பெண்களின் மார்பகத்தை வெறும் கவர்ச்சிப் பொருளாகவே பார்க்கப் பழகிவிட்டது ஆண் வர்க்கம். மார்பகம் ஒரு கவர்ச்சிப்பொருள் , பாலியல் உணர்வைத் தூண்டும் அங்கம் என்ற அபிப்பிராயங்களால் பெண்கள் படும் அவஸ்தைகள் பெரிது.
ஒருபுறம் ஆடையினிடையே கிடைக்கும் சின்ன இடைவெளிகளிலும் ஒரு பெண்ணின் மார்பகத்தை உற்றுப்பார்த்து அந்தப் பெண்ணுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தும் ஆண்களின் அந்தப்பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ள பெண்கள் பெரும்பாடுபடவேண்டியுள்ளது.
மறுபுறம் மார்பகம் என்பது தன் உடலின் அழகை அதிகரிக்கும் அம்சம் என்ற நினைப்பில் அதற்கான விசேட ஆடைகளை அணிந்து தங்கள் உடலுக்கு பொருத்தமான அளவில் மார்பினை வெளிக்காட்டப் பெண்கள் படும் கஷ்டங்கள். (அது அவர்களின் உரிமை அதை விட்டுவிடுவோம்).
இப்படி ஏதோ ஒருவகையில் இளமைக் காலத்தில் பெண்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த மார்பகம் கொடுக்கின்ற மாபெரும் தொல்லை மார்பகப்புற்று நோய்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு தினம் இருப்பதுபோல, மார்பகப்புற்று நோய்க்காக ஒரு மாதமே விழிப்புணர்வு மாதமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தையே ஒரு புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதமாக பிரகடனப்படுத்த வேண்டிய தேவை என்ன?
பதில் மிகவும் எளிது!
பெண்களைக் கொல்லும் புற்று நோய்களிலே முன்னிலை வகிக்கும் நோய்களிலே ஒன்று மார்பகப்புற்று நோய். இந்த மார்பகப்புற்று நோய் எப்படிப்பட்ட பெண்களுக்கு ஏற்படும்?
இதற்கான பதிலும் மிகவும் எளிதுதான் , இது எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படலாம்.
ஆனாலும் சில பெண்களுக்கு இந்த புற்று நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் மற்றைய பெண்களை விட அதிகமாக இருக்கும். அப்படி மார்பகப்புற்று நோய் ஏற்படுவதற்கான அதிகரித்த சந்தர்ப்பத்தைக் கொண்ட பெண்கள் யார் என்று தலையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம், நானே சொல்லி விடுகிறேன்.
கீழ்வரும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கொஞ்சம் அதிகம்,
- மிகவும் சின்ன வயதில் மாதவிடாய் ஆரம்பித்த பெண்கள் (12 வயதுக்கு முன்).
- மாதவிடாய் நிரந்தரமாய் நிற்பது (பிந்திப்போகும்) பெண்கள். அதாவது 55 வயதையும் தாண்டி மாதவிடாய் ஏற்படும் பெண்கள்.
- வாழ் நாள் முழுவதும் குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள், அல்லது மிகவும் வயது முதிர்ந்தபின் முதல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் பெண்கள்.
- சிலவகை ஹோர்மோன்களைக் கொண்ட கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள். ஓ.சி.பி எனப்படும் இந்த மாத்திரைகள் இலங்கையில் பொதுவாக மித்துரிக் குளிசைகள் என்று அழைக்கப்படும்.
- மாதவிடாய் நிரந்தரமாய் நின்றபின் ஏற்படும் பிரச்சினைகளுக்காக ஹோர்மோன்களை மருந்தாக எடுக்கும் பெண்கள்.
- பரம்பரையில் யாராவது (அம்மா, சகோதரி, சித்தி, பெரியம்மா, அம்மம்மா) இளவயதிலேயே (50 வயதுக்கு முன்னால்) மார்பகப்புற்று நோய் ஏற்பட்டு இறந்தவர்களை உறவினராகக்கொன்ட பெண்கள்.
- குறிப்பிட்ட சில பரம்பரை அலகுகளிலேயே மாற்றம் இருக்கும் பெண்கள்.
இதையெல்லாம் வாசித்துவிட்டு இந்த பிரச்சினைகள் அல்லது இயல்புகள் இருக்கும் பெண்கள் ஹையோ மய்யோ என்று அச்சத்தில் புலம்பவேண்டாம். இந்தக் காரணங்களை உங்களிடம் சொல்வது உங்களுக்கு மார்பகப்புற்று நோய் ஏற்படலாம் என்று அவதானமாக இருக்க வேண்டுமே என்பதற்காகவேயன்றி உங்களைப்பயம் காட்டவல்ல.
மேலே சொன்னதில் முதல் இரண்டும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் வயது, மாதவிடாய் நிரந்தரமாய் நிற்கும் வயது சம்பந்தப்பட்டது. அவற்றை ஒரு பெண்ணால் மாற்றி அமைக்கமுடியாது.
அடுத்தது குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் அல்லது வயது முதிர்ந்தபின் குழந்தை பெற்றுக்கொள்ளுதல். இதை ஒரு பெண்ணால் தவிர்க்க முடியுமா?. யதார்த்தமான வாழ்வில் ஒரு பெண் குழந்தையை பிற்போடுதல், அல்லது குழந்தை பெறாமல் இருப்பதற்கு ஆயிரக்கணக்கில் காரணங்கள் இருக்கலாம். அதனால் மார்பகப் புற்று நோய் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்திற்காக அவசரப்பட்டு மணம் முடிக்க வேண்டும் என்றோ, குழந்தை பெற வேண்டும் என்றோ சொல்லவரவில்லை. மணம் முடித்த தம்பதிகள் முடிந்தவரை உங்கள் சமூக பொருளாதார வசதியினை உறுதிப்படுத்திக்கொன்டு விரைவாகவே குழந்தை பெற முயற்சிக்கலாம்.
கருத்தடை மாத்திரைகள் பாவித்தல் புற்று நோயை ஏற்படுத்தும் என்பதற்காக அதைப் பாவிக்க வேண்டாம் என்றும் சொல்ல வரவில்லை. சில வருடங்களுக்கு அவற்றைப்பாவிப்பதால் மிகவும் பெரியளவில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அதிகளவான காலத்துக்குக் கருத்தரித்தலைப் பிற்போட நினைக்கும் பெண்கள் ஹோர்மோன்கள் தவிர்ந்த அல்லது மித்துரி குளிசை வகையைச் சார்ந்த ஹோர்மோன்கள் உள்ள கருத்தடைமுறைகள் தவிர்ந்த வேறு முறைகளைப் பாவிக்கலாம். இல்லை எனக்கு மித்துரிக் குளிசைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் பெண்கள் தாராளமாக அதையே வைத்தியரின் அனுமதியுடன் பயன்படுத்தலாம். புற்று நோய் அச்சத்தில் யாரும் இந்த கருத்தடை முறையைத் தவிர்க்கவேண்டியதில்லை. அதை நீண்டகாலத்துக்கும் பாவிப்பவர்கள் தங்கள் மார்பகங்களில் கொஞ்சம் அவதானமாக இருக்கவேண்டும் .அவ்வளவுதான்!
மாதவிடாய் நிரந்தரமாக (மெனாபோஸ்) நின்றபின் ஹோர்மோன்களை குளிசைகளை எடுக்கும் பெண்களுக்கும் இந்தப்புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். இதுவும் நீண்ட காலம் பாவிக்கும்போதே பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அதைத் தவிர்க்க வேண்டியதில்லை. முடிந்தவரை குறுகிய காலத்துக்குப் பயன்படுத்துவது உசிதம்.
பரம்பரையிலே மார்பகப்புற்று நோய் ஏற்பட்டவர்களைக் கொண்டவர்கள் இந்தக்காரணியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திட முடியாது. அவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சொல்லப்பட்டது.
பரம்பரை அலகுகள்மாற்றம் கொண்ட பெண்களை எப்படிக் கண்டு பிடிப்பது?
இப்போதைய நிலையில் இலங்கையில் ஒரு பெண்ணுக்கு பரம்பரையலகு மாற்றத்தையும் அறியும் சோதனை செய்ய கிட்டத்தட்ட 40 ஆயிரம் அளவில் தேவை. அதுவும் கொழும்புக்கு வந்து செய்ய வேண்டும். வசதி இருந்தால்கூட இந்தச் சோதனை எல்லாப்பெண்களுக்கும் தேவை இல்லை, பரம்பரையிலே இரண்டுக்கு மேற்பட்ட நேர்வழி உறவினர்கள் இளவயதில் மார்பக, கர்ப்பைப்பை, சூலகப் புற்று நோய்களுக்குட்பட்ட பெண்கள் இதை செக் பண்ணுவது உசிதம். இதற்கும் வசதி இல்லாத பெண்களும் இதற்காக அச்சப்படவேண்டாம், வைத்தியரிடம் சொல்லி கொஞ்சம் அவதானமாக இருந்தாலே போதும்.
சரி! எல்லாவற்றுக்கும் இறுதியில் அவதானமாக இருங்கள் என்கிறானே, எப்படி அவதானமாக இருப்பது என்று மனதுக்குள் திட்டுவது எனக்கு நன்றாகவே கேட்கிறது. இப்போது மனதுக்குள் திட்டுவதை நிறுத்திவிட்டு தொடர்ந்து வாசியுங்கள். அவதானமாக இருத்தல் என்பது மார்பகப்புற்றுநோய் ஏற்பட்டால் மிகவும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளாகும்.
ஏன் இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும்?
இதற்கும் பதில் இலகு!
ஆரம்பநிலையில் கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்துவது இலகு. எவ்வளவுக்கு எவ்வளவு ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பூரணமாகச் சுகமாக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பதற்கு எவ்வாறான அவதானங்களை மேற்கொள்ள வேண்டும்?. இரண்டு விதமாக இதை மேற்கொள்ளலாம். முதலாவது சுயமாகவே ஒரு பெண் தன் மார்பகங்களைச் சோதித்துப்பார்த்தல்.
இரண்டாவது மமோகிராம் /ஸ்கேன் போன்ற விசேட பரிசோதனைகளைச் செய்தல்.
சுய பரிசோதனையின் நம்பகத்தன்மை மிகவும் குறைவு என்பதால் வசதி படைத்த நாடுகள் அனைத்துப் பெண்களுக்கும் மமோகிராம் பரிசோதனைகளைச் செய்து பார்க்கும் வசதியினை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றன.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வசதி இன்னும் நம் நாட்டுப் பெண்களுக்கு பூரணமாகக்கிடைக்கவில்லை.
(இதற்காக தயவுசெய்து வைத்தியர்களைத் திட்டவேண்டாம். அரசியல்வாதிகளைத் திட்டுங்கள்).
இந்தப்பரிசோதனை 40 தொடக்கம் 45 வயதிலிருந்து குறிப்பிடப்பட்ட கால இடைவெளிகளில் தொடர்ச்சியாகச் செய்யப்படவேண்டும். வசதி இருக்கும் பெண்கள் ஒரு பெரிய தனியார் வைத்தியசாலைகளில் சென்று செய்துகொள்ளலாம்.மிகவும் குறைவான அரச வைத்தியசாலைகளிலேயே இந்த வசதி உள்ளதால் இப்படிச் சொன்னேன்!
யார் இந்த சோதனையைச் செய்யவேண்டும்?
எல்லா பெண்களும், ஆனால் மேலே சொன்ன காரணிகள் இருப்பதால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பவர்கள் 40 வயதுக்கு முன்னமே வைத்தியரிடம் சென்று அந்தப் பரிசோதனை செய்வதற்கான தேவையினை தெரிந்துகொள்வது நல்லது.
இதைச் செய்துகொள்ள வசதி இல்லாவிட்டால் என்ன செய்வது?
அப்படிப்பட்டவர்களும் அச்சப்படவேண்டாம். உங்கள் கையே உங்களுக்குத் துணை.
தவறாமல் அடிக்கடி உங்கள் மார்பினைச் சோதித்துப்பாருங்கள் (மாதமொருமுறை).இது ஒரு பெரிய கஷ்டமான விடயமல்ல, குளித்த பின் குளியலறையில் வைத்து சில நிமிடங்களைச் செலவழித்து கண்ணாடியில் பார்த்துக்கொண்டே உங்கள் மார்பகங்களைச் சோதித்துப்பார்க்கலாம். அதற்காக குளியலறைதான் வேண்டும் என்று சொல்லவில்லை.இதை எங்கே வைத்தும் செய்துகொள்ளலாம்.அது உங்கள் சுதந்திரம்.
எவ்வாறு சுய பரிசோதனை செய்வது?
முன்பு சொன்னதுபோல இது மிகவும் இலகுவானது.
உங்கள் மார்புகளின் தோலில் நிற /அமைப்பில் மாற்றம் தெரிகின்றதா என்று அவதானித்துவிட்டு, மார்பின் காம்பில் இருந்து ஏதாவது திரவங்கள் வெளிவருகின்றனவா என்று அவதானியுங்கள் (மார்பை கொஞ்சம் அழுத்திப்பார்க்கவும்). அடுத்து மார்புகளை ஒரு ஒழுங்குமுறையில் கையால் அழுத்திப்பார்த்து ஏதாவது கட்டிகள் உள்ளனவா என்று பார்க்கவேண்டும். இப்படிப் சோதித்துப் பார்க்கும் போது எந்த நிலையில் இருக்கு வேண்டும், என்ன ஒழுங்குமுறையில் அழுத்திப்பார்க்கவேண்டும் என்று யூ டியூப்பில் எக்கச்சக்கமான வீடியோக்கள் உள்ளன.
மேற்சொன்ன மாற்றங்கள் ஏதாவது இருக்கும் பெண்கள் உடனடியாக வைத்தியரிடம் செல்ல வேண்டும்.
இப்படியான அவதான நிலையில் மட்டுமல்ல, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பெண்ணுக்கும் கீழ்வரும் அறிகுறிகள் இருந்தால் அது சிலவேலைகளில் மார்பகப்புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். ஆகவே கீழ்வரும் அறிகுறிகள் இருக்கும் எந்தவொரு பெண்ணும் உடனடியாக வைத்தியரிடம் செல்வது கட்டாயம்.
- மார்பில் கட்டியை உணர்தல்/ கமக்கட்டில் கட்டியை உணர்தல்.
- மார்பில் புதிதாகத் தோன்றிய வலி (இள வயதிலிருந்தே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியல்ல).
- தோலில் நிறமாற்றம், வீக்கம், போன்ற தன்மை. (தோலில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும்.)
- முன்பு வெளியில் இருந்த முலைக்காம்பு உள்ளிளுக்கப்பட்டிருந்தல்.
- பால் தவிர்ந்த திரவங்கள் (இரத்தம் உட்பட) போன்றவை மார்பிலிருந்து வெளியேறுதல்.
மேற்சொன்ன அறிகுறிகளை நீங்கள் உங்கள் சுய மார்பக பரிசோதனையின் போதோ அல்லது வேறு எந்த சந்தர்ப்பங்களிலோ அவதானித்தால் உடனடியாக ஒரு வைத்தியரிடம் சென்று அவை புற்று நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
எம் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரும் பிரச்சினைகளில் ஒன்று, மார்பக பிரச்சினைகளை வைத்தியரிடம் சொல்ல அச்சப்படுதல் வேண்டாம் பெண்களே!
வைத்தியர்கள் எந்த கெட்ட நோக்கதோடும் உங்களைப் பார்க்கமாட்டார்கள், அச்சமோ வெட்கமோ இல்லாமல் எனது மார்பிலே இந்த இந்த மாற்றங்கள் உள்ளன டொக்டர் என்று துணிந்து சொல்லுங்கள். (மார்பு என்று கூட சொல்லத்தேவை இல்லை, மார்பினைத் தொட்டுக்காட்டி இங்கே பிரச்சினை என்று ஆரம்பித்தாலே போதும் வைத்தியர் மேலதிக கேள்விகளைக்கேட்டு உங்களுக்குச் சங்கடம் இல்லாமல் கவனித்துக்கொள்வார்).
புற்று நோயினைக் குணப்படுத்த முடியாது என்ற காலம் மலை ஏறிவிட்டது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் சில புற்று நோய்களை பூரணமாகக்கூடக் குணப்படுத்தலாம். நீங்கள் வெட்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் நோயின் தீவிரத்தை அதிகரித்து குணப்படுத்தப்பட முடியாத நிலைக்குச் செல்லலாம்.
முக்கியமான ஒரு பி.கு மேலே சொன்ன அறிகுறிகள் இருப்பவர்களுக்கு எல்லாம் புற்றுநோய் வந்துவிட்டது என்று அர்த்தமில்லை. அந்த அறிகுறி ஏற்பட்டவர்களில் அநேகமானோருக்கு புற்று அல்லாத நோய்களே இருக்கும்.ஒரு சிலருக்குத்தான் புற்று நோய் இருக்கு. அதனால் அந்த அறிகுறிகளைக்கண்டவுடன் புற்று நோய் வந்துவிட்டது என்று அலறாமல் ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று புற்று நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்க்கொள்லுங்கள்.
அவ்வளவுதான்!
இதுத்விரவும் இன்னும் சில வாழ்க்கைமுறைகள் ஒரு பெண்ணுக்கு மார்பகப்புற்று நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பளிக்கலாம்.இதில் முக்கியமானது தாய்ப்பால் கொடுப்பது.
தாய்மாரே தாய்ப்பால் என்பது நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கொடுக்கும் வரம்.அந்த வரத்தைக்கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் எக்கச்சக்க நண்மைகள் உள்ளன.அதில் ஒன்று தாய்ப்பால் கொடுத்தல் உங்களுக்கு மார்பகப்புற்று
நோய் வருவதிலிருந்து பாதுகாக்கும். எவ்வளவு காலத்துக்கு கொடுக்கமுடியுமோ அவ்வளவுகாலத்துக்கு தாய்ப்பாலைக்கொடுங்கள். தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் அழகு கெட்டுப்போகும் என்பதெல்லாம் பொய்க்கதை.கொடுக்காமல் விடுவதால் உங்கள் குழந்தையின் அழகு சிலவேளைகளில் கெட்டுப்போகலாம்.
அடுத்து புகைத்தலைத் தடுத்தல், மதுபானம் அருந்துவதைக் குறைத்தல்,உடல் நிறைக் குறைப்பு போன்றவையும் உங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்தவை.
இறுதியாக….
ஒரு பெண்ணின் மார்பு கவர்ச்சிப்பொருளல்ல கண்காணிக்கப்படவேண்டிய அங்கம்!.
சி.சிவச்சந்திரன்
மகப்பேற்று நிபுணர்.