இந்தக் கட்டுரைத் தொடரில் முதலாவது பிரிதலைப்பின் (அத்தியாய) இறுதியில் – ‘தமிழ்நாட்டு மக்களின் அமைதிக் குலைவை, கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறார் ஜெய்பீம் இயக்குநர் பேரமைதியுடன்’ என்றெழுதியிருந்தோம். எழுதப்பட்டது பதிப்புவெளியில் தோன்றுவதற்கு முன்னரே ஜெய்பீம் தரப்பிலிருந்து இயக்குநரால் வெளியிடப்பட்ட ‘மன்னிப்பு அறிக்கை’யானது பின்வாங்குதலை உணர்த்துகிறது என்றால், ஜெய்பீமுக்கு ஆதரவானவர்களின் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையானது பாய்ச்சலை உணர்த்துகிறது.
கண குறிஞ்சி, யமுனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு வெளியிட்ட அறிக்கையொன்று, ஜெய்பீமை ஆதரித்து, ‘ஒரு சாதிக் கட்சியை’க் கண்டிக்கிறது. தமிழின் கலாச்சார வெளியிலும் அரசியல் வெளியிலும் இயங்கிவருகிற பலரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
இலக்கியம் திரைக்கலை உள்ளிட்ட கலைப்பிரிவுகள் பலவற்றிலும் இயங்கிவருகிற கலைஞர்கள், மதிப்பாய்வர்கள், கலைக் கோட்பாட்டாளர்கள், பின்நவீனத்துவர்கள், இஸங்களைப் பின்பற்றுவோர், பெண்நிலைக் கருத்தியலர், சூழலியல் செயற்பாட்டாளர்கள், பொதுநல விரும்பிகள், மனித உரிமைக் களச் செயல்பாட்டாளர்கள், கோட்பாட்டு அரசியல் இயக்கத்தவர்கள் என்று … கிட்டத்தட்டத் தமிழ் அறிவுலகின் அனைத்துப் பிரிவினரும் கையெழுத்து இட்டிருக்கின்றனர்.
‘ஜெய்பீம் சிறந்த படம்’ – என்பது, இந்த அறிக்கையின் மதிப்பீடு. கலைஞர்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், அச்சுறுத்தலை எதிர்த்து நின்று படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாத்திட வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறது அறிக்கை. மேலும், ‘ …. இத்தனைக்கும் இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்பே ஜெய்பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் அவர்கள், தாமாகவே முன்வந்து ஆட்சேபத்துக்கு உரியது எனச் சொல்லப்படுகிற குறியீட்டுப் பிம்பத்தை அகற்றி இருக்கிறார்’ என்றொரு புதுத் தகவலை முன்வைக்கிறது அறிக்கை. இப்படியொரு தகவலை ஜெய்பீம் தரப்பே வெளியிட்டிராதபோது – இந்தத் தகவல் உண்மையானதுதானா? என்று ஆராயும் பொறுப்பை ‘உண்மையறியும் எந்தக் குழுவிடம்’ (Fact Finding Team) ஒப்படைப்பது?. கருத்துரிமை, கலைஞர்களின் சுதந்திரம், சுதந்திரமான படைப்புச் செயல்பாடு ஆகிய பதங்களை, பொருளுணர்ந்துதான் கையாள்கிறதா இந்த அறிக்கை? சிறந்த படமா ஜெய்பீம்? – இப்படியான கேள்விகளை எழுப்பிக்கொள்வோம். அறிக்கைக்குள் ஒளிந்துகிடக்கின்றன இன்னும் பல கேள்விகள்; அந்தக் கேள்விகளையும் தட்டியெழுப்புவோம். மேற்படிக் கேள்விக் கூட்டத்தில், இந்த அறிக்கைக்கு வெளியிலிருக்கும் கேள்வியொன்றையும் சேர்த்துக்கொள்வோம். அந்தக் கேள்வி : ஜெய்பீம், படைப்புச் சுதந்திரத்தை மீறியிருக்கிறதா இல்லையா?
இவற்றுக்கெல்லாம் விடை தேடுவதற்கு முன்னர், உடனடியாக விடை கண்டாகவேண்டிய கேள்வி ஒன்றுண்டு. அது, ஜெய்பீம் என்ன வகையான படம்? இந்தக் கேள்விக்கான விடையை, ‘காலவெளிக் கதைகள்’ என்கிற பிரிதலைப்பில் இனி ஆராய்ந்து பார்ப்போம். சென்ற பிரிதலைப்பில், காலத்தை மொழிகிற கதைகளின் வகைப்பாடுகளைக் கண்டிருந்தோம். அந்த வகைப்பாடுகளுள் ஒன்று – காலகட்டத் திரைப்படம் (Period Film). ஜெய்பீம் திரைப்படத்தை, ‘காலகட்டத் திரைப்படம்’ என்ற வகைச்சொல் கொண்டு சுட்டுகிறார் படத்தின் இயக்குநர். வெகுமக்கள் மட்டுமின்றி, அறிவியக்கத்தவரும் இயக்குநரின் வகைச்சொல்லையே கையாண்டு வருகின்றனர்.
கடந்த காலத்தைக் கதையாக மொழிகிற கதைகளின் வகைப்பாடுகளைப் பிரித்தறியாமல், யாவற்றையுமே ‘காலகட்டத் திரைப்படம்’ என்று சுட்டுகிற போக்கு இரண்டாயிரத்துப் பத்துகளின் தொடக்க ஆண்டுகளிலேயே நிலைபெற்றுவிட்டது. ஒவ்வொரு வகைப்பாடும் தனித்த வரையறை கொண்டிருப்பதாகும். குறிப்பிட்ட வகைப்பாட்டுக்குரிய வகைச்சொல்லால் அன்றி பிறிதொரு வகைச்சொல்லால் சுட்டுவதானது வெறுமனே சுட்டுபிழைதானா?; அல்ல!
சுட்டுபிழையானது, மதிப்பாய்வுப் பயணத்தடத்தைக் கலைத்துப்போட்டு, மதிப்பாய்வரைத் தவறான தடத்தில் செலுத்தி, பொருத்தமற்ற மதிப்பீட்டு இலக்குகளைச் சேரும்படி குழப்பிவிடக்கூடியது. வகைச்சொல் சுட்டுபிழையானது மதிப்பீட்டுத் தளத்தில் பெருங்குற்றமாகும். துறை சாராதவர்கள் அல்லது கலையியல் பயிலாதவர்கள் மதிப்பீட்டுத் தளத்தில் புழங்கவரும்போது இப்படியான கோளாறுகளைக் காணலாம்; ஒளிப் பந்தத்தின் தீயில், இப்படிப்பட்ட கோளாறுகளும் நெய்யூற்றுகின்றன. இந்தக் கோளாறுகளை உடனடியாகச் சீர்படுத்துவது கலையியல் பயின்ற மதிப்பாய்வர்களின் காலக் கடமை.
காலவெளியைத் தளமெனக் கொண்டெழும்புகிற கதைகளின் வகைப்பாடுகளுக்கு இடையே காணப்படுகிற வேறுபாடுகளை விளங்கிக்கொண்டால்தான், ஜெய்பீம் திரைப்படத்தின் வகைப்பாடு இன்னதென அறுதியிடமுடியும். வேறுபாடுகள் விளங்கவேண்டுமாயின் முதலில் தனித்துவம் விளங்கவேண்டும். ஒவ்வொரு வகைப்பாடும் தனக்கேவுரிய தனித்திறன், பற்றாக்குறை ஆகியனவற்றை இயல்பெனக் கொண்டுள்ளது. ஒவ்வெரு வகைப்பாடும் அதற்கேவுரிய கறாரான கட்டமைப்பு வரையறைகளால் ஆளப்படுகிறது. வரையறைகள் மீறப்படும்போது அந்தத் திரைப்படம் வேறு வகைப்பாடாக வடிவந்திரியும். வடிவம் திரிந்தாலும், திரிந்த வடிவத்திற்கு என்றொரு வகைச்சொல்லை முந்தையோர் உருவாக்கி வைத்திருப்பார்கள் இல்லையா… அந்த வகைச்சொல்லே இப்பொழுது சுட்டுரிமைக்கு உரியது, திரைப்படக் கட்டுமான வடிவொழுங்கு பயிலாதவரது படைப்பும்கூட, படைப்பூக்க உள்ளெழுச்சியின் தான்தோன்றிவடிவம் ஒன்றைக் கொண்டிருக்கும். அந்த வடிவத்திற்கு உகந்த வகைச்சொல்லை, காலவோட்டத்தில் திரைக்கலையியல் கண்டடைந்துவிடும். வகைப்பாடு கண்டடைதல், வகைச்சொல் உருவாக்கம் ஆகியன, முடிவுறாத கலையியக்கமாகும். மானுட வரலாற்றுப் போக்குகள், திரைப்பட அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், திரைப்படக் கலைஞர்களின் தொழில்நுணுக்க அறிவுமேம்பாடு ஆகிய மூன்று பேரியக்கங்களும் காலத்தின் வேட்கையால் கூடி முயக்கம் கொள்வதால் புதிய வகைப்பாடுகள் பிறப்பெடுக்கின்றன.
1915 ஆம் ஆண்டு D.W.Griffith என்கிற பெருங்கலைஞனிடமிருந்து வெளிப்பட்ட திரைக்காவியமாகிய The Birth of a Nation தொடங்கி 2019 ஆம் ஆண்டு Sam Mendes இயக்கத்தில் வெளிப்பட்ட திரைக்காவியமாகிய ‘1917’ ஊடாகப் பயணித்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறது காலவெளிக் கதைகளின் நவீனத்துவம். உலகத் திரைப்பட உருவாக்கத்தில், காலவெளிக் கதைகளின் பரப்பு அகண்டது.
காலவெளிக் கதைகளில், வரலாற்றுத் திரைப்படம், வரலாற்றுப் புனைவுத் திரைப்படம் ஆகிய வகைப்பாடுகள், முதன்மையாகக் கருதத் தக்கவை. வரலாற்றுக் கதைகள், ஓரினத்தின் கலாச்சார வாழ்விலும், அரசியல் வெளியிலும் புதிய சொல்லாடல்களை உருவாக்கக்கூடியவை. எனவே, வரலாற்றுக் கதைகளால் மொழியப்படுகிற வரலாற்றில் பிழை இருந்துவிடக்கூடாது.
தொடரும்.