேகரிக்கப் பட்ட செய்திகளையும் மறைத்து மடைமாற்றச் சிங்கள, இந்திய மற்றும் சர்வதேச நாடுகள் செய்யும் சூழ்ச்சிகளைக் குறித்தும், அதற்கான நீதி கோரலைக் குறித்தும் நம்மிடம் உரையாட இணைந்திருக்கிறார் நிஜத்தடன் நிலவன் அவர்கள்.
இளங்கீரன்:-இனப்படுகொலை பற்றிய தெளிவையும், தமிழினத்தின் மீது ஏவப்பட்ட இனப்படுகொலை குறித்த வரலாற்றையும் விளக்க முடியுமா?
நிலவன்:-பௌத்த பேரினவாத சிங்கள அரசு இலங்கையில் 75 ஆண்டுகளுக்கு மேலாகக், தமிழர்களை முற்றாக அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட , மேற்கொள்ளப்படுவாரும் செயல்பாடே இன அழிப்பு ஆகும். மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது இது ஜெனோசைட்’ (Genocide) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தையை முதன் முதலில் ரபேல் லேம்கின் என்பவர் 1944ல் வெளிவந்த “Axis Rule in Occupied Europe” என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார். ஜெனோசைட்டில் வரும் முதல் பாதி சொல்லான `ஜெனொஸ்’ என்பது கிரேக்கச் சொல் ஆகும், அது `இனம்’ அல்லது பழங்குடி என்ற பொருள் தருகிறது.`சைட்’ எனப்படும் இலத்தின் சொல் `கொல்வதற்கு’ என்ற பொருள் தருகிறது, இந்த இரண்டும் சேர்ந்தே `ஜெனொசைட்’ என்ற வார்த்தை உருவானது.
யூத இனப்படுகொலையின் போது தனது சகோதரன் தவிர குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த ரஃபேல், இனப்படுகொலை சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக இனங்காணப்பட வேண்டும் எனபிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார். இதனை அடுத்து 1948 டிசம்பரில் இனப்படுகொலை குறித்த ஐ.நா தீர்மானத்தில் இது உள்வாங்கப்பட்டு பின்னர் 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. ஒரு இனக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான தீங்கினை ஏற்படுத்துவது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
அந்த இனக் குழுவில் புதிதாகப் பிறப்புக்களைத் தடுக்கும் நோக்கில் செயற்படுவது, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவுடன் சேர்ப்பது, ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இனப்படுகொலை என ஐநா தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, தடுப்பு நடவடிக்கைகள் Responsability to Protect எனும் சர்வதசே கோட்பாட்டுக்கு அடித்தளமாக அமைகின்றன. 2005ன் உலக உச்சி மாநாட்டில் (2005 World Summit), உறுப்பு நாடுகள் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவற்றின் தூண்டுதலிலிருந்து தங்கள் மக்களை பாதுகாப்பதற்கு உறுதி பூண்டன. குறிப்பாக, இப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாடுகளுக்கு உதவி தேவைப்படும் போது, சர்வதேச சமூகம் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என்றும் இது போன்ற குற்றங்களிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாக்க அரசாங்கங்கள் தவறினால், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக, சர்வதேச சமூகம் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்றும் இக் கோட்பாட்டின் ஊடாக நாடுகள் உறுதி எடுத்துக் கொண்டன. இது சர்வதேச சட்டத்திலும் இனப்படுகொலை உடன்படிக்கையிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது.
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்புத் தொடர்பாக 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபை தீர்மானங்களின் பந்திகள்,138 மற்றும்,139 ஆகிய இரண்டும் எடுத்துக் கூறுகின்றன. இப்பந்திகள் இரண்டும் 2006 ஆம் ஆண்டு சித்திரைமாதம் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1674 ஆம் இலக்கத் தீர்மானத்தின் மூலம் “ஆயுத மோதல்களின் போது பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புச் சபைக்கு உள்ளது” எனத் திருத்தப்பட்டது.
இதன் பின்னர் இனப்படுகொலை என்பதற்கான வரைவிலக்கணத்தை 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை “பாலியல் வன்முறை, பாலியல் ரீதியான ஏனைய வன்முறைகள் என்பனவும் யுத்தக் குற்றங்களாகவும், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவும், கருதப்படும் என 1820 ஆம் இலக்க தீர்மானத்தின் மூலம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
ஆர்மேனியன் இனப்படுகொலை – Armenian Genocide, கிரேக்க இனப்படுகொலை, பெரும் இன அழிப்பு (2ஆம் உலகப் போரில் யூதர் இனப்படுகொலை)Holodomor இனப்படுகொலை, கம்போடியா இனப்படுகொலை, Communist genocide, ருவாண்டா இனப்படுகொலை, போசுனியன் இனப்படுகொலை, குர்துமக்கள் இனப்படுகொலை, தார்ஃபூர் போர் இனப்படுகொலை போன்ற பல இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் உலகில் 2008ஆம் ஆண்டிற்குப் பின் நடந்த மாபெரும் இனப் படுகொலையையாக ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
இளங்கீரன்:-வரலாற்றில் நாஜிக்களால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தவிர அந்த நூற்றாண்டில் வேறேதும் நடந்திருக்கிறதா? இலங்கைத் தீவு விடுதலை அடைந்த பின் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள், இனப்படுகொலை அலகுக்குள் அடங்கும் என்று நினைக்கிறீர்களா?
நிலவன்:-இனப்படுகொலை என்பது ஆழ்ந்த வரலாற்று உள்ளடக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும். இதற்கு நிகரான மட்டத்தில் கொடூரக் குற்றச்சாட்டு எதுவும் இருக்காது. நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே கடந்த நூற்றாண்டில் நடந்த இன அழிப்பு என சிலர் கூறுகின்றனர். ஆனால், 1948ஆம் ஆண்டுத் தீர்மானத்தின்படி, குறைந்தது மூன்று இன அழிப்பு சம்பவங்கள் நடந்திருப்பதாக வேறு சிலர் கணக்கிடுகின்றனர்.
முதலாவதாக, 1915க்கும் 1920க்கும் இடையில், ஒட்டோமான் துருக்கியர்களால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டது. அதன் பிறகு, நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது. மூன்றாவதாக, ருவாண்டாவில் 1994ல் டுட்ஸி, ஹுடு இனத்தைச் சேர்ந்த 8 லட்சம் பேர் கொல்லப்பட்டது. இவைதவிர, 1995ல் போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனீட்சாவில் நடந்தது இன அழிப்பு என யுகோஸ்லோவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதுபோக, 1932-33ல் உக்ரைனில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சம், 1975ல் கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா எடுத்த படையெடுப்பு, 1970களில் கம்போடியாவில் நடந்த க்மெர் ரூஜ் படுகொலைகளையும் சிலர் இனப்படுகொலையாக முன்வைக்கின்றனர்.
ஜெனோசைட் என்று கூறப்படும் இனப்படுகொலை என்பது தமிழர் வரலாற்றில் முக்கியமானதாக ஆகிவிட்டது. 1949ல் டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் கல்ஓயா, கந்தளாய், அல்லை என்கின்ற தமிழ்ப் பிரதேசங்களைச் சிங்களக் கிராமங்களாக்கியது. 1956 யூன் 5ம் திகதி முதலாவது தமிழினப் படுகொலை கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழான இங்கினியாகலவில் இடம்பெற்றது. இதில் 156 தமிழர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டனர்.
1958ம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை சர்வதேசத்தின் வரலாற்றுப் பதிவுக்குச் சென்றது. மே மாதம் 24ம் திகதி முதல் 26ம் திகதி வரை வவுனியாவில் தமிழரசுக் கட்சி நடத்திய மாநாட்டை ஒட்டியதாக இந்தப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அவசரகாலச் சட்டத்தையோ ஊரடங்குச் சட்டத்தையோ பிறப்பிக்க விரும்பாத அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க,அறிவித்தார்
1977, 1979, 1981ஆம் ஆண்டுகளிலும் தமிழர் படுகொலை ஆங்காங்கு இடம்பெற்றது. 1977ல் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர் 24 மணிநேரத்தில் கொலையுண்டது பதிவில் உள்ளது. இது ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. இதே ஆண்டு யூன் முதலாம் திகதிதான் யாழ்ப்பாணப் பொதுநுர்லகம் அமைச்சர்கள் மேற்பார்வையில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இலங்கையில் தங்களுக்கு உரிமைகள் கிடைக்காமல் பல காலம் அமைதி வழியில் போராடி, அதனால் பல வன்முறைகளை சந்தித்து, இறுதியில் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.
1983ஆம் ஆண்டு தமிழினப் படுகொலை முன்பு நடந்ததை விட மோசமானது. திட்டமிட்டு தேர்தல் இடாப்பைக் கைகளில் ஏந்தியவாறு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு வீதிகளையும் வீடுகளையும் அடையாளமிட்டு தமிழர் கொல்லப்பட்டனர். மண்ணையும் மக்களையும் காப்பாற்ற, ஆயுதங்களை ஆயுதங்களால் சந்திக்க வைத்த விடுதலைப் போராட்டம், 2009 மே மாதம் உறைநிலை கணும் வரை முதல் இன்றுவரை இலங்கையில் இன ஒடுக்குதல் காரணமாகச் சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களைச் சந்தித்தார்கள் அவற்றுக்கான நீதியை நிலை நாட்ட சர்வதே நாடுகள் மறுத்தமையின் வெளிப்பாடாக அதன் உச்ச நடவடிக்கையாக 2007ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு மே மாத்தில் முள்ளிவாய்க்காலில் வரையில் 1,46,679 தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இளங்கீரன்:-சமீப காலங்களாக தமிழர் வாழும் பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட மனித உடற்கூறு/ எச்சங்கள் தமிழர்கள் தான் என்பதை உறுதி பெறக் கூற முடியுமா?
நிலவன்:-இலங்கை நீண்ட மனிதப் புதைகுழிகளின் வரலாறு தமிழ் இன அழிப்பின் சாட்சியங்களைக் கொண்ட நாடு.இலங்கையின் மனித புதைகுழிகள் சம்பந்தமான வரலாறு பல ஆண்டுகளைக் கொண்டிருந்தாலும் 1971 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அதன் பட்டியல் நீண்டு செல்கிறது. 1983ஆம் ஆண்டு முதல் 2009 வரை சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும்(1,40,000) மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உடலங்களைக் கொண்ட பாரிய மனித புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் உள்ளன.
2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 40,000க்கும் அதிகமானோர் இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் பலர் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட காணொளிகள் நிழல்படங்களையும் ஊடகங்கள் வாயிலாக காண முடிகின்றது. இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பலர் இராணுவம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான நிழல்படங்களையும் காணமுடிகிறது. 2009 மே 18ஆம் நாள், முல்லைத்தீவு செல்வபுரத்தில், இலங்கை அரச படையினரிடம் சரணடைந்த 800க்கும் அதிகமானவர்கள் பேருந்துகளில் இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்; அவர்கள் எங்கே? இராணுவத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டவர்கள், வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்தவர்கள் மற்றும் நிராயுதபாணிகளாய் இராணுவத்திடம் சரண்டைந்து பேருந்துகளில் ஏற்றும் போதும் அவர்களை கொண்டு செல்லும் போதும் பார்த்த முதலாம் இரண்டாம் சாட்சிகள் வாழும் சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியவில்லை.
பௌத்த சிங்கள பேரினவாத அரசு மற்றும் அதன் படைகள் திட்டமிட்டும், பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை நாட்டின் பல பாகங்களிலும் நடந்தேறி உள்ளது குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதை குழிகளின் அகழ்வுப் பணிகள் வெளிகொண்டு வருகின்றன. புதைகுழிகளின் உண்மை நிலை, விரைவில் நாட்டுக்கு அம்பலமாகுவது, திண்ணம். படுகொலை செய்யப்பட்டவர்கள் யார்? அவர்கள் எங்கு படுகொலை செய்யப்பட்டார்கள், எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்கள், அவர்களைக் கொலை செய்தவர்கள் யார் என்ற அனைத்து விடயங்களும், அம்பலமாகத் தெரிந்தும் ஒன்று செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம்.
இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் [JDS], சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் [ITJP], மனித உரிமைகள் அபிவிருத்தி மையம் [CHRD] மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் [FoD] போன்ற அமைப்புகளால் அண்மையில் வெளியிடப்பட்ட “இலங்கையிலுள்ள பாரிய மனித புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வு பணிகளும்” அறிக்கைக்கு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள் . தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இந்த அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் பேசு களத்தைக் கொண்டதாகக் கையளித்திருந்தார்.
இலங்கை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள், படுகொலைகள் எண்ணிக்கையற்ற இளைஞர், யுவதிகளை மனிதப் புதைகுழிக்குள் தள்ளியது. பாடசாலை மைதானங்கள், வைத்தியசாலைகள் எனப் பல இடங்களிலும் மனிதப் புதைகுழிகளை உருவாக்கி உள்ளார்கள். 75 வருடங்களுக்குள் அவை மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் போயின. ஆயினும், அவ்வாறு புதைக்கப்பட்ட வரலாறுகளை அந்த ஆன்மாக்கள் அவ்வப்போது பேசிக்கொள்வதை எந்த ஆட்சியாளராலும் தடுக்க முடியது.
இளங்கீரன்:-இலங்கைத் தீவில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்த சர்வதேச விசாரணை சாத்தியமாகுமா? தமிழர்களுக்கு இதன் மூலம் நீதி கிடைக்க வாய்ப்புகள் உள்ளதா?
நிலவன்:- மனிதப் புதைகுழிகளைக் கையாளும்போது அது தொடர்பாக இருக்கின்ற மிகப்பெரிய சாவல்களில் ஒன்று, பாரிய மனிதப் புதைகுழிக்கென சர்வதேச வரைவிலக்கணம் என்று எதுவுமே இல்லை. அல்லது குறைந்தது எத்தனை பேர் புதைக்கப்பட்டிருத்தல் அது மனிதப் புதைகுழி என்பது உட்பட சட்டரீதியான எந்தவொரு கருத்தொற்றுமையும்கூட கிடையாது.
மனிதப் புதைகுழி எனப்படுவது ஒன்றைவிட அதிகமான படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்கள் இருந்தாலே அது பாரிய மனிதப் புதைகுழிதான். இருப்பினும், ‘பல மனிதர்களின் உடல் எச்சங்களைக் கொண்ட, பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட அகழி, குழி, ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அத்துடன் பல்வேறுபட்ட உடல் எண்ணிக்கைகளையும் கொண்டு அவர்களை மறைப்பதற்குக் குழி தோண்டி மறைப்பு செய்யப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடங்களே’ பாரிய மனிதப் புதைகுழிகள் என தடயவியல் வல்லுநர்கள் வரையறுத்துள்ளனர்.தமிழ் இன அழிப்பின் இனப் படுகொலைகளின் இன்னுமொரு சாட்சியம் கொண்ட ஒரு மனித உரிமை மீறல் புதைகுழி எனச் சொல்லமுடிகிறது .
இளங்கீரன்:- இன்று தமிழர் பகுதிகளில் கண்டுபிடிக்கப் படும் மனிதப் புதைகுழிகளில் காணப்படும் மனித உடற்கூறு எச்சங்கள், ஈழ விடுதலைப் போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இருப்பதற்கான நிகழத்தகவு எத்தனை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
நிலவன்:- மனிதப் புதைகுழிகளில் 1983ஆம் ஆண்டிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இலங்கையில் பல்வேறு காலப் பகுதிகளில் பாரிய மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டது. இலங்கையில் மனித புதைகுழிகள், கொலைகள் தொடர்பாக நடத்தப்பட்ட பல விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. பல படுகொலைகள் தொடர்பான புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டும் அவை அகழப்படாமல் இருந்து வருகிறது.
இலங்கையில் கடந்த 40 வருட காலமாக அடையாளம் காணப்பட்ட சுமார் 20மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான விசாரணைகளை பௌத்த சிங்களப் பேரினவாத அரசு முன்னெடுக்கவில்லை. நான்கு தசாப்த கால பௌத்த சிங்கள பேரின வாத அரசினால் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களே இந்த புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது.
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் உடலங்களைக் கொண்ட பாரிய மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றது.இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதில் உலகளவில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது. அந்தளவிற்கு நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதைகுழிகள் உட்பட இன்னும் பல நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் காணப்பட வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப் படுகிறது. அவற்றில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பல சித்திரவதைகளின் பின் படுகொலை செய்யப்பட்ட உடலங்கள் புதையுண்டிருப்பதை கடந்தகால நிகழ்வுகள் உறுதி செய்கின்றது. இந்த புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச கண்துடைப்புக்காகச் சிங்கள அரசினால் விசாரணைகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஏராளமான விசாரணை ஆணைக்குழுக்களும் தனது கடமையைச் சரிவர முன்னெடுக்கவில்லை.
உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. நீதிபதிகளும், தடயவியல் நிபுணர்களும் திடீர் இடமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதை காவல்துறை தாமதப்படுத்தியுள்ளது. குடும்பங்களின் வழக்கறிஞர்கள் ஊடகவியலாளர்கள் புதைகுழிகள் உள்ள இடங்களுக்கு போவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிருடன் உள்ள சாட்சிகளைக் கண்டறிவதற்கு எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவில்லை.
மனிதப் புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் அதற்கான அரசியல் திடசங்கற்பம் முற்றாக இல்லை. இதுவரையில் ஆங்காங்கே மனிதப் புதைகுழிகளில் 20 மாத்திரமே அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலும் அதிகமானவை முழுமையான அகழ்வு நடைபெறாமல் இடைநிறுத்தப் பட்டுள்ளது இந்த குற்றங்களை ஆவணப்படுத்துவது, ஆதாரங்களைச் சேகரிப்பது மற்றும் அதைப் பாதுகாப்பது மிகப்பெரும் சவாலான விடயமாகவே இருந்து வருகிறது.
இளங்கீரன்:- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய போராட்டத்திற்கு இலங்கை அரசும் அது சார்ந்த நிறுவனங்களும் மூடி மறைக்க முனைப்புக் காட்டுவதன் பின்னணி என்ன?
நிலவன்:- தமிழர் தாயகத்தில் தமிழர் பூர்வீகமாக வாழ்ந்த ஈழ தேசத்து , ஊரை பௌத்த சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், இனப்படுகொலை அரசை நம்பி நம்பிக்கையுடன் தமது சொந்த ஊர் திரும்பும் தமிழ் மக்களின் உணர்வை விவரிக்க முடியாது. 2009ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கை அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இராணுவ சோதனைச் சுற்றிவளைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டார்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அதே வேளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வீடுகளில் வைத்து விசாரணை என அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள். தடுப்புக் காவலின் கீழ் சித்திரவதை, ஒரு தொடர்ச்சியான சர்வாதிகாரச் செயல்முறையின்பின்னர் பெறப்பட்டிருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்களாகக் காணாமல் போகவில்லை. படையினரால் கைது செய்யப்பட்ட பின் காணாமல் போயுள்ளனர். பலரை உறவினர்களே படையினரிடம் நேரடியாகக் கையளித்தும் உள்ளனர். இதற்கு வலுவான சாட்சியங்களும் உண்டு. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் மதகுருமாருடன் இராணுவத்திடம் சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். வடக்குக் கிழக்கில் இலங்கை இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். 2009 யுத்தத்தின் போது சர்வதேசத்தையும் அதன் சட்டவிதிகளையும் நம்பிக் கையளித்த உறவுகள் ‘தம்மால் கையளித்த உறவுகள் எங்கே? அவர்களுக்கு என்ன ஆனது?’ என்ற பொறுப்புக்கூறலினை சர்வதேசத்திடம் கோரி இரவு, பகலாக வீதியோரத்தில் முன்னெடுத்து வரும் அறவழி சாத்வீகப் போராட்டமானது 2415 நாட்களைத் தொட்டுள்ள நிலையில் நீதி கோரி தொடர்ச்சியாகத் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சர்வதேசத்தின் கவனத்தை ஏற்படுத்தும் முகமாக நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது .
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். அவர்களைத் தேடித் தருமாறு அவர்களது உறவினர்கள் போராட்டம் செய்வதில் பயனில்லை’ என கோட்டாபய ராஜபக்சே சனாதிபதியாக இருந்தபோது அலட்சியமாகக் கூறினார். காணாமல் போனோருக்கான அலுவலகமொன்று ஸ்தாபிக்கப்பட்டாலும், அதன் செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை. மாறாக, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடும் மரண சான்றிதழ்களும் வழங்கப்படும் என அரசாங்கம் இந்த விவகாரத்தை மூடி மறைக்கவே பார்த்தது.
இளங்கீரன்:- மனிதப் புதைகுழிகள் சார்ந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்த உங்கள் பார்வை என்ன? அவர்கள் நிறுவிய விசாரணைக் குழுக்களின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக உள்ளதா?
நிலவன்:- காணாமல் ஆக்கப்பட்ட, சரணடைந்த தங்கள் பிள்ளைகளை தேடும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் எங்காவது உயிருடன் இருந்து விடமாட்டார்களா என்ற ஏக்கத்தில் மரணிப்பதற்கு முன் அவர்களைப் பார்த்து விடமாட்டோமா என்ற ஆசையில் 14 ஆண்டுகள் கடந்து வீதிகளிலும், அரச அலுவலகங்களிலும், மனித உரிமை ஆணைக்குழுக்களிலும், விசாரணைக்குழுக்களுக்கு முன்பாகவும் சாட்சியமளித்து வருகின்றார்கள். கடந்த நான்கு தசாப்தங்களில் சுமார் 20 – 30கக்கும் மேற்பட்ட பாரிய மனிதப் புதைகுழிகளைத் தோண்டியதில் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்கள், பாரிய புதைகுழிகள் பற்றி ஆராயக் கட்டளையிடவில்லை என்பதுடன் உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளையும் கையாளவில்லை.
மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுடன், குடும்பங்களிற்கும் சட்டத்தரணிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அவற்றை உரிய முறையில் இனம் காண்பதற்கும் முழுமையான தகவல்களை வெளிக்கொண்டுவருவதற்கு , ஆவணப்படுத்தி இன அழிப்பின் சாட்சியங்களை திரட்டுவதற்கும் இடமளிக்கப்படவில்லை . உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதுடன், பிரேதப் பரிசோதனை தரவுகள் சேகரிக்கப்படவில்லை. இதேவேளை மனித புதைகுழி தொடர்பான தரவுகளைத் தொடர்ச்சியாக அழித்து வரும் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளங்கீரன்:-அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் எவையேனும் கண்டெடுக்கப் பட்டுள்ளனவா?
நிலவன்:- இது ஒரு பெரிய கேள்வி.. முழுவதும் இல்லையென்றாலும் முடிந்தவரை கூறுகிறேன்.. யாழ்ப்பாணம் பகுதியில் மட்டும் துரையப்பா விளையாட்டு அரங்கம், செம்மணி மனிதப் புதைகுழி, மிருசுவில்மனிதப் புதைகுழி என மூன்று மனிதப் புதைகுழி இடங்கள் காணப்படுகின்றன. அதேபோல் கணேசபுரம் மனிதப் புதைகுழி (கிளிநொச்சி), புதுக்குடியிருப்பு மனிதப் புதைகுழி (முல்லைத்தீவு), திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி (மன்னார்) உள்ளிட்ட பகுதிகள் தவிர, குருநாகல், கம்பஹா, கொழும்பு, மாத்தறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் இந்த மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றன. அதேபோல் கணேசபுரம் மனிதப் புதைக்குழி (கிளிநொச்சி), புதுக்குடியிருப்பு மனிதப் புதைகுழி (முல்லைத் தீவு), திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி (மன்னார்) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் இனங்காணப் பட்டுள்ளது. இப் புதைகுழி பல நூற்றுக்கணக்கில் இலங்கை முழுவதும் இருக்கும் குறிப்பாக இராணுவ முகாங்கள் மற்றும் இரகசிய சித்திரவதை முகாங்கள் நிறைந்த பகுதிகளில் அதிகமானவை உள்ளன . வடக்க்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் புதைகுழிகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இளங்கீரன்:- அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து கொஞ்சம் விளக்கமாக் கூற முடியுமா?
நிலவன்:-
- துரையப்பா விளையாட்டு அரங்கு மனிதப் புதைகுழி,
யாழ்.கோட்டைக்கு அருகில் சிங்கள இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதி தொல்லியலுடன் தொடர்பு பட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழி எனத் தெரியவரவில்லை. முன்னதாக யாழ்.கோட்டையினை அண்மித்த துரையப்பா விளையாட்டரங்கிலும் பாரிய மனித புதைகுழி கண்டறியப்பட்டிருந்த போதும் கால ஓட்டத்தில் அதுவும் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1999 ஏப்ரல் மாதம், யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டரங்கில் ஆடை மாற்றும் அறைகளைக்கட்டுவதற்கான அத்திவாரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த கட்டுமானப் பணியாட்கள், மனித சிதிலங்களைக் கண்டெடுத்தனர். இந்த இடம் தோண்டப்பட்டதில், இரு சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 25 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு எலும்புக்கூட்டின் கைகள் கட்டப்பட்டிருந்தன. ஒருகுழந்தையின் எலும்புக்கூட்டில் செம்பு வளையல் காணப்பட்டது. இந்தப் புதை குழியின் ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியவையாக உள்ளது.
- செம்மணி மனிதப் புதைகுழி,
சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக காலத்தில், செம்மணி மனிதப் புதைகுழி என்கிற அரசியல் சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. உள்ளூர், சர்வதேச ஊடகங்களும் சுவாரஸ்யமான தகவல்களை இங்கிருந்து திரட்டி வழங்கியிருந்தன. யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சக மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டுத் திரும்பி வந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டார்.
மாணவி கிரிஷாந்தி 1996 ஆம் ஆண்டு புரட்டாதி 7 ஆம் திகதி பாலியல் வன்கொடுமைக்கு , இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். செம்மணி இராணுவ முகாமில் கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது தாயார், சகோதரன், அயலவர் உட்பட மூவர் இராணுவ முகாம் நோக்கிச் சென்றனர்.அதன் பின்னர் கிருஷாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவரோ வீடு திரும்பவில்லை.
கிரிஷாந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை மறைப்பதற்காகத் தேடிச்சென்ற தாயார், சகோதரன் உட்பட மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர். கிரிஷாந்தி காணாமற்போய் 45 நாட்களின் பின்னர், செம்மணி இராணுவ முகாமிலிருந்து, சில மீற்றர்கள் தூரத்தில் கிரிஷாந்தி உட்பட நால்வரது சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டன.
தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களைக் கொழும்பிற்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணி மா.இளஞ்செழியன் ஆகியோர் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து, சடலம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. கிரிஷாந்திபடுகொலையுடன் தொடர்புடைய ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
.இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் சட்டத்தரணி குமார் பொன்னம்பலம், கனிஸ்ட சட்டத்தரணி.இளஞ்செழியன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு Trial at Bar முன்னிலையில் நீதிபதிகள் நிமால் திசாநாயக்க, அன்ரூ சோமவன்ச, காமினிஅபயரட்ண ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நீதிபதிகள் குழு ஐந்து இராணுவத்தினருக்கும் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கிரிஷாந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனைவிதிப்பதற்கு முன்னர் நீங்கள் எதாவது கூறப்போகின்றீர்களா என வினவியதற்கு, அவர்கள் வழங்கிய பதில் உலகையே ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தது.
சுமார் 400 தொடக்கம் 600 வரையான இளைஞர், யுவதிகள் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவத்தினரும் வாக்குமூலம் வழங்கினர். இந்தப் படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவத்தினரும் கண்டி போகம்பரைசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிரிஷாந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மா.இளஞ்செழியன் மன்னார் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கிரிஷாந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் வழங்கிய வாக்குமூலத்தினையடுத்து, செம்மணி புதைகுழியினை அகழ்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ் நீதவான் நீதிமன்ற விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
செம்மணி புதைகுழி 1999 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2000 ஆம் ஆண்டு பங்குனி 27 ஆம் திகதி வரையான ஒன்பது மாதங்கள் நடைபெற்றன. கிரிஷாந்தி படுகொலையின் மரண தண்டனைக் கைதிகளை விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து செம்மணி புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிபதி மா.இளஞ்செழியன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
செம்மணியில் 25 புதைகுழிகள் தோண்டப்பட்டு 16 சடலங்கள் மீட்கப்பட்டன, எனினும், அவர்கள் அடையாளப்படுத்திய 10 புதைகுழிகளில் சடலங்கள் இருக்கவில்லை. செம்மணி, அரியாலை, கொழும்புத்துறை ஆகிய இராணுவ முகாம்களில் கொலை செய்யப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
மன்னார் மாவட்ட நீதிபதி மா.இளஞ்செழியன் செம்மணி புதைகுழி அகழ்விற்காக யாழ். நீதவான் நீதிமன்ற விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டு, செம்மணி புதைகுழியைத் தோண்டியதன் பின்னர் நியமனம் நிறைவுபெறும்வகையில் அமர்த்தப்பட்டிருந்தார். இவ்வாறு மீட்கப்பட்ட 16 பேரினது சடலங்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டவை என மரண விசாரணை தீர்ப்பு வழங்கி, யாழ். நிரந்தர நீதிபதியிடம் வழக்கினை பாரப்படுத்திவிட்டு செம்மணி புதைகுழியின் விசேட நீதிபதி மா.இளஞ்செழின் தனது பணியினை நிறைவு செய்தார்.
ஆறு மாதங்களின் பின்னர் செம்மணி புதைகுழி வழக்கின் பிரதிவாதிகள் தமக்குச் சட்டத்தரணிகள் இல்லை எனத்தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்திலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஒரு சில மாதங்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஆறு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
செம்மணி புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுப் பிணை வழங்கப்பட்டு 23 வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. அன்று உலகையே உலுக்கிய செம்மணி புதைகுழி தொடர்பில் அனைவரும் இன்று மறந்தவர்களாகவே உள்ளனர். இந்த வழக்கின் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் கடமையைப் பாராட்டி ஐக்கிய அமெரிக்கா 2001 ஆம் விசேட விருந்தினராக அழைத்து அவரை கௌரவித்து, பிரஜாவுரிமை வழங்கியதுடன், ஒருநாள் மாநகரமேயராகவும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி புதைகுழியுடன் தொடர்புடைய ஐந்து இராணுவத்தினரையும் பொலிஸ் அதிகாரி ஒருவரையும் கைதுசெய்து, விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். மாவட்ட விசேட நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார். 600க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என வெளியான தகவலோடு செம்மணி மனிதப் புதைகுழிபற்றிய கதைகள் மறக்கச் செய்யப்பட்டன. தொடர்ந்து நாட்டில் நிலவிய அரசியல் குழறுபடிகள் செம்மணியை நிரந்தரமாகவே மூடிவிட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி, நம் நினைவுக்கு இலகுவில் கொண்டுவருவதற்காக உதாரணப்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் மனிதப் புதைகுழிகள் இருப்பதை, அனைவரும் நினைவுபடுத்துவர்.தமிழ் இனப் படுகொலைகளின் ஒரு எச்சம்தான் மனிதப் புதைகுழி. அந்தப் புதைகுழி தொடர்ந்து காலத்திற்குக் காலம் தன் குரலை எழுப்பி வருகிறது . ஆனாலும், வழமையான காலங்கடத்தி மறக்கச்செய்யும் பொறிமுறைகளால் மறக்கச்செய்யப்பட்டன.
- மிருசுவில் மனிதப் புதைகுழி
2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்திலுள்ள மிருசுவிலில் இடம்பெற்ற சம்பவத்தில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜாபிரசாத் (வயது-5) ஆகிய எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த எண்மரும் இராணுவத்தினர் 6 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட பிரசாத்திற்கு அப்போது ஐந்து வயது மட்டுமே ஆகியிருந்தது. தமிழர்கள் எட்டுப் பேர் காணாமற்போயிருந்தனர். மறுநாள் இவர்கள் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினரின் பிடியில் இருந்து, காயங்களுடன் தப்பிய ஒருவர், இந்த தகவலைவெளிப்படுத்தியதை அடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் எட்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து, 16 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சாகவச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஏற்படுத்தப்பட்டனர். சாகவச்சேரி நீதிவானாக அப்போது, தற்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம்பிரேமசங்கர் கடமையாற்றினார்.
15 இராணுவத்தினரையும் விளக்கமறியல் வைத்த நீதிவான் அன்னலிங்கம் பிரேமசங்கர், சம்பவ இடத்துக்குச்சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். இராணுவப் பொலிஸார் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரின் முன்னிலையில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டு அவை மீட்கப்பட்டன.
15 இராணுவத்தினரில் 10 பேரை விடுவித்த சட்ட மா அதிபர் திணைக்களம், 5 இராணுவத்தினருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்தது. 19 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் லலித்ஜெயசூரிய, பிரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் வழங்கப்பட்டது.
இதன்படி, ஸ்ராப் சார்ஜன்ட் சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ இளநிலை அதிகாரி குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏனைய நான்கு படையினருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகளில் சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, அவர்கள் நால்வரையும் நீதிபதிகள் விடுதலைசெய்துள்ளனர்.
மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில்ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான L.T.B.தெஹிதெனிய மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.இதில் இரண்டு மனுக்கள் உறவினர்கள் சார்பிலும், ஏனைய இரண்டும் பொது நல மனுக்களாகவும் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமையவே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த மனுவிற்கமைய, இவ்வாறு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நிறுத்துமாறு, அதற்கான இடைக்கால தடையுத்தரவை மனுதாரர்கள் கோருகின்றனர். இந்தமன்னாப்பைப் பெற இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்கவிற்கு தகைமையில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசியலமைப்பின்படி எந்தவொருவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியும். பெண்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்களுக்கு இந்நாட்டின் ஜனாதிபதிகள் கடந்த காலத்தில் மன்னிப்பு வழங்கினர். எனினும், போரில் தெற்கிலுள்ள மக்களைப் பாதுகாப்பதற்காகப் போராடியதற்குப் பிரதிபலனாகவேசுனில் ரத்நாயக்கவிற்கு இந்த மன்னிப்பு கிடைத்துள்ளது. எனப் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி பிரேமநாத் சீ.தொலவத்த குறிப்பிட்டார்.
இலங்கையில் எட்டு தமிழர்களைப் படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும்கோடாபய இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக பாரிய கோபத்தையும் உருவாக்கியிருந்தது. பரந்துபட்ட தமிழ் வெகுஜனங்களின் கோபங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் கொழும்பு ஆட்சியைப் பாதுகாக்கவும் தமிழ் தேசியவாத கட்சிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளும் தலைவர்கள், எந்த சிரமமுமின்றி வெற்றுப் பத்திரிகை அறிக்கைகளைத் தாராளமாக வெளியிட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- மன்னார் மனிதப் புதைகுழி
திருக்கேதீசுவரம் கோவில் சூழலில் 2013 டிசம்பர் 20 ஆம் நாள் குடிநீர்த் திட்டத்திற்காக நீர்க்குழாய்கள் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் நிலத்தைத் தோண்டிய போதி மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தைப் பார்வையிட்ட மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரத்தினத்தின் உத்தரவுக்கமைய அந்த இடத்தைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன
2014 ஜனவரி 3, 4 ஆம் நாட்களிலும் 2014 சனவரி 6, 7 ஆம் நாட்களிலும் 2014 சனவரி 16, 17 ஆம் நாட்களிலும் புதைகுழி தோண்டும் பணிகள் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம், சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்திய்ரட்ண் மற்றும் காவல்துறையினர் போன்றவர்களின் முன்னிலையில் நடைபெற்றன. 30.01.2013 ஆம் திகதி வரையில் இங்கு மொத்தமாக 55 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
10.02.2014 ஆந் திகதியன்று மன்னர் நீதவான் ஆனந்தி கனகரத்தினத்தின் முன்னிலையில் மீண்டும் 20ஆவது தடவையாகப் புதைகுழி தோண்டப்பட்டபோது மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் மொத்தமாக 58 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் இறுதியில் இது ஒரு சாதாரண மயானம் எனக்கூறப்பட்டது. மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் மன்னார் சத்தொச மனிதப் புதைகுழி அகழ்வின்போது 323 சடலங்கள் (28 குழந்தைகள் உட்பட) மீட்கப்பட்டன. தோண்டப்பட்ட சடலங்களில் கால்களைப் பிணைக்கப் பயன்படுத்தப்படும் உலோகப்பிணைப்புகள் இருந்ததாகவும் 323 மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் பீங்கான் மற்றும் பாவனைப் பொருட்கள் உள்ளிட்ட தடயப்பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் பெண்களின் எலும்புக்கூடுகளுடன் சிறுவர்களின் 28 எலும்புக்கூட்டு எச்சங்களும் அடங்கியிருந்தன. அத்துடன் கைவிலங்கு போன்ற வகையில் இரும்பினால் கைகள் பிணைக்கப்பட்டிருந்த நிலையிலான எலும்புக்கூட்டு எச்சங்களும் இவற்றில் அடங்கியிருந்தன.
- மாத்தளை மனிதப் புதைகுழி
இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மனிதப் புதைகுழி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் எச்சங்கள் , 1988-89 ஆண்டு பிற்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சித்திரவதைகளின் பின் படுகொலை செய்து புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தக் கொலைகள் அரசியல் ரீதியான கொலைகளாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்களுக்கு வலு சேர்ப்பது போலத் தோன்றுகிறது.
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில், மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 155 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பிலான இறுதி அறிக்கையில் இந்த மரணங்கள் இயற்கையாக நிகழ்ந்தவை அல்ல. பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளன. சில உடல்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளன. அகல்வின் போது 154 மனித எலும்புக் கூடுகளும், 141 மனித மண்டை ஓடுகளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
154 மனித எலும்புக்கூடுகளின் பாகங்கள் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது? அனைவரது மனதிலும் எழுந்த கேள்விகளாகும். களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ராஜ். சோமதேவ உள்ளிட்ட குழுவினர், இந்த மனித எலும்புக்கூடுகளின் உண்மை நிலையைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை ஆரம்பித்தனர். இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், மரணங்கள் இடம்பெற்ற கால என்பவற்றை வெளிப்படுத்தி உள்ளார்கள்
கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி
1984ஆம் ஆண்டு டிசெம்பர் 15ஆம் தகதி கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு, குமுழமுனை, அலம்பில் ஆகிய முல்லைத்தீவின் தெற்கு எல்லையில் அமைந்திருந்த கிராமங்களில் அரச படையினரால் 31 பெண்கள், 21 குழந்தைகள் உள்ளிட்ட 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன், இந்தப் பகுதிகளில் இருந்தும், வவுனியா வடக்கின் நெடுங்கேணி தெற்குப் பகுதியில் இருந்த கிராமங்களில் இருந்தும், ஒரே இரவில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வெளியேற்றப் பட்டனர். வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லுமாறு இராணுவத்தினரால் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு, இங்கிருந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் அந்தப் பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டதுடன், பல பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களும் நிறுவப்பட்டன.
அதற்குப் பின்னரான காலகட்டங்களில் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பிரதேசங்கள் முற்றிலும் இராணுவமயப்படுத்தப்பட்டே காணப்பட்டது. போர்க் காலங்களில் வெலி ஓயா எனப்படும் மணலாறு சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கொக்குத்தொடுவாய் பிரதேசம் முன்னரங்க காவல் நிலையாக காணப்பட்டது. அதுபோலவே, முல்லைத்தீவு நோக்கிய பல்வேறு படை நடவடிக்கைகளுக்கான தொடக்க மையமாகவும், கொக்குத் தொடுவாய் பகுதியே காணப்பட்டது.
முல்லைத்தீவு நெடுங்கேணி பிரதான வீதியில் 26 மையில் எல்லையில் கொக்கு தொடுவாய் மத்தி (MN- 82) கிராம சேவகர் பிரிவில் கடந்த வியாழக்கிழமை(29) நீர் வழங்கல் மேற்கொள்வதற்காக ஒப்பந்த நிறுவனம் ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது வீதியில் இருந்து 6 மீட்டர் தொலைவில் ஒரு மீற்றர் அகலம் கொண்ட கிடங்கில் 2-6 அடி ஆழத்தில் மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது. ஒன்றின் மேல் ஒன்றாக கணக்கிடமுடியாது குவிந்து கிடக்கும் உடல் எச்சங்கள் ஐந்தாவது நாள் அகழ்வுப் பணிகள் மூன்று உடல் பாகங்கள் மீட்பு மொத்தமாக ஐந்து உடல் பாகங்கள் இதுவரை மீட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் காவல்துறை பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தைப் பார்வையிட்டு கலந்துரையாடி இருக்கின்ற வளங்களுடன் முல்லைத்தீவு – கொடிக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (30) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா தலைமையிலான குழு மதியம் மூன்று மணி அளவில் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கு இராணுவச் சீருடையை ஒத்த உடைகளும் எலும்பு துண்டுகளும் பெண்கள் அணியும் உள்ளாடைகளும் வெளியில் காணப்பட்டதாகவும் இதற்கான அகழ்வு பணியை மேற்கொள்ள கொக்கிளாய் பொலிஸார் வருகின்ற வியாழக்கிழமை(6) திகதி உரிய தரப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து அகழ்வு பணியை மேற்கொள்ளுமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்.
குறிப்பாக புதைகுழிகளில் பெண்களின் உள்ளாடைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் விடுவான் பகுதியில் சரணடைந்த சமயம் அணிந்ததற்கு ஒப்பான சீருடையுடன் கூடிய எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது. அதே நேரம் குழியின் ஓரத்தில் பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட விதமாக உள்ள சடலங்கள் எனச் சந்தேகிக்கக் கூடிய விதமாக உள்ள சடலங்களும் காணப்பட்டுள்ளது.
இளங்கீரன்:-மனிதப் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராளிகளின் உடல், உடை எச்சங்கள் குறித்த விசாரணையும் சர்வதேச ஐ. நா. வின் செயல்பாடுகளும் பற்றிக் கூற முடியுமா?
நிலவன்:- பெண் போராளிகளினது என சந்தேகிக்கப்படும், உடைகள், உள்ளாடைகளுடன் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், நீதிவான் சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு, ஜூலை 6ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய கடந்த 6ஆம் திகதி வியாழக்கிழமை நீதிவான், சட்டவைத்திய அதிகாரி உள்ளிட்டவர்களின் மேற்பார்வையில் 7 மீற்றர் நீளமும், 2 மீற்றர் அகலமும் கொண்ட நிலப்பரப்பில் தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரசியல் பிரமுகர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், ஐ.நா அலுவலக பிரதிநிதிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முன்னிலையாகியிருந்தனர். காலை 10 மணி தொடக்கம், 3.30 மணிவரை குறித்த பகுதியில் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, 13 மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுடன் உடைகள், வயர்கள் போன்ற தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுடையது என நம்பப்படுகின்றன. அதேநேரம், முதலாவது மனித எச்சத்திலிருந்து துப்பாக்கி ரவையொன்றும் (தோட்டா), ஆடைகளுக்கான இலக்கங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதலாவது இலக்கமாக நீளமான பச்சை நிற கால் சட்டையில் 3204 என்ற இலக்கமும், அதேநேரம் முழு நீள மேல்சட்டையும், 3174 இலக்கமுடைய பெண்கள் அணியும் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, இரண்டாவது மனித எச்சமும் எடுக்கப்பட்டுள்ளது. நீளமான பச்சை நிற கால்சட்டையும், முழு நீள மேல்சட்டையும் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணியும் உள்ளாடையில் 1564 என்று இலக்கமிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் எடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் இடையில் துப்பாக்கி ரவைகள் (தோட்டா) எடுக்கப்பட்டுள்ளன,” என காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ஆடைகளிலுள்ள இலக்கங்கள் கைகளால் கறுப்பு நிற ஊசியில் தைக்கப்பட்டடிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புதைகுழியில் பெண் போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் சடலங்கள் மாத்திரமன்றி ஆண்களின் சடலங்களும் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக 13 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது எப்படி? அவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் யார்? அவர்களைப் புதைத்தது யார் என்ற கேள்விகள் இப்போது முன்னிலை பெற்றிருக்கின்றன. கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பிரதேசங்கள் 2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் மனித உரிமைகள் மீறல்கள் கொண்ட பதற்றம் நிறைந்தக காணப்பட்டது.
இளங்கீரன்:-கொக்குத்தொடுவாயில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் முக்கியத்துவம் குறித்து கூறமுடியுமா ?
நிலவன்:- 2009ஆம் ஆண்டு வன்னியின் மேற்குப் பகுதியில் 57, 58 ஆவது டிவிசன்கள் மேற்கொண்ட படைநகர்வைப் போலவே, கொக்குத்தொடுவாய் தொடக்கம், முல்லைத்தீவு நோக்கி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தலைமையிலான 59 ஆவது டிவிசன் இறுதிக்கட்டப் படைநகர்வை முன்னெடுத்திருந்தது. மூன்று தசாப்தங்களாக தொடர்ச்சியான போரும் பதற்றமும் காணப்பட்ட கொக்குத்தொடுவாயில் கண்டறியப் பட்டுள்ள இந்தப் பாரிய புதைகுழி, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இறுதிக்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. வட்டுவாகலில் சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள், பொதுமக்கள், மற்றும் மதகுருமார் கூட காணாமல் ஆக்கப்பட்டனர்.
பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டவர்கள் பின்னர் என்னவாயினர் என்று இன்று வரை அறியப்படவில்லை. சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் நிலையை அறிய நீதிமன்றப் படியேறியவர்களுக்கும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் சரணடைந்தவர்களின் பட்டியல் இருப்பதாக கூறிய 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் குணவர்தன, பின்னர், அவ்வாறு யாரும் சரணடையவில்லை என்று மறுத்து விட்டார். 2009 போரில் யாரும் சரணடையவில்லை என்றே இராணுவம் இன்று வரை கூறிவருகிறது.
இறுதிப் போரில் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரும் இப்போதும் உயிருடன் இருப்பார்கள் என்று நம்பப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு என்ன நடந்தது, அதற்கு யார் காரணம் என்ற கேள்விகளுக்கான பதில்களை அவர்களின் உறவுகள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு சூழலில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வெளிப்பட்டிருக்கிறது. வட்டுவாகலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்த பெருமளவானவர்கள் இராணுவத்தினரின் பேருந்துகளில் ஏற்றப்பட்டு இவ்வாறான பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்ற செய்தி அந்த நாளில் இருந்தே வெளிவந்துகொண்டிருந்தது. அவ்வாறான நிலைமையில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பாரிய பதட்டத்தை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது.
இளங்கீரன்:-இந்த மனிதப் புதைகுழி விடயத்தில் சிங்கள அரசு விசாரணையில் காட்டும் தாமதமும், மூடி மறைக்க நினைக்கும் செயல்களும் யாரைக் காப்பாற்ற நடத்தப் படுகிறது என்பதாகக் கருதுகிறீர்கள்? இதில் மற்ற நாடுகளின் தலையீடுகள் இருக்கிறதா?
நிலவன்:- மனிதப்புதைகுழிச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இலங்கை பௌத்த சிங்கள இனவாத ஆட்சிளர்களையும் சிங்கள படைகளையும் சில அரசியல் தலைவர்களினதும் நலன்களைப் பாதுகாப்பதற்காக இவ்வாறான விசாரணைகளை மூடி மறைக்கவோ அல்லது இல்லாமல் செய்வதற்காகவோ அரசியல் தலையீடுகளும் இந்திய உட்பட சர்வதேசத்தின் தலையிடுகளும் உள்ளது என்பதை உறுதியாகக் கூறலாம்.
இலங்கை அரச படையினரால் திட்டமிட்டும், பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் வெளிகொண்டு வருகின்றன. அவ்வகையில் மனித புதை குழிகளில் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு எலும்புக்கூடு அல்லது எச்சங்களில், பௌத்த சிங்கள காலத்திற்குக் காலம் வந்த ஆட்சிபிடமெறிய ஆட்சியளர்களும் சிங்களப் படையினருக்கும் தொடர்பு இருப்பது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பின் அணுகுமுறையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், புதைகுழி மீதான மீள் விசாரணை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், ஏனைய சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழிகள் அமைந்துள்ள இடங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. சில புதைகுழிகள் அமைந்துள்ள இடங்களில் நடைபெற்ற கட்டடப் பணிகளின்போதும், இதர நடவடிக்கைகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட மிகமுக்கியமான ஆதாரங்கள் பற்றியும் அதன் உண்மைத் தன்மையும் இதுவரையில் சர்வதேச கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தெரியப்படுத்தப்படவில்லை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிலரை அறிந்து கொள்வதற்கு இவை முக்கியமான திறவுகோலாக இருக்கும் என்பதால், மனித புதைகுழிகள் இருப்பதற்குச் சாத்தியமான இருக்கும் சந்தேகத்திற்குரிய இடங்களைக் கண்டறிவது பற்றிய முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். “பொறுப்புக்கூறல் என்பது கடந்த காலத்தைக் கையாள்வதற்கான முயற்சிகளில் அடிப்படை இடைவெளியாக உள்ளது. தமிழ் இன அழிப்பில் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படாத வரையில், இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தையோ அல்லது நிலையான சமாதானத்தையோ எட்ட முடியாது” என்று ஐ.நா மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா யூசூப் அல் நஷீப் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழல் தொடர்பிலான, தமது ஆணைக்குழுவின் வாய்மொழியான கருத்துக்களை புதன்கிழமை (21.06.2023) வெளியிடும் போது தெரிவித்தார். என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்
இளங்கீரன்:- மனிதப் புதைகுழி விடயத்தில் சர்வதேச, மற்றும் ஐ.நா சபையின் தலையீடுகள் மற்றும் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று கருதுகிறீர்கள்? அது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?
நிலவன்:- திட்டமிட்டும் பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான நினைவுபடுத்தலாக நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட இதர மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப்பணிகள் காணப்படுகின்றன. 2009 இல் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த போர் முடிவுக்கு வந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களது உடல் எச்சங்கள் உட்பட, இன்னும் பல பாரிய மனிதப் புதைகுழிகள் தோண்டியெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இன்னமும் இருக்கிறது.
கடந்தகால அகழ்வுப் பணிகளிலிருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப்பணிகள் உண்மை, நீதி, மற்றும் பரிகாரங்களுக்கான குடும்பங்களின் உரிமையினை முழுமையாக நிலைநிறுத்துவதற்குமான சர்வதேச பொறிமுறைகளை ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் உருவாக்க வேண்டும். மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும் போது, இதற்கு தனித்தனியாக அடையாளம் காண்பது அகழ்வுப்பணியை கோருவது, குற்றம் நடந்த இடம் மீதான விசாரணை, மற்றும் தமிழ் இன அழிப்பின் ஆதாரங்களை சேகரித்தல் ஆகியன இதில் சம்பந்தப்படுவதால், இதனை உரியமுறையில் ஐக்கிய நாடுகள் சபை தமிழ் இன அழிப்பு தொடர்பான சர்வதேச விசாரணையினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.
‘பாதிக்கப்பட்டவர்’ என்ற சொற்பதமானது, ‘சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதுரமான மீறல்கள் மூலமாக, தனியாகவோ அல்லது கூட்டாகவோ உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான காயம், உளவியல் ரீதியான பாதிப்பு, பொருளாதார இழப்பு அல்லது அவர்களது அடிப்படை உரிமைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட ஆட்களையே’ குறிக்கின்றது.17 சர்வதேசச் சட்டங்களிற்கு இணங்க, பாதிக்கப்பட்டவர் என்பதன் வரையறையில், பெரும் மனிதப் புதைகுழிகளில் உள்ளவர்களை (‘முதல்நிலை’ அல்லது ‘நேரடியாகப்’ பாதிக்கப்பட்டவர்கள்) மட்டுமன்றி, அவர்களது குடும்பங்களையும், ஏன் தேவைப்பட்டால் அவர்களது சமூகங்களையும் கூட (இரண்டாம் நிலை அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்கள்) உள்ளடக்குகின்றது. குறிப்பிட்ட ஒரு பெரும் புதைகுழி தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவருடைய பல்வேறுபட்ட சட்டப் பாதுகாப்பினை இவ்வேறுபாடு அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மனிதப் புதைகுழிகளின் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச குற்றங்களாக இருக்கக்கூடியவை உட்பட, மனித உரிமைகளின் பாரிய மீறல்களுடன் தொடர்புபட்டபாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்புக்களைப் பல சட்டக் கட்டமைப்புக்கள் இணைந்து வழங்குகின்றன. இதுவரை சர்வதேச சட்டம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச குற்றவியல் சட்டம் ஆகியவை பாரிய மனிதப்புதைகுழிகளைப் பாதுகாப்பதற்கு அவற்றின் விசாரணைக்கும் தனித்தனியாகவும் அல்லது ஓரளவு ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பாதுகாப்பு வழங்குகின்றன. மிக முக்கியமாக, சர்வதேச சட்டமானது பெரும் மனிதப் புதைகுழிகளை, மனித எச்சங்களை, அங்கே காணப்படும் ஏதேனும் ஆதாரங்களை சேதப்படுத்தக் கூடாதென்ற கடப்பாட்டினை கொண்டுள்ளது
இளங்கீரன்:- இலங்கையில் மனிதப் புதைகுழிகளைக் கையாள்வது குறித்த சட்ட வடிவங்கள் நடைமுறையில் உள்ளனவா? அப்படி இருப்பின் அதன் சாராம்சம் திருப்தியளிப்பதாக இருக்கிறதா? சட்டம் இல்லாத பட்சத்தில் எப்படியான சட்டவடிவம் உருவாக்கப்பட வேண்டும்?
நிலவன்:- இலங்கையில் போதியளவில் சட்டம் மற்றும் கொள்கை ரீதியில் நடைமுறைப் படுத்தக்கூடிய கட்டமைப்புகள் இல்லை இந்த விடயத்தில், சாத்தியமான இதர புதைகுழிகளின் அமைவிடங்கள் பற்றி விசாரணை செய்வதற்கு அது பற்றி திறன்கொண்ட சிறப்பு அணியொன்றை உருவாக்க வேண்டும். மரண விசாரணை தொடர்பில் புதிய சட்டமொன்றும் நிலையான வழிகட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை, அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கலந்தாலோசிக்கப் படவில்லை. நாடு முழுவதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தடயவியல் திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
வடக்கு கிழக்கு உட்பட இலங்கை இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன. அத்துடன் மக்கள் வாழ் இடங்களில் உள்ள பல கிணறுகளைப் படையினர் மூடியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணறுகள் இருந்த இடங்கள் தெரியாதவாறும் மூடப்பட்டுள்ளது. இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். 2009 போரில் சரணடைந்த அல்லது வரிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக காணப்படும் நிலையில், இந்தப் புதைகுழி உணர்வு பூர்வமான ஒன்றாக இருக்கப் போகிறது.
2007-2009 போரின் பல மர்மங்கள் இருந்தன இன்னமும் இருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கு புதைக்கப்பட்டனர் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை இதுவரை காணப்பட்டு வருகிறது . கடந்த காலங்களில் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதெல்லாம் குற்றமிழைத்தவர்கள் தப்பிச் செல்ல அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது கண்டறியப்பட்டுவரும் மனிதப் புதைகுழி அவ்வாறான ஒன்றாக இருக்குமானால் இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கு சர்வதஏசத்திற்பு ஒரு புதிய துப்பு கிடைத்திருக்கிறது. இதனை வைத்துக் கொண்டு தடயவியல் ஆய்வுகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும். மனித புதை குழி தோண்டி ஆராயப்படும் போது சர்வதேச தடயவியல் துறைசார் நிபுனர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்கள் உட்பட பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
ஈழ இன விடுதலைப் போராட்ட ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றித் தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கின்றது. இலங்கைக்கு எதிராகக் கடந்த 2012, 2013, 2014, 2015, 2017, 2019 மற்றும் 2021 ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா வாக்களிப்பைப் புறக்கணித்தது . இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை அறியப்பட்ட இந்தியாவின் போலி வேஷம். இலங்கைக்கு எதிரான எத்தனை தீர்மானம் கொண்டு வந்தாலும் நேர்மையாகவோ அல்லது துணிந்தோ இந்தியா செயல்பட வாய்ப்பில்லை. இலங்கையைச் சர்வதேச அமைப்புகளிடமிருந்து குறிப்பாக இன அழிப்பு இனப்படுகொலை புகாரிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இந்தியாவின் தொடர் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இளங்கீரன்:-இன்றைய சந்திப்பின் நிறைவாக உலகத் தமிழருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?
நிலவன்:-வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் நிழற்படங்கள் தொடர்ந்து வெளிவரும் நிலை காணப்படுகிறது. முள்ளிவாய்க்கால் வரையான களங்கண்ட போராளிகளாகச் செயற்பட்டவர்கள் போரில் வீரச்சாவைத் தழுவியிருப்பார்கள் என சக போராளிகள் உறுதிபட நம்புகின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நீதிக்கான தொடர் போராட்டத்தினை வலுவிலக்கச் செய்யும் நோக்குடன் பல சதித்திட்டங்களை உலக வல்லாதிக்க அரசு உட்பட பௌத்த சிங்கள பேரினவாத அரசும் அதன் கூலிப்படைகளும் நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
வெள்ளை கொடியோடு சரணடைந்தவர்களும் இராணுவத்தின் கரங்களில் கையளிக்கப்பட்டவர்களும் இராணுவத்தில் கைதுசையப்பட்டவர்களும் எனப் பலர் இலங்கை அரச படைகளினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். புனர்வாழ்வு என்ற பெயரில் சித்திரவதை கூடங்களில் தடுத்துவைக்கப்பட்ட பலர் சாவடைகின்ற நிலை காணப்படுகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிவரும் உறவுகளும் சாவடைந்து வருகின்றார்கள் இன்னிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிவருபவர்கள் தமது காணாமல் ஆக்கப்பட உறவுகள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்ற மன நிலைக்கு வலிந்து தள்ளப்படுகின்றார்கள்.
போற்றோர், சக போராளிகள் மற்றும் உறவினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளை மாவீரர்களாக இராணுவ நிலைகள் கொடுத்து அவர்களின் வீர வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்குடன் காலத்திற்குக் காலம் தமிழீழத் தேசிய உணர்வாளர்கள், பற்றாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் போராளிகள் எனப் பலரும் எமது வரலாற்று நாயகர்களுக்கு வீர வணக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மாவீரர்கள் வரிசையில் அவர்களை இணைத்து வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் வீரச்சாவடையும்போது தமிழீழத் தாயகக் கோட்பாட்டை இறுகப்பற்றியபடியே வீரச்சாவடைந்தார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற கோசத்துடன் தேசிய விடுதலையை முழு மூச்சாக விழிமடல் மூடித் துயில்கின்றார்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”