தமிழீழப் படுகொலையை கண்டித்து தீயிட்டு உயிர்நீத்த ஈகைபோராளி பள்ளப்பட்டி ரவி நினைவுநாள் இன்று 2009ஆம் ஆண்டு சனவரி 29ஆம் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் மரணம் தமிழகத்தையே உலுக்கிப் போட்ட ஒரு நிகழ்வாகும். தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் இதனைப் பார்த்து மனமுடைந்து போனார் ஒரு இளைஞர். இது பற்றி தனது மனைவியிடம், ” இலங்கையிலே நமது தமிழர்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்களே?” என்று மனம் நொந்து பேசினார்.
சனவவரி 31ஆம்நாள் மாலை 6 மணிக்கு தனது வீட்டை விட்டுப் புறப்பட்டார். தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றிக் கொண்டு “இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுங்கள்” என்று முழக்கமிட்டபடி தன் உடம்பில் தீ வைத்துக் கொண்டார்.
அந்த இளைஞரின் பெயர் ரவி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள பள்ளப்பட்டி ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு சித்ரா என்ற மனைவியும், பிரபாகரன் என்ற மகனும் உண்டு. மனைவி சித்ரா தனது கணவரின் கருகிய உடலை எடுத்துக்கொண்டு நிலக்கோட்டை மருத்துவமனைக்கு ஓடினார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தனர். அதன் பிறகு உயிருக்கு போராடிய நிலையில் மதுரை இராசாசி மருத்துவமனையில் ரவி அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய கருணாநிதி அரசு 1965 மொழிப்போரில் பக்தவத்சலம் அரசு கையாண்ட வழிமுறையை மேற்கொண்டது. முத்துக்குமாரின் மரணத்தால் எழுந்த மாணவர் சமூகத்தின் எழுச்சியை தடுக்க நினைத்தது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்று அறிவித்தது. முத்துக்குமார் மரணசாசனம் எழுதிவிட்ட காரணத்தால் அதனை கொச்சைப்படுத்த முயன்று தோற்றுப்போனது.
மீண்டும் அதே வழி முறையை பள்ளப்பட்டி ரவியின் மரணத்திலும் கடைபிடித்தது. அதன்படி ஸ்டவ் அடுப்பு வெடித்து தீக்காயமடைந்ததாக பொய்த் தகவலை காவல்துறை மூலம் வெளியிட்டது. எங்கள் குடிசை வீட்டில் ஸ்டவ் அடுப்பு என்பதே இல்லை, விறகு அடுப்பு மட்டுமே பயன்படுத்துவதாக இரவியின் மனைவி சித்ரா குற்றம் சாட்டினார்.
பிறகு மீண்டும் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. இராசேந்திரன் என்பவர், “கணவன்- மனைவி குடும்பச் சண்டையே தீக்குளிப்பிற்கு காரணம்” என்று கதை கட்டினார்.
ஆனால், ரவி கொடுத்த வாக்குமூலமானது முதல் தகவல் அறிக்கையில் ஒரு பெண் காவலர் மூலம் எழுதப்பட்டு தீக்குளிப்பிற்கான காரணம் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. அது வருமாறு:
” நான் இலங்கைத் தமிழர்களுக்காக வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை என் மீது ஊற்றிக் கொண்டு, வீதிக்கு வந்து தீக்குளித்தேன். அப்போது என் மனைவி தண்ணீர் எடுக்க கிணற்றடிக்குப் போய் இருந்தாள். என் பிள்ளைகள் வீட்டுக்கு உள்ளே விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் உடம்பை நெருப்பு பற்றி எரிந்த போது உடைகள் கருகியதால், அம்மணமாக கிடக்க நேரிட்டதால் மானத்தை மறைக்க பக்கத்தில் இருந்த ஈரச்சாக்கை எடுத்து என் இடுப்பில் சுற்றிக் கொண்டேன்.”
ஒரு காவல்துறை உயர் அதிகாரி மூலம் முதல் தகவல் அறிக்கையை மூடி மறைத்து ரவியின் மரணத்தை கொச்சைப்படுத்தி பேச வைத்தவர் ‘குடும்பச்சண்டை’ புகழ் கருணாநிதி தான் என்பது அன்றைக்கு வெட்ட வெளிச்சமானது.
80 விழுக்காடு தீக்காயங்களோடு உள்ள ஒருவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலே, பிப்.2ஆம் நாள் தனது மகனுக்கு பிரபாகரன் என்று வீரப்பெயர் சூட்டி மகிழ்ந்த அந்தப் பெருவீரன் தமிழின உணர்வாளர்களை துயரம் கொள்ளச் செய்திடும் வகையில் வீரச்சாவைத் தழுவினான்.