எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1,196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:-முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில் எனது மகளான ஜெரோமி உட்பட நான்கு பேர் உள்ளனர்.
இன்று எனது மகளின் பிறந்த தினம் ஒவ்வொரு பிறந்த நாளிலும் எனது பிள்ளை என்னிடம் வரும் என்று எண்ணி இன்று தெரு ஓரத்தில் இருந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறோம்.
அந்த கண்ணீர் 11 வருடங்களாக நீண்டு செல்கின்றது. எமது வேதனையை தீர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
அனைவரது வாக்குறுதிகளும் எமக்கு ஏமாற்றமாகவே போய்விட்டது. எனது பிள்ளை என்னிடம் வரும் வரைக்கும் இந்த போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருப்பேன்.
அத்துடன் எமது போராட்டம் எதிர்வரும் திங்கள்கிழமை 1200 ஆவது நாளை எட்டுகின்ற நிலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்’ என்றார்.




















































