ஜெய்பீம் திரைப்படத்தினால் விளைவிக்கப்பட்டிருக்கிற சலசலப்பை எப்படிப் புரிந்துகொள்வது?
அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸும், தயாரிப்பாளர் சூர்யாவும் வெளியிட்டிருக்கிற அறிக்கைகள் சிக்கலைத் தீர்க்கின்றனவா? சிக்கலை நீட்டிக்கின்றனவா?
இருவரின் அறிக்கைகளுக்குப் பின்னரும் ஜெய்பீம் அதிர்வுகள் அடங்கினபாடில்லை; மாறாக, இருவரின் அறிக்கைகளுக்குப் பின்னர்தான் ஜெய்பீம் அதிர்வுகள் பன்மடங்கு அழிவாற்றல் கொண்ட பெருநடுக்கமாக வலுவேற்றப்பட்டிருக்கிறது.
ஜெய்பீம் வெடிப்பின் இன்றைய முரண்கள் தீர்க்கப்பட்டாக வேண்டும். இன்றைக்கே தீர்க்கப்படவில்லை என்றால் இன்றைய முரண்கள் உண்டாக்கியிருக்கிற பிறப்படையாளப் பற்றுப் புண்கள் அழுகிப்போய், ஆற்றமாட்டாத புண்ணென்று ஆகி, அறுவை மருத்துவத்திற்குத் தமிழினம் உட்பட வேண்டிவரும். அந்த மருத்துவம் உயிர்வலி தரக்கூடியது. நிலையான பேரிழப்புகளை உண்டுபண்ணக்கூடியது…..
ஜெய்பீம் உருவாக்கியிருக்கிற அமைதிக்குலைவை, பக்கச்சார்பின்றி நோட்டமிடவேண்டும். முரண்பட்டு நிற்கிற தரப்பினரிடையே நிலவுகிற வெறுப்பையும், பகையையும் போக்கவேண்டும். இவையெல்லாம் உடனடியாக நிகழ்ந்தேறவேண்டியவை. இந்த அக்கறையோடுதான் ஜெய்பீம் மீதான மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஜெய்பீம் கற்பனைக் கதையல்ல. கால் நூற்றாண்டுக்கு முந்தைய கொலை வழக்கின் திரை வடிவம். அவ்வகையில், வரலாற்றைப் பேசுகிறது ஜெய்பீம். வரலாற்றைப் பேசுகிற திரைப்படங்கள் பலவகையானவை.
வரலாற்றுlத் திரைப்படம் (Historical Film), வரலாற்றுப் புனைவு (Historical Fiction), காலகட்டத் திரைப்படம் (Period Film), வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் (Biographical Film), வாழ்க்கை வரலாற்றுப் புனைவு (Biographical Fiction), உண்மைக் கதை (True Story) – இப்படியாக வகை பிரிக்கலாம். ஜெய்பீம் எந்த வகைப்பாட்டுக்கு உரியது என்பதை முதலில் அறுதியிடவேண்டும். பின்னர், குறிப்பிட்ட வகைப்பாட்டுக்குரிய படைப்பொழுக்கம் பேணப்பட்டிருக்கிறதா என்று ஆய்ந்துபார்க்கவேண்டும். பின்னர்தான், திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிற அரசியல் மீது மதிப்பீடு வைக்கமுடியும்.
கால் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய நிகழ்வைக் கீறிப் பார்த்து, கதைக்கூறுகளைப் பிரித்தெடுக்கிறார் ஜெய்பீம் இயக்குநர். கதையாக்கத் திறன் பெற்றவைகளைத் தேர்வு செய்து பிறவற்றைக் கழித்துவிடுகிறார். தனக்கு உணர்வெழுச்சி தரக்கூடியவற்றை, தனது மனப்பான்மைக்கு உகந்தவற்றை, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தக்கனவற்றை, கதை முரண்களைப் பிறப்பிக்கக்கூடியவற்றை, பிற கூறுகளோடு பொருந்தி இயங்கக்கூடியவற்றைத் தேர்வு செய்திருக்கிறார். கூறுகளுக்கு இடையேயான பொருத்தப்பாடுகளைக் கண்டுணரந்து பிணைத்து, கதையைக் கட்டமைக்கிறார்.
ஜெய்பீம் கதையைக் கட்டுடைப்புச் செய்தால், உண்மை நிகழ்விலிருந்து ஆயந்தெடுக்கப்பட்ட கதைக்கூறுகளின் உள்ளாற்றலையும், பிணைத்துக் கதையாக்கிய படைப்பு தர்க்கத்தையும் விளங்கிக்கொள்ளலாம். இப்படி விளங்கிக்கொண்ட பின்னர்தான் – வரலாற்றுத் திரைப்படமா? வரலாற்றுப் புனைவா? காலகட்டத் திரைப்படமா? வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமா? வாழ்க்கை வரலாற்றுப் புனைவா? உண்மைக் கதையா? என்று வகைப்படுத்த முடியும். பின்னர்தான், குறிப்பிட்ட வகைப்பாட்டுக்குரிய கட்டமைப்பு விதிகள் பேணப்பட்டுள்ளனவா? என்று சரிபார்க்கவேண்டும். அதற்கடுத்த நிலையில்தான் படைப்பின் அழகியல், அரசியல், படைப்பாளியின் உட்கிடக்கை, படைப்பாளியின் நனவிலி மனம் ஆகியனவற்றை ஆய்வுக்கு உட்படுத்தவியலும்.
கொலைகாரனைக் கண்டுபிடிப்பதுதான் ஜெய்பீம் கதை. இதுவொரு துப்பறியும் கதை. அகதா கிறிஸ்டி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரக் குமார், ராஜேஷ் குமார், எண்டமூரி வீரேந்திரநாத் உள்ளிட்ட பலரும் கையாண்டிருக்கிற கதை வகை. கொலை நிகழவில்லையெனில் இந்தக்கதை இல்லை. கொலையே கதையின் மையம்.
Cry Freedom திரைப்படத்திலும் கொலையே கதையின் மையம். இயக்குநர்களின் இயக்குநர் என்று முடிசூடிக் கொள்வதற்குத் தகுதியான Richard Attenborough இயக்கியிருக்கிறார். ‘காந்தி’ திரைப்படத்திற்குப் பின்னர் அவர் இயக்கிய திரைப்படம். 1987 ஆம் ஆண்டு வெளியாகி விருதுகளையும் வணிக வெற்றியையும் ஒருசேர அறுவடை செய்தது. கறும்புலி Denzel Washington நடித்திருக்கிற அருமையான பல படங்களுள் மறந்திட முடியாத படம் Cry Freedom.
ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் பழங்குடியின் ராஜாக்கண்ணு கொல்லப்படுகிறாரென்றால், Cry Freedom திரைப்படத்தில் தென்னாப்பிரிக்கக் கறுப்பினத் தலைவராகிய Steve Biko (Bantu Stephen Biko: 1946 – 1977; https://artsandculture.google.com/exhibit/steve-biko-the-black-consciousness-movement-steve-biko-foundation/AQp2i2l5?hl=en ) கொல்லப்படுகிறார். தென்னாப்பிரிக்க வெள்ளையினக் கொடுங்கோண்மைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த கறுப்பர் தன்விழிப்பு இயக்கத்தின் ( Black Conscious Movement) நிகரற்ற இளந்தலைவர். ஸ்டீவ் பிக்கோ. கறுப்பர் தன்விழிப்புக்கு அறிவார்த்தச் செழுமையூட்டியவர். கறுப்பர் தன்விழிப்பு என்கிற பதத்தை ‘இனவாதம்’ என்று புரிந்துகொண்டு, கறுப்பர் தன்விழிப்பையும், ஸ்டீவ் பிக்கோவையும் இளக்காரமாக நோக்குகிறவர் Daily Dispatch செய்தித்தாளின் ஆசிரியராகிய Donald Woods. இருவருக்கும் இடையிலான நேர்ச் சந்திப்புக்குப் பின்னர் மாற்றமடைகிறார் வுட்ஸ். கறுப்பர் தன்விழிப்பு இயக்கத்தை மதித்தேற்கிறார்; ஆதரித்து எழுதுகிறார்.
கறுந்தலைவர் ஸ்டீவ் பிக்கோவின் வளர்ச்சி கண்டு பெருநடுக்கம் கொள்கிறது வெள்ளை மேலாதிக்கவாதம் ( White Supremacy). தென்னாப்பிரிக்கக் காவல் துறையினால் கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்யப்படுகிறார் பிக்கோ. இயற்கை மரணம் என்கிறது காவல் துறை. உண்மையை நிறுவுவதற்கான ஆதாரங்கள் வுட்ஸிடம் இருப்பினும், உண்மையை வெளிக்கொண்டுவர முடியாத அளவு நெருக்கடிகள் தருகிறது காவல் துறை. ஐந்தாண்டுத் தடைக்கு ஆளாகிறார். ஆசிரியப் பொறுப்பிலிருந்து பிடுங்கியெறியப்படுகிறார். ஐந்தாண்டுகள் எதுவும் எழுதக்கூடாது என்கிறது அதிகார வர்க்கம். ஒரு பத்திரிகையாளர் எழுதக்கூடாது என்று விதிக்கப்படுகிற தடையானது, ஒரு மீன் நீந்தக்கூடாது என்று விதிக்கப்படுகிற தடைக்கு ஒப்பானது. வுட்ஸின் குடும்பத்து மீதும் வன்முறையை ஏவுகிறது அதிகார வர்க்கம். குடும்பத்துக்குப் பாதுகாப்பில்லை. வுட்ஸின் ஆருயிர் மனைவி வெண்டிக் – வுட்ஸ் இடையே கருத்து மோதல் உருவாகிறது. கட்டிய மனைவி வெறுக்கிறார். கொலைகார்களை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதென்பது தனது வரலாற்றுப் பொறுப்பு என்று மனைவிக்கு உணர்த்துகிறார் வுட்ஸ். வெள்ளையின அதிகார வன்முறைக்குக் குழந்தைகள் ஆட்படும்போது வெகுண்டெழுந்த வெண்டி, வுட்ஸுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். வுட்ஸ், 1977 ஆம் ஆண்டின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பாதிரியார் வேடமிட்டு பொய்ப் பெயர் புனைந்து, பெருந்தடைகளைத் தாண்டி, ஆபத்துகளைக் கடந்து நாட்டைவிட்டு வெளியேறி, அண்டையில் அமைந்திருக்கும் சிறு நாடாகிய Lesotho வுக்குள் நுழைகிறார்.. பின்னர், குறிப்பிட்ட நாளன்று வெண்டி, வீட்டின் ஒவ்வோரசைவையும் கண்காணித்துக்கொண்டிருக்கிற உளவுப் பிரிவின் கண்களில் மண்ணைத் தூவி, குழந்தைகளோடு நாடைடைவிட்டுத் தப்பித்து லெசோத்தோவை அடைகிறார். அங்கு, ஆஸ்திரேலிய நண்பர் Bruce Haigh, United Nations passports எடுத்துத் தர, தனி விமானமொன்றில் வுட்ஸ், வெண்டி, குழந்தைகள் என மொத்தக் குடும்பமும் தப்பிக்கிறது. படத்தின் இறுதி எடுகாட்சியில் (Shot), நெடுந்தூரத்து மலை காட்சிப்படுத்தப் படுகிறது. சட்டகத்தின் இடது விளிம்பிலிருந்து வலது விளிம்பு வரைக்கும் இடைவெளியின்றி நீண்டு, சட்டகத்தை நிறைத்துவிடுகிறது மலைத்தொடர். சட்டகத்தின் மேற்புறத்தே மட்டும் சிறியதொரு பட்டைத் தீற்றலென இடவலமாக ஓடுகிறது தெளிந்த வானம். படப்பதிவியின் நேர் அச்சில், மலைத்தொடரை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிற விமானம் போகிறது போகிறது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு புள்ளி நகர்ந்துபோய்க் கொண்டிருப்பதைத்தான் நம்மால் காண முடிகிறது; படம் முடிகிறது.
தப்பிச் சென்ற வுட்ஸ், Biko என்று தலைப்பிட்டு எழுதிய நூலில் பிக்கோவின் புரட்சிகர வாழ்க்கையை வரலாறாகப் பதிவிடுகிறார். பின்னர், Asking For Trouble என்ற பெயரில் தன்வரலாற்று நூலொன்றையும் எழுதி வெளியிடுகிறார். இரண்டு நூல்களையும் இணைத்து, Cry Freedom திரைப்படத்தை எடுத்திருக்கிறார் அட்டன்பரோ.
படத்தின் இறுதியில் எழுத்து ஓடும்போது, தென்னாப்பிரிக்கக் காவல் துறையின் மனிதகுல அத்துமீறல்கள் என்னென்ன என்று பட்டியலிடுகிறார். காவல் துறையினால் நிகழ்த்தப்பட்ட கொலைகளை என்னென்னவெல்லாம் பொய் புனைந்து மறைத்தது வெள்ளையின மேலாதிக்கம் என்கிற மறைவுண்மையைப் போட்டுடைக்கிறார். ஏழாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார், படிக்கட்டு ஏறும்போது தவறி விழுந்துவிட்டார், ஓடுகிற வண்டியிலிருந்து குதித்துவிட்டார், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் ….இப்படிப் பல புனைவுகள். ஒவ்வொன்றையும் போட்டுடைக்கிறார் அட்டன்பரோ
வெள்ளையினத்தவரின் மானுடகுலக் குற்றங்களை, வெள்ளையினத்து வுட்ஸ் நூலாக எழுத, வெள்ளையினத்து அட்டன்பரோ திரைப்படமாகத் தந்திருக்கிறார். இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்கள், இரண்டாமத்துவக் கதாபாத்திரங்கள், துணைக் கதாபாத்திரங்கள் யாவும், நூலில் உள்ளபடியே திரையுருவம் பெற்றிருக்கின்றன. பாதுகாப்புக் காரணங்களினால் இரண்டு மனிதர்களின் அடையாளங்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன. மற்றபடி, உள்ளது உள்ளபடி படமாக்கப்பட்டிருக்கிறது. ‘கதை நிகழ்வுகள், கதை மாந்தர்கள் ஆகிய அனைத்துமே உண்மை’ என்று எழுத்துப் போட்டு, கதையாடலுக்குப் பொறுப்பெடுத்துக்கொள்கிறார் இயக்குநர். கதாபாத்திங்களின் பதவி, சமூக நிலை, பிறப்படையாளம் ஆகிய எதுவம் மாற்றப்படவில்லை.
இந்தப் படத்தின் உயிரோட்டம் என்னவென்றால், கறுப்பினத்தவரின் இன விழிப்புப் போராட்டத்தைக் குறுகியவாதம் என்று எள்ளி நகைத்த வெள்ளயரே பிற்காலத்தில் கறுப்பினத்தவருக்கான உரிமைப் போரில் பங்கெடுக்கிறார் என்பது, காவிய முரண். வெள்ளையின அநீதியை வெள்ளையினத்தவரே வெளிப்படுத்துகிறார் என்பது, முந்தையதைக் காட்டிலும் சிறப்பெய்திய முரண்கூறாகும். வெள்ளையினத்தவரின் மனசாட்சியை விழிக்கவைக்கிறது டொனால்ட் வுட்ஸ் கதாபாத்திரம். வுட்ஸ், ‘தன் இனம்’ என்கிற தற்சார்புப் பற்றினை (Self Regarding Sentiment) அறுத்தெறிந்தவர். சொந்த இனத்தவரின் நிறவெறியை நிறவெறி என்றே விளங்கிக்கொள்ள முடிந்தது. இந்தக் கேடுணர்ச்சிதான் ஆப்பிரிக்க மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் ஊற்றெடுக்கச் செய்கிறது என்பதைப் புரிந்திருந்தார். வெள்ளையினத்தவரது பிறப்படையாளப் பற்று என்கிற சுனையை அடைப்பதொன்றே, நிறவெறி ஊற்றெடுப்பை நிறுத்தும் என்று புரிந்திருந்தார். அம்மட்டில், முதலில், தன்னில், அந்தச் சுனையை வற்றச் செய்தார். வுட்ஸின் வாழ்க்கைக்குள் கறுப்பினத் தலைவர் பிக்கோ நுழைந்த பின்னர்தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. இவர்கள் இருவருமே மானுடகுல வரலாற்றில் நினைவிலிருத்திப் போற்றப்பட வேண்டிய மானுடர்கள்.
அடக்கப்படுகிற இனத்தைச் சார்ந்த பிக்கோவின் வீரவுணர்ச்சி, ஈகவுணர்ச்சி, விடுதலை வேட்கை ஆகியன காவியத் தன்மை கொண்டவை. அடக்குகிற இனத்தைச் சார்ந்த வுட்ஸின் வீரவுணர்ச்சி, ஈகவுணர்ச்சி, அறவேட்கை ஆகியனவும் காவியத் தன்மை கொண்டவையே. இவற்றை, பார்வையாளருக்குள்ளிருந்து ஊற்றெடுக்கவைக்கிறது Cry Freedom. பிக்கோ, சொந்த இனத்தின் விடுதலைக்காக வேற்றினத்தின் கருணையற்ற கொடுங்கோண்மையோடு பொருதுகிறார். வுட்ஸ், வேற்றினத்தின் விடுதலைக்காக சொந்த இனத்தின் கருணையற்ற கொடுங்கோண்மையோடு பொருதுகிறார். இந்த உணர்வுகளெல்லாம் உயிர்பெற்று எழும்புகையில் அறவுணர்வு ததும்ப, காவியப் பண்பை எய்திவிடுகிறது திரைப்படம். பிக்கோ Hero என்றால் வுட்ஸ் Super Hero அல்லவா? பார்வையாளரின் ஆழ்மனதில், Super Hero ஆகிவிடுவதற்கான விழைவு உறக்க நிலையில் கிடக்கிறது. அந்த விழைவை நிறைவு செய்கிறது இந்தப் படம்.
அறம் வழுவிடாத கதையாடல்தான், பிக்கோ – வுட்ஸ் நட்புக்குள் உறைந்திருக்கிற காவியப் பண்பினைத் துலக்கமுறச் செய்கிறது. அறவுணர்வு என்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு சிலேட் வாங்கித் தருவதோ, பிறந்த நாள் பார்த்து அநாதை விடுதிகளுக்கு பிரியாணிப் பொட்டலம் தருவதோ அல்ல. மெய்வழுவிடாத அகவிழிப்பு நிலைகொண்ட ஒருவருக்குள் இயங்குகிற செம்மையறிவே அறமெனப்படும்.
பிக்கோ, வெள்ளையினத்தோடு இனச்சண்டையை நடத்துபவராக இருந்தபோதிலும், வெள்ளையினத் தனிமனிதர்களை முன்கருத்தின்றி எதிர்கொண்டார். வெள்ளையினத்து அறிவியக்கவாதியாகிய வுட்ஸிடம் அன்பு காட்ட முடிந்தது. இந்த அன்பு, வுட்ஸின் அறவுணர்வைப் புரிந்தேற்றுக்கொண்டதால் மலர்ச்சி கொள்கிற ஒன்று. இங்கு, மெய்மையைத் தொழுதேற்றுக்கொண்ட இரண்டு உள்ளங்களின் கவர்ச்சியில் நிகழ்கிற மகரந்தச் சேர்க்கைதான் நட்பென முகிழ்க்கிறது. இருவரும் கொள்கிற இந்த ஈர்ப்பு, செவ்வியல் பண்பு கொண்டது. இந்தக் கதைமாந்தரைப் போலவே அறவுணர்வு கொண்ட ரிச்சர்ட் அட்டன்பரோ என்கிற படைப்பாளி, கதைமாந்தரின் உள்ளியங்குகிற அறவுணர்வைப் பார்வையாளருக்குக் கடத்துகிறார். உண்மையில் இங்கு, படைப்பாளியானவர், தனக்குள் ஒளியுமிழ்கிற அறவுணர்ச்சியைப் பார்வையாளருக்குள் பீய்ச்சுவதற்கான ஒளிக்கடத்தி போலக் கதையையும், கதைமாந்தர்களையும் கையாளுகிறார். கதைமாந்தர், படைப்பாளி, பார்வையாளர் ஆகிய முத்தரப்பிலும் அறவுணர்ச்சி பெருக்கெடுத்துப் பாய்கிற பரவச நிலையை, படம் மார்க்கும்போது அனுபவிக்க முடிகிறது. இதுதான் செவ்வியல் திரைப்படத்தின் தாக்கமாகும். திரைக்கதை நுணுக்கம், திரைமொழி, இன்னபிற கலைநுட்பங்கள் அனைத்தும் கணிதாயத் துல்லியத்துடன் தொடர்புறுகின்றன என்பதாலேயே ஒரு திரைப்படம் செவ்வியல் தன்மையை எய்திவிடுவதில்லை. மேற்கண்ட கலைநுட்பங்கள் யாவும் அறவுணர்வினால் ஒருங்கிணைவு கொள்கிறபோது அமைவுறும் இசைமைதான் ஒரு திரைப்படத்திற்கு செவ்வியல் தன்மையை ஏற்றுகிறது. அறவுணர்வினால் மேய்க்கப்படாத கலைநுட்பங்கள் எவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைவு உற்றபோதிலும், அப்படைப்பு செவ்வியல் தன்மையை ஒருபோதும் எய்திவிட முடியாது. உயர்தொழில்நுட்பத்தை அங்கே காணலாம்; செவ்வியல் பண்பினைக் காணமுடியாது. “சுந்தர ராமசாமியின் எழுத்தில் காணக்கிடைப்பது வெறும் Craftsmanship “ என்று பிரமிள் விளக்கிச்சென்றது மேற்கண்ட அடிப்படைகள் கொண்டுதான். சுந்தர ராமசாமியிடம் அறவுணர்வு இல்லையென்பதால் வெறும் Craft ஆக அவரது எழுத்தியக்கம் முடங்கிப் போயிற்று என்கிறார் பிரமிள். பிரமிளின் புனைவுகள் மட்டுமின்றி அ-புனைவுகள்கூட செவ்வியல் தன்மையை எய்தியிருக்கின்றன என்றால், பிரமிளின் அறவுணர்வுதான் காரணம்; சிறீலங்காவின் தேசியத் தற்கொலை, சிறந்த எடுத்துக்காட்டு. திரைக்கதை நுணுக்கங்களுடன் எழுதப்பட்டிருக்கிற அரசியல் நூல். அந்த நூலை ஆழ்ந்து பயில்கிறவருக்கு, திரைக்கதை நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிற நூல். மட்டுமின்றி, மெய்நாட்டத்தைத் தூண்டிவிடுகிற நூலாகவும் இருக்கிறதென்றால், பிரமிளின் அறவுணர்வுதான் காரணம். இந்த அறவுணர்வுதான் ரிச்சர்ட் அட்டன்பரோவுக்குள் இயங்கியது. அறவுணர்வை மனிதகுலத்துக்குக் கடத்துவதொன்றே பெரும்பேறு என்று கருதி, அந்த அரும்பணியை நிறைவேற்றுவதற்காகத் திரைக்கலையைக் கையாண்டவர் அட்டன்பரோ என்கிற பெருங்கலைஞர். இந்த அறவுணர்வு, சொந்த விருப்புவெறுப்புகளால் பீடிக்கப்படாத்தொரு தூய நிலையில் கதாபாத்திரங்களை இயக்குகிறது; கதையை நடத்துகிறது; திரைக்கலைத் தொழில்நுட்பங்களைக் கையாளுகிறது. துறவியுடையதைப் போலப் பற்றற்ற நிலையிது. மெய்யின் மீதன்றி வேறொன்றின் மீதும் பற்றற்ற நிலை. இவர்தான் உயர்கலைஞர். இவரிடமிருந்து வெளிப்படுவதுதான் உயர்கலை. இத்தகைய மெய்நாட்டம் கொண்டவர்தான் வரலாற்றைக் கதையாக மொழியத் தகுதி பெற்றவர்.
முந்தைய காலத்தில் எப்போதோ வாழ்ந்து முடிக்கப்பட்டதொரு வாழ்க்கையை, திரைப்படத்திற்காக மீண்டுமொரு முறை நிகழ்த்திப் பார்க்கிற முயற்சிதான், Biographical Film எனப்படுகிற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் கதைமாந்தர்களின் பெயர்களை மாற்றுவதற்கோ, கதைமாந்தர்களுக்கு இடையிலான உறவு முறைகளை மாற்றுவதற்கோ, கதைமாந்தர்களின் பிறப்படையாளங்களை மாற்றுவதற்கோ, கதையின் காலவெளியைக் குலைப்பதற்கோ உரிமை பெற்றவரல்ல படைப்பாளி. தனது சொந்த விருப்புவெறுப்புகளுக்குத் தீனியிடுவதற்காக வரலாற்றைக் கையாளக் கூடாது. கதையிடம் முற்றாகப் பணிந்துவிட வேண்டும். முற்றாக அகந்தையைக் கைவிட்டவரே வரலாற்றுத் திரைப்படம் எடுப்பதற்குத் தகுதி வாய்த்தவர். கதைமாந்தரின் கருத்தோ, கண்ணோட்டமோ தனக்கு ஏற்புடையதல்ல என்றபோதிலும் அவற்றை மாற்றிவிட முயற்சியெடுக்கக் கூடாது. ஏனெனில் அது வேறொருவரின் வாழ்க்கை வரலாறு; படைப்பாளியின் புனைவு அல்ல! அட்டன்பரோ, வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கியவர். அனைத்திலுமே அவர் வரலாற்றுக்கு உண்மையாக இருந்தார். அறவுணர்வின் படைப்புக் கட்டளைகளைச் செவிமடுப்பதற்கான அடக்கவுணர்வு வாய்க்கப் பெற்றிருந்தார். அட்டன்பரோவுக்குள் இயங்குகிற அறவுணர்வு த.செ.ஞானவேலுவுக்குள் இயங்குகிறதா?
Cry Freedom திரைப்படம் பார்வையாளருக்குள் உருவாக்குகிற அறவுணர்வை, ஜெய்பீம் திரைப்படம் உருவாக்குகிறதா? Cry Freedom, இனப்பகை கொண்டிருக்கிற இரண்டு இனங்கள் தமது பகை மறந்து பிறரைத் தம்மவராகக் கருதுமாறு அகத்தை நெகிழ்த்துகிறது. ஜெய்பீம் திரைப்படமோ, தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, மக்களிடையே புதிய முரண்களை உற்பவிக்கிறது; வெறுப்பை விதைக்கிறது; அணைக்கமுடியாத பகைநெருப்பைப் பற்றவைத்திருக்கிறது. மார்க்ஸிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், தமிழ்த் தேசியர்கள், சிறுபத்திரிகைக்காரர்கள், அறிவு சீவிகள், பின் நவீனத்துவவாதிகள், இலக்கியவாதிகள், சினிமாக்காரர்கள், ஊடகத் துறையினர், மதப் பற்றாளர்கள், இனப் பற்றாளர்கள், சாதிப் பற்றாளர்கள் ஆகிய – மெய்விழிப்பு அறியாத அனைத்துத் தரப்பினரும் தத்தம் சொந்த விருப்புவெறுப்புகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். சீட்டுக்கட்டு ரயிலை ஊதிவிட்டுக் கவிழ்க்கிற விளையாட்டில் போல, தமிழ்நாட்டு மக்கள் ஒருவர் மிச்சமின்றி அடுத்தவரைத் தாக்கி வீழ்த்திக்கெண்டிருக்கிறார்கள். மாபெரும் அமைதிக் குலைவைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது ஜெய்பீம்!
தமிழ்நாட்டு மக்களின் அமைதிக் குலைவை, கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறார் ஜெய்பீம் இயக்குநர் பேரமைதியுடன்.
- தொடரும்