தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும்.
தமிழீழ நீதி நிர்வாகத்துறை தேவையான எல்லா வரைச் சட்டங்களையும் தயாரிப்பதற்கு பொறுப்பாயிருக்கும். அவ் வரைச் சட்டங்கள் தேசியத் தலைவரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அவை தேசியத் தலைவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது அறிவிப்புச் செய்யப்பட்டதும் தமிழீழத்திலுள்ள எல்லா மக்களும் அச் சட்டங்களை ஏற்று நடக்கும் கடப்பாட்டுக்குட்பட்டவர்களாவர்.
தமிழீழ சட்டக்கல்லூரி 1992ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருகின்றது. தமிழீழ மக்களுக்கு பொருந்தக் கூடியதான தனிமனிதச் சட்டம் மற்றும் சொத்துச் சட்டங்கள் ஆகியனவற்றிற்கு அப்பால் சட்டத்துறைக் கோட்பாடு மற்றும் சர்வதேச சட்டம் ஆகிய பாடநெறிகளைக் கொண்டுள்ளதுடன் குடியியல் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுடன் ஆதாரச் சட்டங்களையும் கொண்டுள்ளது. கற்கை நெறிகள் உள்ளகப் பயிற்ச்சி என்றும், வெளிவாரி என்றும் பிரிக்கப்பட்ட பாடவிதானத்தைக் கொண்டவையாகும்.
1. உள்ளகப் பாடநெறியானது மூன்று ஆண்டுகளைக் கொண்டு நான்கு வருடங்கள் நீடித்திருக்கும்.
2. வெளிவாரிக் கற்கை நெறியானது 3 வருடங்களுக்கு நீடித்திருக்கும்.
மேலே குறிப்பிட்டவாறு ஒரேமாதிரியான பரீட்சைக்கு எல்லா மாணவரும் தோற்றுவர். அவ்வாறு தோற்றி பாடநெறியில் பூரண வெற்றி பெறுபவர்கள் சட்டவாளர்களாக (வழக்கறிஞர்களாக) பதிவுசெய்ய உரித்துடையவராவர்.
சட்டங்களுக்கு அமைவாக கீழ்க்காணும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு தற்பொழுது இயங்கி வருகின்றன.
1. உச்ச நீதிமன்றம்.
2. மேன்முறையீட்டு நீதிமன்றம்.
3. விசேட நீதிமன்றங்கள்.(தேவையேற்பட்டால் மாத்திரம் அமர்வுகள் இடம்பெறும்.)
4. மேன் நீதிமன்றம்.
5. மாவட்ட நீதிமன்றம். (குடியியல்)
6. மாவட்ட நீதிமன்றம் (குற்றிவியல்)
உச்ச நீதிமன்ற நீதிபதிகளதும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளதும் எல்லா நியமனங்களும், பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தேசியத் தலைவரினால் மேற்கொள்ளப்படும். மேன் நீதிமன்றங்களின், மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளது மற்றும் நீதிமன்ற ஆளணியினரது எல்லா நியமனங்களும், பதவியுயர்வுகளும், பணிநீக்கங்களும், ஒழுக்காற்று நடவடிக்கைகளும் நீதிநிர்வாகத் துறைத்; தலைவரினது ஆலோசனையுடன் பிரதம நீதியரசர் மேற்கொள்ளுவார்.
உச்ச நீதிமன்றம்.
உச்சநீதிமன்றமானது தேசியத் தலைவரினால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியாளரையும் மற்றும் நான்கு உச்சநீதிமன்றத் துணை நடுவர்களையும் கொண்டுள்ளது. தமிழீழம் முழுவதற்கும் பரந்த நியாயாதிக்கத்தை இந் நீதிமன்றம் கொண்டதாகும்.
சிறப்பு நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் மேன்முறையீட்டு வழக்குகளில் மெய்யாகவே ஏற்பட்ட நிகழ்வுப் பிழைகளையும் அல்லது சட்டத்தில் ஏற்பட்ட பிழைகளையும் திருத்தம் செய்யும் அதிகாரங்களைக் கொண்டு இறுதி மேன்முறையீட்டு வழக்குகளை ஏற்று நடாத்தும் நீதிமன்றமாகும். எல்லா மேன்முறையீட்டு வழக்குகளையும் உச்ச நீதிமன்ற நீதியாளர்கள் ஐவரும் ஒன்றாகக்கூடி விசாரணை செய்து தீர்மானம் எடுப்பர். தீர்மானம் எடுக்கும் வேளையில் நீதியரசர்களுக்கிடையில் அபிப்பிராய பேதமேற்படுமிடத்து பெரும்பான்மைத் தீர்மானம் மேலோங்கி நிற்கும்.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
மேன்முறையிட்டு நீதிமன்றம் தேசியத்தலைவரினால் நியமிக்கப்பட்ட மூன்று நீதியாளர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் ஒருவர் தலைவராக பதவியிலமர்த்தப்படுவர். தமிழீழம் முழுவதற்கும் நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ளதாக இந் நீதிமன்றம் விளங்கும்.
எல்லா மேல்நீதிமன்றங்களிலிருந்தும் மாவட்ட நீதிமன்றங்களிலிருந்தும் பெறப்படுகின்ற தீர்ப்புகளுக்கு எதிரான மேன்முறையீடுகள், மெய்யாகவே ஏற்பட்ட நிகழ்வுப் பிழைகள் அல்லதுசட்டத்தில் ஏற்பட்ட பிழைகளைத் திருத்தம் செய்தல் உட்பட, மேன்முறையீட்டு நியாயாதிக்க உரிமை அறுதியுறப் பெற்றதாக இந் நீதிமன்றம் விளங்கும்.
எல்லா மேன்முறையீட்டு வழக்குகளையும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியாளர்கள் மூவர்களும் ஒருங்கமர்ந்து விசாரணை செய்வர். தீர்;மானமெடுப்பதில் நீதியாளர்களுக்கிடையே அபிப்பிராய வேறுபாடு ஏற்படும் சந்தர்ப்பத்தில் பெரும்பான்மைத் தீர்மானம் மேலோங்கி நிற்கும்.
விசேட நீதிமன்றங்கள்
இந் நீதிமன்றமானது பிரதம நீதியாளரால் நீதி அமைச்சரின் ஆலோசனையுடனும் ஒத்திசைவுடனும் நியமிக்கப்படும் மூன்று நீதிபதிகளைக் கொண்டிருக்கும். எதிர்பாராத சம்பவங்களிலும் சூழ்நிலைகளிலும் ஆயத்தமாயிராத சம்பவங்களிலும் சூழ்நிலைகளிலும் இருந்து எழுகின்ற குற்றவியல்ஃ குடியியல் வழக்குகளை மூன்று நீதிபதிகளும் ஒருங்கமர்ந்து விசாரணை செய்வர். ஒரே பணிக்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்கள் ஒரே பணி நோக்கத்துக்காக அமைக்கப்பட்டு ஒவ்வொரு வழக்கும் முடிவுற்றபின் செயலிழக்கும்.
மேன் நீதிமன்றம்
மேன்நீதிமன்றமானது விதிமுறை ஏற்பாடுகளுக்கிணங்க தேசத்துரோகம், கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் தீவைத்தல், பெருங்கொள்ளை போன்ற குறிப்பிட்ட குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ளது. இந் நீதிமன்றமானது பிரதம நீதியாளரால் நீதிநிர்வாகத் தலைவரின் ஆலோசனையுடன் நியமிக்கப்படும் தனி நீதிபதியால் தலைமைதாங்கப்படும்.
மாவட்ட நீதிமன்றம். (குடியியல்)
எல்லாக் குடியியல் வழக்குகள் சம்பந்தமான நியாயாதிக்கத்தைக் கொண்ட தொடக்க நீதிமன்றமாக இந் நீதிமன்றம் விளங்கும். மாவட்ட நீதிபதியானவர் நீதிநிர்வாகத் துறைத் தலைவரின் ஆலோசனையுடன் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்படுவர்.
மாவட்ட நீதிமன்றம் (குற்றிவியல்)
மேல்நீதிமன்றத்துக்கு விசேடமாக குறித்தொதுக்கப்படாத குற்றவியல் வழக்குகள் சம்பந்தமான நியாயாதிக்கத்தைக் கொண்ட தொடக்க நீதிமன்றமாக இந் நீதிமன்றம் விளங்கும். இந் நீதிமன்ற ஆணைகள் மற்றும் தீர்ப்புக்கள் சம்பந்தமான மேன்முறையீடுகள் மேல்நீதிமன்றத்துக்கு ஏற்புடையதானதாகும். இந் நீதிமன்ற நீதிபதிகள் நீதிநிர்வாகத் துறைத் தலைவரின் ஆலோசனையுடன் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்படுவர்.
போர்நிறுத்தக் கண் காணிப்புக்குழு
இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்வ் கென்றிக்சன் தமிழீழ நீதிநிர்வாகத்துறைப் பொறுப்பாளரைத் தமிழீழச் சட்டக்கல்லூரியில் 30.05.2006 அன்று சந்தித்தார் தமிழீழ நீதித்துறைச் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளும் முகமாக போர்நிறுத்தக் கண் காணிப்புக்குழுத் தலைவர் உல்வ் கென்றிக்சன் தலைமையிலான குழுவினருக்கும், நீதித்துறைப் பொறுப்பாளர் திரு.இ.பரராஜசிங்கம் அவர்கட்கும் இடையேயான கலந்துரையாடல் இன்று இடம் பெற்றது. நீதித்துறைச் செயற்பாட்டினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றீர்கள் என்ற வினாவிற்கு இங்கு நீதவான் நீதிமன்று, மாவட்டநீதிமன்று, மேல்நீதிமன்று, மேன்முறையீட்டுநீதிமன்று, சிறப்பமர்வு நீதிமன்று என வகுக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பளிக்கப்படுகின்றது என்றும், எமது சட்டவாக்கச்செயலகத்தால் இருபதிற்கும் (20) மேற்பட்ட சட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏழை மக்கள் வழக்குகளைத் தொடர்வதற்கு இலவச சட்ட உதவி வழங்கப்படுகின்றது. இற்றைவரை நாற்பதாயிரம் (40,000) வழக்குகள் மாவட்ட மன்றுகளில் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டவை நீங்கலாக ஆயிரத்து ஐந்நூறுக்கும் (1500) உட்பட்ட வழக்குகள் மேன்முறையீடு செய்யப்பட்டும், ஆயிரத்து இருநூறுக்கும் (1200) மேற்பட்ட வழக்குகள் அம்மன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டும் உள்ளன. சட்டவாளர் கட்டணங்கள் மன்றில் செலுத்தப்பட்டு மன்று மூலமே உரிய சட்டவாளர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். லஞ்சம், ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்;கள் இங்கு இல்லை. தமிழீழ சட்டக்கல்லூரியின் வளர்ச்சிப் போக்கில் ஆறாவது அணிக்கான வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. 130 சட்டவாளர்கள் தற்போது கடமையாற்றுகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உங்கள் செயற்பா டுகள் எவ்வாறு அமைகின்றன. என்பதற்கு எமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான மட்டு அம்பாறை, மன்னார், வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவ்வப்பிரதேசத்திலும் நீதிமன்றுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வரும் மக்களின் பெருந்தொகையான வழக்குகளை ஏற்புடைய மன்றுகளால் முடிவுகாணப்படுகின்றன.
அடுத்து சிறிலங்கா நாட்டுச் சட்டங்களுக்கும் தமிழீழச் சட்டங்களுக்கும் இடையில் மாற்றமுண்டா என வினாவிய போது
எல்லா நாட்டு குற்றவியல் சட்ட கோட்பாடுகளும், அடிப்படையில் ஒன்றாகவே காணப்படுகின்றன் எனினும் எமது கலாச்சாரத்திற்கு ஏற்ப சில புதிய குற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக திருமணவாக்குறுதி மீறல், சோரம் என்பவற்றைக் குறிப்பிடலாம். குடியியல் சட்டத்தில் எமது காலாச்சாரத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா நீதிமன்றுகளில் பழைய தேசவழமைச் சட்டமே நடைமுறையில் உள்ளது. நாம் தமிழீழ தேசவழமைச் சட்டத்தின் பிரகாரம் பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக சிறிலங்காவின் தேசவழமைச் சட்டத்தின்;படி ஒரு மனைவி கணவனின் அனுமதியுடனேயே ஒரு வழக்கைத் தொடரலாம் எனக் கூறப்படுகின்றது. ஆனால், எமது தேசவழமைச்சட்டத்தி;ன் பிரகாரம் மனைவி தனித்து வழக்குத் தாக்கல் செய்வதற்கும், செய்யப்படுவதற்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.
இந்த நீதித்துறைசார் செயற்பாட்டினை முன்னெடுத்துச்செல்வதற்கு தேசத்தில் வாழ்கின்ற சட்டறிஞர்களுடைய ஆலோசனைகளையும், புலம்பெயர்ந்து பிறநாடுகளில் வசித்து வருகின்ற சட்டத்துறைசார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளையும், ஏனைய நாடுகளில் செயற்படுத்தப்படுகின்ற நீதித்துறைசார்ந்த சட்டங்களையும், அந்நாடுகளின் சட்டறிஞர்களது கருத்துக்களையும் உள்வாங்கி எமது வழமை, வழக்காறு போன்ற பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாகவும், எமது தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் தூரநோக்கிலமைந்த சிந்தனைக் கருத்துக்களின் வழிக்காட்டலோடும் எமது செயற்பாட்டை முன்னெடுக்க முடிகின்றது.
விடுதலைக்காகப் போராடும் நாடுகளில் விடுதலையின் பின்பே நீதித்துறைக் கட்டமைப்பு செயற்படத் தொடங்குகின்றது. ஆனால், தமிழீழத்தில் முன்னுதாரணமாக விடுதலைக்காகப் போராடுகின்ற காலத்திலேயே ஒர் இறைமையுள்ள அரசிற்கான அனைத்துக் கட்டமைப்புக்களையும் நேர்த்தியான வகையில் செயற்படுத்தும் வல்லமை எமது தலைவருக்கே தனித்துவமானது என்றார்.
தமிழீழ நீதிநிர்வாகத்துறையினராகிய நாங்கள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழீழ நலன் விரும்பிகளிடமிருந்து பணமாகவோ பொருளாகவோ உதவிகளைப் பெற்று நீதித்துறையை வளப்படுத்தி தமிழீழ மக்களின்
நல்வாழ்வுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆவளாக நிற்கின்றோம்.
விசேடமாக தமிழீழத்திலுள்ள சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் தேவைக்கு உதவும்பொருட்டு சர்வதேச
தரத்திலான சட்டத்துறை நூல்கள் அவசிய தேவையாக உள்ளன என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என அன்றைய நாட்கள் தெரிவித்திருந்தார்கள் .