பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பஷிர்அலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆந் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கனகரத்தினம் ஆதித்தன் உள்ளிட்ட இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்றைய தினம் மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரச சட்டத்தரணி இந்த வழக்கின் மேலதிக விசாரணைக்கு ஐப்பசி மாதத்தின் பின்னர் திகதியொன்றை நிர்ணயிக்கும் படி நீதிமன்றை வேண்டிக் கொண்டார்.
இதன்போது அரச தரப்பின் வேண்டுகோளுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில்,
“91 அரசியல் கைதிகளில் 90 அரசியல் கைதிகள் நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டிலுள்ள பல சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் எதிரியான கனகரத்தினம் ஆதித்தன் பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய மகர தடுப்பு முகாமில் கடந்த 11 வருடங்களாக தனிமையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரேயொரு அரசியல் கைதியாவார்.
இந்த வழக்கின் எதிரியான கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக ஒரேயொரு குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணத்தில் ஒரு வழக்கும், கொழும்பு மேல் நீதிமன்றுக்கு இரு வழக்குமாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்பட்டது.
அவற்றுள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயளாளர் கோட்டாபாய ராஜபக்ச, இராணுத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தாக்கல் செய்யட்ட வழக்கு உட்பட இரு வழக்குகளில் எதிரியாகிய கனகரத்தினம் ஆதித்த விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கிலும் எதிரியினால் சுயவிருப்பத்தில் வழங்கப்பட்டதாக முக்கிய சான்றாக அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாகப் பெறப்பட்டதா என்பதற்கான உண்மை விளம்பல் விசாரணையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக எதிரியினால் வழங்கப்படவில்லையென நீதிமன்றம் நிராகரித்துள்ளதனாலும், மேலும் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறுகின்ற விசாரணையில் எந்தவிதமான சான்றுகளும் அரச தரப்பால் கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக முன் வைக்கப் படவில்லையென்பதனையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்துடன் நாட்டிலுள்ள கைதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு மகர தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரேயொரு கைதியான ஆதித்தனை விடுதலை செய்யும்படி” ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதத்தை முன்வைத்தார்.
அரச தரப்பினதும், எதிரிதரப்பினாலும் முன்வைக்கப்பட்ட வாதபிரதிவாதங்களையடுத்து மேலதிக விசாரணைக்காக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டிஆராச்சி மிகக் குறுகிய காலமாக ஆடிமாதம் 16ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.




















































