பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக எதிர்ப்புத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காரசாரமான பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தனது கருது தொடர்பில் வீணாக குழப்பம் அடையாமல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை அமைத்து உண்மையை கண்டறியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (28) வெள்ளிக்கிழமை இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
“குழப்பம் அடைந்து என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன் மூலம் ஒரு உண்மை பொய்யாகவோ அல்லது ஒரு பொய் உண்மையாகவோ ஆகிவிடாது. தேவை ஏற்பட்டால், எமது வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவை தொடர்பில் அறிவுகொண்ட சிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சர்வதேச ரீதியான வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை நாம் அமைக்கலாம். இதுவரை காலமும் எமது சிங்கள சகோதரர்களுக்கு பிழையான தகவல்களை வழங்கிவந்த போலி வரலாற்று ஆய்வாளர்களை விடுத்து சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இந்த வரலாற்று ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.” என்று விக்னேஸ்வரன் கூறினார்.
தனது கருத்துக்களுக்கு ஆதாரமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சரித்திரப் பேராசிரியர் மற்றும் யாழ் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் தயாரித்த ஒரு குறிப்பினை பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு சமர்ப்பித்துள்ளார். இது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிமுக குறிப்பாக உள்ளடக்கப்பட்டுள்ளது. “வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற்காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன் 28000 வருடகால நீண்ட இருப்பைக் கொண்டது ” என்று இந்த குறிப்பு ஆரம்பிக்கின்றது.
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் விக்னேஸ்வரனுக்கு எதிராக சரத் வீரசேகர உட்பட பலர் கடுமையான கருத்துக்களை முன்வைத்து அவரை பாராளுமனத்தில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் முன்வைத்த சில கருத்துக்களுக்கு பதில் அளிப்பதற்கு தனக்கு கூடுதல் நேரம் தேவை என்று கோரிக்கைவிடுத்து நேரடியாக ஒவ்வொன்றாக பதில் அளித்தார்:
ஓரிரு நாட்களுக்கு முன்னர் நான் ஒரு மூத்த, மதிப்புக்குரிய சிங்கள அரசியல்வாதியை சந்தித்தேன். அவர் எனது உரைகள் குறித்த முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டார். எனது உரைகள் வசைபாடுவதாகவோ அல்லது புண்படுத்தும் வகையிலோ அமையவில்லை என்று கூறினார். ‘பேசும் போது புறநிலை ஸ்தானத்தில் இருந்து கடமையாற்றுவதற்கான அவசியத்தை ஒருபோதும் மறந்துவிடாதே’ என்று அவர் கூறினார். அவரது ஆலோசனையை நான் மதிக்கின்றேன்.
நான் எவரையும் வெறுப்பதில்லை. ஆனால் நான் உண்மையை விரும்புகின்றேன். சில வரலாற்று உண்மைகளை படித்தபின்னர் எமது கடந்தகாலம் குறித்து சில முடிவுகளுக்கு நான் வந்துள்ளேன். எனது முடிவுகளில் தவறு இருந்தால் மற்றவர்கள் சுட்டிக்காட்டலாம். மாறாக, குழப்பம் அடைந்து என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன் மூலம் ஒரு உண்மை பொய்யாகவோ அல்லது ஒரு பொய் உண்மையாகவோ ஆகிவிடாது. தேவை ஏற்பட்டால், எமது வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவை தொடர்பில் அறிவுகொண்ட சிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சர்வதேச ரீதியான வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை நாம் அமைக்கலாம். இதுவரை காலமும் எமது சிங்கள சகோதரர்களுக்கு பிழையான தகவல்களை வழங்கிவந்த போலி வரலாற்று ஆய்வாளர்களை விடுத்து சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இந்த வரலாற்று ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.
கொழும்பை சேர்ந்த கௌரவ உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் எனது பெயரைக் குறிப்பிட்டு எனக்கு எதிராக சில விடயங்களைக் குறிப்பிட்டார். அதனால் அவருக்கு பதில் அளிப்பதற்காக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குக் கூடுதலாக மேலும் சில நிமிடங்கள் வழங்கவேண்டும் என்று கோருகின்றேன்.
நான் முதலமைச்சராக இருந்தபோது சிங்களவர்களும் முஸ்லிம்களும் வடக்கில் வடக்கிற்குள் நுழைவதற்கு நான் தடை விதித்ததாகக் கூறினார். எனது இரண்டு பிள்ளைகளும் சிங்களவர்களை திருமணம் முடித்திருக்கும் நிலையில் நான் அப்படிக் கூறியிருந்தால் உண்மையில் நான் ஒரு பிசாசாக இருக்கவேண்டும். இத்தகைய வெறுப்பூட்டும், இனவாத செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. நான் அப்படிக் கோரிய ஏதாவது காணொளி அல்லது ஒலிப்பதிவு இருந்தால் அதனைப் பார்க்க விரும்புகின்றேன். ஆனால், உள்ளூர் மக்களுக்கான முன்னுரிமையை வலியுறுத்தும் சர்வதேச சட்டத்துக்கு முரணாக மகாவலி குடியேற்றங்களில் வெளியிட மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்துவது தவறு என்று நிச்சயமாக நான் கூறியிருப்பேன்.
நான் நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்திருந்தேனா என்றும் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மட்டுமே இரத்த வங்கிகளுக்கு இரத்தம் வழங்குவதாகவும் கௌரவ உறுப்பினர் கூறியிருந்தார். ஏனைய சாதியினரிடம் இருந்து வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரத்தம் பெற்றுக்கொள்வார்களா என்றும் கௌரவ உறுப்பினர் கேட்டிருந்தார். ஆனால், இராணுவம் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் வட மாகாண மக்கள் இரத்த வங்கிகளுக்கு இரத்த தானம் செய்துள்ளனர் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா இரத்தமும் நான்கு வகைகளுக்கு மட்டும் உரியவை என்பதை எம் மக்கள் அறிவார்கள். சிலர் நீல இரத்தத்துடன் பிறக்கின்றார்கள் (உயர் சாதிக்காரர்!) என்று சிலர் நினைப்பதுபோல எமது மக்கள் நினைப்பதில்லை.
மக்களின் நன்மை சார்ந்த சில செயற்திட்டங்களை செய்விப்பதன் மூலம் இராணுவத்தினரின் மனோபாவத்தை மாற்றப்போவதாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க என்னை முதலில் சந்தித்தபோது கூறியதை நினைவுறுத்துகின்றேன். இராணுவத்தினர் இரத்தம் கொடுப்பது அநேகமாக அவரின் சிபார்சாகத் தான் இருந்திருக்க வேண்டும். கௌரவ உறுப்பினர் வீரசேகர அவர்கள், படையினரின் மனிதாபிமான செயல்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
வடக்கு கிழக்குக்கு சமஷ்டி கொடுக்கப்பட்டால், ஏனைய பகுதிகளில் வாழும் நாட்டின் 60 சத வீதத்தை கொண்ட தமிழர்களின் நிலை என்ன? என்று கௌரவ உறுப்பினர் வெகுளித்தனமாக கேட்டார். நாம் பிரிவினையை கோரவில்லை என்பதை கௌரவ உறுப்பினர் புரிந்துகொள்ளவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே சமஷ்டி. கௌரவ உறுப்பினர் தனது குண்டர்களை ஏவி எந்தத் தவறும் இழைக்காத எம் மக்களைத் தாக்கினால் அன்றி அவர்களுக்கு எதுவும் நடக்காது.
மேலும் பல விடயங்களை அவர் கூறினார். ஆனால் நான் மறந்துவிட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நான் அவற்றை கூறுவேன்.
பக்குவமற்ற இனவாத ரீதியாக வசைபாடுகின்ற ஒரு நிலையை ஏற்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிகளுக்குள் இழுபடாமல் ஜனநாயகம் மற்றும் நீதி ஆகியவற்றுக்காக உறுதுணையாகச் செயற்பட்ட கௌரவ சபாநாயகர் மற்றும் இந்த சபையின் ஆண், பெண் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது பயிற்சி பட்டறையின் போதும் மேற்கொண்ட ஆரவாரங்களை மிகவும் திறமையாகவும் நேர்த்தியாகவும் கையாண்ட எமது பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நான் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.