இந்தியாவில் சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்ததால், அந்த கோபத்தில் அவர் குடும்பம் நோயாளிக்கு சிகிச்சையளித்த மருத்துவரை அடித்து துவைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் அஜய் பன்சால் என்னும் மருத்துவர் தனது பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
அவரின் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக ரத்தன் லால் (55) என்னும் நபர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் அது பலனளிக்காமல் ரத்தன் லால் உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரத்தன் லாலின் உறவினர்கள் அங்கிருந்த கூரான பொருட்களை வைத்து மருத்துவர் அஜய் பன்சாலை தலையிலும், முகத்திலும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து தற்போது பன்சாலுக்கு தலையில் 46 தையல் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பன்சாலின் மகன் வீரேந்திர் சிங் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார், பன்சாலை தாக்கிய ரத்தன் லாலின் குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதனிடையில், இந்த சம்பவத்தை கண்டித்து ஜெய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அங்குள்ள மருத்துவமனைகளை தற்காலிகமாக செயல்படாத வகையில் மூடிவிட்டு போராட்டம் நடத்தினார்கள்.




















































