போர், போராட்டம் என்ற சொற்கள் தமிழர்கள் மத்தியில் வெறுப்பான அல்லது விரும்பத்தகாத ஒன்றாக மாறிவிட்டது அல்ல மாற்றப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஈழத்தில் நடந்த விடுதலைப்போராட்டம்தான் எம்மை இந்த வெறுப்புக்கு ஆளாக்கியது என்று எல்லோரும் சுலபமாக சொல்லிடுவர். ஆனால் போரும் போராட்டமும் மனித வாழ்கையில் மட்டுமல்ல புவியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் பொதுவானது. நாம் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையுடன் போராடினால்தான் எம்மை நிலைப்படுத்தமுடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை. உணவு, பாதுகாப்பு, வாழிடம், சந்ததி நிலைப்படுத்தல் என எல்லாவற்றுக்கும் போராடியே ஆகவேண்டும். இருப்பினும் இவை எல்லாம் நாளாந்த வாழ்கையில் நடந்து முடிவதால் அவை போராட்டம் என்று எமக்கு புரிவதில்லை அல்லது எமது சுயநலத்துக்காக செய்வதால் சுமையாக எமக்குத்தெரிவதில்லை. அடுத்து புலம் பெயர்ந்தோர் என்ற வகுதிக்குள் வருவதை சிந்திப்போம்.
சொந்த நாட்டில் இருந்து புலம்பெயர்வதற்கும், புலம்பெயர்ந்த நாட்டில் நம்மை நிலைப்படுத்தவும், அந்நாட்டின் குடிமகன் ஆவதற்கும் எவ்வளவு போராட்டங்களை எதிர்கொள்கின்றோம். அந்தப்போராட்டங்களை ஏற்றும் கொள்கின்றோம். காரணம் நாங்கள் புதிய வளங்களை பெறுவதாக நினைக்கின்றோம் அல்லது எங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்த்துவதாக மகிழ்கின்றோம் அந்தப்போராட்டம் எம்மால் விரும்பப்படுகின்றது. ஆனால் எங்களது பிறப்புரிமை, வாழ்வுரிமை எல்லாம் எங்கோ தொலைத்து புதிதாக பெற்றுக்கொள்ள இன்னோர் இடத்தில் போராடுகிறோம் என்பதையும், எங்களுக்கு சொந்தமற்ற நிலத்தில் அல்லது அரசுடன் போராடுகின்றோம் என்பதையும் மறந்து விடுகிறோம். ஆனாலும் நம்மில் சிலர் வெற்றி பெற சிலர் தோல்வியடைவர். தோல்வியுற்றோர் தங்களை நிலைப்படுத்த தொடர்ந்து போராடுவர். அதேவேளை வெற்றிபெற்றோர் அவர்களை மறந்துவிட்டு எங்களை முன்னேற்ற புறப்பட்டு விடுவோம். அவர்கள் தொடர்பாக யோசிக்கவும் நேரமில்லை, அவசியம் என்ற எண்ணமும் வருவதில்லை. அவர்களது கடினமான நிலையை புரிந்து கொள்ள முயல்வதும் இல்லை. அவர்களுக்கு உதவ நினைப்பதுமில்லை. என்பது உண்மையான செய்தி. சிலவேளைகளில் ஒரு நாள் ஒதுக்கி கூட்டமாக கூவிடுவோம்.அத்துடன் எங்கள் பணி முடிந்துவிட்டது என ஒதுங்கிடுவோம். போராட்டம் என்பது வெல்லும்வரை தொடர்ந்து முயற்சி செய்வது என்று யாரும் நினைப்பதில்லை.
சிலர் சமூக நலங்களில் அக்கறைகொண்டு நான் இவர்களுக்கு என்ன செய்யலாம், என்னால் செய்யக்கூடிய நன்மை என்ன என்று சிந்திப்பர். பலர் சிந்திப்பதுடன் நிறுத்திவிட்டாலும் சிலர் செயற்பாட்டில் இறங்கிடுவர். அவர்கள்தான் சமூகநேயம் கொண்டவர்கள் என அடையாளம் காணப்படுவர். இவ்வாறு நல்லெண்ணத்துடன் இயங்குபவர்கள் காலப்போக்கில் சமுக எதிரிகளாக இனம் காட்டப்படும் நிகழ்வுகளும் காலகாலமாக அரங்கேறாமல் இல்லை. இவர்கள் எப்படி சமுக எதிரிகள் ஆகின்றனர் என்பதன் முன் போராட்டம் எவ்வாறு உருவெடுக்கிறது என்பது பற்றி சிந்திப்போம்.
ஒரு சமுகத்திற்கான போராட்டம் என்பது அந்த சமுகத்தின் உரிமைகள், நலன்களுக்காக தூரநோக்கில் திட்டமிடப்பட்டு மக்களது உடனடி நன்மைக்காக மட்டுமன்றி நீண்டகால பயன்பாட்டுக்காகவும் நடக்கின்ற ஒன்று என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இங்கு வெற்றி பெறுவதற்கு பல இழப்புகள் வந்தே தீரும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இவையாவும் தவிர்க்க முடியாதவை. இவை யாவும் சமுதாய சிறப்புக்காக அல்லது உலக மேன்மைக்காக நடக்கும் போராட்டங்களுக்கே பொருந்தும். இது கடந்த காலங்களில் உலகில் நடந்த போராட்டங்கள் இவற்றை எமக்கு பறைசாற்றுகின்றன. இந்த நிலைகள் யாவற்றையும் எதிர்கொண்டு உறுதியுடனும், நேர்மையுடனும், பொதுநோக்குடன் கடந்த போராட்டங்களே வெற்றிபெற்றுள்ளன. ஆனால் உறுதியான, ஆக்கபூர்வமான, மக்களுக்கு நன்மைதரும் போராட்டங்களை எந்த ஆட்சியாளர்களும் விரும்பமாட்டார்கள். எந்த மக்களுக்காக போராட்டம் நடக்குமோ அந்த போராட்டத்திற்கு எதிராகவே மக்களையே திசை திருப்புவர். உலக வரலாற்றில் எந்த ஒரு போராட்டமும் அடக்கப்பட வேண்டும் என்பதே கொள்கையாக நிலைத்துள்ளதே தவிர, போராட்டக்காரர்களின் கோரிக்கை என்ன, ஏன் அவர்கள் போராடுகிறார்கள், அவர்களின் குறைகள் என்ன என்று அறிந்து அதனை தீர்க்க, நசுக்கப்படும் மக்களுக்காக ஆபிரகாம் இலிங்கன்கள் இந்த உலகில் தொடர்ந்து தோன்றவில்லை. மாறாக சமூக விரும்பிகளை வன்முறை கொண்டு அடக்கிடும் அரசுகள் அல்லது அவற்றின் ஏவலாளர்களே தொடர்ந்து உலகினை ஆள்கின்றார்கள். இந்த தவறான முன் உதாரணங்களே இன்றும் உலகில் கடைப்பிடிக்கப்படுகின்றது. அதை மக்களாகிய நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனென்றால் எங்களை எப்படியாவது காக்க வேண்டும் என்பதே எண்ணம். இன்றும் இந்த புரிந்து கொள்ளாமை நிலையே எங்களை போராட்டத்தில் இருந்து விளக்கி வைக்கின்றது அல்லது அதனை வெறுக்க வைக்கின்றது. இதற்கும் மேலாக உயிர் ஆசை, சொத்துஆசை, வாழவேண்டும் என்ற பேராசை என்பன எம்மை வாழ்வதற்கு போராட தள்ளுகிறதே தவிர, சிந்திக்க ஊக்கப்படுத்தவில்லை. இந்த அடிப்படை காரணங்களே போராட்டம் தேவையற்ற ஒன்று என எம்மை நினைக்க வைத்து விடுகிறது. இதுவே உலக வரலாறு.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் வரும் வழியில் இறந்தவர்கள், வந்தும் வெளிநாடுகளில் இறந்தவர்கள், சமூகமும் கைவிட்டு சொந்தபந்தங்களும் இல்லாமல் மனம் உழன்று தற்கொலை செய்தவர்கள் என்றும் தொடர்ந்து சொல்லமுடியும். மேலும் இலங்கையில் கூட ஈழத்தமிழர் போராட்டம் ஆரம்பிக்க முன்பு மேதினம் என்பது பேரூந்துக் கட்டணம் குறைந்த நாளாகவும், சினிமா கொட்டைகளில் குறைந்த கட்டணத்தில் சினிமா பார்க்கும் தினமாகவுமே பார்க்கப்பட்டதே தவிர அதன் பெறுமானம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை என்றுதான் சொல்லமுடியும். இன்றைய உலகம் மொத்த வியாபாரிகள் கைகளில் சுத்தமாக போய் சேர்ந்துவிட்டது. சுதந்திர மனிதன் இயந்திர மனிதனாக மாறிவிட்டான். பொதுவுடைமைவாதிகளின் கருத்துக்கள் தோற்றுவிட்டன. வாழ்க்கை பற்றி தெரியாமலே மனிதன் அதன் பின் ஓடுகின்றான். என்னவென்று தெரியாமல் வாழ்கையை சுமையாக்கிக்கொண்டு ஓடுவதால் சிந்திக்க நேரமில்லை. சுயசிந்தனை தொலைந்து விட்டது. சுற்றிவிட்ட பம்பரம்போல் சுழன்றுகொண்டு வாழ்கிறான். இதனால் வியாபார உலகம் நன்மை கண்டது. வெற்றிபெற்றது என்பது கண்கூடு. அதனால்தான் பொதுவுடைமைவாதி சொன்னான் சுதந்திரம், உரிமை என்பவற்றை பெற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது அவற்றை அனுபவிக்க கற்றும் கொடுக்கவேண்டும். காரணம் மக்கள் அவற்றை அனுபவிக்க விரும்புவதில்லை. ஏனென்றால் உரிமைகளை கேட்டு நாம் இருப்பவற்றையும் இழந்து விடுவோம் எனப்பயப்படுவர். அப்படியான ஒரு உளவியலுக்குள் சிக்கவைத்து மக்களை வாழப்பழக்கிவிட்டனர். எனவே எங்கள் உரிமைகளை கேட்டால் நாம் இருப்பவற்றையும் இழக்க வேண்டும் என்று பயந்தே உரிமைகளை இழந்து வாழ துணிந்துவிட்டனர். தனக்காகவும் தான் சமூகத்துக்காகவும் உரிமைகளை தட்டி கேட்பவன் சமுக எதிரியாகிறான். அவன் செய்வது சரி என்றும், அவன் மக்களுக்காக போராடுகிறான் எனத்தெரிந்தும், நாம் அவனை வெறுப்போம். இல்லையேல் அவனை வெறுக்க வைக்கப்படுவோம். வாழவேண்டும் என்ற ஆசை எங்களை துரத்த, தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற எங்கள் மட்டத்தில் போராடுவோமே தவிர, பொதுநிலைக்கு வரமாட்டோம். இந்த இடம் தான் மக்களுக்கான போராட்டம் சரிவை சந்திப்பதும், போராட புறப்பட்டவர்கள் எதிரிகளாக மாற்றப்படுவதும், வெற்றிகரமாய் நடந்தேறும் இடம். ஆனால் காலப்போக்கில் அப்போராளிகளின் உண்மை நிலை நம்மத்தியில் நிலைபெற ஆரம்பிக்கும் ஆனாலும் பயனற்ற ஒன்றாகவே அது அமையும்.
போராட்டம் என்பது மக்களிடம் திணிக்கப்பட்டதாகவோ அல்லது அவசியமானதாகவோ இருக்கலாம். பொதுவாக போராட்டத்தை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களே முன்னிலைப்படுத்துவர் அல்லது திணிப்பர். ஒரு இனத்தை வீழ்த்தவேண்டுமாயின் அவர்களின் முன்னேற்றமான இயல்புகள் மழுங்கடிக்கப்பட்டு பலவீனமான பக்கங்கள் ஊக்கப்படுத்தப்படும். ஈழத்தமிழன் அறிவினால் உயர்ந்தான் என்றால் அது வீழ்த்தப்பட்டு பணத்தாசை புகுத்தப்பட்டது. மேல்நாட்டு மோகம், ஆடம்பர வாழ்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று போதையும் வன்முறையும் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்களை அவர்களே அறியாமல் அடிமையாகி அழிகின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களை நாங்கள் இனம் காட்ட முடியாமல் அல்லது இனம்காட்ட விரும்பாமல் நாங்களும் கரைந்து உருமாறிச்செல்கின்றோம். நாங்கள் யாரென்று எங்களுக்கும் தெரியவில்லை எங்கள் பிள்ளைகட்கும் சொல்லவில்லை. இது புலம்பெயர்ந்ததால் வந்ததல்ல. வெள்ளையர்கள் ஈழத்தில் காலூன்றிய காலத்தில் புகுத்திவிட்ட மனநிலை. ஆதலால் தான், எங்கள் மூத்தோர் ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என்றும் அக்கலாசார உடைகளுக்கு மதிப்பளித்தல் சிறப்பென்றும் நமக்கு வழிகாட்டுகின்றனர். ஒரு காலத்தில் தமிழ் பேசும் பண்டிதர்கள் தரம் தாழ்ந்து பார்க்கப்பட்டதாலும், அவர்கள் அணிந்த வேட்டி சட்டை இழிவாக கணிக்கப்பட்டதாலுமே பள்ளிகளில் மட்டுமல்ல எங்கள் மக்களிடமிருந்தே அவை விடைபெற ஆரம்பித்தன என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.
தமிழர்கள் தனித்துவம் பேணிவாழ பெருமளவு நாட்டம் கொள்ளவில்லை. சிங்களர் தங்களை விட்டுக்கொடுத்து வாழவும் விரும்பவில்லை, தமிழன் ஆள்வதையும் விரும்பவில்லை. தங்களுடன் சமமாய் வாழ்வதையும் ஏற்கவில்லை. இதனால் ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட இலங்கையில் இரண்டு இனங்கள் இணங்கி வாழமுடியவில்லை. புத்தம் போதிக்கும் நாட்டில் யுத்தம் நடக்கின்றதே தவிர அன்புநெறி நிலைக்கவில்லை அல்லது அரவணைத்துச் செல்லவில்லை. தமிழ் மக்களை கொல்லத்தயங்கவில்லை. மக்களாட்சி நடக்கின்றது தமிழ்ச்சனம் மன அமைதியுடன் வாழவழியில்லை. இது பாராளுமன்ற அரசியலின் தோல்வி என யாரும் ஏற்கவும் இல்லை. உயிர் போகிறது என்று உரத்து கத்தியும் உதவிக்கு ஆளில்லை. சனநாயகம் கூட சத்தம் போடாது தூங்கிவிட்டது. சமாதானம் சொல்லும் நல்லோர்கூட உயிர்காக்க வரவில்லை. இப்படியான எதிர்காலம் எமக்கு வந்துவிடக்கூடாது என்று முன்னே சிந்தித்து போராடியவர்கள் மத்தியில் நினைவு கொள்ளப்படவேண்டிய பிரதான போராளி திலீபன்.
விடுதலைப்புலிகள் ஆள ஒருநாடு அல்ல தமிழ் மக்கள் வாழ ஒருநாடு வேண்டும் என்று முழங்கினான்.. நீரின்றி வாழாது உலகு, உணவின்றி வாழாது உயிர்கள். இறப்பேன் என்று தெரிந்தே இருந்தான் உண்ணாநோன்பு அப்போதும் உறுதியுடன் சொன்னான் “நான் இறந்தபின் தமிழ்மக்கள் விடுதலை பெற்று வாழ்வதை வானத்திலிருந்து பார்ப்பேன்” என்று. ஆயுதமேந்தி போராடிய வீரன், உறுதியான போராளி, உண்ணாநோன்பிருந்து உயிரீந்த பெருவீரன். தமிழரால் ஒவ்வொரு நாளும் நினைக்கப்பட வேண்டியவன். ஆனால் செப்டம்பர் மாதம் கண்டிப்பாக நினைக்கப்படவேண்டியவன். காரணம் அவன் உணவொறுத்து தமிழர்க்காய் உயிர்க்கொடை தந்த மாதம் இது. எம்சந்ததிக்கு அவன் கதையை மறக்காமல் சொல்லி வைப்போம். வேலையும், பணமும் பெரிதென்று போராடி, பிள்ளைகளுக்கும் அதனையே பயிற்றுவிக்கும் நாம், திலீபன் இறந்துவிட்டான், இருந்தாலும் ஈழத்தமிழ் மக்கள் நிலைமாறவில்லை, இன்னும் சமூகநேசர்கள் தோன்றுவார்கள், திலீபனின் குறிக்கோளும் வெல்லும் என்று எம்பிள்ளைகட்கும் சொல்லி வைப்போம்.
ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாடு இலங்கை. இருப்பினும் இரண்டு இனங்கள் இணங்கி வாழமுடியாது சண்டையிடும் பூமி. புத்தம் போதிக்கும் ஆட்சி ஆனால் நித்தம் தமிழர்களுக்கு சோதனை. அன்புநெறி கூறினாலும் அடக்குமுறைக்கு குறைவில்லை.மக்கள் ஆட்சி எனினும் தமிழ்மக்கள் வாழவழி கிடைக்கவில்லை. இது பாராளுமன்ற அரசியலின் தோல்வி என யாரும் ஏற்கவும் இல்லை. உயிர் போகிறது என்று உரத்து கத்தியும் உதவிக்கு ஆளில்லை. உலக சனநாயகம் கூட சத்தமின்றி அமைதியாகிவிட்டது. இப்படியான எதிர்காலம் எமக்கு வந்துவிடக்கூடாது என்று முன்னே சிந்தித்து போராடியவர்கள் மத்தியில் மறக்கமுடியாத போராளி திலீபன். விடுதலைப்புலிகள் ஆள ஒரு நாடு அல்ல, ஈழத்தமிழ் மக்கள் வாழ ஒரு நாடு வேண்டும் என்று முழங்கினான். ஆயுதமேந்தி களத்தினில் போராடியது மட்டுமன்றி, ஈழத்தமிழ் மக்களுக்காக வீரத்தின் உச்ச நிலையான உண்ணாநோன்பிருந்து உயிரீந்த பெருவீரன். உணவொறுத்து, தமிழர்க்காய் உயிர்க்கொடை தந்து, விடுதலையை விரும்பிய வீரன் திலீபன். திலீபனின் உடலில் இருந்து உயிர் நீங்கியிருப்பினும் அவன் குறிக்கோள் வெல்லும்.
- பரமபுத்திரன்